Pages

Tuesday, 2 February 2016

சூழலியல் அடிப்படைவாதம் :பகுதி -1- நீதிமன்ற வழக்கு எனும் திசை திருப்பல் அரசியலும் தமிழக சூழல்வாதிகளின் இரட்டை நிலைப்பாடும்
இந்திய அரசியல் சாசனம் குறித்தும் அதன்  சனநாயகமுறை குறித்தும் பெரிதும் சிலாகிக்கிற  நமது தமிழக சூழல்வாதிகள்,கெயில் குழாய் பதிப்புத் திட்டத்திற்கு   உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளதை கடுமையாக கண்டிப்பது நகைப்புரியதாக உள்ளது.

சூழல் பிரச்சனைகளுக்கு நிலவுகிற அமைப்பிற்குள்ளாகவே தீர்வு காண முயல்கிற நமது சூழல் போராளிகள்,சூழல் பிரச்சனைகளுக்கு  நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கிற சூழலியல் சட்டப் போராளிகள்,கெயில் திட்டம் தொடர்பான தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக,நீதிமன்றங்கள் யாருடைய நலன்களுக்காக இயங்குகிறது  என்பதை சற்று  தெளிவு படுத்தினால் நலம்!

மேலும்,இந்தியாவின் ஜனநாயகம் யாருக்கான ஜனநாயகமாக உள்ளது,சமூகத்தின்  அனைத்து நிலை மக்களையும் உள்ளடக்கியதாக இந்திய ஜனநாயகம் செயல்பாடுகிறதா என்ற கேள்விகள் குறித்து  நமது சூழல்வாதிகள் இப்போதாவது பேசுவார்கள் என்றே நம்புகிறேன் !

ஆனால் நிலவுகிற முதலாளிய ஜனநாயக அமைப்பின் மீதான மயக்கத்திலிருந்து நமது சூழல்வாதிகள் விடுபடாத காரணத்தால் இது குறித்து வாய் திறப்பார்களா என்ற ஐயமும் மேலெழும்புகிறது.ஒருவேளை திருவாய் மலர்ந்தாலும், “கோட்பாட்டளவில் இந்திய அரசியல் சாசனத்தை நாங்க ஆதரிக்கிறோம், ஆனால் பாருங்கள் அது நடைமுறைப்படுத்தகிற முறைகளில், செய்யும் சிறு தவறுகளை நாங்கள் எதிர்க்கிறோம் என தங்களுக்கும் புரியாமல் கேட்பவர்களுக்கும் புரியாதவகையில் அற்புதமான ஒரு விளக்கத்தை முன்வைத்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இந்திய சனநாயகம் மற்றும் அதன் அங்கங்கள் குறித்த வரையறையானது சுரண்டும் சமூகத்திற்கு ஆதரவாக நின்று உழைக்கும் மக்களையும் இயற்கை வளங்களையும்  சுரண்டுவதற்கான சுரண்டல் கருவியாகவும் அரசியல் கவசமாகவும் பயன்படுகிறதே அன்றி   சுரண்டப்படுகிற பெரும்பான்மை மக்களுக்கானதாகவும் இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக  இல்லை என்பதை நமது கடந்த கால அனுபவங்கள் தெளிவாக்குகிறன.அதற்கான மற்றுமொரு சிறந்த உதாரணம்தான்  கெயில் குழாய் பதிப்பிற்கான உச்ச நீதிமன்றத்தின் அனுமதி.

இந்தியா ஒரு மிகப்பெரும் சனநாயகக் குடியரசு நாடு,அதன் பாராளுமன்று முறையாகட்டும்,வாக்குரிமையாகட்டும் அது சமூகத்தின் ஒட்டுமொத நலன் கருதி செயல்படுகிறது என்ற வாதத்தை நமது ஆட்சியாளர்கள் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கூறி வருகின்றனர்.இதை வேறு வார்த்தைகளில் பிரதிபளிக்கிற நமது சூழல்வாதிகள்,சூழல் பிரச்சனைகளுக்கு நிலவுகிற  சனநாயக அமைப்பில் சில சீர்திருத்தங்கள் செய்தாலே போதுமானது என்று வரம்பில் நின்று பொதுவாக பேசுகிறார்கள்.ஆனால் இவர்கள்தான் ,கெயில் குழாய் பதிப்பு தீர்ப்பை தற்போது கடுமையாக கண்டிக்கவும் செய்கிறார்கள்!இவர்களின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்துகொள்வதற்கு இதைவிட சிறந்ததொரு உதாரணம் தேவை இல்லை என்றே கருதுகிறேன்.

இச்சூழ்நிலையில் சூழல் பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்கள் தீர்வளிக்க முடியுமா?கடந்த காலங்களின் இது குறித்தான நமது அனுபவம் என்ன? என்பதை சில  முக்கிய சூழல் பிரச்சனைகள் குறித்தான நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சன நோக்கில் அணுகுவது  தற்போதைய அவசியத் தேவையாகவே உள்ளது.


அ)    எரிவாயு எடுப்புத் திட்ட வழக்கில்:

தமிழகத்தின் டெல்ட்டா பகுதிகளில்  மீத்தேன் எரிவாயு எடுப்பு திட்டத்திற்கு எதிராக  கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் உறுதியாக  போராடினர்.அரசுக்கெதிரான மக்களின் தன்னெழுச்சிமிக்க எதிர்ப்புணர்வானது எதிர்வருகிற  சட்டமன்ற தேர்தலில் பிரதிபளிக்கும் என்கிற  உண்மையை உணர்ந்த காரணத்தாலோ என்னவோ மீத்தேன் எடுப்பிற்கு தற்கால தடை விதித்தது தமிழக அரசு.ஆனால் சிக்கல் இதோடு நிக்கவில்லை, தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக டெல்ட்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி., 'கெய்ல்' நிறுவனத்துடன் இணைந்து ஷெல் எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டது.இத்திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி வாங்கவும் பொது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது!

 

இச்சூழலில் தான்  கடந்த சில மாதங்களுக்கு  முன்பாக காவிரி விவசாய சங்கத் தலைவர் ,சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் எரிவாயு எடுப்பதற்கான பணியை நிறுத்தக்கோருகிற மனுவை வேக வேகமாக தாக்கல் செய்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, முதலில் எரிவாயு எடுப்பிற்கு தடை விதித்தும் பின்பு “காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லைஎன்று வாதாடிய, ஓ.என்.ஜி.சி. தரப்பு  வழக்குரைஞர் ஜி.மாசிலாமணியின் வாதத்தை கேட்ட பின்பாக தடையை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

இறுதியாக இந்நீதிமன்ற நாடகமானது,மக்களின் எழுச்சிமிக்க போராட்ட குணத்தை மழுங்கடிப்பதற்கு துணை நின்றதைத் தவிர ஒரு புல்லை காக்கக் கூட உதவவில்லை என்பது தெளிவு.

 

·         உண்மையில் மீத்தேன் திட்டம் தான் ஷெல் எரிவாயு திட்டம் என்ற பேரில் மேற்கொள்ளப்படுகிறதா?

·         ஷெல் எரிவாயு திட்டத்திற்கு முறையான அனுமதியை மாநில அரசிடமிருந்தும், சுற்றுச்சூழல் துறையிடமிருந்தும் பெறாமல் வேகமாக செயல்படுத்தப்படவேண்டிய நிர்பந்தம் என்ன?

·         ஓ.என்.ஜி.சி நிறுவனம் தான் இத்திட்டத்தை செயல்படுத்துகிறதா அல்லது மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி மறைமுகமாக தனியார் நிறுவனத்திற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் இப்பணியை மேற்கொள்கிறதா?

 

என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் குறித்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக இவ்வழக்கு அடித்துச் சென்றுவிட்டது.

 

ஷெல் எரிவாயு,மீத்தேன் எரிவாயு,இயற்கை எரிவாயு என எந்த வகையிலான எரிவாயு எடுப்பிற்கும்,அதை மேற்கொள்கிற  கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி நிறுவனம் அல்லது அதன் பேரில் ஒ என் ஜி சி நிறுவனம் என எந்த நிறுவனமானாலும்  அனைத்து வடிவிலும் எரிவாயு எடுப்பிற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வந்த சூழலில் நீதிமன்றங்களை நாடுகிற சட்டப் போரட்ட வடிவமானது,மக்கள் போராட்டங்களை திசை திருப்பபும் வகையிலேயே இறுதியாக சென்று முடிகின்றன.நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைக்க தனது முகவர்களைக் கொண்டு அரசால் திட்டமிட்டு நடத்தப்படுகிறதோ என்று எண்ணுகிற அளவிற்கு உள்ளது.

 

ஆ)    அணுவுலைகள் தொடர்பான வழக்கில்-

 

முன்னதாக இரு அணுவுலைகள்,அணுக்கழிவு மேலாண்மை நிலையம்,எரிபொருள் மறுசுழற்சி நிலையம் இவற்றோடு அதிவேக இரு ஈனுலைத் திட்டம் என இந்தியாவில் ஏன் உலகிலேயே ஒரே  பகுதியில் அனைத்து அணுவுலைசார் திட்டங்களும் குவிக்கப்பட்ட நிலமாக தமிழகத்தின் கல்பாக்கம் உள்ளது.இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சிக் கழகத்தால் வடிவமைக்கப்பட்டு, கல்பாக்கத்தில் கட்டபபட்டுவருகின்ற அதிவேக ஈனுலைகளில் தோரியம் எரிபொருளை குளிர்விப்பதற்கு  பயன்படுத்தப்படுகிற சோடியமானது  காற்றிலோ நீரிலோ கலந்தாலோ எளிதில் தீப்பற்றக்கூடிய பண்புடையவை.

புகுசிமா விபத்தில் எரிபொருளை குளிர்விக்க  கடல் நீரைக்கொண்டு வெப்பத்தை தணிக்க முயல்வது போல இங்கு செய்ய முடியாது.எனவேதான் ஈனுலைகளின் பாதுகாப்பு குறித்து உலகெங்கிலும் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.ரஷ்யாவிலும் ஜப்பானிலும் இவ்வகையான பல  விபத்துக்கள் நடந்துள்ளன.இச்சூழ்நிலையில் கல்பாக்கத்தில் இவ்விரண்டு ஈனுலைகளோடு திருப்தியடையாமல் மேலும் நான்கு அதிவேக ஈனுலைகளை அமைக்கும் திட்டமும் அரசுக்கு உள்ளது.
முன்னதாக இயங்கிவருகிற இரு அணுவுலைகள் மற்றும் இதர அணுக்கழிவு தொடர்புடைய திட்டங்களால் அப்பகுதிவாழ் மக்கள் கடுமையான கதிர்வீச்சு ஆபத்தை எதிர்கொண்டு வாழ்ந்துவருவது நிருபிக்கப்பட்ட சூழ்நிலையில் மேற்கொண்டு நான்கு ஈனுலைத் திட்டத்தை நிறுவுவது என்பது  கல்பாக்கத்தையும் சுற்றுவட்டார கிராமத்தையும்  நிரந்தர சுடுகாடாக மாற்றும் முயற்சியே அன்றி வேறொன்றுமில்லை.

இச்சூழ்நிலையில்தான்,கடந்த 2011 ஆம் ஆண்டில் கல்பாக்க அணுவுலை வளாகத்தில் பேரிடர் மேலாண்மை பற்றின செயல்விளக்கம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.கல்பாக்கம் அணுவுலையே அம்மக்களுக்கு பெரும் பேரிடர்தான்,இதில் பேரிடர் வந்தால் என்ன செய்யவேண்டும் என்ற செயல்முறை விதி இதுவரை நடத்தப்பெறவில்லை என்று தொடுக்கப்பட்ட வழக்கு திட்டத்தை நிறுத்துவதில் என்ன பங்களிப்பு செய்யும் என விளங்கவில்லை.!

இது இப்படியிருக்க மற்றொருபுறமோ,கல்பாக்க அணுவுலைத் திட்டங்களின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கோருகிற தொடர் முழக்க போரட்டத்தையும்  தொடர்ச்சியாக கருந்தரங்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சமீபத்தில் கல்பாக்கத்தில் மேற்கொண்டனர்.

ஒருவகையில் பார்த்தால் கல்பாக்கம் திட்டம் தொடர்பாக நீதிமன்றங்களை அணுகுவதற்கும் விடுதலை சிறுத்தைகளின் தொடர் முழக்க கோரிக்கைக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.இரண்டின் இலக்குமே மறைமுகமாக திட்டத்தை ஆதரிப்பது போன்ற தோற்ற மயக்கத்தை வழங்குகிறது.ஒட்டுமொத்தமாக பார்த்தல்,கல்பாக்கம் பகுதிவாழ் மக்கள் எதிர்கொண்டுவருகிற கதிர்வீச்சு ஆபத்தை  மையப்படுத்திய விழிப்புணர்வுக்கு  அதைத் தொடர்ந்த பொது மக்களின் தன்னெழுச்சு போராட்டத்திற்கும் இம்முயற்சிகள் பெரும் தடைக் கற்களாகவே மாறுகின்றன.

பொதுவாக,அணுவுலை ஈனுலை போன்ற பெருந்திட்டங்களை செயல்படுத்தும்போது கடைபிடிக்கவேண்டிய “வழமையானவிதிமுறைகளை வழக்கம்போல அரசு நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை.திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அது எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தப்போவதில்லை.உதாரணமாக கல்பாக்கம் போன்று கூடங்குளம் அணுவுலை விவகாரத்தில் பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்க விதி கடைபிடிக்கப்படவில்லை என்று சொல்லி நீதிமன்றதில் வழக்கு தொடுக்கப்பட்டதை நீதிமன்றங்கள் இயல்பாக கடந்துவிட்டன.

அதேபோல கூடங்குளம் அணுவுலையின் பாதுக்கப்புத்தன்மை,சுற்றுச்சூழல் பாதிப்பு,அணுக்கழிவு மேலாண்மை என அனைத்து அம்சங்களிலும் நீதிமன்றங்களின் தீர்ப்பு அரசு சார்பாகவே இருந்தன.பிரச்சனை என்னவென்றால் கூடங்குளத்தில் மக்கள் போராட்டங்கள் உக்கிரத்துடன் நடைபெற்ற சூழலில் மேற்கொள்ளப்பட்ட இவ்வழக்கு நடவடிக்கைகள் ஒருவகையில் போராட்டத்தை திசை மாற்றவோ வீரியத்தை குறைப்பதற்கோதான் இறுதியாக பயன்பட்டன.சொல்லப்போனால்,தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலோ உச்ச நீதிமன்றங்களிலோ வழக்காடுவது என்பது அத்திட்டத்தின் மீதான மக்களின் எதிர்ப்புணர்வை நீதிமன்ற சட்டகத்திற்குள்ளாக சுருக்குவதற்கே வழி செய்கின்றன.
நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள கால கட்டங்களில்,அரசின் போலியான சனநாயகக் கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக,ஆளும் வர்க்கத்த்திற்கு சாதகமாகவே சட்டபோரட்டங்கள்  சென்று முடிகிறதே அன்றி,திட்டத்தை நிறுத்தும் வகையிலான ஒற்றைப் பட்டையான இலக்கை அடைவதற்கான உந்துவிசையை ஒருபோதும் வழங்கவில்லை.

இந்திய அரசியல் அமைப்புச் சாசனசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  சுற்றுச்சூழல் உரிமைகள் பிரிவு-48(அ)
(சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்,வனவிலங்குகளைப் பாதுகாத்தல்) மற்றும்
பிரிவு-51(எ) காடுகள் ஏரிகள் ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழ்நிலைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வாழ்வதற்கான சூழலை உறுதி செய்வதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்கிறது.அதுபோக 1954 – உணவுக் கலப்பட தடுப்புச் சட்டம்,1972 – உயிரினப் பாதுகாப்புச் சட்டம்1973 – தண்ணீர் (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்,1990 – வனப்பாதுகாப்புச் சட்டம் ,1981 – காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்,1986 – சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டம்,1995 – தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழுச் சட்டம் என பல சட்டங்களை நமது இயற்க்கை நிலைமைகளை காப்பதற்கு நமது சனநாயகம் வழிசெய்கிறது.ஆனால் அனைத்தும் சரத்துகளாக உள்ளதே தவிர நடைமுறையில் இச்சட்டங்களினால் பலன் ஏதும் உண்டா?அல்லது நமது புறச்சூழல் காப்பற்றப் பட்டதா என்று கேட்டால் இல்லை என்பதே பதில்.

சமூகத்திற்கும் சூழல் நிலைமைகளை காப்பதற்கும்  அனைத்து உரிமைகளும் கடமைகளும் முற்போக்காக அரசியல் சாசனங்களில் இடம் பெற்றிருந்த போதிலும் நடைமுறைக்கு வராத அரசியல் சட்டங்களினால் என்ன விளைவு ஏற்படப்போகிறது?

இது குறித்தான "சட்ட வரப்பிற்குட்ப்பட்ட" நமது சூழல் போராளிகளின் நிலைப்பாடுதான் என்ன?அல்லது வெறும் அடையாள அரசியலுக்கான,ஊடக விளம்பரத்திற்கான வாய்ப்பாகத்தான் சூழல் குறித்த சட்டப் போராட்டங்களை இவர்கள் மேற்கொள்கிறார்களா?

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட உலகின் மிகப்பெரும் சூழலியல் படுகொலையான போபால் பேரழிவிற்கு நமது நீதிமன்றங்கள் வழங்கிய நீதியிலிருந்து இந்திய நீதிமன்றங்களின் ஆளும்வர்க்க சார்புநிலையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.பேரழிவால் பாதிப்படைந்த எண்ணற்ற குடும்பங்கள் இன்றைக்கும் நிவாரணம் கிடைக்காமல் முப்பது வருடங்களாக போராடி வருகிறார்கள்.இது குறித்தெல்லாம் "சட்ட வரப்பிற்குட்ப்பட்ட" நமது சூழல் போராளிகளின்  கருத்துதான் என்ன? 

வர்க்க முரண்பாட்டு அரசியல் தளத்திலிருந்து வெகுஜன மக்களை அந்நியப்படுத்தவோ தனது மேலாதிக்கத்தை தொடர்ச்சியாக தான் நிர்வாகிக்கிற சமூகத்திடம் தக்க வைத்துக்கொள்ளவோ,நிலவுகிற ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளாக சில நெகிழ்வுத்தண்மையை புகுத்தியும்,சட்டத்தை மதித்து நடந்தால் அனைத்து பிரச்சனைகளையும் தீரக்கலாம் என்று கூறுவதற்கு  நமது சோ கால்டு சூழலியல்  அறிவுஜீவிகளும் அவர்களின் தொங்கு சதைகளும்  ஆளும்வர்க்கத்திற்கு அவசியப்படுகின்றனர்.

வெகுஜனமத்தியில் போராட்ட குணத்தை, எதிர்ப்பரசியலை நமது 'அரசியலற்ற  சூழலியல்வாதிகள்" மழுங்கடுத்திவிடுகின்றனர்.எனவே  இவர்களை தனது எதிரியாக அரசு கருதுவதில்லை.பொதுமைப்படுத்தி சொல்லவேண்டுமென்றால் இவர்கள் ஆளும்வர்க்கத்தின் அரசியல் கேடயங்கள் என்றே கூற வேண்டும்!

மாறாக அரசின் எதிர்நிலை தரப்பு அறிவு ஜீவிகள் அரசின் கட்டமைப்பு,அதன் வர்க்க நோக்க செயல்பாடுகள்,அதன் ஒடுக்குமுறை என அரசின் உண்மை முகத்தை மக்களிடம்  கொண்டுசேர்த்து அவர்களை அரசியல்மயப்படுத்துகிற வேலைகளை தேர்ந்துகொள்கிற காரணத்தால் இவர்கள் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும்  தீவிரவாத  அமைப்பின் ஆதரவாளர் என்றும் அரசாலும் அதன் சார்புநிலை ஊடகங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
நிலவுகிற அரசியல் பொருளாதார அமைப்பை மாற்றியமைப்பதை நோக்கி சிந்திக்காமல் நிலவுகிற போலியான சனநாயக அமைப்பிற்குள்ளாக சிறு சமரசம் செய்துகொண்டால் நமது அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வுகான முடியும் என்ற கருத்தை பருப்புகிற அரசியல், உழைக்கும் மக்களுக்கு எதிரான அரசியலாகும்.இது ஆளும் அரசிற்கு ஏற்ற அரசியலாகும்.

No comments:

Post a Comment