Pages

Saturday 6 February 2016

“புறவழிச்சாலைகள்” பற்றின திரு ஜெமோவின் “கோட்பாட்டு” விளக்கம் மீதான விமர்சனக் கருத்துரை.







திரு ஜெமோவிற்கு திரு மலைச்சாமி என்ற வாசகர் “புறவழிச்சாலைகள்” என்ற தலைப்பில் எழுதிய கடிதமும் அதற்கான தனது பதிலையும் ஜெமோவின் வலைப்பக்கத்தில் பார்க்க நேர்ந்தது.

இவ்விரு விவாதத்தின் சாராம்சம் இதுதான் -புறவழிச்சாலைகள் கார்பரேட் நலன்களுக்கான திட்டமாக உள்ளதே தவிர மக்கள் நலனுக்கானதாக இல்லை என்பது வாசகரின் வாதமாக இருக்கிறது.மாறாக ஜெமோவோ,நிலவுகிற அமைப்பிற்குள்ளாக இருந்துகொண்டு அதை விமர்சிக்க முடியாதென்றும்,வேண்டுமென்றால் நவீன வசதிகள் இல்லாத உலகத்திற்கு  வாசகரை செல்ல பரிந்துரைத்து தனது விளக்கத்தை  முடித்து வைக்கிறார்.

வாசகரின் கடிதத்திற்கு ஜெமோவின் பதில் இவ்வாறு துவங்குகிறது “இப்படி ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து உடனடியாக ஒரு எண்ணத்தை அடைந்து அதை கருத்தாக விரித்துக்கொண்டு பேசுவது நாம் அன்றாடம் செய்வது. அதை அறிவுத்தளத்தில் செய்யவேண்டுமென்றால் பொதுவான ஒரு கோட்பாடாக அதைச் சொல்ல உங்களால் முடியுமா என்று பார்க்கவேண்டும்

அதாவது குறிப்பான விஷயம் மீதான விமர்சனத்தை, கருத்தை அறிவுத்தளத்தில் வைத்துப் பேசும்போது பொதுவான கோட்பாட்டு பின்புலத்தில்  இருந்து அதைப் பேச பரிந்துரைக்கிறார்.சரி வாசகர் அவ்வாறு செய்யவில்லை,சொன்ன ஜெமோவாவது   இவ்விஷயத்தை அவ்வாறு அணுகினாரா?சற்று நெருங்கிப் பார்ப்போம்.

பெருவழிச்சாலைகள் என்பவை நம்முடைய இன்றைய பொருளியல் கட்டமைப்பின் ஒரு பகுதி. மேலும் மேலும் உலகம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகிறது. விரைவுப்பயணம் அதற்கு அவசியமானது. அன்றெல்லாம் நாகர்கோயிலில் இருந்துசென்னைக்கு 16 மணிநேரம் பயணம்செய்யவேண்டும். இன்று 9 மணிநேரம். ஒரேநாளில் சென்று பணிமுடித்து திரும்பமுடிகிறது. அதற்கான தேவையும் இன்றுள்ளது. அதற்காகவே நெடுஞ்சாலைகள். ஏதேனும் அவசர வேலையாகச் சென்று கேரளச்சாலைகளில் மாட்டிக்கொண்டிருந்தால் அந்த சலிப்பு தெரியும்

ஜெமோவின் கோட்பாட்டுப் புரிதலைப் பாருங்கள்,ஒரு குறிப்பான விஷயம் பற்றி கோட்பாட்டு பின்புலத்தில் பேசத் தொடங்க முனைகிறவர்,எடுத்த எடுப்பில் விரைவுப்பயணத்திற்கு நெடுஞ்சாலைகளை அவசியமென்ற கருத்துக்கு வந்து சேர்கிறார்.அவரது அறிவுப்புலமையை குறிப்பாக அவரே குறிப்பிடுகிற கோட்பாட்டு விளக்கத்தை  இங்கு வியக்காமல் இருக்கமுடியவில்லை!

ஒரு குறிப்பான பிரச்சனையை பற்றி  பேசும்போது அதை வரலாற்றுக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும்,பொருளாதார அடித்தளத்தில் இருந்துகொண்டு அணுகுவதுமே அறிவியல் பூர்வ அணுகுமுறையாக இருக்கமுடியும்.எடுத்த எடுப்பில் நிலவுகிற நெடுஞ்சாலை வசதிகள் குறித்து சிலாகிக்கிற ஜெமோவின் கோட்ப்பாட்டுப் புரிதல் நம்மை சிலிர்க்கத்தான் வைக்கிறது.

தேச எல்லைகளுக்கும் அப்பாலும்,அதன் நகரங்களுக்கு இடையிலுமான நெடுஞ்சாலை திட்டங்கள் வரலாற்று ரீதியில் எவ்வகையிலான முன்னேற்றங்களை கண்டு வருகிறது.புறவழிச்சாலைகளை தேச அரசு கட்டுவதற்கான பொருளியில் காரணம் என்ன?அது வரலாற்று ரீதியில் எவ்வகையில் மாறி வருகிறது?நிலவுகிற அமைப்பில் அது என்னவாக வளர்ச்சிப் பெற்றுள்ளது என்பது குறித்தெல்லாம் பேசவேண்டும்.

மூல வள பரிவர்த்தனை,உற்பத்திப் பண்டப் பரிவர்த்தனை என சந்தைப் பொருளாதாரத்தின் பொருளியில் கூறுகளில் போக்குவரத்து என்ன வகையிலான பங்களிப்பை செய்கிறது?வரலாற்று ரீதியில் அதன் பாத்திரம் என்னவாக இருந்தது என்பதை இப்புன்புலத்தில் வைத்துப் பேசுவதே அறிவியல்பூர்வ  கண்ணோட்டமாக இருக்க முடியும். மேலும்,பொருளாதாரம் பற்றி பேசும்போது,உடமை உரிமை,அதன் உறவுகள் குறித்தும் பேசுவது அவசியமாகிறது.

நெடுஞ்சாலைகள் நேர விரையத்தை தவிர்க்கிறது என்ற ஒற்றைபட்டையான விளக்கத்தில் இருந்து போக்குவரத்து பற்றின ஒட்டுமொத்த விவாதத்தையும் பொதுமைப்படுத்தி சுருக்கிவிடுகிறார் நமது "கோட்பாட்டாளர்".

கோட்பாட்டுத் தளத்தில் வைத்துப் பேசுவதற்கான மிக முக்கிய அம்சங்களை  கவனத்தில் கொள்ளாமாலும் தனது முன்முடிவுக் கருத்துகந்த தர்க்க சட்டகத்திற்குள்ளாக முட்டி நின்றுகொண்டு அதை கோட்பாட்டின் பேரால் பேசுவதுதான் எவ்வளவு பெரிய முரண்! 
கோட்பாட்டு புரிதலில் விஷயங்களை முன்வைக்க வேண்டும் என வகுப்பெடுத்துவிட்டு கோட்பாட்டு ரீதியான விமர்சன எல்லைக்குள்ளேயே அவர் நுழையவில்லை என்ற உண்மை முதலில் அவருக்குத் தெரியுமா என்றே தெரியவில்லை!

மேலும் ஜெமோ தொடர்கிறார்
“இணையமும் இதேபோன்ற ஒரு நெடுஞ்சாலைதான். முந்தைய காலகட்டத்தில் கடிதங்கள் எழுதினோம். நீலநிற இன்லன்ட் உறையை பார்த்தே வருடக்கணக்காகிறது. அந்த மாற்றத்தை நினைத்து ஏங்குவதில் பொருளுண்டா என்ன? மறுகணமே மின்னஞ்சல் சென்று சேர்ந்து அதற்கடுத்த நிமிடம் மறுமொழி வரவேண்டுமென நினைக்கிறோம் அல்லவா?

இதில் ஒன்றுபோதும் இன்னொன்றுவேண்டாம் என இருக்கமுடியுமா என்ன? நவீனக் கல்வி, நவீனமருத்துவம், நவீனப்பொருளியல் வாய்ப்புகள், நவீன நுகர்வு ஆகியவற்றுக்குள் இருந்துகொண்டு அதில் ஏதேனும் ஒன்றை மறுப்பதோ முந்தையகாலத்தை நினைத்து ஏங்குவதோ பொருளற்றது

தனது குறிப்பான பிரச்சனை மீதான “கோட்பாட்டு” ரீதியான விளக்கத்திற்கு வலு சேர்க்க பிற துறை சார்ந்த நவீனத்தை துணைக்கு இழுக்கிறார்.அதாவது தகவல் தொடர்பு,கல்வி,மருத்துவம் என அனைத்து துறைகளிலும் நிலவுகிற வளர்ச்சியை மறுக்க முடியுமா என மிக முக்கியமான தர்க்க நியாயத்தை  முன்வைக்கிறார்!

பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு அவசியமான முன் நிபந்தனை,அதன் உற்பத்தி உடமை உரிமை,உற்பத்தி உறவு  பற்றின தெளிவான கண்ணோட்டம் இருப்பது.அரசியல் பொருளாதார விவாதத்திற்குள் நுழையும்போதே உடமை உரிமை என்பது பொருளாதார விமர்சனத்தின் அடிப்படை அலகு.நவீன பொருளாதார வளர்ச்சியின் நன்மைகளை குறித்து சிலாகிக்கிற ஜெமோ,உடமை உரிமை பற்றின எல்லைக்குள்ளாகவே வரவில்லை!பொருளாதார விமர்சனத்தின் அடிப்படை அலகு குறித்து எந்தவித கண்ணோட்டமும் இன்றி முட்டாள்தனமாக ஒரு வாதத்தை முன்வைத்த அளவில் அவரின் பொருளாதார மேதைமையை மெச்சாமல் இருக்கமுடியவில்லை.பின்னர் எழுகிறார்
என் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். கார் ஐந்து கிலோமீட்டரைக் கடக்க ஒருமணிநேரமாகியது. அத்தனைபரிதாபகரமான சாலை. காமராஜ் காலத்தில் போடப்பட்ட சாலை. இன்று அதைவிட மோசமான நிலையில் உள்ளது. அந்தமக்கள் அங்கே சிறையிடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பொதுநாகரீகத்திலிருந்து விலகி ஒரு மூடப்பட்டவாழ்க்கைக்கு விரும்பிச்செல்வார்கள் என்றால் அது வேறு.
நீங்கள் சாலைகள் இல்லாத, செல்பேசியும் இணையமும் இல்லாத உலகுக்குச் செல்லலாம். அங்கே பிறிதொரு வாழ்க்கையை உருவாக்கலாம். அல்லது மொத்தமாகவே இந்த முதலிய நுகர்வுப் பொருளியல் அல்லாத ஓர் அமைப்பைக் கற்பனைசெய்யலாம். அதற்காகப் போராடலாம். ஆனால் இதனுள் இருந்துகொண்டு ஒன்றுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது”
பிற துறைகளின் நவீனத்தைத் தொடர்ந்து,நவீனத்திற்கு எதிரான பழமைவாதியாக இறுதியாக வாசகரை நிறுத்துகிறார்.பாருங்கள் இவரின் தர்க்க புலமையை!.வாசகர் கேட்டது என்ன இவர் சொல்வது என்ன.வாசகர் குறிப்பிட்டது  இதுதான்
“என் கேரளப்பயணம் கார்ப்பரேட்களின் மீது என் கோபத்தை கிளறியது. சிற்றூர் மக்களையும், விவசாயத்தையும் புறக்கணிக்கும் இந்த நான்கு வழிச்சாலைகள் தேவைதானா? யாரின் பயனுக்காக விவசாயிகளின் உற்பத்திகளை ஏற்றி செல்லும் சிறு வாகனங்களிடமும் சுங்கம் வசூலிக்கப்படுகின்றன? சாலைகளை கோபத்துடனே பார்த்துகொண்டிருக்கிறேன்.”
வாசகர் எழுப்பிய கேள்வி உடமை உரிமை,அதன் நலன் சார்ந்த பொருளாதார விமர்சனம்.தெளிவாக சொல்லவேண்டும் என்றால் கார்பரேட் வர்க்க நலனுக்காக விளிம்பு நிலை மக்களின் பாதிப்பை பற்றியது.வாசகர்,எங்குமே சாலைகளை புறக்கணிக்கவில்லை,நவீனங்களை புறக்கணிப்பதாக குறிப்படவில்லை.அதன் பொருளாதார அடித்தளத்தை, வர்க்க சார்பை கேள்விக்குட்படுத்துகிறார்.கீழ்வரும் வாசகரின் வரிகள் மேலும் இக்கருத்தை அழுத்தமுடன் பேசுகிறது
பெரு நிறுவனங்கள் தங்கள் நன்மைக்காக அமைத்த நான்கு வழிச்சாலைகளை, மக்களின் வரிகளால் இயங்கும் அரசின் ஆதரவோடு அமைத்துக்கொண்டு, மீண்டும் மக்களிடமும், அரசாங்கத்திடமுமே சுங்கங்களை பெரு நிறுவனங்கள் வசூலிப்பது இரட்டை திருட்டு அல்லவா? சாலைகளை பயன்படுத்துவதும், சாலைகளை அமைப்பதும்  வேறு வேறு கார்ப்றேட்களாக இருக்கலாம். சாமானிய குடிமகனுக்கு எதுவாய் இருந்தால் என்ன?
வாசகர் எழுப்பிய கேள்விகளை மிக இயல்பாக கடந்துபோகிற ஜெமோ அதற்கெதிர் வாதகமாக நவீனத்திற்கு எதிரான பழமைவாதியாகவும்,அடிப்படைவாதியாகவும் அவரை  காட்ட முனைகிறார்.இறுதிவரை உடமை உரிமை,வர்க்க நலன்,போன்ற விவாத்திற்குள்ளாக வராமல்,நவீனத்திற்கு எதிரான  அடிப்படைவாதியாக கட்டமைக்கிற கருத்துவாக்கமானது, மேம்போக்கான அளவில் புரட்சிகரமான தர்க்கமாக (அவரளவில்)தென்பட்டாலும் தொடக்கத்தில் அவரே  சுட்டுகிற கோட்பாட்டு சட்டகத்திற்குள்ளாக பொருந்துகிறதா என எண்ணிப்பார்க்க தவறிவிட்டார் பாவம் ! ஜெமோவின் கோட்பாட்டு விளக்கங்கள் அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல  இறுதியில் அவர் எழுதுகிறார் ” இதனுள் இருந்துகொண்டு ஒன்றுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது”அதாவது முதலாளிய நுகர்வு அமைவிற்குள் இருந்துகொண்டு நீங்கள் அதை விமர்சிக்கவே கூடாது”என அறிவிக்கிறார்.
நிலவுகிற அமைப்பின் அரசியல் பொருளாதாரம் மீதான விமர்சனங்களை அதற்குள்ளாக இருந்துகொண்டு செய்யக் கூடாது எனக் கூறுகிற வாதம்தான் எவ்வளவு முட்டாள்தனமாக உள்ளது. அனைத்து விளக்கங்களையும் கோட்பாடாக சொல்ல வேண்டும் என்ற அறிவுரையோடு தொடங்கி நிலவுகிற அமைப்பை விமர்சிக்கவே கூடாது என முடிக்கிற அவரின் விளக்கெண்ணை விளக்கத்தை போற்றாமல் இருக்க முடியவில்லை !வாழ்க !
அருண் நெடுஞ்செழியன் 

No comments:

Post a Comment