Pages

Wednesday, 24 August 2016

சொந்த மரபு மீட்பர்களும் சூழலியல் அடிப்படைவாதப் போக்குகளும் .....
நிலவுகிற தாராள முதலாளிய அமைப்பின் நகர்ப்புறசார் தொழில் முதலீடுகள், அதையொட்டி எழுகிற நவீனத்துவ நகரம்,சமூகம்,நுகர்வு,பண்பாடு- புதிய வகையிலான நவீனத்துவ மனிதனையும் வாழ்க்கைமுறையையும் உருவாக்குகிறது.
எதைத் தொலைத்தோம் எனத் தெரியாமலேயே இயங்கி வருகிற சமூகத்திற்கு, இவ்வாழ்க்கை அலுப்பூட்டுவதாகவும்,சலிப்பாகவும் அமைகிறது.இவர்களின் உற்சாகாமில்லா வாழ்கை முறை,ஆரோக்கியமற்ற நகரப்புற வாழ்நிலை,உணவுமுறை,கல்விமுறை என இயந்திரவகையிலான சந்தையுடன் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ள  நகர்ப்புற வாழ்நிலை சார் முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சிபெற்று வருகிறது.நிலவுகிற தாராள முதலாளிய அமைப்பினால் ஏற்படுகிற இம்முரண்பாடுகளை தீர்ப்பதற்கான போராட்டம் என்பது அடிப்படையில் நிலவுகிற அமைப்பிற்கு எதிரான வர்க்கப்போராட்டமாகும்.ஆனால் இம்முரண்பாடுகளை தீர்ப்பதாக கிளம்பியுள்ள சில பிற்போக்கு சக்திகள்,இம்முரண்பாடுகளை தனது சொந்த அடையாள அரசியல்,சந்தை நலனுக்கு பயன்படுத்திக்கொள்கின்றன.இப்பிற்போக்கு சக்திகளின் பின்னால் மக்கள் அணிதிரள்வதும் அதிகரித்துவருகிறது.

மரபு வாழ்வை மீட்போம் என்ற நோக்கில் செயல்படுவதாக சொல்கிற இவ்வமைப்புகள், நகருக்குள் ஊர்சந்தை போன்ற நிகழ்வுகளை நடத்தியும்,மரபுக் காவலர் விருதுகள் வழங்கியும்,நகருக்கு அப்பால் கிராமிய சூழலில் மரபுசார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும்,மரபுக் கல்வி,மரபு உணவு மற்றும் மருத்துவம் வழங்கியும்  உற்சாகமற்ற நடுத்தர வர்க்கத்தின் அபினாகத் தன்னை நிறுவிக்கொள்கிறது.நவீனத்துவத்தையும் அது ஏற்படுத்துகிற அசௌகரிய வாழ்க்கை முறைகளையும் கடுமையாக எதிர்க்கிற,முரண்படுகிற மக்கள்,இவ்வமைப்புகளின்பால் ஆயிரக்கணக்கில் இயல்பாகவே ஈர்க்கப்படுகிறார்கள்.


நவீனவாழ்வியலின் (நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திடம்)உணவு,மருத்துவம் மற்றும் கல்வி முறைகளில் முரண்படுகிற இம்மக்களை இலக்காகக் கொண்டு, சொந்த மரபுகளை மீட்போம் என கிளம்பியுள்ள,நமது சொந்த மரபு மீட்பர்கள் ஒரு வகையில் அரசியல் நீக்கம் பெற்றவர்களாகவும், பின் நவீனத்துவ சிந்தனைப் போக்கை,செயல்முறைகளை சிக்கல்களுக்கான தீர்வுகளாகவும்/வடிகாலாகவும்  முன்வைக்கிறார்கள்.அரசியல் நீக்கம் பெற்ற அராஜகவாதம் மற்றும்  பின் நவீனத்துவ போக்கை உள்வாங்கிய ஒரு வகையான கதம்பாவாத அரசியல் தீர்வுகளை முன்வைக்கிற நமது சொந்த மரபு மீட்பர்கள், மறந்தும்கூட  நவீனகால மனிதனின் பண்பாடு முதலாளிய பண்பாடாக உள்ளது,அவனது அனைத்து வாழ்நிலை அனுபவத்தையும் (உணவு,மருத்துவம்,கல்வி) முதலாளிய உற்பத்தி முறையும் நுகர்வும்,அதனுடன் இணைக்கப்பெற்ற அதிகாரமும் தீர்மானிக்கிறது,அதை மாற்றி அமைக்கிற வகையில் நாம் போராடுவதே இறுதித் தீர்வாக அமையப்பெரும்  எனத் துணிந்து அரசியல் தீர்வு கூறுவதற்கில்லை.சடங்குப்பூர்வ கார்ப்பரேட் சந்தை எதிர்ப்போடு சுறுக்கப்படுகிற  இவர்களின் செயல்பாடுகளுக்கு அது அவசியமும் அல்ல!

நமது மரபு மீட்பர்களுக்கு அரசியல் விடுதலைக்கான எந்த சொந்த அரசியல் கண்ணோட்டமும்,அரசியல் திட்டமும் இல்லாத காரணத்தால், தங்களது செயல்பாடுகளின் ஊடாக மரபு உணவு,மரபுக் கல்வி மற்றும் மரபு மருத்துவத்தை நிறுவனமயப்படுத்துகிறார்கள்.சொந்த மரபு மீட்பு நடவடிக்கை சந்தை நடவடிக்கையோடு இணைக்கப்படுகிறது.சொந்த மரபு மீட்பு என்றபேரால் ஒட்டுமொத்த அறிவியல் வளர்சிகளை புறக்கணிக்கக் கூறுகிற இக்குழுவானது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிந்தைய வேட்டைச்சமூக மக்களின் வாழ்க்கை முறைகளை தேர்ந்துகொள்ளக் கோருகிறது.

மரபு மருத்துவம்,மரபுக் கல்வி,மரபு உணவு அனைத்தும் சந்தையில் விலை வைக்கப்படுகிறது!நகர்ப்புற மக்களின் முரண்பட்டுள்ள உணர்வுகளுக்கு முட்டுக் கொடுக்க கிளம்பியுள்ள நமது மீட்பர்கள், நகர்மயமாதல் குறித்து என்ன அரசியல்-பொருளாதர கண்ணோட்டம் வைத்துள்ளார்கள் என அவர்களுக்குத் தான் வெளிச்சம்!

நகரமெனும் பெருங்குடிசை:


இந்தியாவில் வேகமாக நகர்மயமாகிவருகிற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.அதாவது தமிழகமானது 42 விழுக்காடு நகர்மயமாகியுள்ளது என 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது.

நகர்மயமாக்கல் என்பது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயருகிற மக்கள் திரளினரின் இடப்பெயர்வாகவே பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது.மாறாக நகர்மயமாக்கில் 22 விழுக்காடே மக்களின் இடப்பெயர்வு தீர்மானிக்கிறது.மீதமுள்ளவை நிலப்பயன்பாடு மாற்றத்தால் ஏற்படுவதாகும்.(தொழிற்துறை வளர்ச்சியின் ஊடாக)கிராமங்கள்,நகரங்களோடு இணைக்கப்படுகையில் கிராமங்கள்,துணை நகரங்களாக இடைநிலை நகரமாக உருமாற்றமடைகிறது.

171  சதுர கி மீட்டர் பரப்பளவில் இருந்த சென்னை நகரம்,இன்று சுற்றியுள்ள திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டப் பஞ்சாயத்து,நகராட்சிகளை இணைத்துக்கொண்டு,1189 சதுர கி மீ பரப்பளவில் பிரம்மாண்ட மாநகராக விரிவடைந்துள்ளது,இன்னும் விரிவிடைந்துகொண்டே செல்கிறது.சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்,சேவைத் துறை முதலீடுகள் என சென்னை நகரை மையமாகக் கொண்ட சர்வதேச மூலதனக் குவிப்புகள் கடந்த கால் நூற்றாண்டில் தீவிரமடைந்தன.நகரங்களுக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலைகள்,துறைமுக விரிவாக்கங்கள்,விமானப்  போக்குவரத்து விரிவாக்கங்கள் என நகர்ப்புற பொருளாதாரம் சார்ந்தும்,தேசிய பன்னாட்டு முதலாளிய நலனுக்கான உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுமே மாநிலத்தின் வளர்ச்சியாக ஆளும் அரசால் கட்டப்பட்டன.

மூன்றாம் உலக நாடுகளில் கடந்த கால் நூற்றாண்டில் தீவிரமைடந்து வருகிற நகர்மயமாக்கலுக்கும் நகர்புற ஏழைகளின் அதிகரிப்பிற்கும்  முக்கியக் காரணியாக இருப்பது சர்வதேச நிதி மூலதன சக்திகளான உலக வங்கி,பன்னாட்டு நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிற  பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்கள் ஆகும்.

உடனடி லாப நோக்கை அடிப்படையாக் கொண்டு நகர்ப்புறம் சார்ந்த தொழிற்துறை மற்றும் சேவைத்துறை மூலதன ஊக்குவிப்பு நடவடிக்கைகள் கிராமப்புற பொருளாதாரத்தை முற்றாக புறக்கணித்தே ஊக்கிவிக்கப்படுகின்றன.குறிப்பாக விவசாய இடுபொருட்களின் மானிய வெட்டு,கிராமப்புற சுகாதாரம்,கல்வி மற்றும்  உட்கட்டுமானங்களுக்கு ஒதுக்கிற நிதிகளை வெட்டுவது என கிராமப்பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிற வகையிலான நிதி மூலதன கட்டமைப்பு மாற்றங்களை உலக மக்களை குறிப்பாக கிராமங்களின் வசிக்கிற மக்களின் வாழ்கை நிலையை அடியோடு புரட்டிப்போட்டது.அம்மக்களை,நகரங்களை நோக்கிப் புலம் பெயருகிற நகர்ப்புற அகதிகளாக்கியது.

உலகமயமாக்கத்தின் சந்தைப் பொருளாதார எழுச்சியானது உற்பத்தி உறவு சார்ந்த பிரச்சனைகளை மட்டும் கொண்டு வருவதில்லை மாறாக ஒரு சமூகத்தின் திரட்டப்பட்ட அறிவையும் பண்பாடு மீதும் பெரும் போரைத்  தொடுக்கிறது.மூளை உழைப்பையோ,உடல் உழைப்பையோ கூலிக்கு விற்பதற்காக நகர்ப்புறத்தில் குவிகிற  சமூகமானது தனது சொந்த மரபு தொடர்ச்சியின் கண்ணிகளை நகர்மயமாக்களில் தொலைக்கிறது.கைமாறாக, உழைப்பை விற்ற கூலியைக் கொண்டு அதிகமாக நுகர்ந்து இன்பம் துய்க்கச்சொல்கிறது.

மேலும்,நவீனகால முதலாளிய சமூகமானது “நுகர்வை”சமூக நிலையை உயர்த்துகிற பண்பாடாக கட்ட முனைகிறது.வாழ்வின் மகிழ்ச்சியே நுகர்வதும், நுகர்வதற்காக வேலை செய்வதே வாழ்பனுவமாக சித்தரிகிறது.பெரும் பொருளாதார மந்த கால கட்ட சிக்கலின் தீர்வாக அதிக நுகர்வை மேற்கொள்ள கூறியது இங்கு கவனத்திற்குரியது.

இவ்வாறாக நகர்ப்புற,துணை நகர்ப்புற வாழக்கை முறைகளின் சலிப்படைந்து வாழ்கிற,கொச்சை நுகர்வுமயத்தால் சுற்றி வலைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நமது சொந்த மரபு மீட்பர்கள் தேவ தூதுவர்களாகத் தெரிவதில் வியப்பதற்கொன்றுமில்லை!

சொந்த மரபு மீட்பர்களின் “திருத்தல்வாதம்:

நமது சொந்த மரபு மீட்பர்கள் நிலவுகிற அனைத்து முரண்பாடுகளை தீர்க்கிற பணியை திருமூலர்,தொல்காப்பியரிடத்தில்(மற்றும் மயன்) தடாலடியாக எடுத்துச் செல்கின்றனர்.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அனைத்தையும் அறிந்துவிட்டார்கள் எனத் துணிந்து கூறுகிற இவர்கள் நேரிதின் உணர்தல்எனும் இறைக்கொடையால் இவையெல்லாம் சாத்தியமானது என டார்வினை விஞ்சுகிற கோட்ப்பட்டை கூசாமல் முன்வைகிறார்கள். மேலும்,மனித அறிவின் மேன்மைகள் யாவும் இருந்த தடம் தெரியாமல் புதைந்து சிதைந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இறையருள் பெற்றவர்களின் கருத்துகள் மட்டும் நமக்குக் கிடைக்கின்றன என்கின்றனர்.நமது மரபு மீட்பர்களின் பிற்போக்குவாதத்தை ஆய்வதற்கு இம்மேற்கோள்கள் போதுமென்று கருதுகிறேன்.

ஒவ்வொரு தொல்குடி சமூகமும் அதன் வரலாற்று வளர்ச்சிக் கட்டங்களின் சொந்த புறநிலைத் தேவையின் காரணமாக,வளர்ச்சி பெற்று வளர்கிறது.நிலவியல்,நீரியல்,உணவு,மருத்துவம்,பண்பாடு,மொழி என அதன் வாழ்நிலப் பிரதேசம்,உற்பத்தி முறை  சார்ந்து அதன் வளர்ச்சிப் போக்கு அமைகிறது. இன்றைய வளர்ச்சி பெற்ற உற்பத்தி வடிவங்கள்,சிந்தனைகளின் கருக்களனாக  பண்டையகால சிந்தனைகள்  அமையப்பெருகிறது.
அவ்வகையில் (சமூகத்தை உள்ளடக்கிய) இயற்கைவாதம் பற்றின இன்றைய வளர்ச்சிபெற்ற புரிதல்களுக்கு தமிழ் சிந்தனைப் போக்குகளின் தத்துவ  மரபுகள் சிறந்த கொடைகளை வழங்கியுள்ளது.

தமிழ்ச் சமூகமானது  நீண்ட நெடிய தத்துவ மரபு கொண்ட சமூகமாகும். கடவுள்களின் பெருங்கருணையால் இயற்கை இயங்குவதாகவோ,இயற்கையை கடவுளாக பாவிக்காத கருத்தியலே தமிழர்களின் இயற்கைவாதமாக இருந்தது.அவ்வகையில் இயற்கை பற்றின  பண்டைய பொருள்முதல்வாத சிந்தனை மரபானது தொல்காப்பியரின் காலத்திலிருந்தே வழக்கிலிருந்ததாக அறிகிறோம்.உலகத்தோற்றம்,அதன் இயக்கம்,அதில் தொழில்படுகிற மனிதனின் அக மற்றும் புற  வாழ்க்கை குறித்த சித்திரத்தை முதற்பொருள் கருப்பொருள் உருப்பொருள் நூற்பாக்களின் வாயிலாக  தொல்காப்பியர் வழங்குகிறார். முதலெனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல் புனர்ந்தோரே என முதற்பொருள் குறித்து விளக்குகிறார்.

நிலத்திற்கும்(வெளி)  காலத்திற்குமான பிரிக்கமுடியாத உறவை உணர்ந்தவர்கள் இயற்கையின்  இயல்பை உணர்ந்தவர்கள் என முதற்பொருள் குறித்த விளக்கத்தில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.வெளிக்கும் காலத்திற்கும்  வெளியே எதுவும் இல்லை என்ற தொல்காப்பியரின் முடிபு இங்கு கருதத்தக்கது.
இதுபோன்றே நீலகேசி,மணிமேகலை  போன்ற தமிழ் இலக்கியங்களில் பூதாவாதிகளின் இயற்கை பற்றின பண்டைய  பொருள்முதல் வாத விளக்கூறுகள் அங்கங்கு  காணக்கிடைகின்றன.இத்தகைய தொடக்க கால  பொருள்முதவாத விளக்கங்களில் இயங்கியல்தன்மை வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில்கொள்ளவேண்டும்.

இச்சிந்தனைப் போக்குகள் அக்கால கட்டத்தின் வராலாற்று வரையறைக்கு உட்பட்டவை.இன்றைய சூழலில் வைத்து பண்டைய தத்துவங்களை வரையறை செய்ய இயலாது.வரலாற்று வரையறைக்கு உள்ளாக வைத்தே சமூகத்தின் தத்துவ,அரசியல்,பொருளாதர அசைவுகளை நாம் அணுகவேண்டும்.மேலும் அவை எக்காலத்துக்கும்  பொருந்துகிற,சாசுவாத சிந்தனையாக இருக்கவும் முடியாது.மேலும் நமது அனைத்து சிக்கல்களுக்கு தீர்வாக பண்டையத் தத்துவங்கள்,சித்த மரபுகளை  முன்வைத்து மக்களை குழப்புவது பிழைப்புவாதத்தின் உச்சமாகும்.

இறுதியாக,

சிக்கலுக்கு அடிப்படைக் காரணியாக இருக்கிற நிலவுகிற முதலாளிய சந்தை அமைப்பை புரட்சிகர வகையில் மாற்றியமைக்கிற கவலைகள், நமது சொந்த மரபு மீட்பர்களிடத்தில் இருப்பதில்லை.நிலவுகிற அமைப்பானது, சமூகத்தின் இன,மொழி,உணவு,கல்வி,பண்பாட்டு உணர்வுமட்டங்களில் ஏற்படுத்துகிற அந்நியமாதலை தனது சொந்த அடையாளத்திற்கான வாய்ப்பாக,லாபம் தருகிற மரபு சந்தையாக எவ்வாறு மாற்றுவது என்பதே இவர்களின் கவலைகளாக உள்ளது.

No comments:

Post a Comment