Pages

Friday 22 January 2016

“சூழலியல் பாதுகாப்பிற்கு“ மார்க்சியம் ஏன் தேவை ?



நிலவுகிற  சூழலியல் சிக்கல்கள் மீதான விமர்சனங்களையும் தீர்வுகளையும் மார்க்சியத் தத்துவ நோக்கில் முன்னெடுக்கும்பட்சத்தில், செய்யாத தவறை செய்துவிட்டோமோ என்று கருதத்ததக்க வகையில் உள்ளது நமது சூழல்வாதிகள்  எழுப்புகிற பல்வேறு கேள்விகளைப் பார்க்கும்போது..சில கேள்விகள் கேள்விக்குரிய  மதிப்பற்றதாகவும் சில கேள்விகள் சலிப்பூட்டுகிற வகையில் அயற்சியை ஏற்படுத்துவதாக இருந்தபோதிலும் அவர்களுக்கான பதிலுரைப்பது நமது கடமையாகவே கருதவேண்டியுள்ளது.அவர்களின் கேள்விகள்..

·         மார்க்சு விளக்கிய அரசியல் பொருளாதாரமானது ஐரோப்பாவை(குறிப்பாக மேற்கு ஐரோப்பாவை!) மையப்படுத்தி முன்வைத்த கோட்பாடாகும்.அதோடு மார்க்சியத் தத்துவமானது வர்க்கப் போரட்டத்தை மையமாகக் கொண்ட கோட்பாடாகும்.அதை நாம் தற்போது நிலவுகிற சூழலியல் சிக்கல்களோடு இணைத்துப் பேசுவது முரணாகும்.
·         இயற்கையை மனிதனின் கட்டுக்குள் வைக்கவே மார்க்சு விரும்பினாரே ஒழிய,சூழலை காக்கும் பொருட்டான வாதத்தை மார்க்சு முன்வைக்கவில்லை.
·         தொழித்துறை வளர்ச்சி பெருகினால்தான் தொழிலாளிகள் நலம் பெற முடியும் எனவே சூழலியல் சிக்கலுக்குக் காரணமாக உள்ள தொழிற்துறை எழுச்சிகளை மார்க்சு ஆதரிக்கிறார்.
·         கூடங்களும் அணுவுலைத் திட்டம்,மரபணு மாற்றுப் பயிர் அனுமதி போன்ற முக்கிய சூழலியல் சிக்கல்களில்  இரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடும் செயல்பாடும் முரணாக உள்ள நிலையில் எவ்வாறு மார்க்சிய நோக்கில் சூழலியல் சிக்கல்களை அணுகமுடியும்!

என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் தற்போது, மார்க்சை முன்வைத்தும்,மார்க்சியர்களை  முன்வைத்தும் நமது  இயற்கையாளர்கள் மற்றும் ,சூழல்வாதிகளால்  எழுப்பப்பட்டு வருகிறது.

மார்க்சு ஏன் தேவை:

 “மார்க்சியக் கோட்பாடு மகத்தான ஆற்றல் கொண்டது,ஏனெனில் அது உண்மையானது” என்ற லெனின் கூற்றோடு நமது சூழல்வாதிகளுக்கான மறுப்புகளை முன்வைப்போம்.

மார்க்சியம் மற்றும் மார்க்சு மீதான விமர்சனங்களுக்கான நமது பதிலானது மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலானது.அது வர்க்கசுரண்டல் மற்றும் சூழலியல் சிக்கல்களைப் பேசுவதாகும்.அப்பதிலை நாமொரு பொருளாதார மார்க்சியரின் வழி நின்று சொன்னால் இன்னும் பொருத்தமுடையதாக இருக்கும்.

”மூலதனத்திற்கு அப்பால்”எனும் தனது நூலின் முதல் பகுதியே “மார்க்சு எதற்காக?”என்ற தலைப்பின் கீழ் பொருளாதார மார்க்சியரான மைக்கல் லேபோவிட்சு விரிந்துரைக்கிறார்.

முதலாவதாக மார்க்சியத்தை நாம் பொருளாதாரக் கோட்பாட்டு என்ற அளவோடு சுருக்கக்கூடாது. சுரண்டலை மையப்படுத்திய சமூகத்தையோ,முழு வளர்ச்சியை நோக்கிய மனித ஆற்றலை கட்டுபடுத்தும் விதத்திலான சமூகத்தையோ மார்க்சியம் நிராகரிக்கும்.மனிதனின் தேவைக்காக அல்லாமல் தனியாரின் லாபத்திற்கான வர்க்கச் சார்பாக எடுக்கப்படுகிற சமூக முடிவுகளுக்காக முதலாளித்துவத்தை மார்க்சியம் எதிர்க்கிறது.அதன் லாப நோக்க உற்பத்தி முறைக்காக இயற்கை வளங்களை,மனித வளங்களை சிதைப்பதும்,பாலின,மொழி  பாகுபாட்டினை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்வதும் முதலாளித்துவத்தின் இயல்பான போக்காக மார்க்கியம் பார்ப்பதால் மட்டுமே அதற்கெதிராக போராட வலியுறுத்துகிறது.
இரண்டாவதாக,மார்க்சியத்தை அதன் பொருளாதாரக் கோட்பாட்டு தளத்தில் நின்று பேசும்போது,முதலாளித்துவ திறனாய்வை மார்க்சைத் தவிர்த்து இவ்வளவு வலுவாகவும்,ஆழமாகவும் இதுவரை எவரும் முன்வைத்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

மேற்கூறிய லெபோவிட்சின் விளக்கங்கள் நமது சூழல்வாதிகளின் முதல் இரண்டு கேள்விகளுக்கான சிறந்த விளக்கங்களாக இருக்கமுடியும்.இன்னும் விளக்கவேண்டுமென்றால் முதலாளித்துவ அமைப்பு குறித்த மார்க்சின்  பகுப்பாய்வு மட்டும் நமக்கு இல்லாமல் போனால்,அவ்வமைப்பினில் வாழத்தளைப்பட்ட மக்களுக்கு அவ்வமைப்பு குறித்து  புரிதல் இல்லாமல் போயிருக்கும்.குறிப்பாக முதலாளித்துவத்தின் “பொருளாதார இயக்க விதிகளை”மூலதனம் நூலின் வாயிலாக மார்க்சு விளக்காமல் விட்டிருந்தால் முதலாளித்துவ அமைப்பின்  முக்கியபோக்கான அதன் “இயக்கத்தை” புரிந்துகொள்வதென்பது நவீன மனித சமூகத்திற்கு சாத்தியப்படாமலேயே போயிருக்கலாம்.

மார்க்சின் “மூலதனம்”:

மார்க்சின் மூலதனமானது ,வரலாறுதோறும் அதிகரிக்கின்ற, முதலாளித்துவ அமைப்பின் மூன்று முக்கிய முரண்பாட்டுப் போக்கை விஞ்ஞானப்பூர்வ பகுப்பாய்வின் வழி  முன்வைக்கிறது.

முரண்பாடு-1

உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளின், பயன் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பிற்கான வித்தியாசம்.
ஒருபக்கம் பணம் பண்ணும் நோக்கிலான உற்பத்தி, மறுபக்கம் மனிதத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதத்திலான நீடித்த வளர்ச்சி என்கிற இவ்விறு போக்கும் வரலாற்றின், ஒவ்வொரு வளர்சிக்கட்டதிலும் அழுத்தம் பெறுகின்றன.இதை முதலாளித்துவ அமைப்பானது,லாபத்திற்கான உற்பத்திமுறையின் மூலமாக மேலும் மோசமாக்கியது என்பது மார்க்சின் வாதமாகும்.நிலவுகிற நவீன தாராளமயமாக்கல் சூழலில் லாபத்திற்கான வரைமுறையற்ற இவ்வுற்பத்தி முறையே இன்றைய அனைத்து சமூக சிக்கலக்குமான வேறாக இருப்பது வெள்ளிடைமலை!

முரண்பாடு-2

உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளியிடம் இருந்து உபரி உழைப்பு நேரத்தை உறுஞ்சும் முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டல்.
முதலாளித்துவமானது, தொழிலாளிகளின் மத்தியில் வேலைப்பிரிவினையை அதிகளவில் அதிகரிக்கச்செய்தும்,வேலை நேரத்தை நீட்டித்தும் தொழிலாளியின் உபரி நேர உற்பத்தியை லாபமாக பெயர்க்கிறது.முதலாளித்துவத்தின் இவ்வுழைப்புச்சுரண்டல் போக்கை மார்க்ஸ் தனது மூலதனத்தில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

மேற்குறிப்பிட்ட இரு முரண்பாடுகளும் மூன்றாவதொரு முரண்பாட்டிற்கு வித்துடுவதை மூலதன நூல் விவரிக்கிறது.அது முதலாளித்துவத்தில் ஏற்படுத்தப்படுகின்ற பொருளாதார நெருக்கடி குறித்ததாகும்.

கடந்த 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே சான்று பகர்கிறது மார்க்சின் நூற்றைம்பது ஆண்டுக்கு முற்பட்ட மூலதனத்தின் சிறப்புக்கு!
கிரேக்கம்,இத்தாலி,ஸ்பெயின் என ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் உலகின் புதிய அடுக்கை குலைப்பதாக அமைந்தது.பொதுவாக சந்தையின் உள்ளார்ந்த விதிகளே மாயவித்தைகள் செய்து அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடும் என்றும் பெரும் பொருளாதர நெருக்கடி போன்ற காலத்தில் நிகழ்ந்தது போன்று இப்போது நிகழ வாய்ப்பில்லை என்று கூறிய முதலாளித்துவ பொருளாதார மேதைகள்  தற்போது முழித்துக்கொண்டு நிற்பதை நாம் காண்கிறோம்.

நிலவுகிற முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையானது மனித சமூகத்தின் மீதான இரு கூர்முனை கத்தியாக திகழ்கிறது.இந்நிலையில் இத்தளையிளிருந்து விடுபட,முதலாளித்துவத்திற்கு எதிராக போராட,அதற்கெதிரான மாற்று சமூகத்தை கட்டியெழுப்ப நம்முன் உள்ள ஒரே வாய்ப்பு மார்க்சியம் மட்டுமே.ஏனெனில்,மார்க்சியம் மட்டுமே மனித இனத்தின் நீடித்த வளர்ச்சிக்கான மாற்று முகாமை காட்டவள்ளது
கட்சி கம்யூனிஸ்டுகளும் கட்சிசார கம்யூனிஸ்டுகளும்
தற்போது நமது சூழல்வாதிகளின் இறுதி கேள்விக்கு வருவோம்.அதாவது இரு இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு சூழலியல் கரிசனமற்று இருக்கிற வேலையில் இடதுசாரி நோக்கில் சூழலியல் சிக்கல்களை எவ்வாறு அணுகலாம் என்பதே அக்கேள்வி.

இயற்கையின் இயங்கியலை விளக்கிய எங்கெல்ஸ் மற்றும் விஞ்ஞான வழிப்பட்ட வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியலை வளர்த்தெடுத்த மார்க்ஸ்சின் மரபு வந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திகொள்கிற இடதுசாரிக்கட்சிகளின் சமூக- சூழலியல் நிலைப்பாடுகள் சிலசமயங்களில் வலதுசாரி கட்சிகளையே தோற்கடிக்கும் விதமாக உள்ளது.அணுசக்திக் கொள்கை விவகாரத்தில் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை எதிர்த்து நடுவண் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிய இடதுசாரிகள்,ரஷிய ஆதரவு என்ற ஒர் உறுதிப்பாட்டின் காரணமாக கூடங்களும் அணு உலையை ஆமோதிப்பது முரணின் உச்சம்(தற்போது அணுவுலை விரிவாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற நிலைப்பாட்டை எடுத்தள்ளனர்).தேசிய இன மக்களின் சுயநிர்ணய (பிரிந்து போகும் உரிமையோடு கூடிய)உரிமைப் போராட்டங்களை மறுத்தும்,தேசிய முதலாளிகளின் நாடாளுமன்ற சனநாயகத்தை தழுவிக்கொள்வதும்,தேசிய இன மக்களின் முக்கிய சமூக-சூழலியல் சிக்கல்களில் பெரிதாக  அக்கறை கொள்ளாததும் விவசாய அரசியலை சாதி ஒழிப்போடு இணைக்காததும் அரசின் நடவடிக்கைகளில் அவநம்பிக்கை கொண்ட மக்களின் ஆதரவை  இடதுசாரிகள் பெற முடியாமல் மக்களிடமிருந்து அந்நியமாகியுள்ளனர்.

இந்தியாவின் இரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமைகளோடு கம்யூனிச தத்துவத்தையும் கட்சிசார கம்யூனிஸ்ட்களையும் இணைத்துப் பார்ப்பது, பார்ப்பவர்களின் பிழையே.இதை மையமாகக் கொண்டு பொத்தம் பொதுவாக கம்யூனிசத் தத்துவத்தை விமர்சிப்பது என்பது  முன்முடிவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற வறட்டுத்தன வாதம் என்றே நாம் புறந்தள்ள வகையிலேயே உள்ளது.

இயற்கை வளப்பாதுகாப்பும் கம்யூனிச நாடுகளும்:

முன்னாள் சோவியத்து ஒன்றியம் :
இயற்கைப் பாதுகாப்பு மற்றும் சூழல் குறித்த கடந்த காலத்தைய சோசலிசக் கோட்பாடுகள் ,திட்டங்கள் மற்றும் சோசலிச இயக்கங்களின் பங்களிப்புகள் குறித்த விவாத்ததை முன்னெடுக்காமல் அதன் சாத்தியப்பாட்டை நோக்கி நகர்வது  முரணான முயற்சியாகும்.பெரும்பான்மையான அறிவு ஜீவிகளால் இவ்வாதங்கள் இன்று வரை குறைவாகவே பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, உலகின் அனைத்து‍ நாடுகளுக்குமான முன்மாதிரியாகத் திகழ்ந்த முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆரம்பகால இயற்கைவளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாகவே அறியப்பட்டுள்ளன. பொருளாதாரம், தொழில், அரசியல் தளங்களில் புரட்சிக்குப்பின் ஏற்படுத்தப்பட மாற்றங்கள் அறியப்பட்ட அளவில் இயற்கையைப் பாதுகாக்க அவர்கள் கொண்டுவந்த பசுமைக் கொள்கைகள் கவனிக்கப்படவில்லை என்றே கூறலாம். சிறப்பான சூழலியல் கொள்கைகளுடன் ,சுற்றுச்சூழலுக்கு எதிரானவற்றை தடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆரம்பகால முன்னெடுப்புகள் இன்றளவில் அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரியாகவே இருந்துள்ளன. 

உலகிலேயே முதன்முதலாக,இயற்கையைப் பேணிப்பாதுகாப்பதன் பொருட்டும்,இயற்கை மீதான விஞ்ஞானப்பூர்வ ஆய்வு மேற்கொள்ளவும், ஒர் அமைப்பை நிறுவிய அரசு, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அரசுதான்.விஞ்ஞானவழியில் இயற்கையை அணுக, அவர்கள் கொண்டுவந்தசபோவெட்னிக்(Zapovednik) திட்டம்இன்று சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.பெரும்பாலான சூழலியல் ஆர்வலர்கள் அதிகம் அறிந்திராத இத்திட்டமானது, இன்றளவிலும் பல லட்சக்கணக்கான பரப்பளவில் உள்ள வனங்களையும்,பல்லுயிரினங்களையும் காத்து நிற்கும் அரணாகத் திகழ்கிறது.

1917 ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சிக்குப்பின் சோவியத் அரசு பல சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொண்டது.முதல் உலகப்போரின் தொடர்ச்சி,உள்நாட்டு யுத்தம், அந்நிய நாடுகளின் தலையீடு மற்றும் பொருளாதார முட்டுக்கட்டைகள் இப்படிப்பல சிக்கல்கள்.போரால் பெருமளவிலான நிலங்கள் நாசமடைந்திருந்த வேளையில், உணவு மற்றும் எரிசக்திக்கான  தேடலே அப்போதைய முதன்மைத் தேவையாக இருந்தன. இவ்வகையான சூழ்நிலையில் சுற்றுச்சூழல் குறித்த நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை பொறுமையாக எடுத்துக்கொள்ளலாம்,முதலில் இச்சிக்கல்களையெல்லாம் கவனிப்போம் என்று சோவித் அரசு காரணம் தேடவில்லை.மார்க்சிய கட்சியான போல்ஷ்விக் கட்சி, சுற்றுச்சூழல் குறித்த சில தீர்மானகரமான நிலைப்பாடுகளை எடுத்தது. சூழலை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டன,இவற்றை நடைமுறைப்படுத்தவும் மேற்பார்வை செலுத்தவும் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.

சில அடிப்படை வனப்பாதுகாப்புச் சட்டம் இயற்றுதல்:

வரைமுறையற்ற உற்பத்தியில் லெனின்  உறுதியாக இருந்தார் எனப் பொதுவாக சொல்லப்பட்டாலும் எதார்த்த ஆவணங்கள் அவற்றிற்கு எதிராகவே உள்ளது ! சோவியத் ஒன்றியத்தின் உற்பத்தி ஆற்றலைப் பெருக்க லெனின் தீவிர முனைப்புச் செலுத்தினாலும்,இயற்கை மதிப்பிற்குரியது என்றே அவர் எண்ணினார்.1918 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி, நிலம் குறித்து ஓர் ஆணையை பிறப்பித்தது. அதில் சோவியத் ஒன்றியத்தின் அனைத்துக் காடுகள்,நீராதாரங்கள் மற்றும் கனிம வளங்கள் தேசத்தின் சொத்தாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில்,  காடுகள் குறித்து லெனின் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காடானது  பாதுக்காப்பிற்குரிய காடுகள் மற்றும் உபயோகப்படுத்துவதற்குரிய காடுகள் எனப் பிரிக்கப்பட்டன. பாதுக்காப்பிற்குரிய காடுகளில் அரிப்புகளை கட்டுப்படுத்துவது மற்றும் நீராதாரங்களை  பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.முக்கியமாக இயற்கையின் சிறப்பைப் பாதுகாப்பது.

காடுகளில் உள்ள விலங்கினங்களை வேட்டையாடும் விளையாட்டைத் தடை செய்யும் ஆணைக்கு 1919ஆம் ஆண்டு லெனின் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அனைத்துப் பருவங்களிலும் மூஸ்கள் மட்டும் காட்டாடுகள் வேட்டையாடப்படுவதை அவ்வாணை தடைசெய்தது.

சபோவெட்னிக் திட்டம்
சுற்றுச்சூழல் குறித்த விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளவும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் உணவுப்பயிர்/தாவரப்பயிர் வல்லுனரான பாடியல்போல்ச்கியால்(Podialpolski) சபோவெட்னிக் (Zapovedniki) திட்டம் லெனினிடம் பரிந்துரை செய்யப்பட்டது. சபோவெட்னிக் என்றால் “பாதுகாக்கப்பட்ட இயற்கை” என மொழிபெயர்க்கலாம். அதாவது இப்பகுதியில் வேட்டையாடுதல்,பழங்கள் பறித்தல் ஏன் சுற்றுலா கூட தடைசெய்யப்பட்டது. அதாவது இயற்கையை அப்படியே அதனிடம் விட்டுவிடுவது. இயற்கையின் சமநிலையை உறுதிப்படுத்தும் பொருட்டும், பல்லுயிரிப் பெருக்கத்தின் பொருட்டும் இவ்வகையான “பாதுகாக்கப்பட்ட இயற்கை” பிரதேசங்களை நாம் உருவாக்கவேண்டும் என்பதில் பாடியல்போல்ச்கி உறுதியாக இருந்தார்.பின் லெனினிடம் ஒரு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி பாடியல்போல்ச்கி கூறுகிறார்.

”அஷ்ட்ராகன் பிரதேச இராணுவ மற்றும் அரசியல் சூழ்நிலை குறித்துச் சில கேள்விகள் கேட்டார்.பின் சபோவெட்னிக்கி உருவாக்கத் திட்ட முன்னெடுப்பிற்கு தன் முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கினார்.மேலும் இவ்வகையான இயற்கை பாதுகாப்புத் திட்டம் அஷ்ட்ராகன் பிரதேசத்தில் உருவாக்குவது முக்கியமானது,அதோடு இத்திட்டத்தை குடியரசு முழுமைக்கும் விரிவாக்க வேண்டும் என்றார்”

அதன்பின் பாடியல்போல்ச்கியின் முழுநேரமும் சபோவெட்னிக் திட்டம் குறித்த சட்ட வரைவு உருவாக்குவதில் கழிந்தது. 1921 ஆம் ஆண்டில் இயற்கையைப் பாதுகாப்பதன் பொருட்டில் உருவாக்கப்பட்ட இச்சட்டதிற்கு சோவியத் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இச்சட்டம் அமலுக்குக் கொண்டுவருவதை மேற்பார்வை செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.புவியியல் விஞ்ஞானி,இரு விலங்கியல் அறிஞர் மற்றும் கனிமத்துறை விஞ்ஞானிகளைக் கொண்ட இக்குழுவை வானவியல் அறிஞர் வாக்ரேன் தலைமையேற்று வழி நடத்தினார்.

பாடியல்போல்ச்கியின் ஆசைப்படி இக்குழு சபோவெட்னிக் காட்டை முதன் முதலில் அஷ்ட்ராகன்(Astrakhan) பிரதேசத்தில் நிறுவியது.பின் கனிமவளங்கள் அதிகளவில் கொட்டிக்கிடக்கும் இல்மேன்ச்கிவில் அடுத்த சபோவெட்னிக் நிறுவப்பட்டது.இவை ஒருப்பக்கம் இருந்தாலும் சோவியத் அரசானது விஞ்ஞானத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் அளப்பரியது.உதாரணமாக விலைமதிப்பற்ற மையாஸ் படிவங்கள் பரவிக்கிடக்கும் பிரதேசங்கள் புவியியல் விஞ்ஞானிகளின் ஆய்விற்காக ஒதுக்கப்பட்டது(விஞ்ஞானம் குறித்த புரிதலுக்கு முதன்மை தரப்பட்டதே தவிர மூலதனங்களைக் குவிக்கும் போக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்படத்தக்கது).இவ்வகை விஞ்ஞான ஆய்வு முயற்சிகளை லெனின் அதிகம் பாராட்டினார்.

லெனினின் தலைமையின் கீழ் சோவியத் ஒன்றிய அரசானது இயற்கைப் பாதுகாப்பின்பால் எடுத்த  துணிச்சலான அணுகுமுறை 20ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா நோக்கத்திற்காக இயற்கையை அவர்கள் பலி கொடுக்கவில்லை. சபோவெட்னிக் உருவாக்கத்தின் மற்றுமொரு நோக்கம் சூழலியலை ஆய்வு செய்வது. ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து இயற்கையை ஆய்வு செய்யாமல் தாவரங்களின் இயற்கை நிகழ்முறையை நேரடியாகக் கண்டுணர்ந்து சூழலியலைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது. இது முழுக்க முழுக்க விஞ்ஞானமே. இயற்கையுடன் மனிதன் இசைந்து வாழ இவ்வகையான விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் வழிசெய்யும். உதாரணமாக வேளாண்மையில் இயற்கை முறையில் பூச்சிகளை நீக்கும் வழிவகைகளை கண்டுணர்ந்து செயல்படுத்தலாம்.எங்கெல்சு குறிப்பிடுகிற “இயற்கையின் நியதிகளைக் புரிந்துகொள்ள” இவ்வகையான விஞ்ஞான வகைப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமே நமக்குத் துணைசெய்யமுடியும்.

கியூபாவில் மேற்கொள்ளப்பட்ட இயற்கை வேளாண்புரட்சி :

கியூபாவின் இன்றைய வேளாண் நிலைமைகுறித்து பேசுவதற்கு முன்பாக அந்நாட்டின் கடந்தகால வேளாண் அரசியல் பொருளாதாரம் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகும்.கியூபாவின் இன்றைய நவீன இயற்கை வேளாண்மைக்கு முன்னோடியாக இருந்தவர்கள் டைனோ இன மக்கள் ஆவர்.மண்ணின் வளங்கள் கெடாமல் வேளாண் உற்பத்தியைப் பெருக்கவதில் அவர்கள் அதிகம் ஆர்வம் செலுத்துபவர்களாக இருந்துள்ளனர். ஐரோப்பியர்களின் வருகையோடு இவர்களின் வரலாறு முடிவுற்றதாகத் தெரிகிறது. 1492 ஆம் ஆண்டில் கொலம்பசின் காலடி இத்தீவில் பட்டபிறகு இந்நாட்டின் அழிவு தொடங்கியது எனலாம். கியூபாவை ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமாக்கி பெருமளவிலான ஸ்பானியர்கள் இத்தீவில் குடியேறுவதற்கு கொலம்பஸ் வித்திடுகிறார்.பின்னர் இத்தீவை துண்டாடிய ஸ்பானியர்கள், 6,50,000 ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்து வந்து தீவு முழுக்கு கரும்பு சாகுபடி செய்கின்றனர். இவ்வாறாக இத்தீவின் மண் வளங்கள் மற்றும் பன்மைய விவசாய முறை முற்றிலும் நிராகரிக்கப்பட்டு கரும்பு எனும் ஒற்றைப் பயிரை விளைவித்து நாட்டையும் நாட்டு மக்களையும் நாசம் செய்தார்கள்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மூன்றில் ஒருபங்கு சர்க்கரைத்தேவையை கியூபாவே பூர்த்தி செய்தது.சர்க்கரை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அமெரிக்காவின் ஆளுமை இத்தீவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் இறுக்கம் பெறத்தொடங்கியது.பின்னர் 1890களில் ஸ்பானியர்களுடனான இறுதி யுத்தத்தில் வெற்றிபெற்ற அமெரிக்கர்கள் கியூபாவின் கரும்பு பயிர் சாகுபடிக்கு முற்றுரிமை பெற்றனர்.கியூபாவின் 95 விழுக்காட்டு விவசாய நிலம் அனைத்தும் அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.மீதமுள்ள நிலத்திற்கு உரிமையாளராக இருந்த அந்நாட்டின் குறு விவசாயிகளிடம் ட்ராக்டர் போன்ற எந்தவொரு வேளாண் உற்பத்திக்கருவிகள் அற்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்பட்டு வந்தனர். 1958 ல் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கியூப குடும்பங்கள் நிலமற்றவர்களாகவும் ஆறு லட்சம் மக்கள் வேலையற்றவர்களாக இருந்தனர்.எங்கும் நோய், வறுமை.மின்சாரம் இல்லை, குடிநீர் விநியோகம் இல்லை.கியூப மக்களில் வெறும் நான்கு விழுக்காட்டு மக்களே மூன்று வேலை உணவு உண்டனர்.

இச்சூழலில்தான் 1959 ஆம் ஆண்டில் பிடில் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.கியூபப்புரட்சிக்கு பிந்தைய பிடில் அரசு தீவிரமான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியது.நிலத்தின் ஏகபோக உரிமை நீக்கப்பட்டு உழுதவர்களிடம் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டன.அறுபத்தேழு ஹெக்டேர் மேலாக நிலம் வைத்திருப்பவர்களின் நிலம் தேச உடமை ஆக்கப்பட்டது.[புரட்சிக்கு முந்தைய சமூகத்தில் குறைவான அளவில் பயன்பாட்டில் இருந்த ரசாயன உர பயன்பாடு புரட்சிக்குப் பிந்தைய கட்டத்தில் அதிகரிக்கப்பட்டது. பிடில் அரசின் வேளாண் கொள்கை கிட்டத்தட்ட சோவியத் மாதிரியய் ஒத்தவை.அதாவது தொழில்மயப்படுத்தப்பட்ட வேளாண்மையின் மூலமாக உற்பத்தியைப் பெருக்குவது.1989 ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டன் அளவிலான ரசாயன உரங்கள் சோவியத் ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.ட்ராக்டர்களின் எண்ணிக்கை 85,000 தொட்டது.

கியூபாவில் பொருளாதாரம் பெரிதாகச் சர்க்கரை ஏற்றுமதியை சார்ந்திருந்ததால் மாற்று பயிர்களைப் பயிரிட்டு உணவுப்பதுகாப்பை உறுதி செய்துகொண்டே கரும்பு உற்பத்தியையும் பெருக்கியாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.ஆனாலும் அன்றைய அரசியல் பொருளாதார சூழலில் கரும்புக்கான நிலப்பயன்பாட்டைக் குறைத்து பன்மைய பயிர் விளைச்சலுக்கு அழுத்தம் கொடுக்கிற சீர்திருத்தங்களைப் பிடிலால் தீவிரமாக மேற்கொள்ளவியலவில்லை.இச்சூழலில் சோவியத் ஒன்றியத்தின் தகர்வானது கியூபாவின் பொருளாதரத்தை பெருமளவில் பாதிக்க, பெரும் பொருளாதர மந்த நிலைமையைப் பிடில் அரசு எதிர்கொள்ள நேர்கிறது.உணவுத் தேவை முதல் போக்குவரத்து, மருத்துவம் என அனைத்தும் முடங்கும் நிலைக்குக் கியூபா தள்ளப்பட்டது.இறக்குமதி கிட்டத்தட்ட முடங்கிவிட்டது எனலாம்.வேளாண் உற்பத்திக்கான இராசயன உர இறக்குமதியும் இதோடு நின்றுபோனது.உணவுப்பாதுகாப்பு கேள்விக்குள்ளானது.

இக்கட்டான இச்சூழ்நிலையில்தான் இன்று உலகமே போற்றுகிற இயற்கை வேளாண்மைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.ஆம்,1991 ஆம் ஆண்டில் கியூபாவின் கிராமத்திலிரிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்த விவசாயிகளால் ஹவானா நகரத்தின் பயன்பாடற்ற இடத்தில இயற்கை வேளாண்மை இயக்கம் தொடங்கப்பட்டது.நகரங்களின் உணவுத்தேவையை நகரத்தில் உற்பத்தி செய்யப்படுகிற காய்கறிகள், பழங்கள்,கீரைகள் கொண்டு பூர்திசெய்யப்பட்டன.பிடில் அரசு இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கிற உணவுப்பயிர்களுக்கு தேவையான நிலங்களை மக்களுக்கு வழங்கியது.உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களை நேரடியாக மக்களிடம் விநியோகிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.பிடில் அரசு இயற்கை வேளாண் பண்ணை அமைத்தும், இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளித்தும் வந்தது.ஒருகட்டத்தில் நகர்ப்புற விவசாயத்தில் மனிதனுக்கு நஞ்சாகிற ரசாயன உரப்பயன்பாட்டை நூறு விழுக்காடிற்கு விலக்குகிற சட்டத்தைப் பிடில் அரசு கொண்டுவந்தது.இதை இவ்வாறு ஒரு மேற்குலக பத்திரக்கை எழுதுகிறது.

இயற்கை வழி வேளாண்மையை சட்டமாக்கிய உலகின் முதல் நகரம் ஹவான மட்டுமே!


இறுதியாக,மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் சூழலியல் திறனாய்வானது  19 ஆம் நூற்றாண்டில்   நிலவிய  சூழலியல் சிக்கல்களை  மையநீரோட்டமாக கொண்டவை.மார்க்சின் காலத்தில் பெரும் சூழலியல் சிக்கல்களாக இருந்தவை மண்வளச்சிதைவு,நகர் மாசு, விஷமாக்கப்பட்ட நிலம்,காற்று மற்றும் நீர் போன்றவையே.ஆனால் நம்மிடம் இப்பொது கூடுதலாக புவி வெப்பமயமாதல் போன்ற சிக்கல்களும் உள்ளது.இதற்குமுன் இல்லாத அளவிலான முதலாளியத்தின்  வரைமுறையற்ற உற்பத்தி விரிவாக்கம், லாபத்தை அதிகரிப்பதற்கான  கருணையற்ற இயக்கம் போன்ற  பொருளாதார காரணிகளே புவி வெப்பமயமாக்களுக்கு இட்டுச்சென்றது.மேலும்,பருவநிலை நெருக்கடியை , புதிய கரியமில தொழில் வணிகத்திற்கான லாபநோக்க  வாய்ப்பாகவே முதலாளித்துவ நாடுகள் அணுகுகின்றன.

எனவே முன்னைக்காட்டிலும் மார்க்சின் வாதங்கள் தற்போதையச் சூழலுக்கு முக்கியத்தேவையாக உள்ளது. அதனால்தான் நாம் அனைவரும் ஹைகேட் கல்லரையே(மார்க்சு புதைக்கப்பட்ட இடம்)இன்று  பெரிதும் சார்ந்திருக்கிறோம். ஏனெனில் மார்க்சியம் மட்டும்தான் சமூக விடுதலைக்கான ஒரு புரட்சிகர தத்துவத்தை உள்ளடக்கிய சமூக நடவடிக்கைகளில்பால் கரிசனம்  கொண்டுள்ள சமூக விஞ்ஞானமாகும். புரட்சிகர தத்துவம்  இல்லாமல் புரட்சிகர அரசியல் மாற்றமென்பது சாத்தியமில்லை. இதை உணர்ந்த காரணத்தால்தான் மார்க்சியத்தின் எதிரிகளே மார்க்சை ஏற்றுகொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதை மேற்குலக அறிஞர்கள் புரிந்துகொண்டாலும் நமது சூழலியலாளர்களுக்குப் புரிவதாக இல்லை.

----அருண் நெடுஞ்செழியன் 




No comments:

Post a Comment