Pages

Sunday 11 June 2023

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம்: கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் லாபத்திற்கு 80 கோடி இந்தியர்களின் சுகாதாரத்தை காவு கொடுப்பதா?

 


கடந்த 2021 ஆம் ஆண்டின் சுதந்திர தின விழா உரையில்  பேசிய பிரதமர் மோடி,நாட்டின் 80 கோடி மக்களுக்கு ஊட்டச் சத்து குறைபாடு உள்ளதாகவும், இப்பிரச்சனையை போக்க நியாய விலைக் கடைகளின் மூலமாக நாட்டு மக்களுக்கு செறிவூட்டப்பட்ட  அரிசி வழங்கப்போவதாகவும் அறிவித்தார்.

பிரதமர் மோடியின்  இந்த அறிவிப்பிற்கு பின்னால் இந்திய உணவுச் சந்தையை கட்டுப்படுத்துகிற பன்னாட்டு கார்ப்பரேட்களின் வர்த்தக வலைப்பின்னகள் ஒவ்வொன்றாக தற்போது அம்பலமாகிவருகிறது.நெதர்தலாந்து நாட்டின் உணவு நிறுவனமான ராயல் டிஎஸ்எம் என்ற கார்ப்பரேட்  நிறுவனத்தின் வர்த்தக லாபத்திற்காக சாமானிய மக்களின் சுகாதாரத்திற்கு கேடு ஏற்படுத்துகிற  ஆபத்தான செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை எதிர்கட்சிகள், உணவு பாதுகாப்பு வல்லுனர்கள்,சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றின் எதிர்ப்புகளையும் மீறி அவசரம் அவசரமாக அமல்படுத்திவருகிறது மோடி அரசு.

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியில், திட்டமிட்ட அளவில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய நுண் ஊட்டச்சத்துகளை செயற்கையாக ஏற்றுவதே செறிவூட்டப்பட்ட அரிசி ஆகும்.இந்த நுண் ஊட்டச் சத்துக்கள் முதலில் கலவையாக பொடி(பிரிமிக்ஸ்) செய்யப்படும்.பின்னர் மாவாக்கப்பட்ட அரசியோடு குறிப்பிட்ட வீதத்தில் வேதியல் கலவை சேர்க்கப்பட்டு அரசி மணி போல உற்பத்தி செய்யப்படும்(1:100 என்ற வீதத்தில் வேதியல் நுண்ஊட்டக் கலவை அரிசி மாவோடு சேர்க்கப்படுகிறது).வேதியல் கலவையையும் அரிசி மாவையும் இணைத்து உருவாக்கப்பட்ட அரிசியே செறிவூட்டப்பட்ட அரசி ஆகும். உணவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்புகளின்படி,இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 291 மாவட்டங்களை தேர்வு செய்து, சுமார் 9மில்லியன் டன் செறிவூட்டப்பட்ட அரிசியை கடந்த மார்ச் மாதத்திற்குள் வழங்குகிற திட்டம் முடிக்கிவிடப்பட்டது.

தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 5.51 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா’, முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிற வகையில் சுமார் ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கிட  தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது.தற்போது நான் வசிக்கிற மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த அரிசி நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருவதும்,பல்வேறு இயக்கங்களில் எதிர்ப்புகள் காரணமாக தற்காலிகமாக சில இடங்களில் மட்டும் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதும் அறிய முடிகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி அனைவருக்கும் பாதுகாப்பானதா?

கோதுமை,எண்ணெய் வித்துக்கள்,பால் மற்றும் தற்போது அரிசி ஆகிய உணவுப் பொருட்களுக்கு செறியூட்டல் கொள்கையை அரசு வரையறை செய்துள்ளது. நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்துவதே உணவு தானிய  செறிவூட்டல் முறையின் நோக்கம் என இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) கூறுகிறது.

கடந்த 2019-20  ஆண்டில் தேசிய குடும்ப நல அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி சுமார் 57 விழுக்காட்டு பெண்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்களாகவும் ஐந்தில் ஒரு பெண் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக கூறுகிறது.குறிப்பாக வைட்டமின்-A வைட்டமின்-D குறைபாடு அதிம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. இந்த நிலையில்தான் 2024 ஆண்டிற்குள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களிடம் செறிவூட்டப்பட்ட அரசியை பொது விநியோக அமைப்பின் மூலமாக நாடு முழுவதும் விநியோகிக்க வேண்டும் என மோடி அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது.வெளிப்பார்வைக்கு மக்களின் சுகாதார நலனில்  அக்கறை உள்ளது போல இத்திட்டம் தெரிந்தாலும்,அதன் உள்ளர்ந்த கார்ப்பரேட் நலனும் சுகாதரக் கேடும் பூடகமாக மறைக்கப்படுகிறது.

இந்த நுண் ஊட்டச் சத்துக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளாமல் இருப்பதின் குறைபாட்டை வெளிப்படுத்துகிறது.சாமானிய மக்களின் வறுமையான குடும்ப சூழலும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு காய்கறிகளும் பழ வகை உணவுகளும் உட்கொள்ளாமையே காரணம் என்ற உண்மையை அரசு ஒத்துக்கொள்கிறது.அதே வேளையில் செறிவூட்டப்பட்ட  அரிசி வழங்கலையே அதற்கு மாற்றாக முன்வைக்கிறது.

இந்திய மக்களின் இரும்புத்சத்துக் குறைபாடுகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி நல்ல மாற்றாக இருக்குமென்றும்,ரத்தத்தின் ஹீமோக்ளோபின் அளவையும் அனீமிக் குறைபாடுகளையும் சரி செய்யும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் முதனிலை அதிகாரி சிங்கால் தெரிவிக்கிறார்.இந்திய மக்கள் தொகையில் சுமார் 60 விழுக்காட்டு மக்கள் அரிசியை உட்கொள்வதால் அனிமிக் குறைபாடு உடைய சுமார் 35-40 விழுக்காட்டு மக்கள் பயனடைவார்கள் என்கிறார்.

ஆனால் உணவுப் பாதுகாப்பு துறை வல்லுனர்களின் கூற்றோ இதற்கு நேர் மாறாக  உள்ளது.இரும்புச் சத்து ஏற்றப்பட்ட அரிசியானது ,அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்றதல்ல என எச்சரிக்கின்றனர்..குறிப்பாக குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என்கிறார்கள்.

ஒருவர்,செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்வதன் மூலம் உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பின் அளவு  கணிசமாக அதிகரிக்கும்.இது நீரிழிவு நோய்க்கும் உயர் அழுத்தத்திற்கும் இட்டுச் செல்லும் என எச்சரிக்கிறார்கள்.குறிப்பாக பெண் உடலில் அதிகரிக்கிற இந்த அளவுகள் மாதவிடாய் சமயத்தில் இயற்கையாக வெளியேறிவிடும் எனவும் ஆண்களுக்கே இதனால் அதிக பாதிப்பு ஏற்படும் என அபாய மணி அடிக்கிறார்கள்.

இரும்புச் சத்து ஏற்றப்பட்ட அரிசி உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதாக எந்த ஆராய்ச்சி முடிவும் நிரூபணம் செய்யவில்லை.மேலும் பிற இணை நோய்கள் உள்ளவர்கள் இந்த அரிசியை உட்கொள்வதில் பல பிரச்சனைகள் உள்ளன.உதாரணமாக இந்தியாவில் தலசீமியா நோயாளிகள் அதிகம்.ரத்த சோகையின் தீவிரமான பிரச்சினைகளில் ஒன்றான, அரிவாள் உயிரணுச் சோகையால் (Sickle cell anaemia) பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொண்டால்  ஏற்கெனவே உள்ள பாதிப்புகளோடு புதிய பாதிப்புகளும் ஏற்படும்.

இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணைய அதிகாரிகளும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.ஆனால் ‘தலசீமியா நோயாளிகள் மற்றும் , அரிவாள் உயிரணுச் சோகையால் (Sickle cell anaemia) பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அரிசி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்” என்ற எச்சரிக்கை வாசகத்தை அரிசி பாக்கெட்கள் மேல்  ஒட்டிவிடுவோம் என காரணம் கூறுகிறார்கள். பொது விநியோக திட்டத்தில் அரிசி வாங்குகிற பாமர மக்கள், போதிய கல்வியறிவும் விழிப்புணர்வும் இல்லாத நிலையில்,எத்தனை மக்கள் இந்த எச்சரிக்கை வாசகத்தை படித்து அரிசி உட்கொள்வதை தவிர்ப்பார்கள்?

இந்தியாவில் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களை கண்டறிவது, குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்குகிற பிரத்யேக திட்டம் நடைமுறையில் இருக்கும்போது,எதற்காக மக்கள் தொகையில் பாதிபேருக்கு இந்த அரிசியை வழங்க வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.

பொது விநியோகத் திட்டம் மூலம் ஏற்கனவே இந்த அரிசியை பெற்ற மக்கள், அரிசியைக் களையும் போது அரிசி தண்ணீரில் மிதப்பதாகவும், வழக்கமான முறையில் வேகவைக்க முடியவில்லை எனவும்  குற்றம் சாட்டுவது கவனிக்கத்தகது.

 அவசரகதியில் திட்ட அறிவிப்பும் ஐயங்களும்:

இவ்வளவு ஆபத்தும் ஐயங்களும் தீராத வேளையில் அவசரகதியில், உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கட்டாயமாக திணிப்பது என்பது தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானதும் ஜனநாயக விரோதமும் ஆகும்..

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தைப் பொறுத்தவரையில்  மருத்துவ அறிவியல் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.மேலும்  ரத்தசோகை உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுக்கான தீர்வுகளை, செறிவூட்டுப்பட்ட அரிசியால் மட்டுமே தீர்க்க முடியாது என்பதும் தெளிவாகிறது.

அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த திட்டத்தை அவசர அவசரமாக நாடு முழுவதும் மோடி அரசு அமல்படுத்த துடிப்பதற்கு பின்னால் தனியார், பெருநிறுவனங்களின் செல்வாக்கு இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது.குறிப்பாக  செறிவூட்டப்பட்ட அரிசியையும் அதற்குத் தேவையான செயற்கை நுண்ணூட்டச் சத்துகளையும் உற்பத்தி செய்கிற பன்னாட்டு நிறுவனங்கள்,அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து இத்திட்டத்தை அமலாக்குவது அம்பலமாகியுள்ளது.

மோடி அரசின் அறிவிப்பின் பின்னாலான கார்பரேட் வலைப்பின்னல்:



மோடி இத்திட்டத்தை அறிவித்த அடுத்த பதினெட்டு மாதங்களில்,ராயல் டி எஸ் எம் நிறுவனமானது 3,600 டன் திறனில் பிரம்மாண்டமான செறிவூட்டப்பட்ட அரிசி ஆலையை ஹைதராபாத்தில் நிறுவுகிறது.தனது உற்பத்தி திறனை அதிகரிக்க,பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனம்,அரிசி ஆலைகள்  மற்றும் அரசு அதிகாரி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் செறிவூட்டபட்ட அரிசியின் சந்தை சுமார் 1,800 கோடி முதல் 35,000 ருபாய் வரை இருக்கும் எனவும் இதில் சுமார் 17 % சந்தையை ராயல் டி எஸ் எம் நிறுவனம் கைப்பற்றிவிட்டதாகவும் உணவுச் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.இதனாலே ராயல் டி எஸ் எம் நிறுவனத்தின் பிராந்திய துணை அதிகரி ரான்சிக்ஸ், மோடியின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து பாராட்டு மழை மொழிகிறார்.இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உணவு உற்பத்தி சந்தையை கைப்பற்றுவதற்கு பல கார்ப்பரேட்கள் போட்டியிடுகின்றன.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும்  அரசியல் தரகர்கள் மூலமாகவும் இந்தியாவின் செறிவூட்டப்பட்ட  அரிசி திட்டத்தை வடிவமைப்பதிலும் சந்தையை கைப்பற்றுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மெக்சிகோ நாட்டில் உணவு உற்பத்தி நிறுவனங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாநாடு ஒன்றை நடத்தின.அந்த மாநாட்டின் மையமானது “செறிவூட்டப்பட்ட அரிசியை உலகச் சந்தையில் வெற்றிகரமாக நிறுவுவதற்கான விழுப்புணர்வு இயக்கத்தை கட்டமைப்பது என்பதாகும்.அந்த மாநாட்டில்  சர்வதேச ஊட்டச்சத்து குழுமம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஜோயல் ஸ்பைசர் இவ்வாறு பேசுகிறார்                 “ செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து நாம் அரசின் கொள்கை வகுப்பாளர்களிடம் விவாதிப்பதில்லை.நமது திட்டத்தில் இது ஒரு குறையாக உள்ளது.ஆகவே அரசின் கொள்கையை தீர்மானிப்பவர்களிடம் நாம் தொடர்ந்து பேச வேண்டும்.செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்தும் அதனது இறுதி கட்ட பயனாளிகள் குறித்தும் நாம் எடுத்துக் கூற வேண்டும்”என்கிறார்.

இந்த மாநாடு நடைபெற்ற அடுத்த ஆண்டில் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையமானது செறிவூட்டப்பட அரிசியின் சந்தை தேவையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கிறது.இது தற்செயலானது அல்ல.நாம் மேற்குறிப்பிட்ட  சர்வதேச ஊட்டச்சத்து குழுமம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு டி எஸ் எம் நிறுவனம் நிதி வழங்குவது குறிப்பிடத்தக்கது.இந்த தொண்டு நிறுவனங்கள் அரசின் கொள்கை உருவாக்கத்தில் ஈடுபடுகிற பொதுத்துறை அதிகாரி மட்டத்தில் பல கட்ட ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. அரசின் கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தி தனக்கான நலனை முன் நிபந்தனையாகக் கொண்டு செறிவூட்டப்பட்ட அரிசிக்கான கொள்கையை வெற்றிகரமாக உருவாக்கிக்கொள்கிறது.

சர்வதேச ஊட்டச்சத்து குழுமம்,சைட் அண்ட் லைப்,பாத்(PATH)கையின்(GAIN) என பல்வறு தொண்டு நிறுவனங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அமைத்த குழுவில் அங்கமாக உள்ளது.இந்த அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நெதர்லாந்தில் டி எஸ் எம் நிறுவனம் நிதி உதவி வழங்கி வருவது தற்செயல் ஆனது அல்ல. கடந்த 2013 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, கையின் உணவு தொண்டு நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்காமல் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.சர்வதேச அளவில் அரசுகளிடம் தரகர் வேலை பார்ப்பதும்,கொள்கைகளில் தலையீடு செய்வதும் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்காக நாட்டின் உணவுக் கொள்கையை உருவாக்குவதை ஏற்க மறுக்கிற  இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையமானது எங்களது புரிதலை ஆழப்படுத்திக் கொள்ளவே தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஆலோசனைகள் பெற்றதாக மழுப்புகிறது.அதேநேரத்தில் 2020-21  ஆம் ஆண்டில் டி எஸ் எம் நிறுவனத்தின் லாபமானது அதற்கு முந்தைய ஆண்டை விட 60.5 விழுக்காடு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மோடி அரசு முழங்குகிற புதிய இந்தியா என்பதற்கான அர்த்தம்,பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்கு 80 கோடி மக்களின் சுகாதார நலனை காவு கொடுப்பதாகும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

என்ற வள்ளுவன் வாக்கு பலிக்கிற நாள் வெகுதொலைவில் இல்லை.

 நன்றி:ஜனசக்தி 

ஆதாரம்:

https://www.hindutamil.in/news/opinion/columns/967677-fortified-rice-4.html

https://theprint.in/india/whats-fortified-rice-why-is-modi-govt-pushing-it-why-some-experts-arent-excited/1111091/

https://www.reporters-collective.in/trc/fortification-part-3

https://www.thehindu.com/news/national/congress-questions-the-modi-government-for-rolling-out-fortified-rice-under-national-food-security-act-despite-caution-by-experts/article66893895.ece



No comments:

Post a Comment