Pages

Monday 26 June 2023

மோடி அரசின் சிவிங்கிப்புலிகள் மறு அறிமுகத் திட்டத்தின் தோல்வி

 


மோடி அரசின் விளம்பர அரசியல் மோகம் ஊரரிந்த ஒன்று.வெற்று விளம்பரத்திற்காக ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெருக்குவதும் அரசியல் லாபத்திற்காக அவசர கதியில் திட்டங்களை அறிவிப்பதும் பாஜக அரசின் 9 ஆண்டு  கால சாதனைகளில் ஒன்றாகும்.பிரதமரின் இத்தகைய “பிம்ப கட்டமைப்பு” அரசியலுக்கு தற்போது பெரும் பூனை இனம் இறந்து வருவதுதான் கொடுமை.

இந்தியாவில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக அற்றுப் போனதாக அறிவிக்கப்பட்ட பெரும் பூனை இனத்தைச் சேர்ந்த  சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவில் மறு அறிமுகம் செய்வதாக கடந்த ஆண்டு மோடி அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பு வரத்தொடங்கிய நாள் தொட்டே ரவி செல்லம்,ஜி எல் மில்ஸ் போன்ற துறை சார்ந்த நிபுணர்கள் (அற்றுப்போன உயிரினங்களின்) மறு அறிமுக திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கத் தொடங்கினார்.ஆனால் துறை சார்ந்த நிபுணர்களின் எச்சரிக்கையை  சட்டை செய்யாத மோடி கும்பல்  அவசரம் அவசரமாக ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்த சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தங்களைப் போட்டது. இத்திட்டத்திற்கு ப்ராஜெக்ட் சீட்டாஎன பெயரிடப்பட்டு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது மோடி அரசு.இத்திட்டம் மூலமாக ஆண்டுக்கு 10-12 சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.  

இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் நமீபியா நாட்டில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகளும் இரண்டாம் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம்  தென் ஆப்பிரிக்காவிருந்து 12 சிவிங்களும் இந்தியாவிற்கு வந்தன.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிகளை விடுவதற்கு திட்டமிடப்பட்டது.பின்னர் தனது 72-வது பிறந்த நாள் நிகழ்ச்சியின் மையமாக  சிவிங்கிப் புலிகளை குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டு தலைப்புச் செய்தியாக்கினார் பிரதமர் மோடி.அந்நிகழ்ச்சியில் பேசிய  பிரதமர், “1952-ம் ஆண்டு சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவற்றை திரும்பக் கொண்டுவருவதற்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பபடவில்லைஎனக் காங்கிரஸ் கட்சியை  சாடினார்.காங்கிரசோ “குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகளைத் திறந்துவிட்ட நிகழ்வு தேசிய பிரச்சினைகள், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து மக்களைத் திசைதிருப்ப பிரதமர் மோடி நடத்திய தமாஷ்” என பதிலடி கொடுத்தது.




கடந்த செப்டம்பர் மாதம் தனது மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஆப்பிரிக்காவில் இருந்த வரவைக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளுக்கு நல்ல பெயர்களை பரிந்துரைக்க அழைப்பு விடுத்தார்.பின்னர்,பரிந்துரைகளில் வந்த பெயர்களில் சிலவற்றை சிவிங்கிகளுக்கு சூட்டி “ப்ராஜக்ட் சீட்டா திட்டத்தை” தனது சுய விளம்பர அரசியலுக்கு கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

இங்கே கொடுமை என்னவென்றால் மோடியின் பிம்ப அரசியலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் பாதி முக்கியத்துவத்தைக் கூட இந்த உயிரினத்தை பாதுகாக்க கொடுக்கவில்லை என்பதுதான் வேதனை.மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் அறிவிக்கப்பட்டு குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிகளில், கடந்த மூன்று மாதத்தில் மட்டும் அடுத்தடுத்ததாக மூன்று சிவிங்கிகள் இறந்துபோனதுதான் கொடுமை..இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் என காட்டுயிர் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட வனத்தில்  நெருக்கமாக இத்தனை சிவிங்கிப்புலிகள் விடப்பட்டதை உச்ச நீதிமன்றமே கேள்வி கேட்கிறது.அரசு தரப்போ சிவிங்கிகளை விடுவதற்கு  வேறு மாற்று இடம்  பார்த்துக் கொண்டிருக்கிறோம் என  பம்முகிறது.அவசரகதியில் வெற்று  விளம்பர மோகத்திற்கு மேற்கொள்ளப்பட சிவிங்கிப்புலி மறு அறிமுகத் திட்டத்தால் அற்றுப் போன உயிரினத்தை  மீண்டும் அறிமுகம் செய்து அற்றுப் போக வைக்கிறது மோடி அரசு.

இந்திய சிவிங்கிபுலிகளின் வாழ்வும் அழிவும்

சீத்தா” (புள்ளியுடைய) என்ற வடமொழி வேர்ச்சொல்லைக்கொண்டு சீட்டாஎன்றும் வேட்டைச் சிறுத்தை”(Hunting Leopard) என்றும் ஆங்கிலத்தில் சிவிங்கிப்புலிகள் அழைக்கப்படுகிறது.கன்னடத்தில் சிவுங்கிஎன்றும் தமிழகத்தில் சிவிங்கிப்புலிகள் என்றும் அழைக்கபடுகிற இவ்வேட்டை விலங்குகள் பார்ப்பதற்கு சிறுத்தைப் போன்று இருந்தாலும் உடற்கூறு, நிற அடர்த்தி மற்றும் புள்ளி அமைப்பு போன்றவற்றில் சிறுத்தையிலிருந்து இவை  வேறுபட்டவை.குறிப்பாக சிவிங்கிகளுக்கு தலை சிறியதாக இருக்கும்.கண்ணுக்கு கீழே கோடுகள் இருக்கும்.

 சமவெளி மற்றும் பாறைகள் நிறைந்த மலைப்பகுதிகளில் அது இருக்கும். ஏனெனில் அதன் விருப்ப இரையான இரலைகள் அங்கேதான் மேய்ந்து திரியும். அபூர்வமாக சில சமயங்களில் வீட்டு விலங்குகளைத் தூக்கிச்சென்று சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு.ஆனால் அவை ஒருபோதும் மனிதனைத் தாக்கியதில்லை. முதலில் இரையைப் பிடிக்க புதர்களில் மறைந்தும் பதுங்கியும் அடி மேல் அடிவைத்து சத்தமில்லாமல் பத்தடி தூரம் வரை வரை முன்னேறி இரைக்கு அருகே நெருங்குகிறது. அதன் பின்பாக தன் இறுதிகட்டப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது. சிறிது தூரத்திலயே உச்சகட்ட வேகமெடுக்கிற அதன் திறன்தான் என்ன! அதை ஒரு அற்புதம் என்றே சொல்லவேண்டும்! வெளிமான்களோ,கங்காருவோ அல்லது நாய்களோ இதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அறநூறு அடி கூட ஓட முடியாது. வெறும் ஆயிரத்தி இருநூறு அடிதூரத்திற்குள்ளாக ஓட்டத்தை துவங்கி வெளிமானைப் பாய்ந்து பிடித்த வேட்டைச் சிறுத்தைஒன்றை மேதகு மெக்மாஸ்டர் பார்த்துள்ளார். அனேகமாக உலகில் குறைவான தூரத்தில் அதி வேகமாக ஓடக்கூடிய பாலூட்டியாக வேட்டைச் சிறுத்தைகளேஇருக்கக்கூடும்.”-ரிச்சர்ட் லைடேக்கர்.(Richard Lydekker)

பிரிட்டிஷ் இந்தியாவின் சிறந்த இயற்கையாளரும் எழுத்தாளருமான லைடேக்கர் மெயச்சுவது, நொடிக்கு நூறடி வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு புழுதி பறக்க இரையை அடிக்கப் பாய்ந்து ஓடும்(பறக்கும்!) உலகின் வேகமான பாலூட்டியான  கம்பீர இந்தியச் சிவிங்கிப்புலி குறித்துத்தான். சிவிங்கிப்புலியின் வாழ்வியில் குறித்தும் அதன் வசீகரம் குறித்தும் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக த கேம் அனிமல்நூலில்  சிலாகித்த லைடேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்தியாவில் தான் வாழ்ந்த காலத்தில் மிகவும்  விரும்பிய சிவிங்கிப்புலிகளை அடுத்த ஐம்பது ஆண்டில் அழிந்துவிட்ட உயிரினம்என்று அறிவிக்கும் நிலை வருமென்று.

சிவிங்கிப்புலிகள் என்ற பெரும்பூனை இனம் இந்தியாவில் முற்றிலும் அற்றுவிட்டது.1947 ஆம் ஆண்டில் கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் குறு நில மன்னர்  சுர்குஜா  சுற்றுக்கொன்ற மூன்று சிவிங்கிப்புலிகளுக்கு(இவன் ஆயிரத்தி முன்னூறுக்கும் மேற்பட்ட வேங்கைப்புலிகளைச் சுட்டுக்கொன்று சாதனையும் படைத்துள்ளான்) பிற்பாடு அவற்றை இந்தியா எங்கிலும் இதுவரை எவரும் கண்டதில்லை.இறுதியில் 1952 ஆம் ஆண்டில் சிவிங்கிப்புலிகள் இந்தியாவில் அற்றுவிட்டதாக  ஒன்றிய அரசு அறிவித்தது.

இந்திய வரலாற்றில், “அற்றுவிட்டதாகஅறிவிக்கப்பட ஒரே பாலூட்டி உயிரினம் சிவிங்கிப்புலிதான். ஒருகாலத்தில் ஆப்பிரிக்க கண்டம் தொடங்கி கிழக்காக ஈரான்,சிரியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் தொட்டு இந்தியாவில் ராஜஸ்தான்,குஜராத்,மத்தியப் பிரதேசம் தாண்டி நம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் வரை விரவி வாழ்ந்திருந்த சிவிங்கிப்புலிகள் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துபோனதற்கு வேட்டையும் வாழிட அழிப்புமே முக்கிய காரணங்கள் ஆகும்.

குறிப்பாக,அதிகாரம் படைத்த மன்னர்கள் மற்றும் காலனிய ஆட்சியாளர்கள் கண்மூடித்தனமாக சிவிங்கிகளை வேட்டையாடியது,பரந்து விரிந்த காடுகளை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றியது,இரைவிலங்குகளின் அழிவு மற்றும் காடழிப்பு போன்ற காரணத்தால் இந்தியாவிலிருந்து சிவிங்கிகள் அற்றுப் போவதற்கு முக்கியக் காரணமாகின.இன்று உலகில் நான்கில் ஒரு பாலூட்டி விலங்கும் எட்டில் ஒரு பறவையும் அழிவின் விளிம்பில் உள்ளன.

உயிரினம் அருகிக் கொண்டே வந்தால் அது முற்றிலுமாக மறையப்போகிறது என்று பொருள்.கெடுதிதரும் முகவர்களில் மனிதரும் அடக்கம்.பலவிலங்குகள் ஒட்டுமொத்தமாக அழிவதற்கு மனிதர் காரணம்” என தனது புகழ்பெற்ற உயிரனங்களின் தோற்றம் நூலில் சார்லஸ் டார்வின் மிகச்சரியாக சுட்டிக் காட்டுகிறார்.

  சிவிங்கிப்புலிகள் மறு அறிமுக முயற்சியும் எதிர் விளைவுகளும்:

தற்போது ஆப்பிரிக்காவிலும் ஈரானிலும் சொற்பமான எண்ணிக்கையில்  வாழ்கிற சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு மறு அறிமுகம் செய்கிற முயற்சியானது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்  தொடங்கப்பட்டது.காட்டுயிர் நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் நீதிமன்றத்தின் தடை காரணமாக அத்திட்டம் அப்போது கைவிடப்பட்டது.மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் அரசியல் லாபத்திற்கும் விளம்பரத்திற்கும் சிவிங்கிபுலிகளின்  மறு அறிமுக திட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது.




ஒவ்வொரு உயிரினமும் தனது சொந்த மண்ணின் பருவநிலைகளுக்கு தகவமைந்துள்ளது என்பார் சார்லாஸ் டார்வின்.வெப்பமண்டல பிரதேசத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் குளிர்/பனிர்ப்பிரேதேசத்தில் தாக்கு பிடிக்க முடியாது.போலவே குளிர்/பனிப்பிரதேசத்தில்  வாழ்கின்ற உயிரினங்களால்  வெப்ப மண்டல பகுதிகளில் தாக்கு பிடிக்க முடியாது.இந்த பொதுவிதிக்கு சில தாவரங்களும் விலங்கினங்களும் விதிவிலக்காக உள்ளது என தனது உயிரினங்களின் தோற்றம் நூலில் டார்வின் குறிப்பிடுகிறார்.இமயமலைச் சாரலில் உள்ள பைன் மரங்களை இங்கிலாந்தில் நட்டு வளர்த்த டாக்டர் ஹூக்கரின்  பரிசோதனையை இதற்கு உதாரணம் காட்டுகிறார்.விலங்கினங்களில் சுண்டெலிகள் மனிதர்களால் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அவை எல்லா பருவநிலைகளுக்கும் வெற்றிகரமாக தகவமைந்துகொள்கிற ஆற்றலை சுட்டிக் காட்டுகிறார்.இன்று உலகில் எலிகள் வாழாத பகுதிகளே இல்லை எனலாம்.

ஆக பழக்கமான பருவநிலைக்கு எதிரான மண்டலங்களில் வாழ்வதற்கு தகவமைந்துள்ள சில தாவரங்களும் விலங்கினங்களும் உண்டு என்பது அவரது முடிபாகும்.அதனது பழக்கவழக்கங்களும் பழகிப்போதலும் இவ்வாறு எதிரான மண்டலங்களில் வாழ்வதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன என்கிறார்.இந்த மாற்றங்களை வழிநடத்துவதும் இயற்கையின் தேர்வே என்கிறார்.

ஆனால் இந்தியாவில் சிவிங்கிகளின் கதை வேறாகியது.இந்திய நிலப்பரப்பில் வாழ்கிற சிவிங்கிகளுக்கும் ஆப்பிரிக்க சிவிங்கிகளுக்கும் நிலப்பரப்பியல்,தட்பவெட்பம் என பல்வேறு வேறுபாடுகள்  உள்ளன.இந்திய சிவிங்கிகள் இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பிற்கேற்ப பல்லாயிரம் ஆண்டுகளாக வெற்றிகரமாக தகவமைந்துகொண்ட உயிரினம் ஆகும்.மனிதர்களின் இடையீடுகளால் ஒரு கட்டத்தில் இந்நிலப்பரப்பிருந்து அழிந்தே விட்டது.இயற்கை தேர்வின் படி ஓரிடத்தில் அற்றுப்போன உயிரினங்கள் மீண்டும் அதே இடத்தில உருவாவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகளும் ஆசிய சிவிங்கிகளும் ஒரே குடும்பமாக இருந்தாலும் உள்ளினத்தால் வேறுபடுகிறது.ஆப்பிரிக்க யானையும் ஆசிய யானைகளும் எவ்வாறு வெவ்வேறாக உள்ளதோ அதுபோன்றே.ஆப்பிரிக்க சிவிங்கிகள் ஆப்பிரிக்க நிலத்திற்கு ஏற்றவகையில் தகவமைந்துள்ள உயரினங்கள் ஆகும்.

ஆக இந்திய நிலப்பரப்பில் சிவிங்கிகளை மீண்டும் அறிமுகம் செய்யவேண்டும் என்றால் மிகவும் திட்டமிட்ட வகையில் நிதானமாக காரியங்களை ஆற்ற வேண்டும்.முதலில்  காப்பிட்ட இனப்பெருக்க(Captive Breeding) முறையில்  பராமரித்து அதன் எண்ணிக்கைகளை உயர்த்த வேண்டும்.பின்னர் படிப்படியாக வேலியிடப்பட்ட வனப் பகுதிகளில் பழக்க வேண்டும்.பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அவை வேட்டையாடி உணவு தேடும் வகையில் வெளிமான்கள்,பன்றிகள் உள்ளிட்ட இரை விலங்குகள் குறிப்பிட்ட வீதத்தில் இந்த வனப்பரப்பில் இருக்க  வேண்டும்.இவையாவற்றிற்கும் மேலாக சிவிங்கிகள் சுற்றித் திரிவதற்கு பரந்த புதர்க்காடுகள்  வேண்டும்.இவ்வளவு நிதானமாக அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய விஷயத்தை வெற்று விளம்பர மோகத்திற்காக திடுமென திறந்த வனத்தில் சிறுத்தைகளை விட்டால் அதுவும் மிக குறுகிய பரப்பளவிலுள்ள காட்டில் விட்டால் இறந்ப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.அதுதான் தற்போது நடந்த வருகிறது.



மனிதர்களின் உயிர்களுக்கே மதிப்பில்லாத நாட்டில் விலங்குகள் குறித்தா மோடி அரசு கவலைப்படப் போகிறது? 70 ஆண்டுகளில் காங்கரஸ் செய்யாததை நாங்கள் செய்தோம் என தனது சுய அரசியல் விளம்பரப் அரசியலுக்காக  அப்பாவி விலங்கை மூடத்தனமாக பலியிடுவதை மோடி அரசு நிறுத்த வேண்டும் என்பதே காட்டுயிர் ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

 நன்றி:ஜனசக்தி 

 


No comments:

Post a Comment