Pages

Monday 10 July 2023

டி.டி கோசம்பியும் சூழலியலும்

 


டிடி கோசம்பி, பெரிதும் அவரது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளால் அறியப்படுபவர்.வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவத்தின் உள்ளொளியில் இந்திய வரலாறு, சாதி மத உருவாக்கம்,அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நுட்பமான கட்டுரைகளாலும் நூற்களாலும் புதிய திறப்புகளை தந்தவர்.கோசம்பி ஒரு பல்துறை அறிவுஜீவி. லியோனார்டோ டா வின்சி, அவருக்கு ஆதர்சமாக இருக்கலாம் என்பது எனது அனுமானம்!

பண்டைய நாணவியல் குறித்து சொந்தமாக ஆய்வுகளை மேற்கொண்டவர்,புள்ளியல் துறையில் கரை தேர்ந்தவர்.புரட்சிக்கு பிந்தைய மக்கள் சீனத்தில் புள்ளியில் துறைக்கு ஆலோசனை வழங்க சீன அரசால் அழைக்கப்பட்டவர்.டாட்டா அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் ஹோமி பாபாவுடன் பணியாற்றியாவர்.பின்னர் பாபாவின் அணுக்கொள்கை மீதான முரண்பாடுகளால்,கட்டம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின்பு வெளியேற்றப்பட்டார்.கோசம்பி, நாட்டார் வழக்காற்றியல் இனவரைவியல் துறைகளிலும் புலமை பெற்றவர்.பன்மொழி அறிந்தவர்.இப்படி சொல்லிக் கொண்டே போகலம்.ஆனால் இங்கு நான் கூற வருவது டி.டி கோசம்பியின் அதிகம் அறியப்படாத சூழலியல் முகம் பற்றியே!

இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் சூழலியல் நெருக்கடிகள் அரசியல் அரங்கின் முக்கிய விவாதமாக மாறிவிட்டது.சூழலியல் இயக்கங்களின் விழிப்புணர்வு போராட்டங்களுக்கு உலக நாடுகள் முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமானது,பல உயிர்த் தியாகத்திற்கு பின்பு வெற்றி பெற்று ஆலை மூடப்பட்டுள்ளது.கூடங்குளம் அனுவுலைப்பூங்காவிற்கு எதிரான போராட்டங்களை மூர்க்கமாக அரசு ஒடுக்கியது..ஆனாலும் சூழலியல் பாதுகாப்பு பற்றி பல விவாதங்களை இப்போராட்டங்கள் ஏற்படுத்தின.இன்று பல ஐரோப்பிய  நாடுகளில் பசுமை கட்சிகள், மக்கள் செல்வாக்கு பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்துள்ளன.ஐநாவில் பருவநிலை மாற்ற மாநாடுகள் தலைப்புச் செய்தியாகின்றன.

சமகால முதலாளித்துவ அமைப்பின் லாப நோக்க உற்பத்தி முறையே இன்றைய இயற்கை வள அழிப்பிற்கும் சூழல் மாசிற்கும் காரணமாக இருப்பதை மேற்குலகில் ராச்சல் கார்சன் முதல் பெல்லாமி பாஸ்டர் வரை தக்க ஆதரங்களுடன் எடுத்துரைத்து வந்துள்ளனர்.குறிப்பாக மார்க்சின் சூழலியல் பார்வையை  பெல்லாமி பாஸ்டர் போன்ற மார்க்சிய அறிஞர்கள் பேசத் தொடங்கிய பின்னரே வரைமுறையற்ற உற்பத்தியின் சூழலியல் கேடுகள்  குறித்தும் திட்டமிட்ட நீடித்த வளர்ச்சியின் அவசியம் குறித்தம் விவாதங்கள் பரவலாயின.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் நேருவின் பெருவீத தொழித்துறை கொள்கை மீதான விமர்சனத்திலிருந்து, ஓர் ஒருங்கிணைந்த சூழலியல் விமர்சனப் பார்வையை ஜே சி குமராப்பா முன்வைத்தார்.பெரிய அணைகள் மற்றும் தொழிற்சாலை  கட்டுமானங்களை விமர்சித்த  ஜே.சி குமரப்பா மாற்றாக காந்தியப் பொருளியல் கொள்கைகளை பேசினார்.அவரது பொருளியில் கொள்கைகளை தொகுத்துக்கூறுகிற  ‘மன்னுமைப் பொருளியம்’ (Economy of Permanence) ஆய்வானது கிராம சமூக கற்பனாவாதமாக வர்ண  சாதி அமைப்புகளின் கொடூரங்களை கவனத்தில் கொள்ளாதவையாக இருந்தன.கிராமப்புற நிலையுடமை உற்பத்தி உறவுச் சங்கிலியானது,சாதிக் கட்டுமானத்திற்கு ஆதாரமாக இருப்பதை காணத் தவறுகிறார்..இந்த சூழலில் டி.டி கோசம்பியின் சூழலியல் குறித்த பகுப்பாய்வு,குறிப்பாக நீடித்த மேம்பாடு பற்றின மார்க்சிய பார்வை நம்மை பெரிதும் கவனம் ஈர்க்கிறது.

மீண்டும் இயற்கைக்கு திரும்புவோம் என்பது குழந்தைத்தனம்:

முதலாவது அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம்,குறிப்பாக தொழிற்துறையை முற்றிலும் புறக்கணித்து மீண்டும் இயற்கைக்கு திரும்புவோம்,எளிமையான ரம்மியமான கிராம வாழ்க்கையில் வாழ்வோம் என்பதெல்லாம் குழந்தைத்தனமான எதிர்வினை என கோசம்பி விமர்சிக்கிறார்.கோசம்பியின் இந்த விமர்சனம் இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது.அவரது சொற்களை மேற்கோள் காட்டுவது என்றால் “அறிவியலை குற்றம் சொல்லக் கூடாது,பேராசைதான் அதனைத் தவறாக வழி நடத்துகிறது.இயற்கையின் சுற்றப்புரத்தை பொறுத்தவரை மனிதன் கையறு நிலையில் இருந்தான்.இயற்கையைப் பொறுத்தவரை மனிதன் விளைவித்த அரிசி,கோதுமை போன்ற தானியங்களும் செங்கல் வீட்டினைப் போல செயற்கையானது.மனிதன் உழவை நிறுத்தி விட்டால் தானியங்கள் நமக்கு கிடைக்காது” என்கிறார். (வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்- மூ.அப்பணசாமி,வெளியீடு ஆறாம்திணை.)

கோசம்பியின் இந்தப் பார்வை மிக முக்கியமானது.அறிவியல் தன்மையுடையது.நாம் அறிவியல்தொழில்நுட்பத்தின் கேடுகளை செயற்கையானது என புறக்கணித்து இயற்கைக்குத் திரும்ப முடியாது.ஏனெனில் விவசாயமே செயற்கைதான்.மனித முயற்சியால் உழைப்பால் நாம் தானியங்களை உற்பத்தி செய்கிறோம்.இங்கு சிக்கல் என்னவென்றால் அறிவியல் தொழில்நுட்பமானது  யாரின் நலனில் பேரில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்.ஏனெனில் தற்போதைய முதலாளித்துவ அமைப்பில், அறிவியலும் தொழில்நுட்பமும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கு சேவை செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது.திரு ஜே சி குமரப்பா அவர்கள்,அறிவியல் தொழில்நுட்பத்தின் வர்க்க கண்ணோட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லை.(கிராம சமூகத்தின் நிலப்பிரபுத்துவ வர்க்கம் x உழைக்கும் வர்க்கத்திற்குமான வர்க்க முரண்பாட்டை காணத் தவறியது போல)கோசம்பியோ, அறிவியலின் வர்க்கப் பார்வை அம்பலப்படுத்தி மேலும் சமூக நலனுக்கு திருப்பக் கோருகிறார்.

அணுஆற்றல் எதிர்ப்பு:

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணு கூண்டு வீச்சும் அதனது அழிவும் கோசம்பிக்கு அணு ஆற்றல் பயன்பாட்டின் மீதான பார்வையை தீர்மானகரமாக உருவாக்கியது எனலாம்.அணு ஆற்றலின் மாய வித்தைகளால் உலகம் சொர்க்கமாக மாறப் போகிறது என்ற பிரச்சாரத்தை கடுமையாக சாடுகிற கோசம்பி,பரிசோதனைக்காக வேடிக்கப்படுகிற அணு குண்டுகளால் ஏற்படுகிற பாதிப்புகள் கூட அனைத்து ஜீவராசிகளின் இனப் பெருக்கத் தன்மையில் நீக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்.இதன் நீட்சியாக அணு ஆயுத பயன்பாட்டிற்கு எதிராக உலக சமாதான இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விழிப்புணர்வு கூட்டங்களை பல நாடுகளில் நடத்துகிறார்.

கோசம்பி அணு ஆயுத பயன்பாட்டை மட்டும் எதிர்க்கவில்லை.இந்தியாவின் அணு மின் திட்டங்கள் மீதும் கடுமையான விமர்சனப் பார்வையை முன்வைக்கிறார்.இந்தியாவின் அணு மின் நிலைய ஆலைக்கு தேவைப்படுகிற மூல யூரேனியப் பொருட்களின் தட்டுப்பாடு,தொழில்நுட்பத்திற்கு அயல் நாடுகளை சார்ந்துள்ளது,கதிரியக்க கழிவுப் பொருட்களை அகற்றுவதில் சிக்கல்,அதிகரிக்கிற உற்பத்தி செலவுகள்  போன்ற காரணிகளை மேற்கோள் காட்டுகிற கோசம்பி,இந்திய அரசு,அணு மின் நிலையங்கள் நிர்மாணிப்பது வெறும் வறட்டு கௌரவத்திற்கு மட்டும்தான் என்கிறார்.

நீடித்த மேம்பாட்டுக்கான(sustainable Development) மாற்றுக் கொள்கை:

மனித சமூகம் தொடர்ச்சியாக வாழ வேண்டுமென்றால் இயற்கையுடன் இணைந்து இசைந்து வாழவேண்டும்.இயற்கையின் புதைபடிம ஆற்றல் அனைத்தும் வரம்பிற்கு உட்பட்டவையே.திட்டமிடாமல் கட்டற்ற வகையில் காடுகளை அழிப்பதையும் பூமியை அகழ்ந்து நிலக்கரி எடுப்பதும் வரம்பிற்கு உட்படவேண்டும்.அதற்கு அறிவியல் பூர்வமான தொழில் கொள்கை வேண்டும்.

சமூக வளர்ச்சியோடு சூழலியல் கரிசனமும்இணையவேண்டும்.சூழலுக்கு கேடு விளைவிக்காத, சமூகத்தின் நீடித்த மேம்பாட்டிற்கான, இயற்கை வள பயன்பாடு குறித்து சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே கோசம்பி தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார். மனிதன் அதிகமாக நிலக்கரி எடுப்பது, அனல் மின்சார உற்பத்தி ஆலைக்குதான்.ஆனால் அதற்கு பெரிதும் விலை கொடுக்க வேண்டியுள்ளது.இங்கிலாந்தில் அனல் உற்பத்தி நிலையத்தால் நகரத்தில் இரு பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை உயர்ந்ததையும் கரித்தூசி வெளியேற்ற சீர்கேட்டையும் சுட்டிக் காட்டுகிற கோசம்பி,அனல் மின் நிலைய கழிவுகளை விட அணு மின் நிலைய கழிவு மிகவும் அபாயகரமானது என்கிறார்.ஆக அனல் மின் நிலையமும் வேண்டாம் அணு மின் நிலையம் வேண்டாமென்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது என்ற கேள்விக்கு மாற்றாக சூரிய ஆற்றலை முன்வைக்கிறார்.

சூரியன் என்ற பொதுவளத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என 1960  களிலியே தொடர்ச்சியாக பல கட்டுரைகளில் வலியுறுத்துகிறார்.எல்லா விஷயத்திலும் இந்தியா,அமெரிக்காவைப் பார்த்தோ ரஷ்யாவைப் பார்த்தோ நகல் எடுப்பதை பகுத்தறிவற்ற செயல் என்கிற கோசம்பி,இந்தியாவில் கிடைக்கிற அளப்பரிய சூரிய ஆற்றல் இந்த நாடுகளுக்கு கிடையாது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

மேலும் “சூரிய ஆற்றலை வலியுறுத்துவதன் முக்கியமான ஆதாயம் மின்னாற்றலைப் பயன்படுத்துவதில் அது கீழ் நோக்கிய பரவலாக்கத்தைச் சாத்தியமாக்குகிறது என்பதுதான்.தற்போதைய நீர் மின்சாரம் மற்றும் அனல் மின்சார வளங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்தியா முழுமையும் மின்மயமாக்கும் தேசிய கிரிட் இல்லாமலே கூட உள்ளூரிலேயே உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும்.இந்தியா முழுவதும் பரவியிருக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கும் உள்ளூர் பயன்பாட்டிற்கும் சூரிய மின்சாரமே சிறந்த வகை மின்னாற்றலாகும்” என்கிறார்.டி.டி கோசாம்பியின் இந்த தொலைநோக்குப் பார்வை அபாரமானது.விவசாய பயன்பாட்டிற்கான மின் மோட்டார்களை சூரிய ஆற்றலில் மேற்கொள்ளவேண்டும் எனவும் 5h.p முதல்  10 h.p மோட்டார் வரை விவசாயிகள் எளிமையாக கையாளலாம் என கோசம்பி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை தற்போதுதான் இந்திய அரசு ஹரியானாவிலும், ராஜஸ்தானிலும்,தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த விஷயங்களை அரசு கையிலெடுத்திருந்தால் இயற்கை வளங்களை பாதுகாக்க முடிந்ததோடு கீழ் நோக்கிய பரவலையும் வட்டார ரீதியிலான தொழில் பெருக்கத்தையும் சாத்தியப் படுத்தியிருக்க முடியும்.அரை நூற்றாண்டு காலத்திற்கு பின்பு விழித்துக் கொண்ட இந்திய அரசு தற்போது வேறு வகையில் சூரிய ஆற்றல் மின் உற்பத்தியை முடிக்கிவிட்டுள்ளது.அதானிக்கும் அம்பானிக்கும் பல சலுகைகளை வழங்கி பிரம்மாண்டமான சூரிய ஆற்றல் மின் திட்டங்களை மேற்கொள்ளவைக்கிறது.பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் “பசுமை முதலாளிமையாக” லாபத்தை அபகரித்துக் கொள்கின்றன.

அறிவியல் தொழில்நுட்பம்,பொருளாதாரம் ஆகியவை வறட்டுக் கௌரவப் பிரச்சனையாகவும்,வெளி உலகுக்கு நம்மைச் செழிப்பானவர்களாகக் காட்டிக் காட்டிக் கொள்வதாகவும் சுருக்கப்பட்டு விட்டது.இருந்தாலும்,உத்தரவு போட்டு சூரிய இயக்கத்தை தடுக்க முடியாது என்பதால்,பொதுப் புத்திக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எதிர் காலத்தில் இவை எடுத்துக் கொள்ளப்படலாம்”என்ற டிடி கோசாம்பியின் தீர்க்க தரிசனம் எதார்த்த உணமையாகிவிட்டது.

ஆதாரம்:

வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்- மூ.அப்பணசாமி,வெளியீடு –ஆறாம்திணை.

 நன்றி :ஜனசக்தி 


No comments:

Post a Comment