Pages

Sunday 16 July 2023

காலநிலைமாற்றம் எனும் பேராபத்து - முதலாளித்துவத்தின் கிடுக்குப் பிடியில் பூவுலகு

 


கடந்த சில நாட்களாக இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் பெய்து வருகிற தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தில் பெய்து வருகிற கனமழையால் யமுனையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.ஹிமாச்சல பிரதேசத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய கனமழையை எதிர்கொள்வதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.சண்டிகரில் 1952 ஆண்டுக்கு பிறகு தற்போது ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 283 மிமீ மழை பொழிந்துள்ளது.உத்தரகான்ட் மற்றும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் பெய்து வருகிற தொடர் மழையின் காரணமாக வரலாறு காணாத வகையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

லடாக்கில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி வரை சராசரியை விட 7 விழுக்காடு மழை குறைவாக பெய்திருந்த நிலையில் ஜூலை 8,9  தேதிகளில் மட்டும் சுமார் 19 மிமீ மழை கொட்டியுள்ளது.இது இயல்பை விட 1000 விழுக்காடு அதிகமாகும்.பொதுவாக பனிப்பொழிவிற்கு பெயர்போன லடாக்கில் தற்போது பனிக்கு மாறாக தீவிர மழை பொழிந்துவருகிறது.இந்த மழைக்கு தாக்குப் பிடிக்கமுடியாமல் அப்பகுதி மக்களின் வீடுகள் ஒழுகத் தொடங்கியுள்ளது.ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. லடாக்கில் இதுபோன்றதொரு அதீத மழைபொழிவு நிகழ்வானது  கடந்த 2010 ஆண்டின்  ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்தது என ஐஐடிஎம் (IITM) ஐ சேர்ந்த அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேற்கூறிய மாநிலங்களில் குஜராத் மற்றும் மத்திய மாநிலங்கள் நீங்கலாக இதர வட மாநிலங்களில் ஜூலை மாதம் பெய்கிற சராசரி மழை அளவைவிட 200 விழுக்காடு அதிகமழை பொழிந்துள்ளதாக இந்து நாளேட்டின் ஆய்வுத் தகவல்கள் கூறுகிறது.இத்தொடர் மழையின் விளைவான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி வீடுகளை விட்டு வெளியேறிவருகின்றனர்.இதுவரை சுமார் 22 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.வெள்ளநிவாரணப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

வட மாநிலங்களில் பொழிந்து வருகிற தொடர் கனமழைக்கு காலநிலை மாற்ற நெருக்கடியே முக்கிய காரணமென டவுன்டுஎர்த்(Downtoearth) சூழலியல் ஆய்வு இதழ் கூறுகிறது.அதீத மழை பொழிவு என்பது காலநிலைமாற்றத்தின் தாக்கத்தால்  பருவமழை பொழிகிற பண்பில் மாற்றம் ஏற்பட்டு,ஒரு சில மாதங்களில்  பொழிய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் திடுமென பொழிவதைக் குறிக்கிறது.அதீத மழை ஒரு பக்கம் என்றால் அதீத வெயில் தாக்கமும் மற்றொருபுறம் நம்மை தாக்குகிறது.

கடந்த மார்ச்-23 மாதத்தில்,122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெயில் கொளுத்தியது. கடந்த 1901 ஆம்  ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையில் மார்ச் மாதங்களில் 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகிவந்த  நிலையில், நடப்பாண்டில் வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியசை தொட்டது குறிப்பிடத்தக்கது.

பருவம் தப்பிய மழை பொழிவு,அதீத மழை பொழிவு,கடுமையான வெப்பம் வறட்சி போன்ற பருவநிலை மாற்றங்கள் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்துவரவிலை.உலகெங்கிலும் இந்தச் சிக்கல் தீவிரமடைந்துவருவதை அறிவியல் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அறிவியலாளர் கோபர்நிகஸின்  பெயரிலான கோபர்நிகஸ் காலநிலைமாற்ற சேவை மையமானது ஐரோப்பிய ஆணையத்தின் அங்கமாக  இயங்கி வருகிறது.சுருக்கமாக C3S என்றழைக்கப்படுகிறது.உலகின் பல பகுதிகளில் நிகழ்கிற காலநிலை மாற்ற தகவல்களை ஒன்றுதிரட்டி மாதமொருமுறை அறிக்கையாக இந்த அமைப்பு வெளியிடுகிறது.குறிப்பாக மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை,அண்டார்டிக்காவின் பனிபடர்ந்த கடல்களின் பண்புகள் குறித்த செயற்கைக்கோள் தகவல்களை சேகரித்து ஒன்று திரட்டி வெளியிடுகின்றன. அதனது அண்மைய அறிக்கையானது, வரலாற்றில் இரண்டாம் முறையாக அதிக வெப்பம் மிகுந்த மார்ச் மாதமாக கடந்த மார்ச் 2023  ஐ அறிவிக்கிறது.குறிப்பாக வட ஆப்பிரிக்கா,தென்மேற்கு ரஷ்யா மற்றும் ஆசியாவில் சராசரி மார்ச் மாத வெப்பத்தை விட இந்தாண்டு மார்ச் மாதத்தில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறுகிறது.அதேநேரத்தில் மேற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் சராசரியை விட அதிக குளிர் மிகுந்த மார்ச் மாதமாக இருந்ததுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சராவின் மலை உச்சியில் நெற்றிச் சுட்டியாக அலங்கரிக்கின்ற வெள்ளைப்பனிச்சரிவுகள் அடுத்த இருபது ஆண்டுகளில் கரைந்து போய்விடுமென மற்றொரு அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது.கிழக்கு ஆப்பிரிக்காவில் பனிப்படலங்கள் வேகமாக உருகிவருவதைப் பார்க்கும்போது எதிர்காலத்தில்,பனிமுகடுகளே ஒன்றுமில்லாமல் போகிற சாத்தியமுள்ளது என உலக வானிலை அமைப்பின் செயலாளர் தாலஸ் எச்சரிக்கிறார்.  

காலநிலை மாற்றம் - காரணமும் விளைவுகளும்:

இயற்கை அமைப்பின் மீதான மனிதர்களின் தலையீடுகள் தான் காலநிலை மாற்றத்திற்கான காரணம் எனக் கூறுவதில் சில மழுப்பல்களும் நழுவல்களும் உள்ளன.குறிப்பாக  முதலாளிய சமூகத்தின் லாபநோக்கிலான மிகை   பொருளுற்பத்திமுறையே காலநிலை மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது என நாம் குறிப்பிட்டு அழுத்தமாக கூறவேண்டியுள்ளது.முதலாளித்துவ உற்பத்தி முறையின் உழைப்புச் சுரண்டலை அறிவியல் பூர்வமாக தனது மூலதனம் நூலின் மூன்று பாகங்களில் வழியே விளக்கிய மார்க்ஸ்,முதலாளித்துவ அமைப்பின் கொள்ளை உற்பத்தி முறையை தோலுரித்துக் காட்டுகிறார்.

இன்றைய நவீன காலத்தின் பொருளுற்பத்தி முறைக்கு முக்கிய பங்களிப்பு செய்கிற  நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருட்களை,உற்பத்தி நிகழ்முறையில் பயன்படுத்தப்படும்போது அதிக அளவிலான பசுமைக்குடில் வாயுக்களை(கார்பன் டை ஆக்சைடு(கரிக்காற்று)மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள்)வளிமண்டலத்தில்  வெளியிடுகின்ற. அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஏழு கோடி டன் என்ற அளவில்!.மற்றொரு புறமோ இப்பசுமைக்குடில் வாயுக்களை உறிஞ்சும் ஆற்றல் கொண்ட அமேசான்,போர்னியோ போன்ற மழைக்காடுகள் வர்த்தக லாபத்திற்காக வேகமாக அழிக்கப்பட்டு வருவது சிக்கலை இரட்டிப்பாக்கிறது.

வளிமண்டலத்தின் மீதான அபரிவிதமான பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வால் ,பசுமைக்குடில் அடுக்கானது அதிக அளவிளான சூரியவெப்பக்கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பத்தொடங்குகிறது.இதனால் புவியின் சராசரி  வெப்பநிலை, நாளுக்கு நாள் உயர்வதோடு வளிமண்டலத்தின் தட்பவெட்ப சமநிலையை சீர்குலைய வைக்கிறது.இதன் காரணமாக தற்போது புவியின் வெப்பநிலை 0.8 பாகை(செல்சியஸ்) அதிகரித்துள்ளதாக தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது.அதிகரிக்கின்ற இந்த புவியின் வெப்பநிலை காலநிலை மாற்றத்திற்கு காரணமாகிறது.

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் பனிப்பாறைகள்,அண்டார்டிக்காவின் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது. 1993 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு 3 மில்லி மீட்டர் அளவாக கடல்மட்டம்  உயரத்தொடங்கியிருக்கிறது. இதன்  வீதம் அனுதினமும் அதிகரித்துவருகிறது. இவ்வீதம் ஆண்டுக்கு 7  செ.மீ லிருந்து 13  செ.மீட்டர் வரை இருக்கலாம் என விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கார்ல்சன் தெரிவிக்கிறார்.கடல் மட்டமானது குறைந்தபட்சம்  ஒரு மீட்டர் அல்லது இரண்டு  மீட்டர் உயர நேர்ந்தால்,ஆசிய  நாடுகளான வியட்நாம் ,வங்காளதேசம் மற்றும் பிற தீவு நாடுகளில் வாழும் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் அழிவுகளை சந்திப்பார்கள்.இந்நிலையில்,கால நிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வீதத்தைக் காட்டிலும் அதிவேகமாக கடல்மட்டம் உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

 போலியான மாற்றுத் தீர்வுகள்:

தற்போதைய சந்தை அமைப்பான நவதாராளவாத சந்தைப் பொருளாதாரத்தில் தேவையை மீறிய லாபநோக்க உற்பத்திமுறையால் ஏற்படுகிற சூழல் அழிவுகளுக்கு முதலாளித்துவ வர்க்கமும் அதற்கு தலைமை தாங்குகிற முதலாளித்துவ அரசுமே  காரணமாக உள்ளது.

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது  முதலாளியத்தின் கட்டுப்பாட்டில் முழுவதும்  வந்தபின் ,சமூகத்தின் தேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு அது தன் உற்பத்தி அமைப்பை ஒழுங்கமைப்பதில்லை. மாறாக அது விரைவான உற்பத்தி மற்றும் அதிகமான லாபம் என்ற நோக்கத்தால்  தனது உற்பத்தி முறையை நிகழ்த்துகிறது.

சமூகத்திற்குத் தேவை இல்லை என்றாலும் தேவையை உருவாக்கி விளம்பரக் கருத்தியலின்  வாயிலாக அது சந்தையில் லாபம் குவிக்கிறது.வெறித்தனமான அதன் உற்பத்திமுறையானது இயற்கை வளங்களை வரைமுறையின்றி அழிக்கிறது.தனது உற்பத்தி நச்சுக்கழிவுகளால் இயற்கைக் கட்டமைப்பை முற்றாகத் சிதைக்கிறது.இந்நிலையில் முதலாளிய சமூகத்தின்  லாப நோக்க உற்பத்தி முறையையும் அதன் நிதி நிறுவனங்களான உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நிதியம் போன்ற அதிகார நிதி மையங்களை நோக்கியே நாம் காலநிலை மாற்ற சிக்கலுக்கு எதிராக கேள்வி எழுப்ப வேண்டும்.

எதார்த்த உண்மை இவ்வாறாக இருக்க முதலாளித்துவ நாடுகளால் இந்த சிக்கலுக்கு தீர்வு காண இயலாது என்பது வெள்ளிடை மலை.தற்போதைய ஐநாவின் காலநிலை மாநாடுகளில் இதுதான் நடந்துவருகிறது.திருடன் கையிலே சாவி கொடுத்ததைப் போல என்றதொரு சொலவடையைத்தான் காலநிலை மாநாடுகள் நினைவூட்டுகிறது.

இன்றைக்கு உலகில் உள்ள பெரும்பாலான சூழல்வாதிகள், சூழலியல் அழிவுக்கும் அரசியல் பொருளாதாரத்திற்குமான உறவை பார்க்கத் தவறுகிறார்கள்(அல்லது கண்டும் காணமல் இருகின்றனர்).முதலாளித்துவ சமூக விழுமியங்களை உள்வாங்கி வாழ்கிற சமூகத்திற்கு அதனது போலித்தன்மையும் சுரண்டலும் இயல்பாகவே அதனது முதல் தோற்றத்தில் கண்களுக்குப் புலப்படுவதில்லைதான்..”ஒவ்வொரு சூழல்வாதியும் முதலாளித்துவம் குறித்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற நூலில் மேக்டாப் இதை அழகாக சுட்டிக் காட்டிருப்பார்.

உலகின் அனைத்து மூலைமுடிக்கிலும் வியாபித்திருக்கும் பொருளாதார அமைப்பாக முதலாளித்துவம் உள்ளது.எவ்வாறு நம் கண்களுக்கு தெரியாத காற்றை சுவாசித்து வாழ்கிறோமோ அதுபோல முதலாளித்துவ அமைப்பின் ஓரங்கமாக நாமறியாமலேயே வாழ்ந்து வருகிறோம்.அதாவது நீந்துகிற தண்ணீரை அறியாத மீன் போல நாமிந்த அமைப்பிலே நீந்துகிறோம்.முதலாளித்துவ அமைப்பின் ஒழுக்கநெறியாக பாவிக்கப்படுகிற மதீப்பீடுகளை உள்வாங்கியே நாம் வளர்கிறோம்.செல்வம் சேர்ப்பது,உழைப்பைச் சுரண்டுவது,போட்டியிடுவது ஆகியவையெல்லாம் இந்த அமைப்பின் ஒழுக்கமாக ஏற்றுக் கொள்வதுமட்டுமல்லாது,இவையெல்லாம் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான முன் நிபந்தனையாக வாதிடப்படுகிறது”

சிக்கலின் மையமே இதுதான்.அதாவது சமூக வளர்ச்சி,பொருளாதார வளர்ச்சி போன்ற  முதலாளித்துவ கருத்தாக்கமானது “சூழலியல் பாதுகாப்பு” என்ற அம்சத்தை வெற்றிகரமாக பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.இயற்கை வளத்தை சுரண்டாமல் சமூக வளர்ச்சி சாத்தியமில்லை என்ற மனிதமையவாதத்தை பொதுபுத்திக் கருத்தாக மாற்றுகிறது.இந்த பொதுவான மனித மையவாத திரைக்கு பின்னே  கெட்டிக் காரத்தனமாக முதலாளித்துவ வர்க்கம் மறைந்துகொள்கிறது.

இந்த திரையை மார்க்சியர்கள் மாத்திரமே விலக்கி,முதலாளித்துவ வர்க்கத்தை அம்பலப்படுத்த முடியும்.இங்கே தனியுடமை வளர்ச்சிக்காக,லாபத்தை மென் மேலும் குவிப்பதற்காக காட்டை அழித்து நிலக்கரி சுரங்கம் தோண்டுகிற அதானி நிறுவனம் முதல் அமேசான் மழைக்காடுகளை அழித்து எண்ணெய் எடுக்கிற எக்சான்மொபைல்  நிறுவனம் வரை பெரும் ஏகபோக நிறுவனங்களே உழைப்புச் சுரண்டலையும் இயற்கை வளச்சுரண்டலையும் மேற்கொள்கின்றனர் என உரக்க பிரச்சாரம் செய்யவேண்டும்.பெரும் ஏகபோக காரப்பரெட் நிறுவனங்களே காலநிலை மாற்றத்திற்கு காரணம் என்ற உண்மையை எடுத்துரைக்கவேண்டும்.அப்போது மட்டுமே நடைமுறை தீர்வை நோக்கி ஓரடி முன்னே எடுத்து வைக்க இயலும்.

ஆதாரம்:

https://www.downtoearth.org.in/news/climate-change/month-of-climate-contradictions-contrasts-noted-worldwide-in-march-2023-finds-copernicus-88644

https://www.downtoearth.org.in/news/climate-change/the-snows-of-kilimanjaro-could-vanish-by-2040-due-to-climate-change-report-79776

https://www.downtoearth.org.in/news/climate-change/north-india-deluge-2023-ladakh-a-cold-desert-received-over-10-000-of-its-annual-rain-on-july-8-9-90496

நன்றி-ஜனசக்தி 

1 comment:

  1. "பூமி வெப்பமயமாதல்" என்ற ஒரு சொல்லாடலை திரும்பத் திரும்ப அனைவரும் பயன்படுத்துகின்றனர் .பெட்ரோல் டீசல் நிலக்கரி.... ஆலையின் மூலமாக வெளியேற்றப்படும் எரிபொருள். புகை கரிமங்கள் போன்றவற்றை குறைப்பதன் மூலம் வெப்பத்தை தடுக்கலாம் என்ற ஒரு மாயை முன் வைக்கப்படுகிறது.இது "யானை பசிக்கு சோளப்பொறி உணவா..." என்பதாகவே உள்ளது. உண்மையில் இயற்கை வளங்கள் காடுகள் கனிம வளங்கள் இவற்றை அழிப்பது என்பது பூமியின் காலம் காலமாக இருந்து வருகின்ற இயற்கை சார்ந்த சமநிலையை அழித்து நாசமாக்கி விட்டனர்.இயற்கை வளங்களை சுரண்டி தான் முதலாளித்துவம் தனது சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அந்த பொருள் உற்பத்தி தான் அவர்களின் லாபத்திற்கான ஆதாரமாக இருக்கிறது ..லாபத்தை குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியை குறைக்க வேண்டும் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்றால் இயற்கை வளங்கள் மீதான சுரண்டலை அல்லது சூறையாடலை அல்லது கனிம வளங்கள் வெட்டி எடுப்பதை குறைக்க வேண்டும். இதற்கு இவர்கள் தயார் இல்லை. இதை இவர்களால் செய்யவும் முடியாது. அது உண்மையில் முதலாளித்துவத்தின் கோர பேய் தனது பசியை நிறுத்த முடியுமா என்றால் முடியாது .உண்மையில் சோசலிச உற்பத்தி முறைக்கான நடவடிக்கைகள் எப்பொழுது தொடங்குகிறதோ அப்பொழுது இருந்துதான் பூமி வெப்பமயமாதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்குவதாக இருக்க முடியும்.

    ReplyDelete