Pages

Tuesday 25 July 2023

ஜான் பெல்லமி பாஸ்டரின் மார்க்சிய சூழலியல் விவாதங்கள்

 


ஜான் பெல்லமி பாஸ்டர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதலாக மன்திலி ரிவியூவின் ஆசிரியராக உள்ளார்.தொழில்முறையில் ஒரீகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.சமகால சூழலியல் சிக்கல்களை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகுகிற இவரது பகுப்பாய்வு முறையால் தனிக்கவனம் பெற்று வருகிறார்.

பெல்லமி பாஸ்டர் 2000 த்தின் தொடக்கத்திலிருந்து சூழலியல் குறித்த மார்க்சிய விவாதத்தை பல்வேறு நூல்களின் வழியே எழுதியும் பேசியும் வருகிறார்.அவை முறையே Marx’s Ecology (2000),Ecology Against Capitalism(2002), Ecological Imperialism(2006), Marx’s Grundrisse and the Ecological Contradictions of Capitalism(2008), The Ecological Revolution(2009) ,The Ecological Rift(2010), What Every Environmentalist Needs to Know About Capitalism(2011), Marx and the Earth: An Anti-Critique(2016) ,The Return of Nature: Socialism and Ecology(2019) The Robbery of Nature: Capitalism and the Ecological Rift(2019)

இவரது ஆங்கில நூலின் முதல் தமிழாக்க நூலானது 2011 ஆம் ஆண்டில் சூழலியல் புரட்சி(தமிழில் தோழர் துரை மடங்கன்,விடியல் பதிப்பகம்) என்ற தலைப்பிலும்  இரண்டாம் நூல் 2012 ஆம் ஆண்டில் “மார்க்சும் சூழலும்”(தமிழில் தோழர் மு வசந்தகுமார்,விடியல் பதிப்பகம்) என்ற தலைப்பிலும் வெளிவந்தது.

பெல்லமி பாஸ்டரின் ஆய்வும் சமகால அரசியல் விவாதங்களும்:

தமிழக அளவிலான சூழலியல் அரசியல் விவாதங்களில் பெல்லமி பாஸ்டர் நூல்கள் முதலில் அதிகம் அறியப்படாமல் இருந்தாலும் பின்னாட்களில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது எனலாம்.சூழலியல் சிக்கல்கள் குறித்து மார்க்சிய விமர்சனங்களுக்கு  பெல்லமி பாஸ்ட்டரின் நூல்கள் பெரிதும் பங்காற்றியது.குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் சூழலியலாளர்கள் மத்தியில் நிலவிய பல்வேறு தாராளவாத கண்ணோட்டங்களை பெல்லமி பாஸ்ட்டரின் நூல்கள் மறு வரையறை செய்யத் தூண்டியது என்றே கூறலாம்.

மார்க்சியமானது தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் குறித்துதான் அக்கறை கொண்டுள்ளது எனவும் சூழலியல் சிக்கல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.அதாவது மார்க்சிடம் பிரோமிதியேன் வாதமே  செல்வாக்கு செலுத்தியதாக விமர்சிக்கப்பட்டார்.போலவே சூழலியல் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கிற தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு இடதுசாரிகள் ஆதரவாக இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் மட்டுமே இடதுசாரிகள்  அக்கறைப்பட்டார்கள் எனக் கூறப்பட்டது.

சூழலியலாளர்கள் மத்தியிலோ சூழலியல் சிக்கல்களுக்கு தனி நபர்களின் ஒழுக்க மீறல்கள்தான்  காரணம் என்றும்,சட்டங்களை முறையாக அமல்படுத்தாமல் இருப்பதுதான் காரணம் என்றும்,மக்கள் தொகை பெருக்கம்தான் காரணம் என்றும் முன்வைக்கப்பட்டன.இதற்கு தீர்வாக இந்த முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

இத்தகைய பின்புலத்தில்தான் சூழலியல் குறித்த மார்க்சிய தத்துவார்த்த விளக்கங்களை பாஸ்டரின் நூல்கள் முன்வைக்கத் தொடங்கின.சூழலியல் கரிசனம் மிகுந்த மார்க்சிய எழுத்தக்களை கொண்டு மார்க்ஸ் மீதான விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.

சமகால சூழலியல் சிக்கல்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளும் அடிப்படைக் காரணியாக இருப்பது முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தி முறை ஆகும்.அதாவது மூலத்தனதிற்கும் தொழிலாளி வர்க்கத்துடனான முரண்பாடு மூலதனத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடாக உள்ளது.மூலதனத்தை குவிப்பதற்கான உற்பத்திப் பெருக்கத்திற்கான,லாபத்திற்கான முதலாளித்துவத்தின் “அனிமல் ஸ்ப்ரிட்” ஆனது தொழிலாளரிகளின் உழைப்பை சுரண்டுவதோடு இயற்கை வளங்களையும் சுரண்டுகிறது.தனது உற்பத்திக் கழிவுகளால் சுற்றுச்சூழலை  சீரழிக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் கேடுகளை அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளை அறிவியல்பூர்வமாக வெளிப்படுத்திய மார்க்சும் எங்கெல்சும் இயற்கைக்கும் மனிதனுக்குமான முரண்பாட்டை முதலாளித்துவம் கூர்மைப்படுத்துவது குறித்து அக்கறை கொண்டிருந்தததை அவர்களது எழுத்துக்களே பிரதிபளிக்கின்றன.

Working class condition in England என்ற நூலில் தேம்ஸ் நதியில் கழிவுகள் கலப்பது குறித்து தனது விமர்சனத்தை எங்கெல்ஸ் எழுதியிருப்பார்.போலவே மார்க்ஸ் தனது “வளர்சிதைமாற்ற பிளவு” என்ற கருத்தின் வழியே மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்பாடுகுறித்து பேசி வந்தார்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் இன் சூழலியல் கரிசனத்தை பின்னாளில் சுவீசி,பாரன் ஆகியார் பல கட்டுரைகளில் எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் மன்த்லி ரிவியூவில் தொடக்க காலத்தில் பணியாற்றியவர்கள்.

இவர்களின் மரபின் தொடர்ச்சியாக பெல்லமி பாஸ்டர் தனது ஆய்வுமுறைகளை ஆழ அகலப்படுத்திக் கொள்கிறார்.குறிப்பாக சூழலியல் சிக்கலை தத்துவார்த்தமாக அணுகிய மார்க்சின் வளர்சிதைமாற்றப்பிளவு(Metablic rift)  கோட்பாட்டை கவனப்படுதியதில் பாஸ்டரின் பங்கு முக்கியமானது.ஜெர்மானிய வேதியல் அறிஞரான லைபிக்கின் ஆராய்ச்சியில் கவரப்பட்ட மார்க்ஸ் ,மக்கள்தொகை திரட்சியாக உள்ள  புது நகரங்களின் தொழிற்சாலை உற்பத்தி மையங்களுக்காக   முதலாளித்துவமானது  மண்ணின் வளங்களான பொட்டாசியம் ,நைட்ரஜன் போன்றவற்றை திருடி மறுதலையாக   புவிக்கு   தூய்மைக்கேட்டை விளைவிக்கிறது என்று விமர்சிக்கிறார்.லைபிக் இதை கொடிய  சுரண்டல்(“Raubbau” ) அல்லது  கொள்ளை அமைப்பு  என்று அழைக்கிறார்.மார்க்ஸ்  இதை விவரிக்கையில்

‘’முக்கிய விஞ்ஞானிகளுள் குறிப்பாக ,ஜெர்மன் விஞ்ஞானியான லைபிக் என்னை பெரிதும் கவனிக்கவைக்கிறார் மண் வளத்தை சுரண்டும் கொள்ளையடிக்கும்  இம்முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு குறைவான காலத்தில் அதிக லாபம் அடைகிறார்கள் .பழைமையான வேளாண் சமூகங்களான சீனா ,எகிப்து ,ஜப்பான் போன்ற நாடுகளில்  அறிவார்ந்த வகையில் வேளாண்மையை மேற்கொண்டு   இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மண்ணின் வளங்களை பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல்  மண் வளத்தினை அதிகரிக்கவும் செய்துவந்ததை ,முதலாளித்துவ கொள்ளை முறையானது உலகின் சில பகுதிகளில் உள்ள மனவளத்தை அரை நூற்றாண்டில் சுரண்டியது’’.

 மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதை மாற்றத்தில் இக்கொள்ளையானது   "தீர்க்க முடியாத பிளவாக" முதலாளித்துவ சமூகத்திற்குள் வடிவெடுக்கும் என கருதுகிறார். முதலாளித்துவ வேளாண் உற்பதிமுறையின்  உண்மை பண்பு குறித்து மார்க்ஸ்  'முதலாளித்துவ உற்பத்தியானது தொடர்ச்சியாக  மண்ணையும் உழைப்பையும் சுரண்டிய வளர்க்கிறது' என்கிறார்.

அன்று மார்க்ஸ் கணித்தது இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் எதார்த்த உண்மையாக விட்டது. முதலாளித்துவத்தால் இப்பூவுலகுக்கு ஏற்படுத்தப்படுகிற அச்சுறுத்தலுக்கும் அதனது உற்பத்திமுறைக்குமான உறவைச் சரியான கண்ணோட்டத்தில் அறிவியல் பூர்வமாக அணுகுவதற்கு மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. மார்க்சிய வழிப்பட்ட முதலாளித்துவத்  திறனாய்வின்  வழியில் செல்வது மட்டுமே இன்றையச் சூழலியல் சிக்கல்களின் முழுப்பரிமாணத்தைப் புரிந்துகொள்ள நம்முன் உள்ள வாய்ப்பாக இருக்கிறது.

 நன்றி:ஜனசக்தி 

No comments:

Post a Comment