Pages

Friday 4 August 2023

கோவை சூயஸ் குடிநீர் திட்டம்:ஏன் கைவிடப்பட வேண்டும்?

 


தென்னகத்தின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுகிற கோவை நகரம் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமாகும்.2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தில் சுமார் 10.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இந்நகர மக்களின் குடிநீர் தேவையை சிறுவாணி திட்டமும் பில்லூர் திட்டமும் பூர்த்திசெய்து வருகிறது.இந்நிலையில்,கோவை மாநகரத்திற்கு 24 மணி நேரமும் (24x7 ) தங்குதடையற்ற வகையில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்கிற திட்டமொன்றை கடந்த 2018  ஆம் சூயெஸ் என்ற பிரான்சு நிறுவனத்திற்கு வழங்கியது அன்றைய அஇஅதிமுக அரசு.சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டமே,இந்தியாவில் சூயெஸ் நிறுவனம் வென்ற மிகப்பெரிய திட்டமென அந்நிறுவன இணைய செய்தி அறிவித்தது.முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டில் தலைநகர்  டில்லி மாநகராட்சியின்  குடிநீர் விநியோக திட்டத்தை வென்ற இந்நிறுவனம் படிப்படியாக பெங்களூரு,கொல்கத்தாவில் கிளை பரப்பி தற்போது  தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக சேவையை(சந்தையை!) கைப்பற்றியுள்ளது.

தாரளமாய காலகட்டத்தில் தண்ணீரை “சரக்காக” மாற்றிய கார்ப்பரேட் முதலாளிகள், சுத்தமான குடிநீர் என்றும் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்குவோம் என்ற போலிப் பிரச்சாரத்தில்  நகர குடிநீர் விநியோகத்தை தனியார்மயப்படுத்த அரசுக்கும் அழுத்தம் கொடுத்து பணிய வைக்கின்றனர்.முதலாளித்துவ வர்க்கத்தின் முகமாக செயல்படுகிற அரசோ  பொதுத்துறை நிறுவனங்களின் உட்கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் தனியார் சேவையே சிறந்த சேவை என  தனது பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்கிறது. இந்தியாவில் இவ்வாறு தொலைத்தொடர்புத் துறை,போக்குவரத்து துறை ,வங்கி சேவைகள் என கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் அசுர வேகத்தில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமப்படுத்தி வருவதை கண்டுவருகின்றோம்.இதன் தொடர்ச்சியாக குடிநீர் விநியோக கட்டமைப்பு தனியார்மயப்படுத்துகிற முயற்சியும் தற்போது வேகமாக நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில்தான் பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்துவந்த  கோவை நகர குடிநீர் விநியோக கட்டமைப்பு சூயெஸ் எனும் பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுகிறது.






இருபத்தி நான்கு மணி நேரமும் சுத்தமான குடிநீர் சேவை வழங்குவது என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினாலும் எதிர்காலத்தில் தண்ணீர் கட்டணத்தை இந்நிறுவனமே நிர்ணயத்து வசூலித்தாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை.கட்டணம் செலுத்தாதோர் வீடுகளின் குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது,தண்டம் வசூலிப்பது மட்டும் இல்லாமல் நகர குடிநீர் ஆதராங்களின் முழுவதும் தனது சொந்த கட்டுப்பாட்டில் எந்த கண்காணிப்பும் அற்ற வகையில் எடுத்துக்கொள்வது போன்ற ஆபத்துக்களை மக்கள் உடனடியாக உணரவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இத்திட்டத்தை பொறுத்தவரை,முதற்கட்ட திட்ட ஆய்வும் அடுத்த நான்காண்டில் திட்ட நடைமுறையாக்கம் மற்றும் அதற்கு பிறகான 22 ஆண்டுகாலத்திற்கு  பராமரிப்பு என மொத்தமாக 26 ஆண்டிற்கு சூயெஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் போட்டது.

கோவை மாநகர சுற்றுவட்டாரத்தின்  100  கிமீ பரப்பளவில் உள்ள சுமார் 1500  கிமீ குடிநீர் குழாய்கள், குடிநீர் தொட்டிகள், நீராதாரங்கள்,தானியாங்கி குடிநீர் மீட்டர்கள்,வால்வுகள்,1,50,000 குடிநீர் இணைப்பின் அனைத்து விநியோக சேவைகளும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வருகின்றன.இத்திட்ட அறிவிப்பு வெளியான சில நாட்களில், திட்டம் குறித்த குழப்பங்கள் வெளிப்படவே,மாநகர குடிநீர் சேவையை மட்டுமே இந்நிறுவனம் வழங்கும் மற்றபடி,மாநகராட்சியே வழக்கம்போல குடிநீர் கட்டணத்தை  நிர்ணயக்கும் என  மாநகராட்சி  விளக்கமளித்தது.இந்த விளக்கத்தின் உண்மைத்தன்மையானது போகப் போகத்தான் தெரியும்!

குடிநீர் விநியோக சேவையை தனியார்மயப்படுத்துகிற இந்த ஒப்பந்தத்தை பல்வேறு அரசியல் கட்சிகள், சூழலியல் அமைப்புகள் எதிர்த்தன.இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தன.இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோது அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.இத்திட்டம் தொடர்பாக சூயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இணையதள பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி கண்டன அறிக்கை வெளியிட்டார்.இந்நிறுவனமானது பொலிவியாவில் மேற்கொண்ட அராஜக கட்டண வசூலும்,அதன் காரணமாக அங்கு எழுந்த போராட்டங்களையும் சுட்டிக் காட்டி,கோவை மாநகர குடிநீர் விநியோகத்தை தனியார்வசம் ஒப்படைப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகோ,இந்த திட்டத்தில் 13 விழுக்காடு முடிந்துவிட்டதாகவும் இனி நிறுத்துவதற்கு வாய்ப்பில்லை எனவும் நழுவிக்கொண்டது திமுக அரசு.

தனியார்மய குடிநீர் சேவை ஒப்பந்தங்கள்

குடிநீர் விநியோகத்தை பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவது தேசிய நீர்க் கொள்கையின் பகுதியாகும்.கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியாவின் தேசிய நீர்க்கொள்கையில், நீர்த்தட்டுப்பாட்டை சரிசெய்யவும், நீர் விநியோக முறைகளை மேம்படுத்தவும்  நீர் சேவையில் தனியாரின் பங்களிப்பு அவசியம் என வாதிட்டது ஒன்றிய அரசு.இவ்வாதத்தை முன்வைத்தே இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி மாதிரியிலும் நீர் விநியோக/மேலாண்மை மீதான தனியாரின் ஆளுகைக்கு பொய்யான கருத்துருவாக்கத்தை மேற்கொள்கிறது.

நீர் /நீர் மேலாண்மை சேவை மீதான கட்டுப்பாட்டை தனியாருக்கு வழங்குவது தனியார்மய குடிநீர் சேவை எனலாம். இதுகாறும் நகராட்சி/மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த இச்சேவையானது தற்போது படுவேகமாக தனியாரின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.குடிநீர் சேவையில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்கள்,உலக வங்கி,பன்னாட்டு நிதியகம் போன்ற உலகின் மூலதன அதிகார அடுக்ககள் தங்களது  நவதாராளவாத சந்தைப்பொருளாதார ஏற்பாட்டின் வாயிலாக நீரை வர்த்தக பண்டமாக்கி விற்பனையில் ஈடுபட்டு லாபமீட்டுவதில் பெரு முனைப்புடன் வெறித்தனமாக ஈடுபடுகின்றன.

நீர் சேவை மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி ஒரு திட்டத்தின் பேரில் தொடர்ச்சியாக லாபத்தை ஈட்டுவதற்கு உவப்பாக பல ஒப்பந்த மாதிரிகளை நீர் விநியோக பெரு நிறுவனங்கள் முன்வைக்கின்றன. இவ்வொப்பந்தங்களின் வாயிலாக நீர் சேவைக்கான உரிமையைப் பெறுகிற பெருநிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல நீர் சேவைக்கான கட்டணத்தை வசூலிப்பதால் நடுத்தர வர்க்கத்தினரும் உழைக்கும் மக்களும் கடுமையான இன்னலுக்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில் மொத்த வருமானத்தில் ஐம்பது விழுக்காட்டை குடிநீருக்கே  செலவு செய்ய வேண்டிய அளவுக்கு நீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது.இதன் விளைவாக குடிநீர் விநியோக  உரிமையைப் பெற்ற தனியார் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சி மிக்க போராட்டங்கள் வேகமாக வெடிக்கத்தொடங்குகிறது.இதற்கு மிகப்பெரும் உதாரணம் 2000 ஆம் ஆண்டில் பொலிவியாவில் சூயெஸ் மற்றும் பெக்டல் நிறுவனத்திற்கு எதிராக எழுச்சி பெற்ற போராட்டங்களாகும்.

பொதுவாக நீர் சேவையை தனியாருக்கு வழங்குவதில் உலகெங்கிலும் பல ஒப்பந்த மாதிரிகள் கடைபிடிக்கப்படுகிறது.அவை

சேவை ஒப்பந்தம்(Service Contract): இவ்வொப்பந்தத்தின்படி நீர்சேவை மீதான கட்டுப்பாடும் பொறுப்பும் பெரும்பாலும் அரசின் வசம் இருக்கும். அதாவது நீர் சேவைக்கான பராமரிப்பும் செயலாக்கமும் அரசின் பொறுப்பாகும். குறிப்பிட்ட இதர பகுதிகள் மட்டும் ஒப்பந்தத்தின் பேரில் தனியாருக்கு வழங்கப்படும். அதாவது அளவு காணல்,ரசீதளித்தல் போன்ற வேலைகளில் மட்டும்  தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும். ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு  வழங்கப்படும் இவ்வகையான சேவை ஒப்பந்தங்கள் மீதான  ஒழுங்குவிதி கண்காணிப்பிலும் (ஒப்பந்த)பேச்சுவார்த்தையிலும் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவதில்லை.

கட்டுதல்,செயலாற்றுதல்,சொந்தமாக்குதல் மற்றும் கையளிப்பது- சுருக்கமாக பூட்(Boot) ஒப்பந்தம்(Built,operate,own,Transfer): இவ்வகையான ஒப்பந்தமானது நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும்  நீர் சேவைக்கான கட்டுமானத் திட்டம் போன்ற அதிக மூலதனம் தேவைப்படுகிற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது முதலீடு,கட்டுமானம்,செயலாற்றுதல் மற்றும் பராமரிப்பு என அனைத்தும் இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படுகிறது. இவ்வகையான பூட் ஒப்பந்தங்களில் குறைந்தபட்ச ஒப்பந்த காலமே இருபது ஆண்டுகள் ஆகும்! மேலும் இவ்வகை பூட் ஒப்பந்தமே பெரும்பாலான வளரும் நாடுகளில் கடைபிடிக்கபடுகிறது. தமிழகத்தின் திருப்பூர் முதல் பொலிவியாவின் கொச்சபம்பா வரை பூட்டே ஆதிக்கம் செலுத்துகிறது.தற்போது கோவையில் சூயசுடன் அரசு BOT ஒப்பந்தத்தை போட்டுள்ளது.அதாவது முதலீடு,கட்டுமானம்,பராமரிப்பு  மற்றும் கையளிப்பது.

மொத்த விற்பனைக்கான ஒப்பந்தம்(Divestiture):இவ்வொப்பந்தத்தில் அரசின் கட்டுப்பாடு முழுவதும் தளர்த்தப்பட்டு நீர் சேவையுடன் நீர் ஆதாரங்களையும் சேர்த்தே தனியாருக்கு கையளிக்கப்படும். இவ்வொப்பந்தத்தின்படியே சத்தீஸ்கரின் சிவ்னாத் நதியை இருபத்தி இரண்டு காலத்திற்கு ரெடியஸ் என்ற நிறவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டது.

சூயெஸ் நிறுவனத்தின் கடந்த கால வரலாறு:

அரசின் பொதுத்துறை குடிநீர் விநியோக அமைப்பைப் பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்த்தால் ஏற்படுகிற பின்விளைவுகளுக்கு  இன்றுவரை பொலிவியா எடுத்துக்காட்டாக உள்ளது.ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றியமையாத வாழ்வாதாரத் தேவையான தண்ணீரை  சேவையாக கருதுகிற பொதுத்துறை கண்ணோட்டத்திலிருந்து தனியார்மயத்தின் கீழ் சந்தையாக மாற்றுவதென்பது அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரானது. அது மக்கள் நலன்களுக்கு நேர் எதிரானது.1980 களில் பொலிவியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயப் பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்டது.பொலிவியாவின் சமூக சிக்கல்களுக்கு ஏற்றத் தாழ்வுகளுக்கு சரியான திட்டங்கள் இல்லை என ஆளும்வர்க்க கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு,பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளபட்டன. பன்னாட்டு நிதியகம்,உலக வங்கியின் கடன்களைப் பெற்ற பொலிவிய அரசு, அதற்கு மறுதலையாக நாட்டின் வளங்களை,பொதுத்துறை நிறுவனங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டது. உலக வங்கிக் கடன்களின் இலக்கும் அதுதான்.

இப்படியாக பன்னாட்டு மூலதனக்காரர்கள் தலைமுடி முதல் நகக் கால்வரை இரத்தம் சொட்ட சொட்ட பொலிவியாவில் இறங்கினார்கள். முன்னணி தண்ணீர் கொள்ளையர்களான பெக்டலும் சூயெசும் பொலிவியாவில் குடிநீர் விநியோக அமைப்பை கைப்பற்றினார்கள்.பொலிவியத் தலைநகரம் லாபாசின் எல் அல்ட்டோ பகுதியின் குடிநீர் விநியோகம் முழுவதும் சூயெசிற்கு கையளிக்கப்பட்டது. சேவைக்கும் சந்தைக்குமான முரண்பாடு உடனடியாக வெடித்தது..சூயெஸ் நிறுவனம், எல் அல்டோவில்  தண்ணீர் கட்டணத்தைத் திடுமென 30 விழுக்காட்டிற்கு உயர்த்தியது. நகர குடிநீர்க் குழாய்கள்,கிணறுகள் அனைத்திற்கும் பூட்டுப் போட்டது. புறநகரங்களில் முறையான குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன. சுயநல மூலதன முதலீடுகளுக்கும் சாமானிய உழைக்கும் மக்களுக்குமான போர் மூண்டது. சூயெஸ் நிறுவனத்தின் கோர சுரண்டலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்தனர். சூயெஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்த இப்போராட்டம் 2005 இல் தீவிரம் பெற்றது. இப்போராட்டம் நுகர்வோர் கிளர்ச்சிஎன்றே பெயர் பெற்றது. போலவே பெக்டல் நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் கொச்சபம்பாவில் நடைபெற்றது.நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அரசு இறுதியில் ஒப்பந்தங்களை ரத்து செய்தது. அதேநேரத்தில் நிறுவனங்கள் நஷ்ட ஈட்டையும் பெற்றுக் கொண்டன!

இது ஏதோ பொலிவியாவில் நடைபெற்ற கதை என நம்மை ஆசுவாசப்படுத்துக் கொள்ளத் தேவையில்லை.ஏனெனில் இந்தியாவில் பல நகரங்களில் பல்வேறு பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் வேகமாக தண்ணீர் சந்தையில்கால் பதித்து வருகின்றன.பல்வேறு நகரங்களில் மாதிரித் திட்டங்கள்செயலாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கான சந்தையை ஊக்குவிக்கிறது. சூயெஸ்,வியோல்லா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் டாட்டா,ரேடியஸ்,ஆரெஞ் போன்ற உள்நாட்டு முதலாளிகள் தண்ணீர் சந்தையைப் பிடிப்பதற்கு பல்வேறு வகையில்(கட்சிகளுக்கு நன்கொடை,பரிசுகள் உள்ளிட்ட) அரசியல் லாபிக்களை மேற்கொண்டு வருகின்றன.

குடிநீர் விநியோகம் மீதான உரிமையை பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்தால் ஏற்படுகிற மோசமான பின்விளைகளுக்கு உலக அளவில் இருந்து உள்ளூர் மட்டம் வரை எண்ணற்ற படிப்பினை உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலே இந்த ஒரு உதாரணமே போதும்!

இது ஏதோ கோவை நகரப் பிரச்சனை என்றோ,குடிநீர் கட்டண நிர்ணயப்பு உரிமையானது மாநகராட்சி வசம் மட்டுமே எப்போதும் இருக்கும் என்றோ நாம் பகல் கனவு கண்டு கொண்டிருக்க முடியாது! படிப்படியாக தங்களது கட்டுப்பாட்டில் நகரின் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகத்தைக் கொண்டு வருவது,பிற நகரங்களுக்கு அதை விரிவுபடுத்துவது என்ற நீண்ட கால தொலை நோக்கு திட்டத்தின்  அடிப்படையிலேயே இந்நிறுவனங்கள் குடிநீர் சந்தையை உருவாக்கி கைப்பற்றுகின்றன.சூயெஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனத்தை நாம் உடனடியாக விரட்டவில்லை என்றால்  பொலிவியா கதிதான் நமக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நன்றி:ஜனசக்தி 

ஆதாரம்:

https://www.bbc.com/tamil/india-59987553

https://www.thehindu.com/news/cities/Coimbatore/residents-to-receive-24x7-water-supply-soon-says-coimbatore-corporation/article66648677.ece

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jan/02/coimbatore-24x7-water-supply-project-to-drag-on-till-25-2533762.html

https://www.newsclick.in/dmk-takes-u-turn-suez-water-supply-project-coimbatore-feasibility-project-questioned

https://www.thehindu.com/news/cities/Coimbatore/call-to-cancel-water-project-awarded-to-suez-in-coimbatore/article66226483.ece

 


No comments:

Post a Comment