Pages

Tuesday 11 July 2023

சார்லஸ் டார்வினிடம் பாஜக அஞ்சுவது ஏன்?

 


கடந்த 2018  ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பேசிய பாஜகவின் மனிதவள வளர்ச்சித் துறை அமைச்சர் சத்யபால் சிங்,சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு தவறானது என்றும் மனிதக்குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை,ஏனெனின் யாரும் அதைப் பார்த்ததில்லை என பாஜகவிற்கே உரித்தான  அறிவீனத்துடன் பேசியது சர்சையாகியது.அதோடு நில்லாமல் சார்லஸ் டார்வினின் பரிணாம விதிக் கோட்பாடு பள்ளி கல்லூரி பாடப் புத்தகங்களிலிருந்து  நீக்கப்பட வேண்டும் என வாதிட்டார்.அமைச்சரின் இந்த பேச்சுக்கு அறிவியலாளர்கள் மத்தியில் அப்போது கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தன.ஆனாலும் அவ்வபோது இந்தப் பேச்சை அவர் பேசாமல் இல்லை.

தற்போது இந்த விவாதம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகாலம் கழித்து, அமைச்சர் கூறியதைப் போல இந்தியாவில் NCERT பாடப் புத்தகங்களிலிருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது.முன்னதாக கோவிட் காலத்தில் பாடப் புத்தங்களின் சுமைகளைக் குறைப்பதாக கூறி இந்திய வரலாற்றுப் பாடத்தில் முகலாயர்களின் ஆட்சி காலத்தை முற்றிலும் நீக்கியும் காந்தியார் படுகொலையை வெட்டியும்,இந்திய சுந்திர போராட்ட வரலாற்றைத் திரித்தும் சிதைத்தும் தனது இந்துத்துவ கருத்து நிலைக்கு  உகந்த பல்வேறு வெட்டி ஓட்டும் வேலைகளை வரலாற்றுப் புத்தகங்களில் பாஜக மேற்கொண்டது.

இந்த வரலாற்று திரிபுக்கு எதிராக கண்டனங்கள் எழந்து வந்த நிலையில் தற்போது சத்தமில்லாமல் அறிவியல் பாடப் புத்தகத்தில் டார்வினை நீக்கியுள்ளார்கள்.

டார்வினிடம் பாஜக பயப்படுவது ஏன் ?

டார்வினின் பரிணாமக் கோட்பாடு குறித்த உயிரனத்தின் தோற்றம் நூலானது 1859 ஆம்  ஆண்டில்  வெளிவந்தது.இந்நூல் வெளிவந்தபோது அதனது பிரதியை உடனடியாக வாசித்த மார்க்ஸ், எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் “இந்நூல் கரடு முரடான நடையில் இருந்தாலும்,நமது இயற்கை வரலாறு குறித்த கோட்பாட்டிற்கு வலு சேர்க்கிறது”என டார்வினைப் பாராட்டுகிறார்.

19  நூற்றாண்டில் டார்வினின் பரிணாமக் கோட்பாடு வெளிவந்தபோதே கிறித்துவ மத நிறுவனங்கள் கடும் ஆட்சேபம் செய்தன.ஏனெனில் கிறித்துவத்தின் புனித நூலாம் பைபிளில் ஏசுபிரானின் கற்பனையிலே உலகமும் மனிதர்களும் படைக்கப்பட்டார்கள் என்ற “படைப்புக் கோட்பாடே” கிறித்துவ மதத்தின் நம்பிக்கையாக இருந்துவருகிறது.மாறாக டார்வினின் பரிணாமக் கோட்பாடு,ஒவ்வொரு உயிரும் பரிணாமத் தேர்வின் அடிப்படையில் உருவானது என்றும் குரங்கிலிருந்தே மனிதன் வளர்ச்சியடைந்தான் என்றும் இயற்கையின் வரலாற்று வளர்ச்சியின் விளைபொருளே மனிதன் என சான்றாதாரத்தோடு நிறுவினர்.

இந்த முடிவானது மதத்தின் படைப்புக் கோட்பாட்டு வாதத்தை வீழ்த்தி தவிடுபொடியாக்குகிறது. அன்று முதல் இன்றுவரை கிறுத்துவ மத செல்வாக்குள்ள கட்சிகள் மேற்குலகில் ஆட்சிக்கு வந்தால், டார்வினின் பரிணாமக் கோட்பாடு பகுதியை பாடப் புத்தகத்தில் வைப்பதில் ஏகப்பட்ட தகராறுகள் நடந்துவருகிறது.

மேற்காசியாவில் இஸ்லாமிய நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல.உதாரணமாக தற்போது துருக்கியில் ஆட்சியில் இருக்கும் வலதுஅடிப்படைவாத அரசானது,பரிணாமக் கோட்பாட்டை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இவ்வாறு இஸ்லாமும் கிறித்துவமும் பரிணாமக் கோட்பாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்க இந்துத்துவாதிகள் சும்மாவா இருப்பார்கள்.ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றல், எதன் ஆதாரத்தில் பரிணாமக் கோட்பாட்டை மறுப்பது என்பதுதான். “வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ பிழைத்தோம். அவன் வைத்த பெயர் (இந்து) நம்மைக் காப்பாற்றியது என்று காஞ்சி சங்கராச்சாரியார் அவரின் தெய்வத்தின் குரல்நூலில் கூறியதுபோல இந்து மதத்தில் எந்தக் கூறின் அடிப்படையில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பது என்பதுதான்!

இந்துமதத்தில்,வேதத்தை அடிப்படையாகக் கொள்வதா?இதிகாச புராணங்களை அடிப்படையாகக் கொள்வதா?மனுக் கோட்பாட்டின் அடிப்படையில் மறுப்பதா? என பல்வேறு குழப்பங்கள் அவர்களை சூழ்ந்தன.

இறுதியாக பெருமாளின் தசாவதார புராணத்தை டார்வினுக்கு எதிராக தேர்ந்துகொண்டார்கள்.டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கு முன்பே இறைவன் மச்ச அவதாரம்,வாமன அவதாரம் ,நரசிம்ம அவதாரம் என பல அவாதரங்கள் எடுத்துள்ளார்.மேலும் பகவதக் கீதையில் கடவுளே மனிதனாக தோன்றியுள்ளார்.ஆகவே மேற்குலகின் படைப்புக் கோட்பாட்டை விட பலமடங்கு பழமையானது இந்து மதத்தின் படைப்புக் கோட்பாடு என வாதிடத் தொடங்கினர்.விநாயகக் கடவுளின் மனித உடலும் யானைத் தலையும் நவீன பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோட்டம் என்ற பிரதமர் மோடியின் புகழ்பெற்ற வாசகத்தையும் நாமிங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்!

காலத்திற்கு பிந்தி தள்ளுவது முடிந்தால் காலத்திற்கு வெளியே தள்ளுவது என்பதே வரலாற்றை திரிப்பதற்கு ஆர் எஸ் எஸ் தேர்ந்துகொண்ட முக்கிய உக்திகளில் ஒன்றாகும்.உதாரணமாக வேத காலம்,மகாபாரத போர் நடந்த காலம்(புனைவாக)சரஸ்வதி ஆறு,ராம ராஜ்ஜியம் என வரலாற்று காலத்திற்கு பின்தள்ளுவதும் பழமையிலும் பழமை என இட்டுக் கட்டுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் வரலாற்றுப் பார்வையாகும்.

மரபணு அறிவியலைப் பொறுத்தவரை  இந்துத்துவவாதிகள் பெரிதாக  கண்டுகொள்வதில்லை.ஏனெனில் ஆரிய இனக் கோட்பாட்டை பல காலங்களில் அவர்கள் உயர்த்தி பிடித்தே வந்துள்ளார்கள்.மற்ற மனிதர்களை விட ஆரியர்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணத்தை பல பாஜக தலைவர்களே பேசியுள்ளார்கள்.அவர்களது பிரச்சனை டார்வினின் பரிணாமக் கோட்பாடே.ஏனெனில், எவ்வாறு பிற மதங்களின் படைப்புக் கோட்பாட்டை டார்வினியம் கேள்விக்குட்படுத்துகிறதோ அதுபோன்றே இந்து மதங்களின் இதிகாச புராண அவதாரங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது.

மேற்குலகில் திருச்சபையின் படைப்புக் கோட்பாடு மீதான விமர்சனமானது அறிவொளிக் காலத்தில் தொடங்குகிறது. இறையியலுடன் இயற்கையை இணைத்த திருச்சபை இயற்கைவாதத்திற்கு அறிவொளிக் காலத்தில் கெப்ளர்,கலீலியோ,ஹார்வி போன்றோர்களும் அதைத்தொடர்ந்த அறிவியல் காலத்தில் டார்வினும் திருச்சபை இயற்கைவாதத்திற்கு மரண அடியைக் கொடுத்தனர்.மேற்குலகில் நடைபெற்ற அறிவியல் வளர்ச்சிகள் அதைத்தொடர்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழிற்துறை  எழுச்சிகள் அரசியல் பொருளாதார  மாற்றங்கள்  சமூகத்திடமிருந்து மதத்தை விலக்குவதாக அமைந்தது.

ஆனால் இந்திய ஒன்றியத்தில் நிலைமையோ தலைகீழாக இருந்தன.காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் இந்துத்துவ நீரோடையில் நீர்த்து போன அரை சங்கிகளாக இருந்தனர் என்பதை நாமிங்கு கவனிக்கவேண்டும்.இந்தியாவில் மேற்குலகைப் போல் இல்லாமல் மதமும் அரசியல் விடுதலையும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டன.இதன் காரணமாகவே ஒரு பெரும் வகுப்புவாத பிரிவினையோடு தொடங்கிய இந்திய விடுதலையானது இன்றைக்கும்  வகுப்புவாத கலவர நாடாகத் தேங்கிப்போவதற்கும் ஆர் எஸ் எஸ் போன்ற சங் பரிவார கும்பல்கள் அரசியல் பண்பாட்டு அரங்கில் வலுப்பெறுவதற்கும்  பெருங் காரணமாக அமைந்தது.அரசியல்,நிர்வாகம்,பண்பாடு,இன்ன பிற அனைத்து துறைகளிலும் இந்து மதக் கருத்தியல் ஆளும் வர்க்க கருத்தியலாக பற்றிப் படறிவிட்டன.அதன்  ஒரு தெரிப்புத்தான் தற்போது பாடப் புத்தகத்திலிரிருந்து டார்வின் நீக்கப்பட்டது.

ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவியல் விரோத பிற்போக்குவாதத்திற்கு எதிராக கேரளாவின் இடதுசாரி அரசாங்கம்,தனிப் பாடமாக நீக்கப்பட்ட டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை வெளியிடுகிறது.இது பாராட்டத்தக்க முன்னெடுப்பாகும்.கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் இம்முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.

நன்றி-ஜனசக்தி 

No comments:

Post a Comment