Pages

Sunday 28 February 2016

சூழலியல் சிக்கல்களும் பச்சைத் தமிழ் தேசிய அரசியலும்




ஒரு தேசியத்தின் சுய நிர்ணய உரிமை என்பது அதன் ஜனநாயக உரிமையாகும்.ஒரு தேசியத்தின் அரசியல் பொருளாதார பண்பாட்டு உரிமைகளை அத்தேசிய இனமே  தீர்மானித்துகொள்வதுதென்பது அதன் சுய நிர்ணய கோரிக்கையின் மைய சாரமாக உள்ளது.இந்தியா பல தேசிய இனங்களை  உள்ளடக்கிய தேசிய ஒன்றியமாகும்.நவீன இந்தியா உருவாவதற்கு முன்பாகவே இங்குள்ள தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமையுடன் இயங்கின.இன்று இந்திய ஒன்றியமானது  பல் தேசிய இனங்களின்  சிறைக்கூடமாக உள்ளது.இந்திய தேசியம் இந்து தேசியமாக ஒடுக்குகிற தேசியமாக உள்ளது.உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் அரசியல் சாசன சட்டத்தில் ஒரு தேசியம் பிரிந்து போவதற்குண்டான தன்னுரிமை பற்றி மறந்தும் கூட (இந்திய தேசியத்தின் அரசியல் சாசனத்தில்)குறிப்பிடப்படவில்லை.பரந்த சந்தையின் தேவைக்காக இந்தியாவின் முதலாளிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்களானது இந்திய ஒன்றியத்தின் பல்தேசிய  இனங்களை தனது அதிகாரத்தின் துணைக்கொண்டு ஒடுக்கி வருகிறது.பல் தேசிய இனங்களின் மொழி கலாச்சாரங்கள் ஒதுக்கப்பட்டு இந்துத்துவ அடையாளத்தின் பேரில் ஒற்றைபட்டையான பண்பாட்டை அது உருவாக்குகிறது.

ஒடுக்குகிற தேசிய இனத்துக்கு எதிராக  ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் முன்வைக்கிற சுய நிர்ணய உரிமைக்கான  முழக்கம் என்பது அதன் அரசியல் பொருளாதாரம்,மொழி,பண்பாட்டில் சுய நிர்ணய உரிமை மற்றும் சமூகத்தை ஜனநாயகப்படுத்தல் குறித்ததாகும்.அவ்வகையில் ஒடுக்குகிற இந்திய தேசியம் எனும் இந்து தேசியத்திற்கு எதிராக போராடுகிற ஒடுக்கப்படுகிற மணிப்பூர்,நாகலாந்து மற்றும் காஷ்மீர் தேசிய இனங்கள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய இன விடுதலைக் கோரிக்கை நீண்ட  நெடிய வரலாற்றைக் கொண்டது.இன்று அதன் தேசிய இனக் கோரிக்கைகள் சுத்த இனவாதக் கருத்தியலுக்கு அதிகம் அழுத்தம் தருகிற கட்சிகளின் செயல்திட்டங்களின் செல்வாக்குகளால் பீடிக்கப்படுள்ளதாகவே தெரிகிறது.இக்கட்சிகளின் இனவாத தமிழ் தேசிய நிலைப்பாடுகள்,சுய நிர்ணய உரிமைப்  போராட்டத்திற்கு கருத்தியல் மற்றும் நடைமுறை அளவில்,பெரும் பின்னடைவையே ஏற்படுத்துபவையாக  உள்ளன.குட்டி பூர்ஷுவாக்களின் நலன்களின் பேரிலும்,சொந்த/அண்டை தேசிய இனங்களின் விளிம்புநிலை மக்களின் விடுதலையை உள்ளடகத்தில் கொள்ளாத இவ்வகையான தமிழ் தேசியப் போராளிகள்,தங்களின் தேசிய இன விடுதலைக்கான நியாயப்பாட்டை, அண்டை தேசிய இன மக்களுடான பகையையுனர்வை வளர்ப்பதன் ஊடாக முன்னெடுக்கின்றனர்.முன்னாள் தமிழ் தேசிய பொதுவுமடைக் கட்சியும் இன்றைய தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை இவ்வகையான இனவாத தேசியம்  பேசுகிற தமிழகத்தின் ராஜ் தாக்ரேக்களாக வலம் வருகின்றனர்.
சுத்த இனவாதம் பேசியும்,மொழித் தூய்மைவாதம் பேசியும் அடையாள அரசியலை முன்னெடுத்தவர்கள் இன்று சூழலியல் சிக்கல்களுக்கு இனவாத அரசியல் சாயத்தை பூசிவருகின்றனர்..இந்திய ஒன்றியத்தில், தமிழர்களுக்கு எதிராக மட்டுமே ஆபத்தானத் திட்டங்களை மெனக்கெட்டு இந்திய அரசு கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

இப்படியான பச்சைத் தமிழ்த் தேசிய அணியினருள் பச்சை தமிழகம் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர்  தோழர் சுப உதயகுமாரும் அக்கம் பக்கமாக இணைந்துவிட்டதாகவேத் தெரிகிறது.வடகிழக்கு மாகாணங்கள்,காஷ்மீர் பள்ளத்தாக்குகள்,தக்கான பீடு பூமி,என அனைத்து பிராந்தியத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்நிலைமைகளையும் புறச்சூழலையும் வேகமாக தனது லாப நோக்கத்தின் பொருட்டு இந்திய/பன்னாட்டு முதலாளித்துவ சக்திகள்  அழித்தொழிக்கிறது.அதற்கிசைவான ஜனநாயக அரசியல் கேடயமாக  காங்கிரஸ் அரசு பா ஜ க அரசு செயல்படுகிறது.ஆளும் வர்க்கத்திற்கும் அதன் நலன் காக்கிற இவ்வரசுக்கும் தமிழனும் காஷ்மீரியும் மணிப்பூரியனும் ஒன்றுதான்.ஜார்கண்ட்,சத்திஸ்கரில் கனிமவளங்களை சூறையாடுவதும் இவ்வர்க்கம் தான் ,குஜாரத் சதுப்பு நிலத்தை அழித்ததும் இம்முதலாளித்துவ வர்க்கம் தான்.தமிழகத்தின் கனிம வளங்களையும்,நிலத்தடி நீரையும் சுரண்டுவதும் இவ்வர்க்கம்தான்.

ஆளும் வர்க்கத்திற்கு எதிரான சூழலியல் போராட்டமானது அடிப்படையில் ஓர் வர்க்கப் போராட்டமாகும்.நில அபகரிப்பு சட்டத்தால் நிலம் இழந்த உழைக்கும் மக்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்குமான போராட்டமாகும்.இவ்வர்க்கப்போரட்டத்தில் நாம் ஆளும்வர்க்கத்திற்கு எதிராகத் தான் போராடுகிறோம்,ஏனெனில் நமது நிலைக்கு அதுதான் காரணமாக இருக்கிறது என்று தெளிவு அவசியமான முன் நிபந்தனையாகும்.மாறாக நமது போலித் தமிழ் தேசிய குழுவினர்  பொது எதிரியை ஆளும்வர்க்கமாக நிறுத்தமால் ஆளும்வரக்கத்தின் கருவியாக செயல்படுகிற அரசையும் பக்கவாட்டில் அண்டை தேசிய இன மக்களையும் பகையாளியாக முன்னிறுத்துகிறது.இவர்களின் வரையறைப்படி பார்த்தால்,இந்தி பேசுகிற முதலாளிக்கு பதிலியாக தமிழ் தேசிய முதலாளி தமிழகத்தின் இயற்கை வளங்களை சுரண்டினால் நியாயம் என்றல்லவா ஆகிறது.!

No comments:

Post a Comment