அண்மைக்கால சூழலியல்
சிக்கல்களை மார்க்சிய விமர்சன நோக்கில் அணுகும் போது,நமது சூழல்வாதிகள்
மார்க்சியர்களை நோக்கி சில விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.குறிப்பாக,மார்க்சிய
தத்துவமானது ஐரோப்பிய சமூகத்தை ஆய்வு செய்து முன்வைத்த கோட்பாடாகும்;அது
இந்தியாவிற்கு பொருந்தாது என்பதாகும்.இரண்டாவதாக,மார்க்சின் முதலாளித்துவ
பகுப்பாய்வானது,வர்க்கப் போராட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகும்.ஆகவே
மார்க்சியத்தின் வழியே சமகால சூழலியல் சிக்கல்களை
பாகுப்பாய்வு செய்ய இயலாது என்பதாகும்.
இவ்வாறாக மார்க்சை
முன்வைத்தும்,மார்க்சியத்தை முன்வைத்தும் நவீன பொருளாதார அறிஞர்கள்,சூழல்வாதிகள்
போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
ஆனால் உண்மை
என்னவோ இவர்களின் கூற்றுக்கு நேர்மாறாக உள்ளது.அதாவது முன்னைக்காட்டிலும்
மார்க்சின் வாதங்கள் தற்போதைய நெருக்கடி நிலையில் க முக்கியத் தேவையாக உள்ளது.மார்க்சியத்தின்
எதிரிகளே தற்போது மார்க்சை ஏற்றுக்கொள்கிற கட்டாயத்திற்கு
தள்ளப்பட்டிருக்கின்றனர்.உதாரணமாக கடந்த 2008ஆம்
ஆண்டில்,இத்தாலி,ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையானது உலகின்
புதிய அடுக்கை குலைப்பதாக அமைந்தது.பொதுவாக சந்தையின் உள்ளார்ந்த விதிகளே
மாயவித்தைகள் செய்து அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடும் என கட்டியம் கூறி வந்த
முதலாளித்துவ அறிவுஜீவிகள் முழித்துக்கொண்டு நின்றனர்.
மார்க்சு ஏன் தேவை:
இன்றைய
முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது உழைப்புச் சுரண்டலிலும் இயற்கை வளச் சுரண்டலிலும் முன்னைக்காட்டிலும்
மிக வலுவாக கொள்ளையடிக்கிற அமைப்பாக முன்னேறிவிட்டது.இதில் ஐராப்பிய கண்டமோ ஆசிய கண்டமோ
ஆப்பிரிக்க கண்டமோ விதிவிலக்கல்ல.நாட்டின் கனிமவளங்களை வரை முறையற்ற வகையில்
கொள்ளையடிப்பது,ஆபத்தான நச்சு கழிவுகளை நிலத்திலும் நீரிலும் காற்றிலும் கலந்து
சூழலிலுக்கு கேடு விளைவுப்பது ஆகிய சூழலியல் சீர்கேடுகளை இன்று அனைத்து நாடுகளும் பொதுவாக
எதிர்கொண்டு வருகின்ற பிரச்சனைகள் ஆகும்.இங்கே தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை
என்றால் இத்தாலியில் இல்வா ஆலை;இங்கே கூடங்குளம் அணுவுலை என்றால் ஜப்பானில்
புகிசிமா அணு உலை.இந்தியாவிலே அதானி நிறுவனம் காடழித்து நிலக்கரி எடுக்கிறது
என்றால் ஆஸ்திரேலியாவில் ரியோ டின்டோ நிறுவனம் அதைச் செய்கிறது.ஆக.பன்னாட்டு
கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை
சுரண்டுவதிலும் கேடு விளைவுப்பதிலும் ஒரே விதமாக செயல்பட்டு
வருகின்றனர்.கார்பரேட்களுக்கு எதிராக அமேசான் காடுகளை காப்பாற்ற போராடிய சூழல்
போராளிகளும் இந்தியாவில் கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடிய சூழல்வாதிகளும் ஒரே காரணத்திற்காகதாக் படுகொலை
செய்யப்படுகிறார்கள்.உலகெங்கிலுமே முதலாளித்துவ உற்பத்தி முறையின் கோர வடிவம் ஒரே
விதமாகத் தான் உள்ளது.
மார்க்சின்
முக்கிய பங்களிப்பே முதலாளித்துவ அமைப்பின் இந்தக் கோர முகத்தை, அதனது அராஜகத்தை அறிவியல்
பூர்வமாக அம்பலப்படுத்தியதாகும்.முதலாளித்துவ திறனாய்வை மார்க்சைத் தவிர்த்து
வலுவாகவும்,ஆழமாகவும் இதுவரை
எவரும் முன்வைத்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.முதலாளித்துவ அமைப்பு குறித்த மார்க்சின்
பகுப்பாய்வு மட்டும் நமக்கு இல்லாமல்
போனால்,அவ்வமைப்பினில்
வாழத்தளைப்பட்ட மக்களுக்கு அது குறித்த புரிதல் இல்லாமலே போயிருக்கும்.குறிப்பாக
முதலாளித்துவத்தின் “பொருளாதார இயக்க
விதிகளை”மூலதனம் நூலின்
வாயிலாக மார்க்சு விளக்காமல் விட்டிருந்தால் முதலாளித்துவ அமைப்பின் முக்கியபோக்கான அதன் “இயக்கத்தை” புரிந்துகொள்வதென்பது நவீன மனித சமூகத்திற்கு
சாத்தியப்படாமலேயே போயிருக்கலாம்.
மார்க்சியம் மற்றும் மார்க்சு மீதான விமர்சனங்களுக்கான நமது பதிலானது மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலானது.அது வர்க்கசுரண்டல் மற்றும் சூழலியல் சிக்கல்களைப் பேசுவதாகும்.அப்பதிலை நாமொரு பொருளாதார மார்க்சியரின் வழி நின்று சொன்னால் இன்னும் பொருத்தமுடையதாக இருக்கும்.”மூலதனத்திற்கு அப்பால்”எனும் தனது நூலின் முதல் பகுதியே “மார்க்சு எதற்காக?”என்ற தலைப்பின் கீழ் மூலதனத்தின் வரலாற்றை, பொருளாதார மார்சியரான மைக்கல் லேபோவிட்சு விரிந்துரைக்கிறார்.
மார்க்சியத்தை நாம் பொருளாதார கோட்பாட்டு அளவோடு சுருக்கக்கூடாது. சுரண்டலை மையப்படுத்திய சமூகத்தையோ,முழு வளர்ச்சியை நோக்கிய மனித ஆற்றலை கட்டுப்படுத்தும் விதத்திலான சமூகத்தையோ மார்க்சியம் நிராகரிக்கும்.மனிதனின் தேவைக்காக அல்லாமல் தனியாரின் லாபத்திற்கான வர்க்கச் சார்பாக எடுக்கப்படுகிற சமூக முடிவுகளுக்காக முதலாளித்துவத்தை மார்க்சியம் எதிர்க்கிறது.அதன் லாப நோக்க உற்பத்தி முறைக்காக இயற்கை வளங்களை,மனித வளங்களை சிதைப்பதும்,பாலின,மொழி பாகுபாட்டினை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்வதும் முதலாளித்துவத்தின் இயல்பான போக்காக மார்க்கியம் பார்ப்பதால் மட்டுமே அதற்கெதிராக போராட வலியுறுத்துகிறது.முதலாளித்துவத்தின்
பொருளாதார “வளர்ச்சி மாதிரி”
இன்று உலக நாடுகளின்
பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக உலக நிதி மூலதனமே திகழ்கிறது.பன்னாட்டு
நிதியகம்,உலக
வங்கி போன்ற உலக தழுவிய கட்டமைப்புகள் மூலமாக எந்த நாட்டிலும் தலையிட
முடிகிறது.நழிவடைந்துள்ள நாடுகளோ தனது நாட்டின்
பொருளாதார கட்டுப்பாட்டை உலக நிதி மூலதனத்திடம் இழந்து,அதற்கிசைவான நோக்கத்திற்கு செயல்படும் அளவோடு
சுருங்கிவிட்டது. ஆகவே இன்றைய சமூகம் மற்றும் சூழலியல் சிக்கல்களுக்கு காரணமாக இருகின்ற.முதலாளியத்தின் லாப நோக்க உற்பத்தி
முறையை அதனால் கட்டுப்படுத்த இயலவில்லை.அதனால்தான் ஐநாவின் காலநிலை மாநாட்டுத் தீர்மானங்களால்
சூழலியல் அழிவுகளை தடுத்து நிறுத்த இயலவில்லை.இதை மார்க்சியர்கள் மட்டுமே உள்ளது
உள்ளவாறு விளக்கமுடியாது.
இன்றைய நவீன
முதலாளித்துவ கட்டத்தில்,பொருளாதாரமே, அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுத்துள்ளது.இதற்கு
முந்தையச் சமூகக் கட்டங்களில் அரசியல் அதிகாரமே பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதாக
இருந்தது.அதாவது ஒரு பேரரசிற்கு திறை செலுத்தும் சிற்றரசுகள் போன்ற ஒரு
மையப்படுத்தப்பட்ட அரசமைப்பில் பொருளாதாரம் அரசியல் ஆளுமைக்கு உட்பட்டு
இருந்தது.அதன் பின்னான வணிக மூலதன காலகட்டத்திலும் இதுவே தொடர்ந்தது.ஆனால் இன்றோ
இதற்கு நேர்மாறான நிலையே நிலவுகிறது.அதனாலேயே இன்று உழைக்கும் வர்க்கமும்,இயற்கை வளங்களும்
முதலாளித்துவத்தின் லாப நோக்க உற்பத்தி முறைக்காக சுரண்டப்படுகிறது.முதலாளித்துவ
சமூகத்தால் வளர்தத்தெடுக்கப்பட்ட இப்பொருளாதார அம்சம் குறித்து,பொருளாதார மார்க்சியரான
சமீர் அமீன் கூறுவதாவது.
“பொருளாதாரம்”என்னும் வார்த்தைக்கு அதிக அழுத்தம் முதலாளியத்தால்
வழங்கப்பட்டதாகும்;முதலாளியத்திற்கு முந்திய சமுதாய அமைப்புகளில் அரசியலும்,சித்தாந்தமும் ஆதிக்க நிலையில் இருந்தன.ஆனால் முதலாளியம்
பொருளாதாரத்திற்கு ஆதிக்க நிலையை அளித்தது.அதாவது முந்தைய அமைப்புகளில் அரசியலும்,சித்தாந்தமும் ஆதிகத்தின் மூலாதாரங்களாக அமைந்தன.ஆனால்
முதலாளியத்தில் செல்வமே அதிகாரத்தின் அடிப்படை.வேறு வகையில் கூறினால்,மதிப்பு விதி முதலாளியத்தின் பொருளாதார அம்சத்தை மட்டும்
அல்லாமல் அதனுடைய சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஆள்கிறது.”
இந்நிலையில் இனநெருக்கடியில் இருந்து விடுபட,முதலாளித்துவத்திற்கு எதிராக போராட,அதற்கெதிரான மாற்று சமூகத்தை கட்டியெழுப்ப நம்முன் உள்ள ஒரே
வாய்ப்பு மார்க்சியம் மட்டுமே.ஏனெனில்,மார்க்சியம் மட்டுமே மனித இனத்தின் நீடித்த வளர்ச்சிக்கான
மாற்று முகாமை காட்டுகிற தத்துவமாக உள்ளது.