Pages

Wednesday 8 March 2017

தமிழகத்தின் சூழலியல் பிரச்சனைகளும் எடுபிடி முதலாளித்துவமும்


                                    
இந்திய அரசு பெரும் போர் ஒன்றை நடத்தி வருகிறது.இப்போர் பாகிஸ்தான் எல்லையிலோ சீன எல்லையிலோ நடக்கவில்லை.சொந்த நாட்டிற்குள்ளாகவும் சொந்த நாட்டு குடிகளுக்கு எதிராகவும் இப்போரை இந்திய அரசு நடத்துகிறது.
சட்டீஸ்கார் மாநிலம் பஸ்தரில் பழங்குடிகளுக்கு எதிராகவும் ஒட்டுமொத்த இந்திய வேளாண் குடிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு இப்போரை நடத்திவருகிறது.பஸ்தரில் நக்சல்களுக்கு எதிரான வேட்டை என்ற பேரில் கடந்த ஜனவரி முதல் வாரத்தின்  நான்கு நாட்களில் மட்டும் பதினைந்து பழங்குடி பெண்கள்,இந்திய போலீஸ் மற்றும் பாதுகாப்பு  படையால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.பழங்குடி நலன்களுக்காக குரல் கொடுத்துவருகிற  சோனி சோரி போன்ற செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு பஸ்தரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சட்டீஸ்கார் மாநில மலைகளில் குவிந்துள்ள பாக்சைட்,இரும்புத்தாது போன்ற கனிம வளங்களை எசார்,வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கையளிப்பதற்கே இத்தகைய ஒடுக்குமுறைகளை இந்திய அரசு கட்டவிழ்த்துள்ளது.அவ்வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவதார் படத்தில் பெரு நிறுவனமொன்று வேற்று கிரகத்தில் குவிந்துள்ள கனிம வளங்களை அபகரிக்க அங்கு வாழ்ந்துவருகிற பழங்குடிகள் மீது போர் தொடுக்கிற காட்சிகள்  போலவே,இங்கு பழங்குடிகள்  மீது இந்திய அரசு போர் தொடுத்து வருகிறது.உண்மையாகவே நடந்துவருகிற  இப்போர் குறித்து தேசிய ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன.


மறுபக்கம்,விவசாயிகளின் மீதான போர்.இந்தியாவில்,கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3,000  விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.குறிப்பாக கடந்த பதினைந்து ஆண்டுகளில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 20,504 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.ஒட்டுமொத்தமாக வேளாண் தொழில் சார்ந்த தற்கொலைகளில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது(மகராஷ்ட்ரம் – 4004,தெலுங்கான-1347,மத்திய பிரதேசம் -1198,தமிழகம் -827)
விவசாயிகளின் பிரச்சனைகள் பொறுத்தவரை,தொழில்துறை முதலீடுகளை  ஊக்குவிப்பதிலேயே  இந்திய அரசு பெரும் ஆர்வம் காட்டுகிறது.விவசாயிகள் அனைவரும் வேளாண்மையை விட்டுவிட்டு தொழிற்சாலை பணிகளுக்கு வரவேண்டுமென கடந்த 2008 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் கூறியதை இப்பின்புலத்தில் இருந்துதான் புரிந்துகொள்ளவேண்டும்.விவசாயிகளுக்கான மானிய வெட்டு,நீர் நிலை பராமரிப்பில் அக்கறையின்மை,உற்பத்தி பொருளுக்கு நல்ல விலையின்மை போன்ற காரணத்தால் இந்திய விவசாயிகள் இன்று கொத்து கொத்தாக தற்கொலை செய்து வருகின்றனர்.


தமிழகத்தின் சூழலியல் நிலைமைகளும் சமூக நிலைமைகளும் இதற்குமுன் இல்லாத வகையில் தீவிரமானதொரு  நெருக்கடி நிலையை எதிர்கொண்டுவருகிறது.காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்புத் திட்டம்,கெயில் குழாய்ப் பதிப்புத் திட்டம்,கூடங்குளம் அணுவுலை மற்றும் கல்பாக்கம் அணுவுலை விரிவாக்கம்  போன்ற பேரழிவுத் திட்டங்கள் ஒருபுறமும்,அரியலூரில் சுண்ணாம்புக்கல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் நடைபெறுகிற ஆற்றுமணல் கொள்ளை,தூத்துக்குடி,கன்னியாகுமாரி மாவட்டங்களில் நடைபெறுகிற தாது மணல் கொள்ளை என தமிழகத்தின் இயற்கை வளங்களையும் மண் நீரையும் மாசு படுத்துகிற பேரழிவுத் திட்டங்களும் இயற்கை வளக் கொள்ளையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்றைய உலகமயமாக்கள் சூழலில் எழுச்சி பெற்றுள்ளன.

இவ்வனைத்துப் பிரச்சினைகளுக்குமான மையக் காரணம் என்ன?இப்பிரச்சனைகளை ஒட்டுமொத்தமாக எவ்வாறு புரிந்துகொள்வது?

பிரச்சனைக்கான வேர் நிலவுகிற அரசியல் பொருளாதார கட்டமைப்பில் உள்ளது.அதாவது பொருள் உற்பத்தியில் ஈடுபடுகிற முதலாளித்துவ சமூகத்திற்கும் அதற்கு சேவை செய்கிற அரசுக்குமான எடுபிடி உறவே பிரச்சனைக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.சுருங்கச் சொல்வதென்றால் குரோனி காபிடலிசம் எனக் கூறலாம்.தமிழில் சூறையாடும் முதலாளித்துவம் அல்லது எடுபிடி முதலாளித்துவம் எனக் கூறலாம்.

எடுபிடி முதலாளித்துவம் என்றால் என்ன?

அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்குமான திருமண பந்த உறவை,கள்ளக் கூட்டணியை,எடுபிடி உறவை  நாம் எடுபிடி முதலாளித்துவம்  என்றழைக்கலாம்.இதை  சில உதாரணங்களை முன்வைத்துப் பேசுவோம்.
அண்மையில் உச்ச நீதிமன்றமானது மத்திய ரிசர்வ் வங்கிக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.காரணம் ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த மறுத்த நிறுவனங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காப்பதாக தொடுக்கப்பட்ட  வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் வங்கிகளைக் கடுமையாகத் தாக்கியது.

ஒரு லட்சம் ரெண்டு லட்சம் அல்ல சுமார் ஐந்து லட்சம் கோடி ருபாய் அளவிற்கு ரிசர்வ் வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் வாங்கிய கடனை பெரு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தவில்லை.இதை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை.எந்தளவிற்கு அரசு, தனியார் நிறுவனங்களுக்கு சலுகை வழங்குகிறது,எடுபிடியாக சேவகம் செய்கிறது  என்பதைப் புரிந்துகொள்வதற்கு இவ்வுதாரணம்  ஒன்றே போதும் என நினைக்கிறன்.

இதே வங்கிகள் ஒரத்தநாட்டில் சுமார் மூன்று லட்சத்திற்கு ட்ராக்டர் வாங்குவதற்கு வாங்கிய கடனை,இறுதித் தவணைகளை செலுத்த இயலாத விவசாயியை  அடித்து உதைத்து சித்தரவதைப் படுத்தியது.மாறாக கிங் பிஷர் அதிபர் விஜய் மல்யாவோ சுமார் 9,000 கோடி ரூபாயை வங்கிகளில் வாங்கிவிட்டு இந்திய அரசின் துணையோடு வெளிநாடு சென்றுவிட்டார்.கடந்த காலத்தில் அவரது கடனை அடைக்க மத்திய அரசே முன்வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்றுள்ளது.அதாவது விஜய் மல்யா வெறும் தொழில் அதிபராக மட்டும் இருக்கவில்லை.ராஜ்ய சபா உறுப்பினாராகவும் இருக்கிறார்.வானூர்தி தொடர்பான பாராளுமன்ற குழுவில் அவரது அழுத்தம் அதிகம்.இவை எல்லாம் எதார்த்தமாக நடந்தவைகள் அல்ல.

எப்போது குரோனி காபிடலிசம்  துவங்கியது?

சுமார் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பாக,நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் கூட்டணியில் மிகப்பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.நேருவின் பொதுத் துறை கொள்கைகளுக்கு வேகமாக மூடுவிழா நடத்தப்பட்டது.பன்னாட்டு நிறுவனங்களுக்கு உள்ளூர் சந்தை திறக்கப்பட்டது.விளைவு தொழிலாளார் சட்டம்,சூழல் பாதுகாப்பு சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.வரிகள் நீக்கப்பட்டன.குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மிகப்பெரிய அளவில் ஊக்கப்படுத்தப்பட்டன.பெரு நகரங்கள் மற்றும் துணை நகரங்களை மையப்படுத்திய தொழில்துறை ஊக்குவிக்கப்பட்டன.இந்திய அளவிலும் அதன் அங்கமாக உள்ள தமிழகத்தின் இயற்கை வளக் கொள்ளைக்கும்,பேரழிவுத் திட்டங்களுக்கும்,இது அடிகோலியது.
          
தமிழகத்தை பொறுத்தவரை முதலாளிகளுக்கும் அரசுக்குமான திருமண பந்தம் இந்த காலகட்டத்தில் உறுதியாகியது.தாது மணல் கொள்ளையில் வி வி மினரல்ஸ் வைகுண்டராஜன் கொடி கட்டி பறந்தான்.இக்கனிம வளங்களை கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்தமாக  சுரண்டிக் கொழுத்து வருகிறான்.ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் வி வி மினரல்ஸ் நிறுவனம் ஜெயலலிதாவின் பினாமி நிறுவனமாக குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் இறுத்திப் பார்க்கையில் வைகுண்டரஜானின் பண பலமும் அதிகார பலமும் நமக்கு புலனாகிறது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவனது சாம்ராஜ்யத்தை அசைக்க இயலவில்லை.தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் க.குமாரி ஆகிய மூன்று மாவட்டத்தில் மட்டும் சுமார் 150 கி மீ பரப்பளவில் டன் கணக்கில் தாதுமணல் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமது செய்யப்பட்டது. கடற்கரையில்,தாது மணலை  அள்ளுவதற்கு  2 முதல் 3 மீட்டர் ஆழம் வரையிலும் ஊர்ப் பகுதியில் 1.00 மீட்டர்  ஆழம் வரையிலும்  மண்வெட்டி கொண்டு வெட்டி எடுப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால் விதிகளுக்குப் புறம்பாக இராட்ச இயந்திரங்களைக் கொண்டு 10 மீ முதல் 50 மீ. வரை தாது மணல் அள்ளப்படுகிறது.
தாதுமணல் நிறுவனங்களுக்கு 100 ஏக்கர் நிலத்தை வெறும் 16 ரூபாய்க்கும் 50 ஏக்கர் நிலத்தை  9 ரூபாய்க்கும் 30 ஆண்டு காலத்திற்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் ரூ.60 லட்சம் கோடி மதிப்புள்ள தோரியம் தாது மணல்  இந்திய கடலோரப் பகுதிகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக  இந்திய  நாடாளுமன்றத்தில் மத்திய அணுசக்தித் துறை தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
ஆற்று மணல் கொள்ளையன் ஆறுமுகச்சாமி மட்டுமே தமிழகத்தின் ஆற்று மணல் வளத்தை பெருமளவிற்கு கொள்ளையடித்து வருகிறான்.இதற்கு கழக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.ஆற்று மணல் எடுப்பு பெயரளவில் அரசின் வசம் இருந்தாலும் லிப்டிங் அண்ட் சோர்சிங் என்ற போர்வையில் தனியார் குவாரி கான்ட்ராக்டர்களே முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

கடந்த 2012- ஆம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சியொன்று மேற்கொண்ட ஆய்வின்படி  தமிழகத்தில் ஆண்டுக்கு  சுமார் இரண்டு லட்சம் டன் ஆற்றுமணல் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டுகிறது.
அடுத்து,பி ஆர் பழனிச்சாமியின் கிரானைட் கொள்ளை.91- 96 காலத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தொழில்துறை அமைச்சர் கரூர் சின்னசாமி மேல்  கிரானைட் குவாரி உரிமம் வழங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பின்னர் ஆட்சிக்கு வந்த  தி மு க அரசு வழக்கு பதிவு செய்தது.அதன் பின்னர் சற்று ஆறியிருந்த இக்கொள்ளை, 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது.அதற்கு முக்கியக் காரணம் அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம்.மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் குவாரி முறைகேடுகளால் அரசுக்கு  16000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என  தமிழக அரசுக்கு அறிக்கை அளித்து அதிர்ச்சிப் புயலை ஏற்படுத்தினார்.

அதேபோல அரியலூர் மாவட்டத்தின் சுண்ணாம்பு வளத்தை ராம்கோ,டால்மியா போன்ற நிறுவனங்களே முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
இதுபோன்று தமிழகத்தின்  கனிம வளக் கொள்ளைகள் நிலவுகிற எடுபிடி முதலாளியத்தால் மோசமாக கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
பேரழிவுத் திட்டங்களான மீத்தேன் திட்டம் இவ்வாறு கழக ஆட்சியாளர்களின் துணையோடு உள்ளே வந்தன.கெயில் திட்டமும் அவ்வாறு வந்தது.எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் ரிலையன்ஸ் நிறுவனமே கோலோச்சுகிறது.இவர்கள்தான் எண்ணெய் எரிவாயு அமைச்சரையே தீர்மானிக்கிற சக்தியாக உருபெற்றுள்ளனர்.அதே வேளையில் அம்பானி பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.  

வேளாண் சீரழிவை நகர்மயமாக்களுடன் இணைத்து பார்ப்பது அவசியமாகிறது. நகரங்களின் வேகமாக குவிக்கப்படும் தொழில்துறை மூலதனங்கள்  கிராமங்களில் இருந்து வேகமாக நகரங்களை நோக்கிய மக்கள் இடப்பெயர்வை அதிகமாக்கியது.
நீர்நிலை பாதுகாப்பில் அக்கறையின்மை,சரியான விலை கிடைக்காமை,மோசமான நிலச் சீர்திருத்த சட்டங்கள்,ரசாயன உரப்பயன்பட்டால் மோசமாகிய மண்வளம்  போன்ற காரணத்தால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு நகரத்தை நோக்கி புலம் பெயருகிறார்கள்.மேலும் பெரு முதலாளிகளிக்கு வசதியான சாலைகள்,துறைமுக விரிவாக்கங்களை  மற்றும் மேம்பாலங்கள் கட்டுகிற அரசு கிராமம் சார்ந்த உட்கட்டுமான திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை.அவை தேவையற்ற செலவு என மானியத்தை வெட்டுகிறது.கிரமாத்தில் மருத்துவமனைகள்,கல்விக் கூடங்கள்,சாலை வசதிகள் இல்லாத காரணத்தால்  கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி மக்கள் புலம் பெயருகின்றனர்.

இறுதியாக,
இத்தகைய இக்கட்டான சூழலில்,கம்யூனிஸ்ட் கட்சி மாலெ(மக்கள் விடுதலை)இயற்கை வளக் கொள்ளை எதிர்ப்பு- தேச வளப் பாதுகாப்பு மாநாட்டை நடத்துவது  முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையப்பெற்றுள்ளது.ஏனெனில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைப் பொறுத்தவரை விளைவுகளை மட்டுமே பேசியும்,பிரச்சனைக்கான தோற்றுவாய் குறித்தும் பெரும்பாலும் ஆழமாக பேசப்படாமல் இருந்தது.சுற்றுச்சூழல் பிரச்சனைகளை அரசியல் நீக்கத்துடனேயே தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்புகளால் பேசப்பட்டு வந்தன.அதாவது அரசு அதற்கு பின்னாலுள்ள லாப நோக்கிலான உற்பத்தி முறை,எடுபிடி முதலாளியம் குறித்தெல்லாம் தன்னார்வ சூழல் அமைப்புகள் வாய் திறப்பதில்லை.அவர்களின் வரம்புகளும் அதுதான்.இத்தகைய சூழலில்,சுமார் இருபதாண்டு காலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிடியிலிருந்த சூழல் பிரச்சனையை இம்மாநாட்டின்  ஊடாக கம்யூனிஸ்ட் கட்சி மாலெ(மக்கள் விடுதலை) மீட்டுவிட்டது என்றே கூறலாம்.சூழல் பிரச்சனைக்கு தனிபநர் ஒழுக்கவாதம்,அரசியல் கட்சிகளுடன் நட்பாக இருப்பது,முதலாளிய ஜனநாயக அமைப்பின் சட்ட வரம்பிற்குபட்ட வகையில் பிரச்சனைகளை தீர்க்க முயல்கிற  சீர்திருத்தவாத தீர்வுகளையும் நாம் புறக்கணிக்கின்றோம் எதிர்க்கின்றோம்.  

ஏனெனில் சூழல் பிரச்சனை என்பது அரசியல் நீக்கம் பெற்ற பிரச்சனை அல்ல.இயற்கை வளப் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கான நமது போராட்டம் என்பது நிலவுகிற எடுபிடி முதலாளியத்திற்கு எதிரான ஓர் வர்க்கப் போராட்டம் ஆகும்.
arun nedunchezhiyan
(கடந்த மார்ச்-23 அன்று கும்பகோணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மாலெ(மக்கள் விடுதலை)நடத்திய இயற்கை வளக் கொள்ளை எதிர்ப்பு-தேச வளப் பாதுகாப்பு மாநாட்டில் பேசியது)

Tuesday 28 February 2017

எண்ணெய் இயற்கை எரிவாயு அரசியல்:கோதாவரிப் படுகை முதல் நெடுவாசல் வரை தொடர்கிற எண்ணெய் வள வேட்டை..-பகுதி-11
எண்ணெய் எனும் கறுப்புத் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் வகித்தப் பாத்திரத்தை தற்போது எண்ணெய், எரிவாயுக்கள் தீர்மானிக்கிற இடத்திற்கு வந்துள்ளது.கறுப்புத் தங்கமான இந்த எண்ணெய் இயற்கை வள இருப்பின் மீதும் எண்ணெய் சந்தைமீதான கார்ப்ரேட்களின் தீரா தாகமும்தான் மத்திய கிழக்கு நாடுகளின் மீதான நேட்டோ நாடுகளின்(அமெரிக்க,இங்கிலாந்து) போருக்கு காரணமாக உள்ளது.ஈராக்கின் 115 பில்லியன் பேரல் எண்ணெய் வளத்தை அமெரிக்க,இங்கலாந்து கார்பரேட்களின் நலனுக்கு கைப்பற்றி கைமாற்றுவதுதான் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் முழக்கம்.

எக்சான் மொபைல்,ராயல் ஷெல்,பிரிட்டிஷ் பெட்ரோலியம்,கேர்ன் போன்ற பெரும் எண்ணெய் நிறுவனங்களும் அவர்களின் கார்டேல்களும்தான்(சங்கம்)உலகை ஆழ்கிற மாபெரும் சக்தியாக வளம் வருகின்றனர்.இவர்களின் கண் அசைவிற்கு ஏற்ப ஈராக் மீதும்,லிபியா மீதும்,சிரியா மீதும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை ராணுவத்தை ஏவுகிறது.எதிர்க்கிறவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.அங்கு பொம்மை அரசாங்கங்கள் நிறுவப்படுகிறது.இவ்வாறு ராணுவம் மூலமாக எதிர்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு,எண்ணெயை தோண்டி எடுப்பதற்கான சந்தை ஒழுங்குபடுத்தப்படுகிறது.

இவ்வாறு,பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முழக்கத்தின் பேரில் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளங்கள்,இதர நாடுகளுக்கு அது வழங்குவருகிற எண்ணெய் விநியோக அமைப்புகளின் மீது மேலாதிக்கம் செலுத்துகிற நோக்கில் தனது வெளியுறவுக் கொள்கையை அமைத்துக் கொண்டது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
2
இந்தியாவும் எண்ணெய் வளமும்

இந்தியாவைப் பொறுத்தவரை எண்ணெய் இயற்கை எரிவாயு அரசியலானது நாட்டின் அரசியல் பொருளாதாரத்தையும், ஏன் நாட்டின் ஆட்சியையே மாற்றுகிற முக்கிய இடத்தில் உள்ளது.அதற்கோர் சிறந்த உதாரணம் இந்தியாவின் 1991 ஆம் கட்டத்தைய பொருளாதார நெருக்கடி.1980 களில் இந்தியாவில் வரவுக்கு மீறிய செலவினங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றது.1990 இல் குவைத்தின் மீதான ஈராக்கின் போரானது,இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.ஏனெனில் இவ்விரு நாடுகளிலிருந்துதான்,பெட்ரோல்,டீசல் போன்ற எண்ணெய்தேவைகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுவந்தது.

ஒரு பேரல் எண்ணையை 15 அமெரிக்க டாலருக்கு இறக்குமதி செய்த நிலையில்,இப்போர்சூழல் கட்டத்தில் 35 அமெரிக்க டாலராக விலையேற்றம் பெற்றது.இதன் தொடர்ச்சியானது அத்யாவசியத் தேவைகளின் விலையிலும் ஏற்றம் பெற்றது.இந்த சூழலில் இந்தியாவின் நிதி திவால் நிலையை சீராக்க,கையிருப்பில் உள்ள 67 டன் தங்கத்தை பன்னாட்டு நிதியகத்திடம் அடமானம் வைத்து,சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாகப் பெற்றது இந்திய அரசு.அதற்கு கைமாறாக இந்திய சந்தை, இயற்கை வளத்தை  பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலுக்கு  திறந்துவிடப்பட்டது.

தீவிர உலகமய காலத்தில்,அதாவது 1980-90 களுக்கு பிறகு, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நகர்ப்புறம் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்தன.தானுந்து தொழிற்துறை,கணினித் துறை நிறுவனங்களின் வருகையானது வேகமான நகர் மயமாக்கலுக்கு அடித்தளம் அமைத்தது.இந்தியாவில் பெங்களூரு,சென்னை போன்ற நகரங்கள் அதிவேக வளர்ச்சிப் பெற்றன.நகரங்களில் மக்கள் திரள் குவிந்தனர்.மக்கள் திரள் எண்ணிக்கை அதிகரப்பை ஒட்டி நீர்பயன்பாடு,மின்சாரப் பயன்பாடும்,வாகனப் பயன்பாடும் அதிகரித்தன.இதன் காரணமாக  புதைபடிம எரிபொருள் ஆற்றல்கள் மீதான தேவையும்  அதிகரித்தன.இந்த பின்புலத்தில்தான் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் தேவையையும் அதை ஒட்டிய கொள்கை மாற்றங்களையும் நாம் பொறுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தியாவின் எண்ணெய் எரிவாயு துறையை மூன்று கட்டமாக வகைப்படுத்தலாம்

1947-69 :பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் எண்ணெய் வளம் 

இந்தியாவின் அரசியல் சுதந்த்திரத்திற்கு முன்புவரை,இங்கிலாந்து எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவின் எண்ணெய் எரிவாயு வளங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.அரசியல் விடுதலைக்கு பிந்தைய சூழலில்,இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் இதை கையப்படுத்தின.இந்திய அரசு துறை நிறுவனமான இந்திய எண்ணெய் மற்றும் எரிவாவு நிறுவனமானது சோவியத் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு எண்ணெய் வளத்தும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

1970-1989: சோவியத் சார்பிலிருந்து அமெரிக்க சார்பிற்கு மாறிச் செல்கிற கட்டம்

70 களின் தொடக்கத்தில் இந்தியாவில் செயல்பட்டுவந்து பர்மா,ஷெல் மற்றும் பிரிட்டீஷ் எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.இந்திய பொதுத்துறை நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எண்ணெய் வளத்தை மேலாண்மை செய்யலாம் என்ற பர்மா,ஷெல் நிறுவனங்களின் யோசனையை அரசு ஏற்கவில்லை.அதேவேளையில் இந்திய கடல்வெளியில் கண்டுபிடிக்காமல் இருந்த எண்ணெய்-எரிவாவு வளங்களை கண்டறிகிறப் பணிகளை   அமெரிக்க நிறுவனங்களின் கைகளுக்கு வழங்கப்பட்டது.

1974 இல் இந்திய எண்ணெய் எரிவாவு நிறுவனமனாது,Natamas Carlsburg என்ற அமெரிக்க நிறுவனத்துடன் வங்காள விரிகுடாவில் எண்ணெய் எரிவாவு கண்டறிவதற்கான ஒப்பந்தம் போட்டது. இதேபோல குஜராத்தின் கட்ச் பகுதியில் எண்ணெய் கண்டறிவதற்கு Readings and Bates என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய எண்ணெய் எரிவாவு நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.இந்த ஒப்பந்தங்களில் 60 விழுக்காட்டுப் பங்கை அமெரிக்கா நிருனங்களிடம் இருந்தது.எடுக்கிற எண்ணெய் வளத்தில் 65 விழுக்காடு இந்திய எண்ணெய் எரிவாவு நிறுவனத்திற்கு வழங்கவேண்டும்.

இவ்வாறாக மேற்படி கூட்டுப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடக 80 களில் எண்ணெய் எரிவாவு எடுக்கிற பணியானது  பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த காலகட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு இந்திய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கட்டியது.

ஆக,இந்த கட்டத்தில்,கடல்வெளியில் எண்ணெய் எரிவாயு கண்டறிகிற பொறுப்பை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றிருந்தன.நிலப்பரப்பில் எண்ணெய் எரிவாயு கண்டறிகிற பொறுப்பை(அந்நிய  தொழில்நுட்ப உதவியுடன்) இந்திய பொதுத்துறை நிறுவனமும் ஈடுபட்டு வந்தன.

எண்ணெய் எரிவாவு அகழ்ந்தெடுக்கிற பணியை இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமும்(ONGC),இந்திய எண்ணெய் நிறுவனமும்(Oil India) மேற்கொண்டு வந்தது.எண்ணெய் சுத்திகரிப்பு பணியை சென்னை பெட்ரோலியம்(CPCL),பாரத் பெட்ரோலியம்(BPCL),ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்(HPCL) போன்ற பொதுத்துறை  நிறுவனங்களும்,ரிலையன்ஸ்(RIL) போன்ற தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வந்தன.

1990 க்கு பிந்தைய கட்டம்:உலகமயம் தனியாரமய கட்டம்

இவ்வாறாக இருந்த சூழலில்,90 களில் நடைமுறைக்கு வந்த தனியார்மய முதலீடுகள் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது.என்ரான் எண்ணெய் எரிவாயு நிறுவனம்,வீடியோக்கான் பெட்ரோலியம் நிறுவனம்,ராவா நிறுவனம்,ஷெல் என உள்நாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் எண்ணெய் எரிவாவு துறையில் நுழையத் தொடங்கியது.எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாவுக்களை கண்டறிவது மற்றும் அகழ்ந்தெடுக்கிற திட்டங்களை உருவாக்குவதற்கும்,திட்டத்திற்கு ஒப்பந்தம் கோருவதற்கும்,மேற்பார்வை செலுத்துவதற்கும்,கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கும் ஹைட்ரோ கார்பன் இயக்குனரகம் 1993 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.தனியார் நிறுவனங்களுடான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு,இந்திய எண்ணெய் மற்றும் எரிவாவு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டன.புதிய எண்ணெய் எடுப்பு உரிமைக் கொள்கை(NELP)விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.ராயல்டி வழங்குவது,வரிச் சலுகைகள் அதிகரிக்கப்பட்டன,சந்தை விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்கிற உரிமை வழங்கப்பட்டன.


3

எண்ணெய் வளமும் தமிழகமும்

தமிழகத்தில்,எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கிற பணியிலும் எண்ணெய் சுத்திகரிப்பு பணியிலும்  ஈடுப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் காவேரி டெல்ட்டா பகுதிகளில் மட்டும் சுமார் 28 இடங்களில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டு சில இடங்களின் எண்ணெய் எடுக்கிற பணிகளும் நடைபெற்றுவருகிறன.குறிப்பாக காரைக்கால் அருகில் நரிமணம் மற்றும் சென்னையில் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவி உள்ளன.

இவைபோக சில ஆண்டுகளுக்கு முன்பாக  சுமார் ரூ. 18,000  கோடி செலவில் நாகார்ஜூனா எண்ணெய் நிறுவனமானது பிரம்மாண்ட சுத்திகரிப்பு ஆலையை கடலூரில்நிறுவியுள்ளது.

மேலும் காவிரிப்படுகைகளில் தொடர்ந்து எண்ணை வளங்களை தேடும்பணி பணிகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.தற்போது சுமார் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் காவேரிப் படுகையில் எண்ணை படிவுகள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவை போக தமிழகத்திற்கும் அந்தாமனுக்கும் இடைப்பட்ட வங்காள விரிகுடா கடலின் அடியில் எண்ணெய் தேடுகிற பணிகளும் நடைபெற்றுவருகிறது.

4
மேக் இன் இந்தியா:சுரண்டலில் திறவுகோள்

இந்தியாவின் எண்ணெய் இயற்கை எரிவாவு வளக் கையிருப்பில்

635 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) எண்ணெய் வளம் உள்ளது.

9.8 TCF(Trillion cubic feet) மீத்தேன் உள்ளது.

96 TCF ஷெல் வாயு உள்ளது

உலகளவில் எண்ணெய் எரிவாவு பயன்பாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தில உள்ளது.ஆண்டுக்கு இதன் தேவை 3.2 விழுக்காடிற்கு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.இந்த சூழலில்,இருப்பில் உள்ள வளங்களை தோண்டி எடுப்பது,சுத்திகரித்து சந்தைப் படுத்துவது என எண்ணெய் எரிவாவு சந்தையை முழுவதும் 100 விழுக்காடு அந்நிய முதலீடிற்கு இந்திய அரசு திறந்துவிட்டுள்ளது.மேக் இன் இந்தியா என்ற முழக்கத்தின் கீழ் இவ்வாறு இயற்கை வளம் சந்தைப்படுத்தப்படுகிறது.

தற்போது இந்தியாவின் உள்நாட்டு எண்ணெய் தேவையை 80 விழுக்காட்டு இறக்குமதியை சார்ந்தே உள்ள நிலையில்,இருப்பில் உள்ள வளங்களை அந்நிய நிறுவனங்களுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் திறந்துவிடுவதற்கு ஏற்ப கொள்கை மாற்றத் தளர்வுகளை மேக் இன் இந்தியா முழக்கத்தின் கீழ் இந்திய அரசு மேற்கொண்டுவருகிறது.
5

ஹைட்ரோ கார்பன் திட்டம்

நீர்கரிம வாயுக்கள் (Hydrocarbon gases)  என்பது பூமியின் அடியில் இருந்து வெளியாகும் இயற்கை எரிவாயுக்களான மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு , ஆக்சிஜன் , நைட்ரஜன் , ஹைட்ரஜன் சல்பைடு அனைத்தும் உள்ளடக்கியுள்ள  வாயுக்கலவைக்கான பொதுப் பெயர்.பயன்பாட்டைப் பொறுத்துப் இந்த வாயுக்களை பிரித்துக் கொள்ளலாம்.ஆக,மீத்தேன்,இயற்கை எரிவாயு எடுப்புப் பணிகளின் விரிவாக்கப்பட்ட மறுவருகைதான் இத்திட்டம் என்பது தெளிவு.

2020 ஆண்டுக்குள்,எண்ணெய் எரிவாயு இறக்குமதியை பத்து விழுக்காட்டிற்கு குறைக்கவேண்டும் என்ற இந்திய அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப கடந்த 2015 ஆம்ஆண்டில் சிறு எண்ணெய் வயல்Discovered Small Field(DSF)கொள்கை உருவாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன்  எடுப்பு உரிமைக் கொள்கை(HELP)விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டது.அதாவது எண்ணெய் எடுப்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.எண்ணெய் எடுப்பு நிறுவனங்களுக்கு சுதந்திரமாக விலை நிர்ணயம் செய்துக் கொள்கிற உரிமை வழங்கப்பட்டன,அதன் விருப்பம் போல சந்தைப்படுத்தலும் செய்துகொள்ளலாம்,முன்பண வைப்புத் தொகை கட்டவேண்டும் போன்ற விதிமுறைகள் நீக்கப்பட்டன.இந்த நடைமுறை அனைத்தையும்  அரசின் எண்ணெய் துறை அமைச்சகத்தின் கீழ்  ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் (Directorate General of Hydrocarbons) மேற்கொள்கிறது.

நாம் மேற்குறிப்பிட்டபடி சிறு எண்ணெய் வயல்Discovered Small Field(DSF)கொள்கை திருத்தத்தின் கீழ் இத்திட்டம் செயல்முறைக்கு வருகிறது.பெரும் எண்ணெய் வயல்களின் எண்ணெய் எரிவாயுவை எடுப்பதைப் போல சிறு எண்ணெய் வயல்களிலும் எண்ணெய் இயற்கை எரிவாயுவை எடுப்பதை ஊக்குவிக்கிற கொள்கை திட்ட மாற்றத்தை இதன் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வருகிற முயற்சியாகும்.

இந்த சூழலில் இந்திய அரசுக்கு சொந்தமான இந்திய எண்ணெய் நிறுவனம் கண்டறிந்த சிறு எண்ணெய் வயல்களில்எண்ணெய்எரிவாயுவை எடுக்கிற திட்டத்திற்கு(DSF) ஒப்பந்தம் கோரப்பட்டு,அதில் முதலிடம் வந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படவேண்டும் என்ற இயக்குனரகத்தின் பரிந்துரைக்கு கடந்த 15.2.2017 அன்று அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
இது தொடர்பான பத்திரிகை செய்தியும் ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் வெளியுட்டுள்ளதுhttp://dghindia.gov.in//assets/downloads/58a463707a613DSF_Press_Release_150217.pdf.இதன் மூலமாகத்தான் நாம் அனைவரும் இச்செய்தியை அறியப்பெறுகிறோம்.அதன் சாராம்சம் வருமாறு,

இந்தியா முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டதிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.இதில் 23 நிலப்பகுதியிலும்,8 கடல்பகுதியிலும் வருகிறது.
அசாம் மாநிலத்தில்-8,குஜராத் மாநிலத்தில் – 5,ஆந்திர மாநிலதில்- 4,ராஜஸ்தான் மாநிலத்தில்-2,தமிழகத்தில் -2மத்திய பிரதேசம் -1மும்பை -6கட்ச் -1கோதாவரி படுகை -1

இப்பணிக்கு 22 நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளது.22 நிறுவனங்களின் 4 நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனம் மீதமுள்ளவை(18) தனியார் நிறுவனம் ஆகும்.இந்த 18தனியார் நிறுவனங்களின் 15 நிறுவனங்கள் தற்போதுதான் முதல் முறையாக இப்பணியை மேற்கொள்ளவுள்ளார்கள்.அவை முறையேஇத்திட்டத்தால் வரவுள்ள மொத்த வருமானம் சுமார் 46,400 கோடி ரூபாய்.இதில் அரசுக்கு வரவேண்டிய ராயல்டி மற்றும் இதர பங்குகள் சுமார் 14,300 கோடி ரூபாய் என மதிப்பிடப் பட்டுள்ளது.

இன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் "ஹைட்ரோ கார்பன்" எனும் "நீர்கரிம வாயுக்கள்" எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே ,மத்தியில் நடக்கும் கொடுங்கோலாட்சி மூலம் அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் Gem Laboratory Pvt.Ltd.
இதன் நிறுவனர் காலஞ்சென்ற பாஜக எம்பி கெளதர மல்லிகார்ஜுனப்பாவிற்கு சொந்தமானது எனச் சொல்லப்படுகிறது.

திட்டத்தின் பாதக அம்சங்கள்:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியிலும் காரைக்காலிலும்  ஹைட்ரோகார்பன் எரிவாயுவை எடுக்கிற பணியை தனியார் நிறுவனங்களுக்கு  மத்திய அரசு வழங்கியுள்ளது.வழக்கம்போல இத்திட்டம் தொடர்பான மக்களின் ஐயங்களை விளக்குவதற்கு எந்த அரசும் முன்வரவில்லை.
தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அக்கரையை போபால் முதல் ஸ்டெர்லைட் வரை வரலாற்றில் கண்டுவருகிறோம்.ஆபத்து காலத்தில் அரசின் பேரிடர் மேலாண்மைக்கு வாளி தொழில்நுட்பத்தை நம்பியுள்ள அரசுப் பொறியமைவை எந்த வகையில் தமிழக மக்கள் நம்ப இயலும்?
விவசாயம் பொய்த்து வருகிற நிலையில்,தமிழகத்தில் விவசாயத் தற்கொலைகள் வேகமாக அதிகரித்துவருகிற நிலையில் மீத்தேன்,சேல் தற்போது ஹைட்ரோகார்பன் என பாசனப் பகுதிகளுக்கு நாசம் விளைவிக்கிற  தொழில்துறை முதலீடுகளை அரசு முடுக்கிவருகிறது.

ஆக, தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்திற்காவும்,நுகர்வு வெறிக்காக தமிழகத்தின் எண்ணெய் எரிவாயு  வளங்கள் சுரண்டப்படுவதை கொள்ளையிடப்படுவதை நாம் அனுமதிக்கஇயலாது.தேவைக்கு மீறியதாக, அளப்பரிய அளவில் மேற்கொள்கிற எண்ணெய் வள சுரண்டளானது நிலவியல் பாதிப்பு,நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு,வேளாண் நில பாதிப்புகள் என பல விளைவுகளை ஏற்படுதிவருவதை நாம் ஆதரபூர்வமாக கண்டுவருகிறோம்.உதராணமாக ஈகுவடார் நாட்டில்,அமேசான் காடுகளில்  ஹைட்ரோகார்பன் எரிவாயு  எடுப்பால் ஏற்பட்டு வருகிற சுற்றுச்சூழல் அழிவுகள்,அப்பகுதி மக்கள் எதிர்கொள்கிற இடர்பாடுகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுவருகிறது.

சர்வதேச,உள்ளூர் முதலாளித்துவ நலன் சார்பில்,காட்டுமிராண்டித்தனமான வகையில் மேற்கொள்ளப்பட்டுவருகிற இவ்வழிப் பாணியிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர்களுக்கு எடுபிடியாக வேலை செய்கிற இவ்வரசின் கொள்கைகளையும்   முற்றாக புறக்கணிப்போம்.ஏனெனில்,நிலவுகிற அரசியல் பொருளாதார கொள்கைகளும் அதன் செயல்பூர்வமும் சமூகத்தின்  ஒரு பிரிவினருக்கான நலனாக  செயல்படுகிறபோது,அது  அரசியல் பொருளாதார அசமத்துவதத்திற்கே இட்டுச்செல்லும் என்பதை நாமிங்கே உறுதியாக கூறமுடியும். ஆளும்வர்க்க நலன்களுக்காக அடித்தள மக்களின் நலனை இயற்கை வளத்தை பறிக்கிற சகதிகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னகர்த்துவோம்.