Pages

Tuesday 30 May 2023

தமிழக அரசே, புதிய மணல் குவாரிகளுக்கான அனுமதியை ரத்து செய்! ஆறுகளின் அழிவை சட்டப்பூர்வமாக்கதே!


 மேற்குத் தொடர்ச்சி மலையான குடகில் உருவாகிற காவிரி, மைசூர், மாண்டியா, வழியாக தமிழகத்தில் நுழைந்து  தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி வழியாக கல்லனைக்கு வந்து சேர்ந்து,கல்லணை அணைக்கட்டில் கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, புது ஆறு என நான்காகப் பிரிந்து, பூம்புகாரில் காவிரியாக  கடலில் கலக்கிறது.கல்லணை முதல் புகார் வரையிலும் காவிரிக் கரையோரம் வளைந்து நெளிந்து நீண்டு செல்கிற பூம்புகார் -கல்லணை சாலை சிலப்பதிகார இலக்கியத்தால் புகழ் பெற்றது. காவிரியின் நீர் வளத்தால் செழிப்புற்றுள்ள இப்பாதையில்தான் கோவலனும் கண்ணகியம் பூம்புகாரில் இருந்து மதுரைக்கு  நடந்து சென்றதாக  சிலம்பு கூறுகிறது. இந்த சாலையின் இரு மருங்கிலும் தென்னை தேக்கு வாழை பயிரடப்பட்டு பார்ப்பதற்கு பச்சைப் போர்வை போர்த்தியதுபோல ரம்மியமாக காட்சியளிக்கும்.

“பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக்

காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி”

என காவிரிக் கரையின் சோலையிலே மயில்களும் குயில்களும் ஆடிப்பாட,மகளிர் காவிரியம்மனை வழிபடுவதாக  இளங்கோவடிகள் அன்றைய காட்சியை சித்திரம் போல வார்த்தைகளிலே வரைந்து காட்டுகிறார்.இவ்வாறு சங்க இலக்கியப் பெருமையும் சூழல் வளமும் மிக்க காவிரி ஆற்றின் கரைகளிலே இன்று காவிரி ஆற்றின் மணலை அள்ளிச் செல்கிற மணல் லாரிகள் வரிசைக் கட்டிச் செல்கின்றன.கோவலனும் கண்ணகியும் காவிரிக் கரையின் வனப்பை கண்டு ரசித்துச் சென்ற  பூம்புகார் கல்லணை சாலை இன்று ஆற்று மணல் கொள்ளையால் புழுதி படர்ந்து மயான சாலையாக காட்சியளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தபின் ஆற்று மணல் அள்ளுவதற்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய இடங்களில் மணல் அள்ளுவதற்கான  அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கிறது.தமிழகத்தில் காவிரி தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில்  25 இடங்களில் புதிதாக  மணல் குவாரிகள் திறக்க தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் கனரக இயந்திரங்களின் துணைக்கொண்டு மணல் அள்ளுவதற்கு அனுமதித்திருப்பது குவாரி மாபியாக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதில் 11 குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் மட்டுமே வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.திமுக அரசின் இந்த முடிவுக்கு சூற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக அதிமுக ஆட்சியில் ஆற்று மணலுக்கு மாற்றாக 'எம் சாண்ட்'  பயன்படுத்தப்பட்டு வந்தன.தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆற்று மணல் எடுப்பதற்கு அனுமதிப்பது தற்கொலைக்கு சமமான முடிவாகும்.தற்போது தமிழக ஆறுகளில் சுமார் 7.51 லட்சம் யூனிட் மணல் அள்ள, தனியார் நிறுவனங்களுக்கு கனிமவளத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக ஆற்று மணலை அள்ளுவதற்கு அனுமதி வழங்குவதாக தமிழக அரசு கூறுவது அறிவுக்கு உகந்த நடவடிக்கையாக இல்லை.புதிய மணல் குவாரி அனுமதியானது நமது ஆற்றின் வள அழிவிற்கும் அளப்பரிய ஊழலுக்குமே  வழி செய்கிறது.
கட்டுப்பாடற்ற மணல் கொள்ளையும் ஊழலும்

அதிகரிக்கின்ற நகரமயமாக்கல், உட்கட்டுமான தேவையை முடிக்கிவருகிறது.இது கட்டுமானத்துறையில்  மணல் தேவை அதிகரிப்பிற்கு இட்டுச் செல்கிறது.காட்டுமானத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்கவும் பற்றாக்குறையை சமாளிக்கவும் அரசின் வருவாயை பெருக்கவும் ஆற்று மணல் குவாரிகளைத் திறப்பதாக அரசு கூறுகிறது.ஆனால் நடைமுறையில் அனுமதிக்கிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பல லட்சம் லோடுகள் முறைகேடாக மணல் அள்ளப்படுவதும் முறைகேடாக வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் சர்வ சாதரணமாக நடைபெறுகிறது.

தற்போது கல்லணையில் மணல் அள்ளுவதை தடை செய்யவேண்டும் என்றும்,கல்லணைக்குள் முறைகேடாக நடைபெறுகிற மணல் கடத்தலை தடுக்கவேண்டுமென்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தஞ்சாவூர் மாவட்டதைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு ஜீவகுமார் என்பவர் பொது நல மனு ஒன்றை  தாக்கல் செய்திருந்தார்.இவ்வழக்கு விசாரணையின்போது,கல்லணையில் குவாரி ஏதும் அமைக்கப்படவில்லை எனவும்,குடிநீர் குழாய் மட்டுமே பதித்துவருவதாக அரசு தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது.அரசின் பதிலை பிரமாணப்  பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அரசின் இந்த பதிலில்  எந்தளவிற்கு உண்மையுள்ளது என்பதே அரசுக்கே வெளிச்சம்.இது போன்று ஆற்றுமணல் கொள்ளை முறைகேடுகளுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்துவருவதை கவனிக்கையில் மணல் கொள்ளையை அரசே சட்டபூர்வமாக்கிவிட்டபோலத் தோன்றுகிறது.

இந்த முறைகேடுகளுக்கு அதிகாரி வர்க்கம் முதலாக அரசியல்வாதிகள் வரை உடந்தையாக இருப்பதை யாவரும் அறிவர்.மணல் குவாரி முறைகேட்டில் ஈடுபடுகிற நபர்களின்  சங்கிலித் தொடர் உறவுகள் பணத்தால் இறுக்கமாக கட்டப்பட்டுள்ளன.பகுதி  வி.ஏ.ஓ தொடங்கி  தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி, கனிமவளத் துறை தலைமை அதிகாரி வரை அதிகார மட்டத்திலும் அரசியல் அதிகார மட்டத்திலும்  பல அடுக்குகளில் கமிசன் போகிறது.திடீர் பணக்கார வர்க்கமும்,பணக்கார்கள் பெரும் பணக்கார்கள் ஆவதும் சாதரணமாக நடக்கிறது.

ஆற்றுப்படுகையில் மூன்றடி ஆழத்துக்கு மட்டுமே மணல் அல்ல வேண்டும் என அரசு விதிமுறைகள் வகுத்திருந்தாலும்,முப்பது அடி ஆழம் வரை மணல் எடுப்பது எழுதப்படாத விதிமுறையாக உள்ளது.இந்த முறைகேடுகளுக்கு எதிராக மக்கள் யாரேனும் குரல் கொடுத்தால்,அவர்களின் குரல்வளையை நெரிப்பதற்கு குவாரி மாபியா கும்பல் தயங்குவதில்லை.அண்மையில்  தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில்,கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் அவர்கள் ஆற்று மணல் கொள்ளையை தடுப்பதற்கு முயற்சித்ததால் கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியது.இது அண்மைய உதாரணம் மட்டுமே. ஆற்று மணல் மாபியா கும்பல்களின் முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை அச்சுறுத்தும் நோக்கில்  இக்கொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அரசோ இதை கொள்கை பிரச்சனையாக பார்க்காமல் சட்ட ஒழுங்கு சிக்கலாக மேம்போக்காக அணுகி நீர்த்துப்போக வைக்கின்றன.

ஆற்று மணல் இயற்கையின் கொடை.அதை மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது.ஆற்று நீரை தனது மடியில் பஞ்சு போல தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையவிடாமல் பாதுகாப்பதில் ஆற்று மணலின் பங்கு முதன்மையானது.இந்த மண்ணைத் தோண்டி அகற்றிவிட்டால் ,நீர் சேமிப்பு அமைப்பே அழிந்துவிடும்.இறுதியில் ஆறுகளின் மரணத்திற்கு வித்திடும்.விவசாயம் பாழாகும்.சோலைவனம் பாலைவனம் ஆகும்.குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.பிறகு செயற்கையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டு  பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் விரையம் செய்யப்படும்.

தேவை மாற்று கொள்கை முடிவு

மூச்சுக்கு முன்னூறு முறை திராவிட மாடல் அரசு,சமூக நீதி அரசு எனக் மேடை தோறும் பேசிவருகிற திமுக கட்சித் தலைவர்கள்,  சூழலியல் நீதி பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.சமூக நீதியோடு சூழலியல் நீதியும் இணைந்தால் மட்டுமே நீடித்த வளமிக்க வாழ்வு சாத்தியமாகும்.இதைக் கருத்தில் கொண்டே வள்ளுவர் ஒரு நாட்டின் அரணாக போர்படைகளை குறிக்காமல் இயற்கை அரணைக் குறிப்பிடுகிறார்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்.

(குறள் எண் 742)

ஆற்று மணலை கட்டுமானப் பண்டமாக, சரக்காக பார்க்கிற கண்ணோட்டத்தை முதலில் அரசு கைவிடவேண்டும். கட்டுமானத்திற்கு மணலையோ பிற இயற்கை பொருட்களையோ பயன்படுத்தாமல் லாரி பேக்கர் போன்ற சூழலியாளர்கள் கூறுகிற முறையிலான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்த ஊக்கப்படுத்தவேண்டும்.ஆற்று மணல் என்பது ஆற்றுப்படுகை அமைப்பின் கண்ணியென பார்க்கவேண்டும்.இந்த மணல் உருவாவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பதையும் அதை நாம் ஆய்வகங்களில் உருவாக்க முடியாது என்பதையும் அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.ஆற்று மணல் ஒன்றும் அல்ல அல்ல கிடைக்கிற அட்சயப் பாத்திரம் அல்ல என்பதையும் ஏதோ ஒரு கட்டத்தில் ஆற்று மணல் அளவும் வரம்பிற்குட்பட்டவை என அரசு விளங்கிக்கொள்ளவேண்டும்.பொருநை ,வைகை என பழங்கால நதிக்கரை நாகரிகத்தை அகழாய்வு செய்து அருங்காட்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிற முதல்வர்,சமகால நதிக்கரை நாகரிகத்தை அழிக்காமல் காக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

 நன்றி:ஜனசக்தி 

 

Friday 19 May 2023

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்ட மசோதா 2023-கண்ணை விற்று சித்திரம் வாங்குகிற திமுக அரசு..

 
கடந்த 21.04.2023 அன்று எட்டு மணி நேர வேலை நேரத்தை பனிரெண்டு மணி நேரமாக உயர்த்துகிற 2023 தொழிற்சாலைகள் சட்டத் திருத்த தீர்மானத்தை கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி திமுக அரசு சட்டமன்றதில் நிறைவேற்றியது.இம்முடிவிற்கு எதிராக தொழிற்சங்கங்கள் தரப்பிலிருந்தும் எதிர்க்கட்சிகள்,கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்தும் கடும் கண்டனங்கள் மற்றும் போராட்ட அறிவிப்புகள் எழுந்ததை  அடுத்து தற்காலிகமாக இந்த தீர்மானத்தை நிறுத்தி வைப்பதாக திமுக அரசு அறிவித்தது.தொழிலாளர் நலனை பறிக்கிற,தொழிலாளர் உழைப்புச் சுரண்டலை சட்டப்பூர்வமாக்குகிற கருப்பு சட்டமானது நிறுத்தி வைக்கப்பட்டதும் திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி வழங்குகிற மதுபானச் சட்டத் திருத்தம்  பின்வாங்கப்பட்டதும் தற்காலிக வெற்றியாக ஒரு புறம் பேசப்பட்டாலும் அதே  நாளில் தமிழக நீர்வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிற  நில ஒருங்கிணைப்பு சட்டமொன்றை திமுக அரசு நிறைவேற்றியது அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போனதுதான் வேதனை.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்ட மசோதா:

பெரும் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துகிற முறைகளில் ஏற்படுகிற கால தாமதங்களை தவிர்க்கும் வகையில் நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்ட மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல எவ்வாறு தொழிற்சாலை திருத்த சட்டம் மற்றும் மதுபானச் சட்டத்தை எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலமாக திமுக அரசு நிறைவேற்றியதோ அதேபோலத்தான் நில ஒருங்கினைப்புச் சட்டமும் எந்தவிதம் விவாதமும் இல்லாமல் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள், தற்போது நடைமுறையின்படி அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், பரிமாற்றம், உரிமை மாற்றம், ஒப்படைப்பு, குத்தகை முறைகள் போன்றவற்றை இரு நூற்றாண்டு காலமாக பல்வேறு கட்ட நிர்வாக  ஆணைகள் மற்றும் தீர்ப்புகள் மூலமாக  உருவாக்கப் பெற்றவையாக உள்ளன.நிலமானது உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆகவே பல்வேறு தீர்ப்புகள் நிர்வாக ஆணைகள்,உள்ளாட்சி சட்ட நடைமுறைகளால் நிலத்தை கையகப்படுத்துவதற்கு பெரும்  நேர விரையமும் பண விரையமும்  ஏற்படுகிறது எனக் கூறுகிறார்.இதை ஒழுங்குபடுத்துவதற்கும் பெரும் திட்டங்களுக்கு விரைவாக நிலத்தை கையகப்பபடுத்துவதற்கும் இந்த சட்டம் வகை செய்கிறது என்கிறார்.அதாவது இந்த சட்டத்தின்படி  100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து அந்த இடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம்.ஒருவேளை இந்த நூறு ஏக்கருக்குள் நீர்நிலைகள் இருந்தால் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உத்தரவாதம் கொடுத்துவிட்டு நிலத்தை பயன்படுத்திக் கொள்ளாலாம் என்பதே சட்டத்தின் சாரம்.

நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகள்:

முதலில் இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டமானது நடைமுறையில் உள்ள நீர்நிலைகள் பாதுகாப்பு சட்டத்தையும் நில கையகப்படுத்தும் சட்டத்தையும் செல்லாதவையாக்கிவிடும்.உதாரணமாக, தற்போது நடைமுறையில் சுடுகாடு,நீர்நிலைகள்,மேய்ச்சல் நிலம் மற்றும் தடையானைச் சட்டம்(தோப்பு உள்ளிட்டவை) போன்றவை நிலங்களின் எல்லைகளுக்குள் வந்தால்,அதற்கு வருவாய்த் துறையின் பல்வேறு அனுமதியை பெற வேண்டும்.ஒரு ஏக்கர் மேய்ச்சல் நிலம் கையப்படுத்தப்பட்டால் அதற்கு ஈடு செய்யும் வகையில் இரண்டு ஏக்கர் மேய்ச்சல் நிலம் வழங்க வேண்டும் போன்ற நடைமுறைகள் உள்ளன.

தற்போதைய சட்டமானது, மேற்கூறிய சட்டங்களை வெற்று காகிதமாக்கி விடும்.உதாரணமாக,ஒரு தனியார் நிறுவனம் நூறு ஏக்கருக்கு ஒரு திட்டத்தை முன்மொழிவதாக வைத்துக் கொள்வோம்.தற்போது அரசு அறிவித்துள்ள பரந்தூர் வானூர்தி நிலைய திட்டத்தையே எடுத்துக் கொள்வோம்.திட்டம் வருகிற பகுதிகளில்  விளை நிலங்களும்,பாசனத்திற்கோ குடிநீருக்கோ பயன்படும் நீர்நிலைகளும் இந்நிலத்திற்குள் வந்தால்.இந்த “சிறப்பு” சட்டத்தின்படி இத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கவேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு(water storage) குறைக்கப்படமாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் நீரோட்டமானது குறைக்கப்படாது என்கிற உறுதி கூறினால் போதும்.இவ்வாறு உறுதி கூறப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அனுப்புவார்.அரசு நிபுணர் குழுவிற்கு அனுப்பும்.நிபுணர் குழு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும்.அரசின் ஆதரவு நிபுணர் குழுக்குள் பெரும் தனியார் நிறுவனங்களின் திட்டங்களுக்கு  ஏற்றவாறு ஒப்புதல் வழங்கும் என்பது இங்கே விளக்கத் தேவையில்லை.

இங்கு கொடுமை என்னவென்றால் நீர்நிலைகளை சுற்றி மரங்களை அகற்றி  கான்க்ரீட் கட்டுமானங்களை எழுப்பிவிட்டால் நீர் நிலைகளை எவ்வாறு காப்பாற்ற முடியும்? என சிந்திக்காததே.நீர்நிலைகள் நிலத்தோடு பிணைந்த ஒரு சூழல் அமைவு.அந்த அமைவின் கண்ணிகளை அகற்றி விட்டால் இறுதியில் நீர்நிலைகள் தானகவே அழிந்துவிடும்.

முழுவதும் வணிக நோக்கில்,கார்பரேட் முதலாளிகளுக்கு கஷ்டமில்லாமல் நிலத்தையும் நீர்நிலைகளையும் வாரிக் கொடுப்பதற்கே இந்த சட்டத்தை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

இது ஏதோ சுற்றுசூழல்வாதிகள் மட்டுமே எதிர்க்கவேண்டிய, பேச வேண்டிய விஷயமில்லை என்பதை நாமிங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.காலநிலை மாற்ற நெருக்கடியால் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகிற நிலையில் கண்ணை விற்று சித்திரம் வாங்குகிற கதையாக,இருக்கின்ற சூழல் வளங்களை அழித்துவிட்டு எந்த நீரை குடிக்க போகிறோம்? எந்த காற்றை சுவாசிக்கபோகிறோம்? எந்த நிலத்தில் வசிக்கப் போகிறோம்? என்பதை சிந்திக்கவேண்டும்.கடந்த கால படிப்பினைகளை புறந்தள்ளுகிற அரசு:

கடந்த காலத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் இருந்துமே தமிழகமெங்கும் பல்வேறு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரமே  நீர்நிலைகளை கொலை செய்து உருவாக்கப்பட்டது  என்பதுதான் வேதனையான உண்மை.தற்போது சென்னையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் ஏரிகள் மீதும் வாய்க்கால்கள் மீதுதான் கட்டப்பட்டுள்ளன.ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் பெயர் போன தமிழகத்தில் காசு கொடுத்தால் அனுமதி கிடைத்துவிடும் என்பது பச்சிளம் குழந்தைகளும் அறியும்.இவ்வாறு பல்வேறு அரசியல்வாதிகளுக்கும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் வழங்கி நீர்நிலைகளை அழித்து உருவாக்கப்பட்ட நகரமானது அதனது பின்விளைவுகளை எதிர்கொள்ளாமல் இல்லை.

நியூட்டனின் மூன்றாம் விதியை நாமிங்கு சூழலுக்கும் பொருத்தலாம்.நாம் சூழல் அமைவை அழித்தால்,மீண்டும் இயற்கையிடமிருந்து எதிர்விளைவு வரும்  என்பதை சென்னையை சூழ்ந்த 2015 பெருவெள்ளமே மிகப்பெரும் சாட்சி.மாநகரின் நீர்நிலை ஆக்கிரமிப்புகளே மழை வெள்ளத்திற்கு போக்கிடம் இல்லாமல் சாலைகளையும் விமான நிலையங்களை,ரயில்நிலையங்களையும் குடியிருப்புகளையும் சூழ்ந்தன.

தற்போது கொண்டுவந்துள்ள நீர்நிலை கொலைச் சட்டத்தை பார்க்கும்போது,கடந்த காலத்திலிருந்து ஆளும் கட்சி எந்த படிப்பினையும் பெற்றதாக தெரியவில்லை.ஆகவே நடைமுறையில் சட்டங்கள் இருக்கும் போதே இந்த நிலைமை என்றால் தற்போது இந்த சட்டம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

தொழிலாளர் வேலை நேரத்தை அதிகரிக்கிற சட்டம்,நில ஒருங்கிணைப்பு சட்டம் ஆகியவற்றை திமுக அரசு அவசரம் அவசரமாக கொண்டு வருவதைக் பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்வது போல ஒரு மாயை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.ஆளுநர் எதிர்ப்பும் பாஜக எதிர்ப்பு மட்டுமே திராவிட மாடல் அரசா?அல்லது தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையும் நமது நீர்நிலை வளங்களையும் “முதலீட்டாளர்கள் நலன்” என்ற பெயரில் கார்பரேட்களுக்கு தாரை வார்ப்பதும் திராவிட மாடல் அரசா என்பது திமுக அரசிற்கே வெளிச்சம்!

நன்றி ஜனசக்தி 

காடழித்து மரம் வளர்ப்போம் -பாஜகவின் புதிய வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம்

 
அதானியின் பங்குச் சந்தை ஊழல் மீதான விசாரணை கோரி,நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகிற நிலையில்,சத்தமில்லாமல் இந்திய வனங்களை கார்பரேட்களுக்கு தாரை வார்க்கிற வகையிலே வனப்பாதுகாப்பு சட்டம்(1980)திருத்த வரைவை சுற்றுச்சூழல்,வன மற்றும் காலநிலைமாற்றத் துறை (MoEFCC), அமைச்சர்  பூபேந்தர் யாதவ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

வனப் பாதுகாப்பு சட்டம் 1980 இல் திருத்தம் கொண்டு வருகிற புதிய வனப்பாதுகாப்பு சட்டம் 2023 மசோதாவானது முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷை தலைவராகக் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பாமல்,நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதும் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

புதிய திருத்த வரைவில் வனப் பகுதிகுறித்து நடைமுறையில் உள்ள வரையறையை  மாற்றியமைப்பதால், இனி எந்த வித அனுமதியும் கட்டுப்பாடும் இன்றி லட்சக்கணக்கான ஹெக்டர் காடுகளை வெட்டி தள்ளலாம்.காடு வளர்ப்பு என்ற பெயரில் தனியாருக்கு காட்டுப் பகுதிகளை தாரை வார்க்கலாம்.காட்டு நிலங்கள் இனி காடுகள் சாராத நிலங்களாக மாற்றப்படுவதால்,காடழிப்பு சட்டப்பூர்வ வடிவில் மேற்கொள்ளப்படும்!

புதிய சட்ட வரைவில்” பொருளாதார தேவை” க்காக காட்டின் வளத்தை பயன்படுத்துவது என்ற பொருளிலான வாசகங்கள் வருகிறது.யாரின் பொருளாதார தேவைக்காக காடு பயன்படப்போகிறது என்பதே இங்கு கேள்வி.

புதிய சட்ட வரைவின்படி சர்வதேச எல்லைகளின் இருந்து 100 கிமீ தூரம் வரையிலான வனப் பகுதிகளில் அரசின் பாதுகாப்பு நலனிற்காக எந்த வித அனுமதியும் இல்லாமல்  கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு(தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற வரையறையில்) விலக்கு வழங்கப்படுகிறது.மேலும்,ரயில் மற்றும் சாலை அருகாமை பகுதிகளில் இருந்து 10  ஹெக்டேர் காட்டு நிலங்களுக்கு கட்டுமானம் மேகொள்ள  விலக்கு அளிக்கப்படுகிறது.மேலும் காடுகளில் சுற்றுலா(சபாரி) செல்கிற பகுதிகளும் காடுகள் அல்ல என்ற வரையறைக்குள் கொண்டு வரப்படுகிறது.

முன்னதாக டிஎன் கோதவர்மன் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கொன்றின் உச்ச நீதிமன்ற தீர்ப்பில்(1996),காடு என்பதற்கான வரையறையை டிஷ்னரி விளக்கம் கொண்டு அணுகாமல் அரசின் ஆவணங்களின் எங்கெல்லாம் காடுகள் என்றுள்ளதோ அவை அனைத்துமே காடுகள்தான் எனக் கூறியது.அது தனியார் வசமோ அல்லது அரசின் வசமோ காடுகள் என்ற அரசின் ஆவணமே போதுமானது என்றது.

தற்போதைய சட்டத் திருத்தமானது மேற்கூறிய உச்ச நீதிமன்ற வரையறைகளை துடைத்தெறிந்துவிட்டது.மேலும் பழைய வனப் பாதுகாப்பு சட்டங்கள் வழங்கிய குறைந்தபட்ச வன மற்றும் பழங்குடிகள்  பாதுகாப்பு அம்சங்கள் ஒன்றுகூட மேற்கோள் காட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் எந்தவித அனுமதியும் இல்லாமல் காட்டுப் பகுதிகளை காடுகள் சாராத பகுதிகள் என்று கூறி பெரும் கார்ப்பரேட்களின் வணிக நலன்களுக்கு காட்டுப் பகுதிகளை திருப்பி விடுவதே இந்த திருத்தத்தின் நோக்கமாக உள்ளது.மறுபக்கம் காடழித்து மரம் வளர்ப்போம் என்கிற கதையாக காலநிலை மாற்ற சிக்கலுக்கு தீர்வு காண்பதாக செயற்கையான,போலியான காடு வளர்ப்பு திட்டங்களின் மூலமாக ஓரினப் பயிர்த் தோட்டங்களை வளர்த்து அதைக் காடு எனக் கூறப் போகிறார்கள்.

ஆக,பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை வணிகமயப்படுத்துவதற்கும் வனங்களில் பழங்குடிகளின் உரிமைகளை பறித்து அவர்களை வனங்களை விட்டு வெளியேற்றுவதற்குமே புதிய வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை ஆளும் பாஜக அரசு கொண்டு வருகிறது.

மேலும் இந்த சட்டத் திருத்த வரையறை யாவுமே பிராந்திய மொழிகளில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் வெளியிட்டும்,யாருமே பேசாத  சமஸ்கிருதத்தில் வலிந்து சில வார்த்தைகளை சேர்த்தும் தனது மொழித் திணிப்பு கொள்கையை  வெளிப்படுத்தியுள்ளது..

நன்றி -ஜனசக்தி .