Pages

Tuesday 1 March 2016

பாரீஸ் மாநாடு:பூவுலகிற்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகம்

அண்மையில்,பாரீசில் நடந்த முடிந்த ஐநாவின் காலநிலை மாநாடு குறித்து, வேடிக்கையாக கூறப்பட்ட வாசகம் இது,

“நாங்கள் ஒருபோதும் கடமையுணர்வுடன் செயல்பட மாட்டோம் என்பதைக் கடமையாகக் கொண்டுள்ளோம்;அதேவேலையில் நாங்கள் நல்லவர்களாகவும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டும்,ஒவ்வொராண்டும்,ஏன் காலம் பூராவும் இதேபோலக் கூடிப் பேசுவோம் என  உறுதியளிக்கிறோம்”

மிகப்பெரும் நாடகம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்தியுடன் பாரீசில் ஒன்றுகூடிய கனவான்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் களைந்து சென்றுவிட்டனர்.இப்போதும் போல எப்போதும் பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடுவோம் என தீர்மானம் போடுவதற்குத் தான் எத்தனை விளம்பரம்,எவ்வளவு செலவுகள்!

சரி பாரீசில் நடந்ததுதான் என்ன?இதுதான்-பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டு வீதத்தை தாமாகவே முன்வந்து கட்டுப்படுத்திக்கொள்கிறோம் என்ற அனைத்து நாடுகளின் உறுதிமொழிகளையும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன.
பாரீஸ் மாநாட்டில் எட்டப்பட்ட முடிவு குறித்து பி பி சி வெளியிட்ட செய்தியறிக்கை இது

1.     இந்நூற்றாண்டின் இரண்டாம் பாதிக்குள்ளாக(அதாவது 2100),பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் அதை உறிஞ்சிவதற்கு  இடையிலான சமநிலை எட்டப்படும்.

2.     புவியின் சராசரி வெப்பநிலை 2 பாகைக்கு மேல் உயராமல் இருப்பற்கான முயற்சிகள் எடுக்கப்படும்,அதேநேரத்தில் 1.5 பாகைக்குள் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

3.     ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இது குறித்து விவாதிக்கப்படும்.
4.     வளர்ந்த நாடுகள் 2020 ஆம் ஆண்டிற்குள்ளாக  நூறு பில்லியன் டாலர் நிதியை வளரும் நாடுகளுக்கு வழங்கும்,எதிர்காலத்தில் இந்நிதி  அதிகரிக்கப்படலாம்.

இவ்வுறுதிமொழிகள் உண்மையிலேயே இப்பூவுலகை அழிவிலிருந்து மீட்பதற்கு உதவிடுமா?என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

“2 பாகை எனும் மந்திர இலக்கு:
2050 ஆம் ஆண்டு முதல் 2100 ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குள்,புவியின் சராசரி வெப்பநிலையை இரண்டு பாகைக்கு மிகாமல் கட்டுக்குள் வைக்கப்படும் என உறுதி கூறப்பட்டுள்ளது.ஒரு பாகைக்கு மேல் அதிகரித்துள்ள தற்போதைய புவியின் சராசரி வெப்பநிலையால்,ஆசியாவில் உள்ள சிறு தீவுகள் மூழ்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பாகைக்குள்ளாக புவியின் வெப்பநிலை கட்டுக்கள் வைக்கப்படும் என்பதே முரணான முடிவாக உள்ளது.இம்முடிவானது மென் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தப் போகிறது.
மேலும் 1.5 பாகைக்குள்ளாக புவியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டுமானால்,2030 ஆண்டிற்குள் உலக நாடுகள் அனைத்தும்,புதை படிம எரிபொருள் எரிப்பை  நிறுத்த வேண்டும்.ஆனால் இது குறித்து எந்த முடிவும் இம்மாநாட்டில் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல பாரீஸ் மாநாட்டில் உறுதியளித்தவாறு உலக நாடுகள் அனைத்தும் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும் கூட,அது 2020 ஆம் ஆண்டில் இருந்துதான் நடைமுறைக்கு வரும்.அதற்குள்ளாக 1.5 பாகை இலக்கு கடந்து விட்டிருக்கும் என்பதே எதார்த்தம்!

பாரீஸ் மாநாட்டில் உறுதியளித்தவாறு அனைத்து நாடுகளும் பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியேற்ற அளவைக் கட்டுப்படுத்தினாலும் கூட,மூன்று விழுக்காடு அளவிற்கு புவியின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதே எதார்த்த உண்மையாக உள்ளது. 


பொய் உறுதிமொழிகள்:

பாரீஸ் மாநாட்டில்,பசுமைக் குடில் வாயுக்களின் வெளியீட்டு வீதத்தை கட்டுப் படுத்திக் கொள்வதாக வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் வெவ்வேறு வகைகளில் உறுமொழிகளை அள்ளித் தெளித்தன.இவை அனைத்துமே பொய்யானவையாகவும்,வெறும் சொல்ஜாலம் நிறைந்த உறுதிமொழியாகவுமே உள்ளன.

இம்மாநாட்டில் சீனா,இந்தியா போன்ற நாடுகள் பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியேற்ற அளவை குறைப்பதாக உறுதியளித்துள்ளது.எவ்வாறென்றால் கரிவாயுவின் செறிவை(Carbon Intensity) உற்பத்தி நிகழ்முறையில் குறைத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளது.இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக் கட்டத்தில் தொழிற்துறை முதலாளிகள்,உற்பத்தியை அதிகரிப்பதற்காக,மூல வளங்களான நிலக்கரி,எண்ணை,வாயுக்களை கச்சிதமாக  கையாள்வதில் தேர்ச்சி உடையவர்களாக  உள்ளனர்.அதன் பொருட்டு சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கின்றனர்.இதை இந்நாடுகள் பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதை குறைக்கிறோம் எனக் கூறுவதுதான் எவ்வளவு பெரிய முரண்!

உற்பத்தி நிகழ்முறையில்,“புதை படிம பயன்பாட்டை”(Fossil Fuels)மூல வளமாக பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்கிறோம் என அறிவித்து  அதற்கு கடப்பாடு உடையவர்களாக இருந்தால் நாம் நிச்சயம் அவ்வுறுதிமொழியை வரவேற்கலாம்.மாறாக இவ்வகையான பகட்டான சொல்லாட்சியின் ஊடாக வெற்று உறுதிமொழி அளித்து மக்களை ஏமாற்றுவதுதான் அபத்தமாக உள்ளது.

சொற் பிரயோகத்தின் ஊடாக இப்பித்தலாட்டங்களை இந்நாடுகள் முன்னேடுகிறது என்றால் வேறு சில நாடுகள் காலத்தை உக்தியாக பயன்படுத்துகிறது.உதரணமாக ரஷ்யா, 2030 ஆம் ஆண்டுகளுக்குள் தனது பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்ற அளவை,1990 ஆம் ஆண்டுகளில் வெளியேற்றிய அளவிற்கு ஈடாக்கப் போவதாக அறிவித்துள்ளது.அதாவது நடப்பளவில் இருந்து 25 விழுக்காடு குறைத்துக்கொண்டு 1990 ஆண்டு கால கட்ட வெளியேற்ற அளவை எட்டவுள்ளதாக உறுதியளித்தது.
ரஷ்யா இன்றுள்ளதைக் காட்டிலும் 1990 ஆண்டுகளில் அதிகளவில் பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றியது(1990 ஆம் ஆண்டுகளுக்கு பின்பே அதன் பொருளாதராம் வீழ்ச்சியடைந்தது).அந்நாட்டின் உறுதிமொழிப்படி பார்த்தால் இன்றுள்ளதை விட 30 விழுக்காடு அளவிற்கு கூடுதலாக  பசுமை குடில் வாயுக்களை வெளியிடும் என்பதே எதார்த்த உண்மையாக உள்ளது.

அமெரிக்கா, 2030 ஆம் ஆண்டுகளுக்குள் தனது பசுமைக் குடில் வாயுக்களின்  வெளியேற்ற அளவை,2005 ஆம் ஆண்டுகளில் வெளியேற்றிய அளவிற்கு ஈடாக்கப் போவதாக அறிவித்துள்ளது.அதாவது நடப்பளவில் இருந்து 26 விழுக்காடு குறைத்துக்கொண்டு 2005 ஆம் ஆண்டு கால கட்ட  வெளியேற்ற அளவை எட்டவுள்ளதாக உறுதியளித்தது.ஆனால் 2014 ஆம் ஆண்டிலேயே அதன் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்ற அளவானது(2005 ஆம் ஆண்டைவிட)14  விழுக்காடிற்கு குறைத்து விட்டது.எனவே அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு வெறும் 9 விழுக்காட்டு அளவை மட்டுமே குறைப்பதாக அமெரிக்கா  உறுதியளித்துள்ளது தெளிவாகிறது.

இவற்றையெல்லாம் கவனத்தில் இறுத்திப் பார்கையில்,இம்மாநாட்டின் முடிவானது
·         சீனா,இந்தியா,ரஷ்யா,கொரியா,துருக்கி,தாய்லாந்து,ஐக்கிய அரபு நாடுகள்,வியட்னாம்,மெக்சிகோ,இந்தோனேசிய போன்ற நாடுகள்  பசுமைக்குடில் வாயுக்களை வழக்கம் போல  தொடர்ந்து வெளியிடுவதற்கும்
·         அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,சப்பான்,கனடா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஆண்டுக்கு  விழுக்காடு அளவிற்கு பசுமைக்குடில் வாயுக்களை கட்டுப்படுத்திக் கொள்வதாகக் கூறிகொண்டு குறைவாக வெளியிடுவதற்குமான அனுமதியையே வழங்கியுள்ளன!

உறுதிமொழியும் நடைமுறையும்:
இதற்கு முன்பாக,பல நாடுகள் குறிப்பாக வளர்ந்த பணக்கார நாடுகள்,காலநிலை மாற்ற மாநாடுகளில் பல உறுதிமொழிகளை அளித்துள்ளன.குறிப்பாக ஜப்பானில்,கியோடோ மாநகரில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் எட்டப்பட்ட முடிவுகள் “கியோட்டோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.இம்மாநாட்டில்,உறுதியளித்தவாறு ஒரு பணக்கார நாடு கூட ஒப்பந்தந்தை நடைமுறைப் படுத்தவில்லை.வெற்று உறுதிமொழி ஜாம்பவான்களாக மட்டுமே,இந்நாடுகள் திகழ்ந்துவருவதை காலநிலை மாற்ற மாநாடுகளின் வரலாறே மெய்ப்பிகிறது.

அமெரிக்காவோ,கியோட்டோ ஒப்பந்தத்தை மீறுவதாகட்டும்,கோபன்ஹேகன் மாநாட்டில் பின்னடைவை ஏற்படுதியதாகட்டும்,டர்பன் மாநாட்டில் இலக்குகள் எட்டப்படாமல் இழுத்தடித்ததாகட்டும் அதன் செல்வாக்கின் மூலமாக ஐநாவின் அனைத்து மாநாடுகளையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதற்கும் உறுதிமொழிகளை செயல்படுத்தாமலும் தொடர்வதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளது.

கோபன்ஹேகன் மாநாட்டில் (2020ஆண்டுக்குள்ளாக)நூறு மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா,அதில் 63 பில்லியன் டாலர் வழங்கிவிட்டதாகவும்,பாரீஸ் மாநாட்டில் ஆண்டுக்கு 94 பில்லியன் டாலர் நிதியளிப்பதகாவும் புதிய உறுதிமொழிகளை அளித்துள்ளது!
காலநிலை மாற்றம் பற்றின விழுப்புணர்வை ஏற்படுத்தியல் தந்தை என அழைக்கப்படுபவரும்,நாசாவின் முன்னாள் அறிவியளாலுருமான திரு ஜேம்ஸ் ஹான்சன்,இந்நாடுகளின் உறுதிமொழிகள் குறித்து கீழ்வருமாறு கூறுகிறார். 

“2 பாகை அளவிற்குள்ளாக புவி வெப்பமடைதலை கட்டுக்குள் வைப்பதற்கான இலக்கு எங்களிடம் உள்ளது,அது குறித்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பேசுவோம் என்று கூறுவது முட்டாள்தனமான வாதமாகும்.செயல்பாடுகள் துளியும் இல்லை,ஆனால் வெற்று உறுதிமொழி மட்டும் உள்ளது.புதைபடிம எரிபொருள்கள் மலிவாக கிடைக்கிற வரையில்,இவர்கள் அதை எரித்துக் கொண்டுதான் இருப்பார்கள்,ஒருபோதும் அவர்கள் இதை நிறுத்தப்போவதில்லை
என்கிறார்

இறுதியாக:

ஐநாவால் முன்னெடுக்கப்படுகிற காலநிலை மாநாடுகள் நமது பூவுலகிற்கும்,மனித குலத்திற்கும் பெரும் துரோகம் இழைத்து வருவதையே கடமையாகக் கொண்டு செயல்பட்டுவருவது வரலாறு மெய்ப்பிக்கிற உண்மையாகும்.பாரீசிலும் இத்திரோகப் படலம் தொடர்ந்துள்ளது.
பாரீஸ் மாநாடு குறித்து தென்னாப்பிரிக்காவின் சிவில் சமூக அமைப்பின் இயக்குனரும் சூழல்வாதியுமான,பாட்ரிக் பாண்ட் இவ்வாறு காட்டமாக எழுதுகிறார்
“பாரீஸ் நகரம் சமீபத்தில் இரு வேறு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொண்டது.ஒன்று வெளிப்படையான தீவிரவாதத் தாக்குதல்.மத அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசமான இத்தீவிரவாத தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரீசில் உயிர் இழந்தனர்.இரண்டாவது மோசாமடைந்து வருகிற காலநிலை மற்றம் குறித்த உலக நாடுகள் பாரீசில் எட்டிய முடிவு.இம்மாநாட்டின் முடிவானது,ஒட்டுமொத்த உலகின்  மீதான தீவிரவாதத் தாக்குதலை மறைமுகமானவகையில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.முதல் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்,ஆனால் மோசமான இராண்டாம் தாக்குதலானது, இப்பூவுலகையே அழித்துவிடக் கூடிய அளவில் கொடுமையானது
புவி வெப்பமயமாக்கலுக்கு காரணமாக உள்ள மூன்றில் இரண்டு பங்கு  பசுமைக்குடில் வாயுக்களை உலகின் முன்னணி தொண்ணுறு நிறுவனங்களே வெளியிடுகின்றன.புதை படிம எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள்,வேளாண் தொழில் நிறுவனங்கள் பொதுவாக சமூக கரிசனமும் சூழலியல் கரிசனமும் அற்றவை.லாப விதி தவிர ஏனைய விதி ஏதும் அதற்குத் தெரியாது.

உண்மையில் புவிவெப்பமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது நிலவுகிற முதலாளிய அமைப்பிற்கும் அதற்கு ஆதரவான அரசுக்கும்  எதிரான மக்களின் போராட்டமாகத்தான் இருக்கமுடியும்.லாப  நலனுக்கான உற்பத்தியை முடிவிடுக்கிற ஆளும்வர்க்கமும்,அதற்கு பாதையமைத்து  அரசியல் கேடயமாக செயல்படுகிற அரசுமே இப்போரட்டத்தில  பொது எதிரிகள்.
முதலாளியத்தால் ஏற்படுத்தப்படுகிற சூழலியல் அழிவுக்கு எதிரான நமது போராட்டம் என்பது அடிப்படையில் ஓர் வர்க்கப் போராட்டமே.ஆளும்வர்க்கம், அதற்கிசைவான அரசு இயந்திரம் இவற்றுகெதிராக புவிக்கோளத்தை காக்க விளிம்பு நிலை மக்கள் போராடுவதென்பது வர்க்கப் போரட்டத்தோடு இணைந்த போராட்டமாகும்.அவ்வகையில்,சோசலிச உற்பத்தி முறைக்கு பாதையமைத்துத் தருகிற சூழலிய சோசலிசத்தையே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கமுடியும்.

ஆதாரம்: