Pages

Sunday 28 February 2016

சூழலியல் சிக்கல்களும் பச்சைத் தமிழ் தேசிய அரசியலும்
ஒரு தேசியத்தின் சுய நிர்ணய உரிமை என்பது அதன் ஜனநாயக உரிமையாகும்.ஒரு தேசியத்தின் அரசியல் பொருளாதார பண்பாட்டு உரிமைகளை அத்தேசிய இனமே  தீர்மானித்துகொள்வதுதென்பது அதன் சுய நிர்ணய கோரிக்கையின் மைய சாரமாக உள்ளது.இந்தியா பல தேசிய இனங்களை  உள்ளடக்கிய தேசிய ஒன்றியமாகும்.நவீன இந்தியா உருவாவதற்கு முன்பாகவே இங்குள்ள தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமையுடன் இயங்கின.இன்று இந்திய ஒன்றியமானது  பல் தேசிய இனங்களின்  சிறைக்கூடமாக உள்ளது.இந்திய தேசியம் இந்து தேசியமாக ஒடுக்குகிற தேசியமாக உள்ளது.உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் அரசியல் சாசன சட்டத்தில் ஒரு தேசியம் பிரிந்து போவதற்குண்டான தன்னுரிமை பற்றி மறந்தும் கூட (இந்திய தேசியத்தின் அரசியல் சாசனத்தில்)குறிப்பிடப்படவில்லை.பரந்த சந்தையின் தேவைக்காக இந்தியாவின் முதலாளிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்களானது இந்திய ஒன்றியத்தின் பல்தேசிய  இனங்களை தனது அதிகாரத்தின் துணைக்கொண்டு ஒடுக்கி வருகிறது.பல் தேசிய இனங்களின் மொழி கலாச்சாரங்கள் ஒதுக்கப்பட்டு இந்துத்துவ அடையாளத்தின் பேரில் ஒற்றைபட்டையான பண்பாட்டை அது உருவாக்குகிறது.

ஒடுக்குகிற தேசிய இனத்துக்கு எதிராக  ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் முன்வைக்கிற சுய நிர்ணய உரிமைக்கான  முழக்கம் என்பது அதன் அரசியல் பொருளாதாரம்,மொழி,பண்பாட்டில் சுய நிர்ணய உரிமை மற்றும் சமூகத்தை ஜனநாயகப்படுத்தல் குறித்ததாகும்.அவ்வகையில் ஒடுக்குகிற இந்திய தேசியம் எனும் இந்து தேசியத்திற்கு எதிராக போராடுகிற ஒடுக்கப்படுகிற மணிப்பூர்,நாகலாந்து மற்றும் காஷ்மீர் தேசிய இனங்கள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய இன விடுதலைக் கோரிக்கை நீண்ட  நெடிய வரலாற்றைக் கொண்டது.இன்று அதன் தேசிய இனக் கோரிக்கைகள் சுத்த இனவாதக் கருத்தியலுக்கு அதிகம் அழுத்தம் தருகிற கட்சிகளின் செயல்திட்டங்களின் செல்வாக்குகளால் பீடிக்கப்படுள்ளதாகவே தெரிகிறது.இக்கட்சிகளின் இனவாத தமிழ் தேசிய நிலைப்பாடுகள்,சுய நிர்ணய உரிமைப்  போராட்டத்திற்கு கருத்தியல் மற்றும் நடைமுறை அளவில்,பெரும் பின்னடைவையே ஏற்படுத்துபவையாக  உள்ளன.குட்டி பூர்ஷுவாக்களின் நலன்களின் பேரிலும்,சொந்த/அண்டை தேசிய இனங்களின் விளிம்புநிலை மக்களின் விடுதலையை உள்ளடகத்தில் கொள்ளாத இவ்வகையான தமிழ் தேசியப் போராளிகள்,தங்களின் தேசிய இன விடுதலைக்கான நியாயப்பாட்டை, அண்டை தேசிய இன மக்களுடான பகையையுனர்வை வளர்ப்பதன் ஊடாக முன்னெடுக்கின்றனர்.முன்னாள் தமிழ் தேசிய பொதுவுமடைக் கட்சியும் இன்றைய தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை இவ்வகையான இனவாத தேசியம்  பேசுகிற தமிழகத்தின் ராஜ் தாக்ரேக்களாக வலம் வருகின்றனர்.
சுத்த இனவாதம் பேசியும்,மொழித் தூய்மைவாதம் பேசியும் அடையாள அரசியலை முன்னெடுத்தவர்கள் இன்று சூழலியல் சிக்கல்களுக்கு இனவாத அரசியல் சாயத்தை பூசிவருகின்றனர்..இந்திய ஒன்றியத்தில், தமிழர்களுக்கு எதிராக மட்டுமே ஆபத்தானத் திட்டங்களை மெனக்கெட்டு இந்திய அரசு கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

இப்படியான பச்சைத் தமிழ்த் தேசிய அணியினருள் பச்சை தமிழகம் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர்  தோழர் சுப உதயகுமாரும் அக்கம் பக்கமாக இணைந்துவிட்டதாகவேத் தெரிகிறது.வடகிழக்கு மாகாணங்கள்,காஷ்மீர் பள்ளத்தாக்குகள்,தக்கான பீடு பூமி,என அனைத்து பிராந்தியத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்நிலைமைகளையும் புறச்சூழலையும் வேகமாக தனது லாப நோக்கத்தின் பொருட்டு இந்திய/பன்னாட்டு முதலாளித்துவ சக்திகள்  அழித்தொழிக்கிறது.அதற்கிசைவான ஜனநாயக அரசியல் கேடயமாக  காங்கிரஸ் அரசு பா ஜ க அரசு செயல்படுகிறது.ஆளும் வர்க்கத்திற்கும் அதன் நலன் காக்கிற இவ்வரசுக்கும் தமிழனும் காஷ்மீரியும் மணிப்பூரியனும் ஒன்றுதான்.ஜார்கண்ட்,சத்திஸ்கரில் கனிமவளங்களை சூறையாடுவதும் இவ்வர்க்கம் தான் ,குஜாரத் சதுப்பு நிலத்தை அழித்ததும் இம்முதலாளித்துவ வர்க்கம் தான்.தமிழகத்தின் கனிம வளங்களையும்,நிலத்தடி நீரையும் சுரண்டுவதும் இவ்வர்க்கம்தான்.

ஆளும் வர்க்கத்திற்கு எதிரான சூழலியல் போராட்டமானது அடிப்படையில் ஓர் வர்க்கப் போராட்டமாகும்.நில அபகரிப்பு சட்டத்தால் நிலம் இழந்த உழைக்கும் மக்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்குமான போராட்டமாகும்.இவ்வர்க்கப்போரட்டத்தில் நாம் ஆளும்வர்க்கத்திற்கு எதிராகத் தான் போராடுகிறோம்,ஏனெனில் நமது நிலைக்கு அதுதான் காரணமாக இருக்கிறது என்று தெளிவு அவசியமான முன் நிபந்தனையாகும்.மாறாக நமது போலித் தமிழ் தேசிய குழுவினர்  பொது எதிரியை ஆளும்வர்க்கமாக நிறுத்தமால் ஆளும்வரக்கத்தின் கருவியாக செயல்படுகிற அரசையும் பக்கவாட்டில் அண்டை தேசிய இன மக்களையும் பகையாளியாக முன்னிறுத்துகிறது.இவர்களின் வரையறைப்படி பார்த்தால்,இந்தி பேசுகிற முதலாளிக்கு பதிலியாக தமிழ் தேசிய முதலாளி தமிழகத்தின் இயற்கை வளங்களை சுரண்டினால் நியாயம் என்றல்லவா ஆகிறது.!

Wednesday 17 February 2016

ரோசடோம் எனும் பூதம் –பகுதி -II: ரஷ்ய நிர்வாகமும் ரோசடோமும்


ரோசடோம் எனும் பூதம் –பகுதி -II: ரஷ்ய நிர்வாகமும் ரோசடோமும்

(கூடன்குளத்தில் அணுவுலைகளைக் கட்டுகிற ரஷ்ய நிறுவனமான ரோசடோமின்(ROSATOM) சிக்கலான வரலாறு பற்றின விமர்சனம்.கிரீன் பீஸ் அமைப்பின் அறிக்கையை முன்வைத்து)


ரஷ்யாவின் அணுசக்தி  திட்டங்கள் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் உருவானவை.போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்,சோவியத்திற்கும்   அமெரிக்காவுடனான “கெடுபிடி போர்சூழலாலனது  இரு நாடுகளுக்கு இடையிலான அணு ஆயுத குவிப்பிற்கான போட்டிக்கு இட்டுச்சென்றது.சோவியத் தகர்விற்கு பிற்பாடு ரஷ்யாவின் ராணுவ மற்றும் சிவில் அணுசக்தி தொடர்புடைய திட்டங்கள் ரஷ்ய அரசின் அணுசக்தி துறையின்(MINISTRY OF ATOMIC ENERGY OF THE RUSSIAN FEDERATION) கீழ் வந்தது.இத்துறை சுருக்கமாக மினடோம்(MINATOM) என்றழைக்கப்பட்டது.

அதன் பிறகு 2007 ஆண்டில் தனிச் சிறப்பு சலுகைகள்,தனி சட்ட விதிகள் என பல சீர்திருத்தங்களுடன்,மினோடோம் ரஷ்யாவின்  தேசிய நிறுவனமாக மாற்றப்பட்டது.மினோடோம்(MINATOM) ரோசடோம்(ROSATOM) ஆக பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

ரோசடோம்,ரஷ்ய அதிபரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.ரோசடோமின் இயக்குனர் மற்றும் கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர்களை   ரஷ்ய அதிபரே  நியமிக்கமுடியும்.

நீண்ட கால தொலைநோக்குத் திட்டத்திற்கேற்ப, அதிகளவிலான நிதியை  ரோசடோமிற்கு ரஷ்ய அரசு ஒதுக்குகிறது.ரோசடோமின் கணக்கு வழக்குகளை அதன் உள் தணிக்க கமிட்டி மேற்பார்வை செய்கிறது.இத்தணிக்கை கமிட்டி, கண்காணிப்பு கமிட்டியின் கட்டுப்பாட்டில் செயல்படும்.இதில் மிகப்பெரிய முரண் என்னவென்றால் ரஷ்ய அரசின் உயர் அலுவல் பணியில் இருப்பவர்  கண்காணிப்பு கமிட்டியிலும்,கண்காணிப்பு கமிட்டியில்  உள்ளவர் அரசின் அலுவல் பணியிலும்  அங்கம் வகிப்பார்கள்.உதாரணத்திற்கு ரோசடோமின் தற்போதைய நிர்வாக இயக்குனராக உள்ள செர்ஜி கிரியேன்கோ,ரஷ்யாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர்.அதேபோல ரஷ்ய அதிபரின் அரசியல் ஆலோசகர்,பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரஷ்ய அரசின் ஆற்றல் துறை அமைச்சரே கண்காணிப்பு கமிட்டியில் அங்கம் வகிக்கின்றனர்.

ரோசடமிற்கு பல சிறப்புச் சட்டங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டன.இச்சட்டங்கள் ரோசடோமின் செயல்பாடுகளுக்கு கேடயமாகத் திகழ்ந்தன.ரஷ்ய அதிபரின் சிறப்பு கவனக் குவிப்பும், வழிகாட்டுதலுக்கும் மேலாக சக்திவாய்ந்த  தன்னாட்சி நிறுவனமாக ரோசடோம் திகழ்ந்தது என்றே கூறவேண்டும்.உதரனத்திற்கு சொல்ல வேண்டும் என்றால்,ரோசடோமிற்கு தொடர்பில்லாத எந்தவொரு ரஷ்ய உயர் அதிகாரியும்,பிரதேச ஆளுமைகளும் ரோசடோமின் செயல்பாடுகளில் தலையீடு செய்ய இயலாது.பிரத்யேக சட்டத்தின் அடிப்படையில் சில அதிகாரிகள் வேண்டுமானால் தலையீடு செய்யமுடியும்.மேலும் ரோசடோமின் கணக்கு வழக்குகள்,செயல் திட்டங்கள் குறித்த எந்த தகவல்களும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்படமாட்டாது.அரசின் ரகசியங்கள் என்ற சட்டகத்திற்குள் ரோசடோமின் அனைத்து செயல்பாடுகளும் மக்களுக்கு எந்தவித தொடர்புமில்லாத வகையில் சுருக்கப்படுகின்றன. இவ்வகையான வெளிப்படைத்தன்மையற்ற போக்கால் ரோசடோமின் ஊழல்,உபகரணங்களின் தரம்,அதன்  பாதுகாப்புத் தன்மை,திட்டங்களின் தாமதங்கள் குறித்த எந்த கேள்வியும் கண்காணிப்பிற்கும் வாய்ப்பில்லாமல் போயிற்று. அதேவேளையில்,ரோசடோமுக்கு ரஷ்ய அரசாங்கமானது சிறப்பு  சட்ட விலக்குகள்,நிதி உதவிகள் என பல வகைகளில் உதவினாலும்,ரோசடோமில் நிலவுகிற பல்வேறு சிக்கல்களை ரஷ்ய அரசால் தடுக்க இயலவில்லை என்றே கூறலாம்.

ரோசடோமின் அணுசக்தி செயல்பாடுகளுக்கு ரஷ்ய அரசு வழங்குகிற மானியங்கள்:
ரஷ்யாவின் 33 சிவில் அணுசக்தி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.இதன் மூலமாக 25 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.சர்வதேச அளவில்,அணுசக்தி மின்சார உற்பத்தியில் ஜப்பான்,பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது.ஆனால் பயனீட்டாளர்கள் அடிப்படையில் பார்த்தோமானால் ரோசாடோமே  உலகளவில் முதலிடத்தில் உள்ளது.உள்நாட்டில் அணுவுலை விரிவாக்கத் திட்டப்பணிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிற ரோசடோம்,நடைமுறையில் திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வியே சந்தித்து வருகிறது.கடைசி பத்தாண்டுகளில், ரஷ்யாவில் ரோசடோம் கட்டிய  மூன்று  அணுவுலைத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது.

ஒன்று, இருபதாண்டு கால கட்டுமானத்தை அடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது.ரோஸ்ட்டாவில் உள்ள மற்றொரு அணுவுலை இருபத்தியேழு  கால கட்டுமானத்தை அடுத்து 2010 ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது.மூன்றாவது அணுவுலை இருபந்தைந்து ஆண்டுகால கட்டுமானத்தை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது.31 அணுவுலைத் திட்டங்கள் தீட்டப்பட்டு அதில் 18 பரிந்துரைக்கப்பட்டு இறுதியாக, தற்போது 9 அணுவுலைத் திட்டங்கள் கட்டுமானப் பணியில் உள்ளன.

அணுவுலைகளை விற்பதற்கு   சர்வதேச அளவில் ஒப்பந்தங்களை மேற்கொள்வது, வெளிநாடுகளில் அணுவுலைக் கட்டுமானங்களை மேற்கொள்வது என தீவிரமாக அணுவுலை விரிவாக்கத் திட்டங்களை ரோசடோம் மேற்கொண்டுவருகிறது.சில சந்தர்ப்பங்களில் இவை இரண்டையும் இணைத்து போட்(BOT)(Built,Operate,Transfer)(கட்டு,சொந்தமாக்கு,செயல்படுத்து)  என்ற ஒப்பந்தத்தின் பேரில் அணுவுலைகளை கட்டுகிறது.சர்வதேச அளவில் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக 80 அணுவுலைகளை கட்டுவது என்ற இலக்கை  ரோசடோம் நிர்ணயத்துள்ளது.அதில்  19 அணுவுலைத் திட்டங்கள்  பேச்சுவார்த்தை அளவில் உள்ளன.சர்வேதச அளவிலும் தேசிய அளவிலுளும் அணுவுலை திட்ட பணிகளுக்கு அதிக கவனம் கொடுத்து செயல்பட்டாலும் அதன் அதீத நம்பிக்கை மற்றும் சத்தியங்கள் தோல்விப் பாதையிலேயே பயணிக்கிறது.

அணுவுலைத் திட்டங்களோடு அணுசக்திக்கான எரிபொருள் விற்பனையிலும் ரோசடோம் ஈடுபட்டுவருகிறது.யூரேனியம் எரிபொருள் உற்பத்தியில் உலகளவில் ரோசடோம் ஐந்தாவது இடத்தில உள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில் செயல்படுகிற அணுவுலைகளில் 27 விழுக்காட்டு யூரேனியம் எரிபொருளை ரோசடோமே வழங்குகிறது.
மேலும்,ரோசடோம் கட்டுகிற அணுவுலைகள் ஒப்பீட்டு அளவில் மலிவானவை என்ற பிம்பத்தை கட்டுவதற்காக வேண்டுமென்ற அதன் உற்பத்தி செலவை செயற்கையாக குறைக்கிறது.இதை நேரடியாக தனது சொந்த மானியத்தை வழங்கி சரி கட்டுகிறது ரஷ்ய அரசு. நடைமுறையில் ரோசடோம் கட்டுகிற அணுவுலைகள் மலிவானவை என நிரூபணம் ஆகவில்லை.ஏனெனில்,மலிவு விலையில் அணுவுலைகளை கட்டுகிற தொழில்நுட்பமும் அதனிடம் இல்லை.

நேரடியாக மானியம் வழங்குவதோடு மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் ரோசடோம் சலுகைகளைப் பெறுகிறது.உதாரணத்திற்கு கதிர் வீச்சு தன்மையுடைய திரவக் கழிவுகளை அகற்றுவதற்கு எந்த வித வழிமுறையும் எட்டப்படாத நிலையில் அதை நேரடியாக மண்ணுக்குள் திணிக்கிறது  ரோசடோம்.இதன் மூலமாக அத்திட்டங்களில் அணுக்கழிவுகளை அகற்றுவது குறித்த ஆராய்ச்சிகளுக்கு  ஒதுக்கப்படுகிற நிதி அனைத்தும் மறைமுகமாக ரோசடோமிற்கு செல்கிறது.

---- பூதம் இன்னும் வரும் 

Tuesday 16 February 2016

சூழலியல் அடிப்படைவாதம் : இந்துத்துவ இயற்கையாளர்கள்
அண்மையில் “பேராபத்தில் புவிக்கோளம்(Earth in Peril)என்ற தலைப்பில் எஸ் பி  கோபிநாதன் நாயர் எழுதிய  ஆங்கில நூலை வாசித்தேன்.நூலில் கூறப்பட்டுள்ள சாராம்சம் இதுதான்

  • பூவுலகின் அழிவு நிலைமைகளை விளக்குவதாகஅதீத எதிர்மறை  நிலையில்  நின்றுகொண்டு இயற்கையை புனிதப்படுத்துவது,தெய்வீகமயப்படுத்துவது
  • இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை அறிவியல் அடிப்படையில் அல்லாமல் ரோமன்டசிஸ் செய்வது
  • இந்துத்துவ சார்புநிலை கருத்தியலோடு இயற்கை அறிவியலை இணைப்பது.
இறுதியாக,

காந்தியின் தனி நபர் ஒழுக்க நெறிகளும்  இந்துமதத்தின் கலாச்சார வேர்களுமே இவ்வுலகம் எதிர்கொள்கிற சூழலியல் சிக்கலுக்கு தீர்வாக இருக்க முடியும்
என  தனது இந்துத்துவ அடிப்படைவாத கருத்தியலோடு சூழலியல் சிக்கல்கள் மீதான ஆய்வுகளை இணைக்கிறார்.

சூழலியல் சிக்கல்களை அடிப்படைவாத கண்ணோட்டத்தில் அனுகுகிற திரு எஸ் பி  கோபிநாதன் நாயர் போன்று பல கோபிநாதன்கள்  தமிழகத்தில் இயற்கைவாதம் பேசித்திரிவதால்,அவர்களுக்கான நமது விமர்சனம் அவசியமாகிறது.சரி நூலுக்குள் செல்வோம்.

நூலின்,ஒரு அத்தியாயம் புராதன இந்திய நோக்கில்(இயற்கை)என்ற தலைப்பில் கீழ்வரும் வகையில் எழுதிச்செல்கிறார்.

“மேற்குலகில் இயற்கையை வெறும்  பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகினார்கள்.ஆனால் புராதன இந்தியாவில் இதற்கு நேரெதிரான வகையிலான தத்துவங்கள்  இருந்தன.வேதங்கள்,உபநிஷங்கள்,புராணங்கள்,இதிகாசக் கதைகள் மூலமாக மிகப்பெரிய ரிஷிகளும் யோகிகளும் பொருளாயத உறவுகளிலிருந்து விலகிய வாழ்கை முறை குறித்தும் மனிதர்களின் ஆன்மீக சிந்தனைகளை உயர்த்துவது போன்ற போதனைகளை எளிமையான முறையில்  மக்களிடம்  எடுத்துச்சென்றனர்.

இந்தியர்கள் இயற்கையை கடவுளாகவே பார்த்தனர்.சொல்லப்போனால் இயற்கை வழிபாடு என்பது அவர்களின் கலாச்சாரத்தோடு பிண்ணிப்பினைந்ததாகும்.அதர்வண வேதம் இயற்கையைத் தாய் என்று கூறுகிறது.நமது காயத்ரி மந்திரம் சூரியனை வழிபடுகிறது,நமது நதிகள் புனிதமாகத்  திகழ்கிறது.

மலைகளை கடவுளாக வழிபடுகிற காலச்சார மரபு நம்முடையது;முக்கியமாக கைலாச மலையானது சிவனின் தளமாக வணங்கப்படுகிறது.அவரது மனைவி பார்வதி இமாயவனின்(இமயமலையின் கடவுள்)மகளாக வழிபடப்படுகிறாள்.திபத்தியர்கள் அண்டங்களின் மையப்புள்ளியாகவே இமயமலையைக் கருதுகிறார்கள்.இந்தியாவில் பெரும்பாலான மலைகள் புனிதத் தளங்களாக உள்ளன.வடக்கில் பத்ரிநாத்,கேதர்நாத்,அமர்நாத்தும் தெற்கில் திருப்பதி,சபரிமலை என மலை உச்சிகளே புனிதத் தளங்களாக திகழ்கின்றன.உயரமான மலைச் சிகரங்களில்  சுத்தமான காற்று கிடைத்து உடல் புத்துணர்ச்சி பெறவும் ஆன்மீக புத்தணர்ச்சி அடையவும்  நமது முன்னோர்கள்  மலை உச்சிகளில் கோவில்களை அமைத்தனர். இந்தியர்களால் அதிகம் விரும்பப்படுகிற கடவுளான ஸ்ரீ கிருஷ்ணன்  மலைகளின் முக்கியத்துவம் குறித்து பிருந்தாவானத்தில் வாழ்கின்ற மக்களிடம் எடுத்துரைத்துள்ளார்.கால்நடைகளுக்கு நீரும் புல்லையும் அளிக்கிற கோவர்த்தன மலையைத்தான் வழிபட வேண்டுமே ஒழிய இந்திரனை வழிப்படக்கூடாது என ஸ்ரீ கிருஷ்ணன்   மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.மக்களும் அவ்வாறு செய்தக் காரணத்தால்  இந்திரன் கோவமடைந்து கடும் மழையைய் பொழியைச் செய்தார்,பின்பு ஸ்ரீ கிருஷ்ணன்   அம்மலையையே தூக்கி குடையாக்கி மக்களை காத்தார்.ஆர்வமூட்டுகிறவகையில் தொன்மக் கதையாக  இருந்தாலும் இக்கதை மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

நதிகள் இந்திய கலாச்சாரத்தோடும் வாழ்முறையோடும் இரண்டரக் கலந்தவையாகும்.நதிகள் பெண்ணாகவும் கடவுளாகவும் இந்தியாவில் பூசிக்கப்படனர்.ரிக் வேதமானது நதிகளைக்  அச்ப்ரஸ் என்கிறது.புராதன இந்து இதிகாசங்களின்படி கங்கை,யமுனை,சரஸ்வதி,கோதாவரி,நர்மதா,காவேரி போன்ற நதிகள் புனிதமாக கருதப்படுகின்றன.கங்கை நதியானது பகீரதனின் முயற்சியால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
மரங்களின் முக்கியத்துவம் குறித்து அக்னி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.அதேபோல ராமாயனத்திலும் மகாபாரதத்திலும் காடுகள் மலைகள் பற்றின விவரணைகள் உள்ளன.

ஸ்ரீமத் பகவத் கீதையில், விலங்குகளை நம் குழந்தைகளைப் போல பேணிக் காக்க வேண்டும் என்று குறிப்புகள் உள்ளன.விஷ்ணுவின் பத்து அவதாரமும் விலங்குகளாகவே உள்ளன.இதுவே விலங்குகளுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதற்கான சான்றாகும்.அதேபோல பெரும்பாலான இந்தியக் கடவுள்கள் விலங்குகளையே வாகனங்களாக கொண்டுள்ளன.உதாரணமாக முருகனுக்கு மயில்,விநாயகனுக்கு எலி,விஷ்னுவுக்கு கருடன்,சிவன் கழுத்தைச் சுற்றி பாம்பு என அனைத்துக் கடவுள்களும் விலங்குகளோடு இணைந்தே உள்ளார்கள்.ஹனுமான் வழிபாடு குரங்குகளை அழிவிலிருந்து காக்க உதவியது.
ராமாயனத்திலும்  விலங்குகளுக்கு முக்கிய கதாப்பாத்திரங்கள்  வழங்கப்பட்டுள்ளன.ஜாடாயு,ஹனுமான்,சுக்ரீவன் போன்ற கதாப்பாத்திரங்கள் ஸ்ரீ ராமர் காட்டில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது பெரிதும் உதவின”(Earth in Peril,பக்கம் -244-250)

இப்படியாக ஒரு அத்தியாம் முழுக்க மலைகள்,நதிகள்,மரங்கள்,விலங்கினங்கள் அனைத்தும் இந்தியர்களின் வாழ்வியலோடும் பண்பாடோடும் பிண்ணிப்பினைந்துள்ளதாக எழுதுகிற நமது எஸ் பி கோபிநாதன் நாயர் மிக லாவகமாக  
இந்து என்று சொல்லுக்கு பதிலாக  இந்தியர்கள் என்றும், 
இந்து மதப் பண்பாடு என்று சொல்லாமல் இந்தியர்களின் பண்பாடென்றும்,
இந்து மதக் கடவுள்கள் என்று குறிப்பிடாமல் இந்தியர்களின் கடவுளென்றும் 

தனது இந்து மத அடிப்படைவாத புனைவுகளுக்கு இயற்கைவாத சாயம் பூசிச்செல்கிறார்.
ஆனாலும் அவர் ராமாயணத்தை முழுமையாக படிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.ராமருக்கு பாலம் கட்ட அணில்கள் உதவியது,மானைத் தேடித் காணாமல் போன  லக்ஷ்மணனின் கதைகளை குறிப்பிடாமல் போனதே  நமது ஐயத்திற்கு காரணம்!மேலும் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததால் ஸ்ரீ ராமரே இயற்கைவாதிதான் என  குறிப்பிடாமல் போனதும் நமக்கு வருத்தமளிக்கத்தான் செய்கிறது.

அதுபோல தாமரை மலரில் சரஸ்வதி அமர்ந்துள்ள காரணத்தால் இந்தியர்களின் வாழ்வில் இயல்பாவே மலர்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்று அவர் எழுதாமல் போனதில்  பெரும் வருத்தம்தான்.

இந்து மத இதிகாச புராணங்களின் வருகிற பாத்திரங்களை பிடித்துக் கொண்டு இயற்கை வாத சாயம்  பூசுகிற இவ்வறிவுக் கொழுந்துகளுக்கு கிரேக்கம்,எகிப்து போன்ற நாடுகளில் இப்படியான தொன்மைக் கதைகளில் விலங்குகளும் பல விசித்திர உருவம் கொண்ட உயிரனங்களும் இடம் பெற்றுள்ளன என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது பாவம்.

நிறுவனமயப்பட்ட மதங்களின் ஊடாக   இப்பிற்போக்கு கருத்தியலை வளர்த்தெடுத்து ஜனரஞ்சகப்படுத்துகிற இவ்வகையான அடிப்படையான கருத்தமைவுகளுக்கு நமது இயற்கையளார்களும் பலி ஆவதுதான் வேதனை.தமிழகத்தில்,இயற்கைவாதம் பேசுகிற பல இளம் இயற்கை ஆர்வலர்களிடமும்  இச்சிக்கல் உள்ளது.

நவீன இந்திய ஒன்றியத்தின் பெரும்பாலான இயற்கையாளர்கள் முன்வைக்கின்ற  விளக்கங்கள் இவ்வகையிலான பார்ப்பனிய சாயத்துடன் இருப்பதில்  நமக்கொன்றும் வியப்பில்லை.!சனாதன வைதீக மதக்கருத்தியலின் ஊடாக திரிபுவாத புனைவு வரலாற்றை எழுதிய இருபதாம் நூற்றாண்டின் பார்ப்பன/ஆதிக்க இந்து சாதிய வரலாற்றாளர்கள்தான் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இயற்கையாளர்களாகவும் சூழலியலாளர்களாக பரிணமித்துள்ளார்களோ என்ற ஐயம் மட்டுமே நமக்கு மேலெழும்புகிறது!

நதிககளுக்கும் மலைகளுக்கும் புனித அங்கி அணிவிக்கிற இவ்வகையிலான   இறையியல  சூழல்வாத அறிவுஜீவிகள் வெளிப்படையான இந்துமதத்தின் பாதுகாவலர்கள் ஆவார்கள்.

பொதுவாக,இயற்கையை இறையியலுடன் இணைக்கும் கருத்தமைவானது  அரசுருவாக்கத்திற்கும் அதற்கிசைவான  அரசியல் பொருளாதாரத்திற்குமான  அடித்தளத்தை வழங்குவதாலும் சமூகத்தை மேலாதிக்கம் செய்வதற்கு பயன்படுவதாலும்,இக்கருத்தியலை  அம்பலப்படுத்துகிற பொருள்முதல்வாத விளக்கங்களுக்கு எதிரான  கருத்து முதல்வாதிகளின் மோதல்கள் வரலாரெங்கிலும் நடைபெற்று வருகின்றன.அவ்வகையில் இந்திய துணைக்கண்டத்தில் லோகாயுதம்,பௌத்தம்,சமணம் என்ற முப்பெரும் புரட்சிகர பொருள்முதல்வாத தத்துவங்களுக்கும் வைதீக மற்றும் வேதத்தை அடிப்படையாக கொண்ட கருத்துமுதல்வாத தத்துவங்களுக்கு இடையிலான  பெரும் போராட்டமே இந்திய தத்துவ வரலாறாகத் தெரிகிறது.

மேற்குலகில், இறையியலுடன் இயற்கையை இணைத்த திருச்சபை இயற்கைவாதத்திற்கு அறிவொளிக் காலத்தில் கெப்ளர்,கலீலியோ,ஹார்வி போன்றோர்களும் அதைத்தொடர்ந்த அறிவியல் காலத்தில் டார்வினும் திருச்சபை இயற்கைவாதத்திற்கு மரண அடியைக் கொடுத்தனர்.மேற்குலகில் நடைபெற்ற அறிவியல் வளர்ச்சிகள் அதைத்தொடர்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழிற்துறை  எழுச்சிகள் அரசியல் பொருளாதார  மாற்றங்கள்  சமூகத்திடமிருந்து மதத்தை விலக்குவதாக அமைந்தது.
ஆனால் இந்திய ஒன்றியத்தில் நிலைமையோ தலைகீழாக இருந்தன.காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டமானது இந்துத்துவ  தத்துவவாதத்தால் உந்தப்பட்ட தலைவர்களால்  முன்னெடுக்கப்பட்டதால்,மதமும் அரசியல் விடுதலையும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டன.இதன் காரணமாகவே ஒரு பெரும் வகுப்புவாத பிரிவினையோடு தொடங்கிய இந்திய விடுதலையானது இன்றைக்கும்  வகுப்புவாத கலவர நாடாகத் தேங்கிப்போவதற்கு  பெருங் காரணமாக அமைந்தது.அரசியல்,நிர்வாகம்,பண்பாடு,இன்ன பிற அனைத்து துறைகளிலும் இந்து மதக் கருத்தியல் ஆளும் வர்க்க கருத்தியலாக பற்றிப் படறிவிட்டன.அதன்  ஒரு தெரிப்புத்தான் நமது எஸ் பி கோபிநாதன்  நாயரின் இந்துத்துவ இயற்கைவாத கருத்தியல் !

Saturday 6 February 2016

“புறவழிச்சாலைகள்” பற்றின திரு ஜெமோவின் “கோட்பாட்டு” விளக்கம் மீதான விமர்சனக் கருத்துரை.திரு ஜெமோவிற்கு திரு மலைச்சாமி என்ற வாசகர் “புறவழிச்சாலைகள்” என்ற தலைப்பில் எழுதிய கடிதமும் அதற்கான தனது பதிலையும் ஜெமோவின் வலைப்பக்கத்தில் பார்க்க நேர்ந்தது.

இவ்விரு விவாதத்தின் சாராம்சம் இதுதான் -புறவழிச்சாலைகள் கார்பரேட் நலன்களுக்கான திட்டமாக உள்ளதே தவிர மக்கள் நலனுக்கானதாக இல்லை என்பது வாசகரின் வாதமாக இருக்கிறது.மாறாக ஜெமோவோ,நிலவுகிற அமைப்பிற்குள்ளாக இருந்துகொண்டு அதை விமர்சிக்க முடியாதென்றும்,வேண்டுமென்றால் நவீன வசதிகள் இல்லாத உலகத்திற்கு  வாசகரை செல்ல பரிந்துரைத்து தனது விளக்கத்தை  முடித்து வைக்கிறார்.

வாசகரின் கடிதத்திற்கு ஜெமோவின் பதில் இவ்வாறு துவங்குகிறது “இப்படி ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து உடனடியாக ஒரு எண்ணத்தை அடைந்து அதை கருத்தாக விரித்துக்கொண்டு பேசுவது நாம் அன்றாடம் செய்வது. அதை அறிவுத்தளத்தில் செய்யவேண்டுமென்றால் பொதுவான ஒரு கோட்பாடாக அதைச் சொல்ல உங்களால் முடியுமா என்று பார்க்கவேண்டும்

அதாவது குறிப்பான விஷயம் மீதான விமர்சனத்தை, கருத்தை அறிவுத்தளத்தில் வைத்துப் பேசும்போது பொதுவான கோட்பாட்டு பின்புலத்தில்  இருந்து அதைப் பேச பரிந்துரைக்கிறார்.சரி வாசகர் அவ்வாறு செய்யவில்லை,சொன்ன ஜெமோவாவது   இவ்விஷயத்தை அவ்வாறு அணுகினாரா?சற்று நெருங்கிப் பார்ப்போம்.

பெருவழிச்சாலைகள் என்பவை நம்முடைய இன்றைய பொருளியல் கட்டமைப்பின் ஒரு பகுதி. மேலும் மேலும் உலகம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகிறது. விரைவுப்பயணம் அதற்கு அவசியமானது. அன்றெல்லாம் நாகர்கோயிலில் இருந்துசென்னைக்கு 16 மணிநேரம் பயணம்செய்யவேண்டும். இன்று 9 மணிநேரம். ஒரேநாளில் சென்று பணிமுடித்து திரும்பமுடிகிறது. அதற்கான தேவையும் இன்றுள்ளது. அதற்காகவே நெடுஞ்சாலைகள். ஏதேனும் அவசர வேலையாகச் சென்று கேரளச்சாலைகளில் மாட்டிக்கொண்டிருந்தால் அந்த சலிப்பு தெரியும்

ஜெமோவின் கோட்பாட்டுப் புரிதலைப் பாருங்கள்,ஒரு குறிப்பான விஷயம் பற்றி கோட்பாட்டு பின்புலத்தில் பேசத் தொடங்க முனைகிறவர்,எடுத்த எடுப்பில் விரைவுப்பயணத்திற்கு நெடுஞ்சாலைகளை அவசியமென்ற கருத்துக்கு வந்து சேர்கிறார்.அவரது அறிவுப்புலமையை குறிப்பாக அவரே குறிப்பிடுகிற கோட்பாட்டு விளக்கத்தை  இங்கு வியக்காமல் இருக்கமுடியவில்லை!

ஒரு குறிப்பான பிரச்சனையை பற்றி  பேசும்போது அதை வரலாற்றுக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும்,பொருளாதார அடித்தளத்தில் இருந்துகொண்டு அணுகுவதுமே அறிவியல் பூர்வ அணுகுமுறையாக இருக்கமுடியும்.எடுத்த எடுப்பில் நிலவுகிற நெடுஞ்சாலை வசதிகள் குறித்து சிலாகிக்கிற ஜெமோவின் கோட்ப்பாட்டுப் புரிதல் நம்மை சிலிர்க்கத்தான் வைக்கிறது.

தேச எல்லைகளுக்கும் அப்பாலும்,அதன் நகரங்களுக்கு இடையிலுமான நெடுஞ்சாலை திட்டங்கள் வரலாற்று ரீதியில் எவ்வகையிலான முன்னேற்றங்களை கண்டு வருகிறது.புறவழிச்சாலைகளை தேச அரசு கட்டுவதற்கான பொருளியில் காரணம் என்ன?அது வரலாற்று ரீதியில் எவ்வகையில் மாறி வருகிறது?நிலவுகிற அமைப்பில் அது என்னவாக வளர்ச்சிப் பெற்றுள்ளது என்பது குறித்தெல்லாம் பேசவேண்டும்.

மூல வள பரிவர்த்தனை,உற்பத்திப் பண்டப் பரிவர்த்தனை என சந்தைப் பொருளாதாரத்தின் பொருளியில் கூறுகளில் போக்குவரத்து என்ன வகையிலான பங்களிப்பை செய்கிறது?வரலாற்று ரீதியில் அதன் பாத்திரம் என்னவாக இருந்தது என்பதை இப்புன்புலத்தில் வைத்துப் பேசுவதே அறிவியல்பூர்வ  கண்ணோட்டமாக இருக்க முடியும். மேலும்,பொருளாதாரம் பற்றி பேசும்போது,உடமை உரிமை,அதன் உறவுகள் குறித்தும் பேசுவது அவசியமாகிறது.

நெடுஞ்சாலைகள் நேர விரையத்தை தவிர்க்கிறது என்ற ஒற்றைபட்டையான விளக்கத்தில் இருந்து போக்குவரத்து பற்றின ஒட்டுமொத்த விவாதத்தையும் பொதுமைப்படுத்தி சுருக்கிவிடுகிறார் நமது "கோட்பாட்டாளர்".

கோட்பாட்டுத் தளத்தில் வைத்துப் பேசுவதற்கான மிக முக்கிய அம்சங்களை  கவனத்தில் கொள்ளாமாலும் தனது முன்முடிவுக் கருத்துகந்த தர்க்க சட்டகத்திற்குள்ளாக முட்டி நின்றுகொண்டு அதை கோட்பாட்டின் பேரால் பேசுவதுதான் எவ்வளவு பெரிய முரண்! 
கோட்பாட்டு புரிதலில் விஷயங்களை முன்வைக்க வேண்டும் என வகுப்பெடுத்துவிட்டு கோட்பாட்டு ரீதியான விமர்சன எல்லைக்குள்ளேயே அவர் நுழையவில்லை என்ற உண்மை முதலில் அவருக்குத் தெரியுமா என்றே தெரியவில்லை!

மேலும் ஜெமோ தொடர்கிறார்
“இணையமும் இதேபோன்ற ஒரு நெடுஞ்சாலைதான். முந்தைய காலகட்டத்தில் கடிதங்கள் எழுதினோம். நீலநிற இன்லன்ட் உறையை பார்த்தே வருடக்கணக்காகிறது. அந்த மாற்றத்தை நினைத்து ஏங்குவதில் பொருளுண்டா என்ன? மறுகணமே மின்னஞ்சல் சென்று சேர்ந்து அதற்கடுத்த நிமிடம் மறுமொழி வரவேண்டுமென நினைக்கிறோம் அல்லவா?

இதில் ஒன்றுபோதும் இன்னொன்றுவேண்டாம் என இருக்கமுடியுமா என்ன? நவீனக் கல்வி, நவீனமருத்துவம், நவீனப்பொருளியல் வாய்ப்புகள், நவீன நுகர்வு ஆகியவற்றுக்குள் இருந்துகொண்டு அதில் ஏதேனும் ஒன்றை மறுப்பதோ முந்தையகாலத்தை நினைத்து ஏங்குவதோ பொருளற்றது

தனது குறிப்பான பிரச்சனை மீதான “கோட்பாட்டு” ரீதியான விளக்கத்திற்கு வலு சேர்க்க பிற துறை சார்ந்த நவீனத்தை துணைக்கு இழுக்கிறார்.அதாவது தகவல் தொடர்பு,கல்வி,மருத்துவம் என அனைத்து துறைகளிலும் நிலவுகிற வளர்ச்சியை மறுக்க முடியுமா என மிக முக்கியமான தர்க்க நியாயத்தை  முன்வைக்கிறார்!

பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு அவசியமான முன் நிபந்தனை,அதன் உற்பத்தி உடமை உரிமை,உற்பத்தி உறவு  பற்றின தெளிவான கண்ணோட்டம் இருப்பது.அரசியல் பொருளாதார விவாதத்திற்குள் நுழையும்போதே உடமை உரிமை என்பது பொருளாதார விமர்சனத்தின் அடிப்படை அலகு.நவீன பொருளாதார வளர்ச்சியின் நன்மைகளை குறித்து சிலாகிக்கிற ஜெமோ,உடமை உரிமை பற்றின எல்லைக்குள்ளாகவே வரவில்லை!பொருளாதார விமர்சனத்தின் அடிப்படை அலகு குறித்து எந்தவித கண்ணோட்டமும் இன்றி முட்டாள்தனமாக ஒரு வாதத்தை முன்வைத்த அளவில் அவரின் பொருளாதார மேதைமையை மெச்சாமல் இருக்கமுடியவில்லை.பின்னர் எழுகிறார்
என் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். கார் ஐந்து கிலோமீட்டரைக் கடக்க ஒருமணிநேரமாகியது. அத்தனைபரிதாபகரமான சாலை. காமராஜ் காலத்தில் போடப்பட்ட சாலை. இன்று அதைவிட மோசமான நிலையில் உள்ளது. அந்தமக்கள் அங்கே சிறையிடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பொதுநாகரீகத்திலிருந்து விலகி ஒரு மூடப்பட்டவாழ்க்கைக்கு விரும்பிச்செல்வார்கள் என்றால் அது வேறு.
நீங்கள் சாலைகள் இல்லாத, செல்பேசியும் இணையமும் இல்லாத உலகுக்குச் செல்லலாம். அங்கே பிறிதொரு வாழ்க்கையை உருவாக்கலாம். அல்லது மொத்தமாகவே இந்த முதலிய நுகர்வுப் பொருளியல் அல்லாத ஓர் அமைப்பைக் கற்பனைசெய்யலாம். அதற்காகப் போராடலாம். ஆனால் இதனுள் இருந்துகொண்டு ஒன்றுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது”
பிற துறைகளின் நவீனத்தைத் தொடர்ந்து,நவீனத்திற்கு எதிரான பழமைவாதியாக இறுதியாக வாசகரை நிறுத்துகிறார்.பாருங்கள் இவரின் தர்க்க புலமையை!.வாசகர் கேட்டது என்ன இவர் சொல்வது என்ன.வாசகர் குறிப்பிட்டது  இதுதான்
“என் கேரளப்பயணம் கார்ப்பரேட்களின் மீது என் கோபத்தை கிளறியது. சிற்றூர் மக்களையும், விவசாயத்தையும் புறக்கணிக்கும் இந்த நான்கு வழிச்சாலைகள் தேவைதானா? யாரின் பயனுக்காக விவசாயிகளின் உற்பத்திகளை ஏற்றி செல்லும் சிறு வாகனங்களிடமும் சுங்கம் வசூலிக்கப்படுகின்றன? சாலைகளை கோபத்துடனே பார்த்துகொண்டிருக்கிறேன்.”
வாசகர் எழுப்பிய கேள்வி உடமை உரிமை,அதன் நலன் சார்ந்த பொருளாதார விமர்சனம்.தெளிவாக சொல்லவேண்டும் என்றால் கார்பரேட் வர்க்க நலனுக்காக விளிம்பு நிலை மக்களின் பாதிப்பை பற்றியது.வாசகர்,எங்குமே சாலைகளை புறக்கணிக்கவில்லை,நவீனங்களை புறக்கணிப்பதாக குறிப்படவில்லை.அதன் பொருளாதார அடித்தளத்தை, வர்க்க சார்பை கேள்விக்குட்படுத்துகிறார்.கீழ்வரும் வாசகரின் வரிகள் மேலும் இக்கருத்தை அழுத்தமுடன் பேசுகிறது
பெரு நிறுவனங்கள் தங்கள் நன்மைக்காக அமைத்த நான்கு வழிச்சாலைகளை, மக்களின் வரிகளால் இயங்கும் அரசின் ஆதரவோடு அமைத்துக்கொண்டு, மீண்டும் மக்களிடமும், அரசாங்கத்திடமுமே சுங்கங்களை பெரு நிறுவனங்கள் வசூலிப்பது இரட்டை திருட்டு அல்லவா? சாலைகளை பயன்படுத்துவதும், சாலைகளை அமைப்பதும்  வேறு வேறு கார்ப்றேட்களாக இருக்கலாம். சாமானிய குடிமகனுக்கு எதுவாய் இருந்தால் என்ன?
வாசகர் எழுப்பிய கேள்விகளை மிக இயல்பாக கடந்துபோகிற ஜெமோ அதற்கெதிர் வாதகமாக நவீனத்திற்கு எதிரான பழமைவாதியாகவும்,அடிப்படைவாதியாகவும் அவரை  காட்ட முனைகிறார்.இறுதிவரை உடமை உரிமை,வர்க்க நலன்,போன்ற விவாத்திற்குள்ளாக வராமல்,நவீனத்திற்கு எதிரான  அடிப்படைவாதியாக கட்டமைக்கிற கருத்துவாக்கமானது, மேம்போக்கான அளவில் புரட்சிகரமான தர்க்கமாக (அவரளவில்)தென்பட்டாலும் தொடக்கத்தில் அவரே  சுட்டுகிற கோட்பாட்டு சட்டகத்திற்குள்ளாக பொருந்துகிறதா என எண்ணிப்பார்க்க தவறிவிட்டார் பாவம் ! ஜெமோவின் கோட்பாட்டு விளக்கங்கள் அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல  இறுதியில் அவர் எழுதுகிறார் ” இதனுள் இருந்துகொண்டு ஒன்றுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது”அதாவது முதலாளிய நுகர்வு அமைவிற்குள் இருந்துகொண்டு நீங்கள் அதை விமர்சிக்கவே கூடாது”என அறிவிக்கிறார்.
நிலவுகிற அமைப்பின் அரசியல் பொருளாதாரம் மீதான விமர்சனங்களை அதற்குள்ளாக இருந்துகொண்டு செய்யக் கூடாது எனக் கூறுகிற வாதம்தான் எவ்வளவு முட்டாள்தனமாக உள்ளது. அனைத்து விளக்கங்களையும் கோட்பாடாக சொல்ல வேண்டும் என்ற அறிவுரையோடு தொடங்கி நிலவுகிற அமைப்பை விமர்சிக்கவே கூடாது என முடிக்கிற அவரின் விளக்கெண்ணை விளக்கத்தை போற்றாமல் இருக்க முடியவில்லை !வாழ்க !
அருண் நெடுஞ்செழியன்