Pages

Monday 26 June 2023

மோடி அரசின் சிவிங்கிப்புலிகள் மறு அறிமுகத் திட்டத்தின் தோல்வி

 


மோடி அரசின் விளம்பர அரசியல் மோகம் ஊரரிந்த ஒன்று.வெற்று விளம்பரத்திற்காக ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெருக்குவதும் அரசியல் லாபத்திற்காக அவசர கதியில் திட்டங்களை அறிவிப்பதும் பாஜக அரசின் 9 ஆண்டு  கால சாதனைகளில் ஒன்றாகும்.பிரதமரின் இத்தகைய “பிம்ப கட்டமைப்பு” அரசியலுக்கு தற்போது பெரும் பூனை இனம் இறந்து வருவதுதான் கொடுமை.

இந்தியாவில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக அற்றுப் போனதாக அறிவிக்கப்பட்ட பெரும் பூனை இனத்தைச் சேர்ந்த  சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவில் மறு அறிமுகம் செய்வதாக கடந்த ஆண்டு மோடி அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பு வரத்தொடங்கிய நாள் தொட்டே ரவி செல்லம்,ஜி எல் மில்ஸ் போன்ற துறை சார்ந்த நிபுணர்கள் (அற்றுப்போன உயிரினங்களின்) மறு அறிமுக திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கத் தொடங்கினார்.ஆனால் துறை சார்ந்த நிபுணர்களின் எச்சரிக்கையை  சட்டை செய்யாத மோடி கும்பல்  அவசரம் அவசரமாக ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்த சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தங்களைப் போட்டது. இத்திட்டத்திற்கு ப்ராஜெக்ட் சீட்டாஎன பெயரிடப்பட்டு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது மோடி அரசு.இத்திட்டம் மூலமாக ஆண்டுக்கு 10-12 சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.  

இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் நமீபியா நாட்டில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகளும் இரண்டாம் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம்  தென் ஆப்பிரிக்காவிருந்து 12 சிவிங்களும் இந்தியாவிற்கு வந்தன.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிகளை விடுவதற்கு திட்டமிடப்பட்டது.பின்னர் தனது 72-வது பிறந்த நாள் நிகழ்ச்சியின் மையமாக  சிவிங்கிப் புலிகளை குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டு தலைப்புச் செய்தியாக்கினார் பிரதமர் மோடி.அந்நிகழ்ச்சியில் பேசிய  பிரதமர், “1952-ம் ஆண்டு சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவற்றை திரும்பக் கொண்டுவருவதற்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பபடவில்லைஎனக் காங்கிரஸ் கட்சியை  சாடினார்.காங்கிரசோ “குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகளைத் திறந்துவிட்ட நிகழ்வு தேசிய பிரச்சினைகள், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து மக்களைத் திசைதிருப்ப பிரதமர் மோடி நடத்திய தமாஷ்” என பதிலடி கொடுத்தது.
கடந்த செப்டம்பர் மாதம் தனது மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஆப்பிரிக்காவில் இருந்த வரவைக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளுக்கு நல்ல பெயர்களை பரிந்துரைக்க அழைப்பு விடுத்தார்.பின்னர்,பரிந்துரைகளில் வந்த பெயர்களில் சிலவற்றை சிவிங்கிகளுக்கு சூட்டி “ப்ராஜக்ட் சீட்டா திட்டத்தை” தனது சுய விளம்பர அரசியலுக்கு கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

இங்கே கொடுமை என்னவென்றால் மோடியின் பிம்ப அரசியலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் பாதி முக்கியத்துவத்தைக் கூட இந்த உயிரினத்தை பாதுகாக்க கொடுக்கவில்லை என்பதுதான் வேதனை.மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் அறிவிக்கப்பட்டு குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிகளில், கடந்த மூன்று மாதத்தில் மட்டும் அடுத்தடுத்ததாக மூன்று சிவிங்கிகள் இறந்துபோனதுதான் கொடுமை..இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் என காட்டுயிர் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட வனத்தில்  நெருக்கமாக இத்தனை சிவிங்கிப்புலிகள் விடப்பட்டதை உச்ச நீதிமன்றமே கேள்வி கேட்கிறது.அரசு தரப்போ சிவிங்கிகளை விடுவதற்கு  வேறு மாற்று இடம்  பார்த்துக் கொண்டிருக்கிறோம் என  பம்முகிறது.அவசரகதியில் வெற்று  விளம்பர மோகத்திற்கு மேற்கொள்ளப்பட சிவிங்கிப்புலி மறு அறிமுகத் திட்டத்தால் அற்றுப் போன உயிரினத்தை  மீண்டும் அறிமுகம் செய்து அற்றுப் போக வைக்கிறது மோடி அரசு.

இந்திய சிவிங்கிபுலிகளின் வாழ்வும் அழிவும்

சீத்தா” (புள்ளியுடைய) என்ற வடமொழி வேர்ச்சொல்லைக்கொண்டு சீட்டாஎன்றும் வேட்டைச் சிறுத்தை”(Hunting Leopard) என்றும் ஆங்கிலத்தில் சிவிங்கிப்புலிகள் அழைக்கப்படுகிறது.கன்னடத்தில் சிவுங்கிஎன்றும் தமிழகத்தில் சிவிங்கிப்புலிகள் என்றும் அழைக்கபடுகிற இவ்வேட்டை விலங்குகள் பார்ப்பதற்கு சிறுத்தைப் போன்று இருந்தாலும் உடற்கூறு, நிற அடர்த்தி மற்றும் புள்ளி அமைப்பு போன்றவற்றில் சிறுத்தையிலிருந்து இவை  வேறுபட்டவை.குறிப்பாக சிவிங்கிகளுக்கு தலை சிறியதாக இருக்கும்.கண்ணுக்கு கீழே கோடுகள் இருக்கும்.

 சமவெளி மற்றும் பாறைகள் நிறைந்த மலைப்பகுதிகளில் அது இருக்கும். ஏனெனில் அதன் விருப்ப இரையான இரலைகள் அங்கேதான் மேய்ந்து திரியும். அபூர்வமாக சில சமயங்களில் வீட்டு விலங்குகளைத் தூக்கிச்சென்று சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு.ஆனால் அவை ஒருபோதும் மனிதனைத் தாக்கியதில்லை. முதலில் இரையைப் பிடிக்க புதர்களில் மறைந்தும் பதுங்கியும் அடி மேல் அடிவைத்து சத்தமில்லாமல் பத்தடி தூரம் வரை வரை முன்னேறி இரைக்கு அருகே நெருங்குகிறது. அதன் பின்பாக தன் இறுதிகட்டப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது. சிறிது தூரத்திலயே உச்சகட்ட வேகமெடுக்கிற அதன் திறன்தான் என்ன! அதை ஒரு அற்புதம் என்றே சொல்லவேண்டும்! வெளிமான்களோ,கங்காருவோ அல்லது நாய்களோ இதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அறநூறு அடி கூட ஓட முடியாது. வெறும் ஆயிரத்தி இருநூறு அடிதூரத்திற்குள்ளாக ஓட்டத்தை துவங்கி வெளிமானைப் பாய்ந்து பிடித்த வேட்டைச் சிறுத்தைஒன்றை மேதகு மெக்மாஸ்டர் பார்த்துள்ளார். அனேகமாக உலகில் குறைவான தூரத்தில் அதி வேகமாக ஓடக்கூடிய பாலூட்டியாக வேட்டைச் சிறுத்தைகளேஇருக்கக்கூடும்.”-ரிச்சர்ட் லைடேக்கர்.(Richard Lydekker)

பிரிட்டிஷ் இந்தியாவின் சிறந்த இயற்கையாளரும் எழுத்தாளருமான லைடேக்கர் மெயச்சுவது, நொடிக்கு நூறடி வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு புழுதி பறக்க இரையை அடிக்கப் பாய்ந்து ஓடும்(பறக்கும்!) உலகின் வேகமான பாலூட்டியான  கம்பீர இந்தியச் சிவிங்கிப்புலி குறித்துத்தான். சிவிங்கிப்புலியின் வாழ்வியில் குறித்தும் அதன் வசீகரம் குறித்தும் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக த கேம் அனிமல்நூலில்  சிலாகித்த லைடேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்தியாவில் தான் வாழ்ந்த காலத்தில் மிகவும்  விரும்பிய சிவிங்கிப்புலிகளை அடுத்த ஐம்பது ஆண்டில் அழிந்துவிட்ட உயிரினம்என்று அறிவிக்கும் நிலை வருமென்று.

சிவிங்கிப்புலிகள் என்ற பெரும்பூனை இனம் இந்தியாவில் முற்றிலும் அற்றுவிட்டது.1947 ஆம் ஆண்டில் கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் குறு நில மன்னர்  சுர்குஜா  சுற்றுக்கொன்ற மூன்று சிவிங்கிப்புலிகளுக்கு(இவன் ஆயிரத்தி முன்னூறுக்கும் மேற்பட்ட வேங்கைப்புலிகளைச் சுட்டுக்கொன்று சாதனையும் படைத்துள்ளான்) பிற்பாடு அவற்றை இந்தியா எங்கிலும் இதுவரை எவரும் கண்டதில்லை.இறுதியில் 1952 ஆம் ஆண்டில் சிவிங்கிப்புலிகள் இந்தியாவில் அற்றுவிட்டதாக  ஒன்றிய அரசு அறிவித்தது.

இந்திய வரலாற்றில், “அற்றுவிட்டதாகஅறிவிக்கப்பட ஒரே பாலூட்டி உயிரினம் சிவிங்கிப்புலிதான். ஒருகாலத்தில் ஆப்பிரிக்க கண்டம் தொடங்கி கிழக்காக ஈரான்,சிரியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் தொட்டு இந்தியாவில் ராஜஸ்தான்,குஜராத்,மத்தியப் பிரதேசம் தாண்டி நம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் வரை விரவி வாழ்ந்திருந்த சிவிங்கிப்புலிகள் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துபோனதற்கு வேட்டையும் வாழிட அழிப்புமே முக்கிய காரணங்கள் ஆகும்.

குறிப்பாக,அதிகாரம் படைத்த மன்னர்கள் மற்றும் காலனிய ஆட்சியாளர்கள் கண்மூடித்தனமாக சிவிங்கிகளை வேட்டையாடியது,பரந்து விரிந்த காடுகளை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றியது,இரைவிலங்குகளின் அழிவு மற்றும் காடழிப்பு போன்ற காரணத்தால் இந்தியாவிலிருந்து சிவிங்கிகள் அற்றுப் போவதற்கு முக்கியக் காரணமாகின.இன்று உலகில் நான்கில் ஒரு பாலூட்டி விலங்கும் எட்டில் ஒரு பறவையும் அழிவின் விளிம்பில் உள்ளன.

உயிரினம் அருகிக் கொண்டே வந்தால் அது முற்றிலுமாக மறையப்போகிறது என்று பொருள்.கெடுதிதரும் முகவர்களில் மனிதரும் அடக்கம்.பலவிலங்குகள் ஒட்டுமொத்தமாக அழிவதற்கு மனிதர் காரணம்” என தனது புகழ்பெற்ற உயிரனங்களின் தோற்றம் நூலில் சார்லஸ் டார்வின் மிகச்சரியாக சுட்டிக் காட்டுகிறார்.

  சிவிங்கிப்புலிகள் மறு அறிமுக முயற்சியும் எதிர் விளைவுகளும்:

தற்போது ஆப்பிரிக்காவிலும் ஈரானிலும் சொற்பமான எண்ணிக்கையில்  வாழ்கிற சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு மறு அறிமுகம் செய்கிற முயற்சியானது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்  தொடங்கப்பட்டது.காட்டுயிர் நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் நீதிமன்றத்தின் தடை காரணமாக அத்திட்டம் அப்போது கைவிடப்பட்டது.மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் அரசியல் லாபத்திற்கும் விளம்பரத்திற்கும் சிவிங்கிபுலிகளின்  மறு அறிமுக திட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது.
ஒவ்வொரு உயிரினமும் தனது சொந்த மண்ணின் பருவநிலைகளுக்கு தகவமைந்துள்ளது என்பார் சார்லாஸ் டார்வின்.வெப்பமண்டல பிரதேசத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் குளிர்/பனிர்ப்பிரேதேசத்தில் தாக்கு பிடிக்க முடியாது.போலவே குளிர்/பனிப்பிரதேசத்தில்  வாழ்கின்ற உயிரினங்களால்  வெப்ப மண்டல பகுதிகளில் தாக்கு பிடிக்க முடியாது.இந்த பொதுவிதிக்கு சில தாவரங்களும் விலங்கினங்களும் விதிவிலக்காக உள்ளது என தனது உயிரினங்களின் தோற்றம் நூலில் டார்வின் குறிப்பிடுகிறார்.இமயமலைச் சாரலில் உள்ள பைன் மரங்களை இங்கிலாந்தில் நட்டு வளர்த்த டாக்டர் ஹூக்கரின்  பரிசோதனையை இதற்கு உதாரணம் காட்டுகிறார்.விலங்கினங்களில் சுண்டெலிகள் மனிதர்களால் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அவை எல்லா பருவநிலைகளுக்கும் வெற்றிகரமாக தகவமைந்துகொள்கிற ஆற்றலை சுட்டிக் காட்டுகிறார்.இன்று உலகில் எலிகள் வாழாத பகுதிகளே இல்லை எனலாம்.

ஆக பழக்கமான பருவநிலைக்கு எதிரான மண்டலங்களில் வாழ்வதற்கு தகவமைந்துள்ள சில தாவரங்களும் விலங்கினங்களும் உண்டு என்பது அவரது முடிபாகும்.அதனது பழக்கவழக்கங்களும் பழகிப்போதலும் இவ்வாறு எதிரான மண்டலங்களில் வாழ்வதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன என்கிறார்.இந்த மாற்றங்களை வழிநடத்துவதும் இயற்கையின் தேர்வே என்கிறார்.

ஆனால் இந்தியாவில் சிவிங்கிகளின் கதை வேறாகியது.இந்திய நிலப்பரப்பில் வாழ்கிற சிவிங்கிகளுக்கும் ஆப்பிரிக்க சிவிங்கிகளுக்கும் நிலப்பரப்பியல்,தட்பவெட்பம் என பல்வேறு வேறுபாடுகள்  உள்ளன.இந்திய சிவிங்கிகள் இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பிற்கேற்ப பல்லாயிரம் ஆண்டுகளாக வெற்றிகரமாக தகவமைந்துகொண்ட உயிரினம் ஆகும்.மனிதர்களின் இடையீடுகளால் ஒரு கட்டத்தில் இந்நிலப்பரப்பிருந்து அழிந்தே விட்டது.இயற்கை தேர்வின் படி ஓரிடத்தில் அற்றுப்போன உயிரினங்கள் மீண்டும் அதே இடத்தில உருவாவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகளும் ஆசிய சிவிங்கிகளும் ஒரே குடும்பமாக இருந்தாலும் உள்ளினத்தால் வேறுபடுகிறது.ஆப்பிரிக்க யானையும் ஆசிய யானைகளும் எவ்வாறு வெவ்வேறாக உள்ளதோ அதுபோன்றே.ஆப்பிரிக்க சிவிங்கிகள் ஆப்பிரிக்க நிலத்திற்கு ஏற்றவகையில் தகவமைந்துள்ள உயரினங்கள் ஆகும்.

ஆக இந்திய நிலப்பரப்பில் சிவிங்கிகளை மீண்டும் அறிமுகம் செய்யவேண்டும் என்றால் மிகவும் திட்டமிட்ட வகையில் நிதானமாக காரியங்களை ஆற்ற வேண்டும்.முதலில்  காப்பிட்ட இனப்பெருக்க(Captive Breeding) முறையில்  பராமரித்து அதன் எண்ணிக்கைகளை உயர்த்த வேண்டும்.பின்னர் படிப்படியாக வேலியிடப்பட்ட வனப் பகுதிகளில் பழக்க வேண்டும்.பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அவை வேட்டையாடி உணவு தேடும் வகையில் வெளிமான்கள்,பன்றிகள் உள்ளிட்ட இரை விலங்குகள் குறிப்பிட்ட வீதத்தில் இந்த வனப்பரப்பில் இருக்க  வேண்டும்.இவையாவற்றிற்கும் மேலாக சிவிங்கிகள் சுற்றித் திரிவதற்கு பரந்த புதர்க்காடுகள்  வேண்டும்.இவ்வளவு நிதானமாக அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய விஷயத்தை வெற்று விளம்பர மோகத்திற்காக திடுமென திறந்த வனத்தில் சிறுத்தைகளை விட்டால் அதுவும் மிக குறுகிய பரப்பளவிலுள்ள காட்டில் விட்டால் இறந்ப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.அதுதான் தற்போது நடந்த வருகிறது.மனிதர்களின் உயிர்களுக்கே மதிப்பில்லாத நாட்டில் விலங்குகள் குறித்தா மோடி அரசு கவலைப்படப் போகிறது? 70 ஆண்டுகளில் காங்கரஸ் செய்யாததை நாங்கள் செய்தோம் என தனது சுய அரசியல் விளம்பரப் அரசியலுக்காக  அப்பாவி விலங்கை மூடத்தனமாக பலியிடுவதை மோடி அரசு நிறுத்த வேண்டும் என்பதே காட்டுயிர் ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

 நன்றி:ஜனசக்தி 

 


Tuesday 20 June 2023

அதானியின் நிலக்கரி சுரங்கத்தைக் காக்க புலனாய்வு சோதனை அச்சுறுத்தலும் காடழிப்பும்

 பங்குவர்த்தக மோசடி மன்னன் அதானியின் ஹஸ்தியோ திறந்தவெளி நிலக்கரி சுரங்க திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் மீது புலனாய்வு அமைப்புகளை ஏவி அச்சுறுத்தி தனது கார்ப்பரேட்  விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது மோடி அரசு.கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த புலனாய்வு சோதனை நடவடிக்கைகள்  ஊடகங்களில் அதிகம் கண்டுகொள்ளப்படாததுதான் வேதனை.

மோடி அரசின் இந்த அராஜகமானது,சத்தீஸ்கர் காட்டின் அடியில் புதைந்துள்ள பலமில்லியன் டன் நிலக்கரி வளத்தை தங்கு தடையின்றி அதானியிடம் தாரை வார்க்க மேற்கொள்ளப்பட்ட மோசமான நடவடிக்கை என சூழல்வாதிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சியில் கார்ப்பரேட் நலனுக்கு நாட்டின் இயற்கை வளங்களை  வரைமுறையின்றி சூறையாடுப்படகிற இத்தகைய “சூழலியல் வன்முறை” நிகழ்வுகள்  இந்திய அரசியல் இதுவரை கண்டிராதது ஆகும்.

வனமும் கார்ப்பரேட்களும்:

மத்திய இந்தியாவில் உள்ள  சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 40 விழுக்காடு காடுகள் ஆகும்.இந்தியாவின் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட மாநிலங்களில் சத்தீஸ்கர் மூன்றாம் இடத்தில் உள்ளது.இந்தியாவில் நிலக்கரி அதிகம் கிடைக்கிற மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர்.இயற்கைவாதிகள் இக்காட்டின் தாவரங்களையும் உயிரினங்களையும் கண்டு ரசிக்க,கார்ப்பரேட்களோ இக்காடுகளின் மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள நிலக்கரி வளத்தை கறுப்புத் தங்கமாக பார்க்கிறார்கள்.உலகமயகாலகட்டத்தில்  அனைத்தும் சரக்காக/பண்டமாக மாறிய நிலையில்,இயற்கை வளங்கள் லாபத்தை வழங்குகிற அட்சய பாத்திரமாக கார்ப்பரேட்களின் கண்களுக்குத் தெரிகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அடர்ந்த காடுகளில் ஒன்று ஹஸ்தியோ அரந்த் காடாகும்.சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவில் அடர்த்தியான மரங்களால் சூழப்பட்டுள்ள இக்காட்டில் 82 வகையான புள்ளினங்களும் 167 வகையான தாவரங்களும்  பட்டியிலடப்பட்டுள்ளன.இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலானது இக்காட்டை "மத்திய இந்தியாவில் பழமையான சால் மற்றும் தேக்கு காடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய துண்டாடப்படாத காடு" என்று விவரித்துள்ளது.இக்காட்டில் ஹஸ்தியோ நதியொன்று பாய்கிறது.இக்காடு நதியின் நீர் பிடிப்புப் பகுதியாக உள்ளதாக வற்றாமல் ஆண்டுதோறும் ஓடுகிறது.இந்த வனத்தில் கோண்ட் , ஓரான் உள்ளிட்ட பழங்குடிகள் மட்டும் சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கின்றனர்.வனப்பாதுகாப்பு சட்டம் வழங்குகிற குறைந்தபட்ச உரிமைகளைக் கொண்டு காட்டை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட அமைதியான பசுமை மாறா காடும், காட்டை நம்பிய பழங்குடிகளும் இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்ந்த நிலையில்தான் அதானி மூலமாக ஹஸ்தியோ காட்டிற்கு ஆபத்து வந்தது.

அதானியின் வருகையும் காடழிப்பும்:

கார்ப்பரேட்களின் கண்ணில் வளம் கொழிக்கிற காடுகள் தென்பட்டுவிட்டால் அவர்களது கோடரிகள் வேடிக்கை பார்ப்பதில்லை. ஹஸ்தியோ காட்டில் சுமார் ஐந்து பில்லியன் டன் அளவிலான நிலக்கரிவளம் இருக்குமென நிபுணர்கள் கணித்தனர்.அவ்வளவுதான் அதானி குழுமம் களத்தில் குதித்தது.2007 ஆம் ஆண்டில் ஹஸ்தியோ காட்டில் சுரங்கப் பணிகளை கையாள்கிற ஒப்பந்தத்தைப் பெற்ற அதானி நிறுவனம்,2013 ஆம் ஆண்டில் நிலக்கரியை அகழ்ந்து எடுக்கிற சுரங்க அனுமதியை பெற்றது.முதற்கட்டமாக 1882 ஏக்கர் பரப்பளவில் நிலக்கரியை வெட்டி எடுக்கத் தொடங்கிய அதானி நிறுவனம்,அப்பகுதியில் இருந்த நீண்ட நெடிய மரங்களடங்கிய காட்டை மொட்டையடித்தது. ஒருகாலத்தில் சூரியவெளிச்சம் தொட்டிராத தரைகள்,இன்று மரங்கள் வெட்டப்பட்டு,பள்ளம் தோண்டப்பட்டு பெரும் பள்ளத்தாக்குகளாக, பாலை நிலமாக காட்சியளிக்கிறது.

அதானியின் சுரங்கத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த  பழங்குடிகள் காடழிப்பிற்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழக்காடுகிற LIFE என்ற தொண்டு நிறுவனம் மக்கள் போராட்டத்திற்கு சட்டரீதியாக வலு சேர்த்தது.பழங்குடிகள் போராட்டத்திற்கு பல்வேறு சூழல்வாதிகள் பக்க பலமாக இருந்தனர்.குறிப்பாக என்விரோன்டிரஸ்ட் என்கிற சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் மூலமாக சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற  புவியலாளர்  ஸ்ரீதர் என்பவர் அதானி நிறுவனத்தின் சுரங்க முறைகேடுகளை அம்பலப்படுத்துவதில் தீவிரமாக செயலாற்றினார்.அதானியின் வேறொரு மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த  ஸ்ரீதரிடம் அதானி நிறுவனம் பேரம் பேச முயற்சித்து தோல்வியடைந்தது. இவ்வழக்கைப் பின்னர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதானிக்கு  வளைந்து கொடுக்காத காரணத்திற்காக திரு ஸ்ரீதரிடம்  வருமான வரித் துறை மூலமாக சட்ட நெருக்கடி கொடுத்தது அரசு.இதன் உச்சமாக பெகாசாஸ் எனும் இஸ்ரேல் உளவுமென்பொருள் மூலமாக ஸ்ரீதரின் அலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.எதிர்க்கட்சி தலைவர்கள்,பல்வேறு துறை சார்ந்த செயற்பாட்டாளர்களின் அலைபேசியை அரசு உளவு பார்த்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டை ஒன்றிய அரசு ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.கார்ப்பரேட்களின்  முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுகிற செயற்பாட்டாளர்களை சட்டபூர்வ வன்முறையின் துணைக் கொண்டு அச்சுறுத்துவது,அலைபேசியை ஒட்டுக் கேட்டு சதி செய்வது என அரசும் கார்ப்பரேட்களும் கைகோர்த்துக் கொண்டு நாட்டைச் சுரண்டுவது புதிய இந்தியாவின் இன்றைய எதார்தமாகிப் போனது.
புலனாய்வு அமைப்புகளின் “துப்புக்களும்” மேற்குலக சதி பிரச்சாரமும்

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதானியின் சுரங்க முறைகேடுகளை அம்பலப்படுதிய என்விரோன்டிரஸ்ட்,மத்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்(CPR) மற்றும் LIFE  ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்கள் மீது சோதனை செய்த புலனாய்வு அமைப்பு,சுரங்கத்திற்கு எதிராக பழங்குடிகளை போராடத் தூண்டியதாகவும் போராட்டத்திற்கு  நிதி வழங்கியதாகவும்,அதானியை வேண்டுமென்றே  சிக்க வைக்க  சதி செய்ததாகவும் ,இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கிற மேற்குலக சதி எனவும் “துப்பு” துலக்கியது.

CPR அலுவலகத்தில் ஒரு டசன் அதிகாரிகள் நுழைந்து அங்கிருந்த கணினிகள் மற்றும் அலைபேசிகளை எடுத்துச் சென்று அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.தேச வளர்ச்சிக்கு எதிராக சுரங்க எதிர்ப்பு போராட்டத்தை வழிநடத்தியதாக  சிபிஆர் மீது குற்றம்சாட்டப்பட்டது.என்விரோன் டிரஸ்ட் அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாகக் கூறி,அதானி எதிர்ப்பு போராட்டத்தை  பலப்படுத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு,அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அமெரிக்க தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்திய நீதிமன்றங்களில் நிலக்கரி திட்டத்திற்கு எதிராக வழக்கு நடத்துகிறார் என லைப் அமைப்பின் இணை நிறுவனர் திரு ரித்விக் தத்தா மீது குற்றம் சாட்டியது வருமான வரித்துறை.

இம்மூன்று தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் யாவும் அதிரடியாக முடக்கப்பட்டன.இந்த அறக்கட்டளைகளுக்கு 80-90 விழுக்காட்டு நிதி வெளிநாட்டில் இருந்தே வருகிற நிலையில்,அரசு கணக்கை முடக்கியதால் அதனது செயல்பாடுகளும் முடங்கின.இந்த நிறுவனங்களில் பணிபுரிகிற நூற்றுக்கணக்கான அலுவலர்களுக்கு சம்பளம் தர இயலாமல் தடுமாறின.அரசின் இந்த சட்டப்பூர்வ தாக்குதலுக்கு பின்னர் அதானி சுரங்க எதிர்ப்பு போராட்டமானது அரசு எதிர்பார்த்தவாறு,பின்னடவை எதிர்கொள்ள நேரிட்டது.கடந்த செப்டம்பர் 27 இல் லைப் அமைப்பின் வக்கீல்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக சுரங்க முறைகேடுகள் மீதான தங்களது வழக்கை திரும்பப்பெற்றுக் கொண்டனர்.இதனால் அதானி சுரங்கத்திற்கு நீதிமன்றத்தில் நிலவிய தடை விலகியது.

வழக்கு திருப்பப்பெறப்பட்ட அன்றைய தினமே சுமார் 106 ஏக்கர் பரப்பளவிலுள்ள காடுகள் அதானியின் இரண்டாம் கட்ட சுரங்கப் பணிகளுக்காக  அழிக்கப்பட்டது.சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சுக்லா போன்ற சுரங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் வருமான வரித்துறையின் அலைக்களிப்புகளால் அன்றைய தினத்தில் நிகழ்விடத்திற்கு வர இயலாமல் போனது.தான் தில்லியில் இருக்கும்போது திட்டமிட்டே  அன்றைய தினம் காட்டை அழித்ததாக சுக்லா குற்றம் சாட்டினர்.இதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திடம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு சென்றதால் தற்காலிகமாக சுமார் 2700  ஏக்கர் காடுகள் காப்பாற்றப்பட்டுள்ள.

ஒன்றிய அரசின் இந்த சட்டப்பூர்வ வன்முறையை கண்டித்து சுமார் நூறு அறிவுஜீவிகள் ஒன்றிய அரசுக்கு கண்டனக் கடிதம் எழுதினர்.நாட்டின் வளங்களைக் காக்க நீதிமன்றத்தை நாடினால்,புலனாய்வு மற்றும் வருமானவரித்துறை கொண்டு மிரட்டி அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கார்ப்பரேட் கொள்ளையா?வளர்ச்சிக்கு எதிரான சதியா?

பாஜக அரசைத் பொறுத்தவரை கார்ப்பரேட் என்றால் வளத்தை உருவாக்குபவர்கள்”.அதற்காகத்தான் கார்ப்பரேட் வரிகளை குறைத்து வளத்தை உருவாக்க ஊக்கப்படுத்துகிறது பாஜக அரசு.இயற்கை வளத்தையும் மனித வளத்தையும் சூறையாடி சொந்த லாபத்தை குவிப்போர்கள்தான் பாஜகவிற்கு வளத்தை உருவக்குவோர்களாக தெரிகிறார்கள்.

மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையை எதிர்ப்போர்கள் தேசத் துரோகிகளாகவும் இந்திய வளர்ச்சியை மட்டுப்படுத்த முயற்சிக்கிற மேற்குலக சதிக்கு துணை நிற்பதாகவும் ஒரு பொய் பிரச்சாரத்தை மோடி அரசு மேற்கொள்கிறது.இதன் மூலம் தனது முதலாளித்துவ ஆதரவு கொள்கைக்கு நியாயம் கற்பிக்க முயற்சிகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களைக் கண்டு மோடி அரசு எப்போதுமே அஞ்சி நடுங்குகிறது.கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிற்கு புலனாய்வு அமைப்பு அளித்ததாக இருபத்திமூன்று பக்க அறிக்கையொன்றை திட்டமிட்டே ஊடகங்களில் கசியவிடப்பட்டது.அந்த அறிக்கையின் சாராம்சமானது வருமாறு

“சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிருந்து நிதி பெற்றுக்கொண்டு(குறிப்பாக இங்கிலாந்து,ஜெர்மனி,அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து) இந்தியாவின் வளர்சித்திட்டங்களை மக்களின் துணைக்கொண்டு முடக்குகின்றன. இதில், அணுமின் நிலையத்திட்டங்கள்,அனல் மின் நிலையத் திட்டங்கள்,மரபணு மாற்றப்பட்ட விதைகள்,பெரும் தொழில்துறை திட்டங்கள்(போஸ்க்கோ ,வேதாந்தா),நீர்மின் திட்டங்கள்(நர்மதா சாகர் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகளின் திட்டங்கள்) மற்றும் சுரங்கத்திட்டங்கள் போன்றவை அடங்கும்.இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு(GDP) ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று விழுக்காடு என்ற அளவில் பாதிப்பு ஏற்படுகிறது என நீள்கிறது.

வேதாந்தாவின் திட்டங்களை கிரீன் பீஸ் அமைப்பு முடக்க முயல்வதாக  அறிக்கை குற்றம் சாட்டுகிறது.காஷ்மீர் பகுதியின் மனித உரிமை மீறல்  குறித்தும் வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்கிற சுரங்கப்பணிகள் குறித்தும் குரல் எழுப்பிவரும்  தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நெதர்லாந்திலிருந்து நிதி வருவதாக அறிக்கை சாடியது.

இந்த அறிக்கைகள் வந்த அடுத்த சில நாட்களில் இந்தியாவிலிருந்து செயல்படுகிற கிரீன் பீஸ் அமைப்பின் கிளை அலுவலக கணக்குகள் முடக்கப்பட்டன.இந்திய நிலக்கரி சுரங்கங்கள் பற்றி கிரின்பீஸின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கிளம்பிய செயற்பாட்டாளர் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார்.

தற்போது குஜராத் கலவரம் குறித்த பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை தடை செய்த மோடி அரசு,பின்னர் பிபிசி அலுவலகத்தில் வருமானவரி துறையை கொண்டு சோதனை நடத்தி அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த காலம் முதலாக ஆளும் கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கிற எதிர்க்கட்சிகளை தாக்குவது,அரசியல் கட்சிகள் சார முற்போக்கு/சூழலியல்  அமைப்புகள்,செயற்பாட்டாளர்களை சட்டப்பூர்வ வன்முறையை பிரயோகித்து அச்சுறுத்துவது,மேற்குலக அரசுகளால் ஆட்டுவிக்கப்படுவோர் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்குவோர் என்றும் முத்திரை குத்துவதை போன்ற பொய் பிரச்சாரத்தை பரப்புவதை  முக்கிய செயல்திட்டமாக வைத்துள்ளது.

அரசு ஆதரிக்கிற பெரும் திட்டங்களால் இயற்கை வளத்திற்கும் மக்களுக்கும் என்ன பாதிப்பு ஏற்படுகிறது,ஏன் பூர்வகுடி மக்களும் சாமனிய உழைக்கும் மக்களும் அரசின் செயற்பாடுகளை  எதிர்க்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு ஆளும்வர்க்கதிடன் எந்த பதிலும் இல்லை.ஆகவேதான்  சதிக் கோட்பாடுகளில் அரசு தஞ்சமடைகிறது.

உலகளவில் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் பெருவணிக தொழில்குழுமங்களுக்கும் அவர்களுக்காக இயங்கும் அரசுக்கும் எதிரான போராட்டங்கள் சாமானிய உழைக்கும் மக்களால்  தீர்க்கமாக முன்னெடுத்துவரும் சூழலில், இந்திய ஒன்றியத்தில் அரசின் கார்ப்பரேட் நலனிலான  பொருளாதர கொள்கைகளையும் அதன் செயல்பாடுகளையும் விமர்சிப்போர்,எதிர்ப்புக் குரல் எழுப்புவோர்,அரசின் நடவடிக்கைகளில் அவநம்பிக்கை கொள்வோர் தேசத்தின் எதிரியாகவும்,வெளிநாட்டு கைக்கூலிகளாகவும் கட்டமைக்கிற அரசின் முயற்சி ஒட்டுமொத்த சனநாயகவெளியை  புதைப்பதற்கான பாசிச கருத்தியலின் உச்சமாகும்.உண்மை என்னவென்றால் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளுக்கு வருகின்ற வெளிநாட்டு  நிதியால்தான் மனித நாகரிகத்திற்கு சவால் விடும் வகையிலான மிக மோசமான மத பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு வரும் நிதி குறித்து கள்ள மௌனம் சாதித்துக்கொண்டு மற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்களை ஒடுக்குவதுதான்  முரண்.

அண்மையில் ஹிடென்பர்க் அறிக்கையானது, அதானியின் மோசடியை அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்தியபின் அதன் பங்குகள் வேகமாக சரிந்து உலக பணக்காரர்கள் பட்டியிலில் பின்னுக்குச் சென்றார் அதானி.ஆனபோதும் மோடியுடனான தனது அதீத அரசியல் செல்வாக்கின் காரணமாக,இவ்வளவு நெருக்கடிகளையும் கடந்து தனது கார்ப்பரேட்  வலைப்பினலை அதானியால் உறுதிப்படுத்து முடிகிறது என்பதைநாமிங்கே  கவனிக்கவேண்டும்.இது மிக மோசமான காலகட்டம்.நரகம் காலியாக கிடக்கிறது,ஏனெனில் அனைத்து பேய்களும் இங்கே நம்முடன் உலாவுகிறது என்ற ஷேக்ஸ்பியர் வசனம் தான் நினைவுக்கு வருகிறது..

நன்றி-ஜனசக்தி 

Sunday 11 June 2023

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம்: கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் லாபத்திற்கு 80 கோடி இந்தியர்களின் சுகாதாரத்தை காவு கொடுப்பதா?

 


கடந்த 2021 ஆம் ஆண்டின் சுதந்திர தின விழா உரையில்  பேசிய பிரதமர் மோடி,நாட்டின் 80 கோடி மக்களுக்கு ஊட்டச் சத்து குறைபாடு உள்ளதாகவும், இப்பிரச்சனையை போக்க நியாய விலைக் கடைகளின் மூலமாக நாட்டு மக்களுக்கு செறிவூட்டப்பட்ட  அரிசி வழங்கப்போவதாகவும் அறிவித்தார்.

பிரதமர் மோடியின்  இந்த அறிவிப்பிற்கு பின்னால் இந்திய உணவுச் சந்தையை கட்டுப்படுத்துகிற பன்னாட்டு கார்ப்பரேட்களின் வர்த்தக வலைப்பின்னகள் ஒவ்வொன்றாக தற்போது அம்பலமாகிவருகிறது.நெதர்தலாந்து நாட்டின் உணவு நிறுவனமான ராயல் டிஎஸ்எம் என்ற கார்ப்பரேட்  நிறுவனத்தின் வர்த்தக லாபத்திற்காக சாமானிய மக்களின் சுகாதாரத்திற்கு கேடு ஏற்படுத்துகிற  ஆபத்தான செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை எதிர்கட்சிகள், உணவு பாதுகாப்பு வல்லுனர்கள்,சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றின் எதிர்ப்புகளையும் மீறி அவசரம் அவசரமாக அமல்படுத்திவருகிறது மோடி அரசு.

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியில், திட்டமிட்ட அளவில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய நுண் ஊட்டச்சத்துகளை செயற்கையாக ஏற்றுவதே செறிவூட்டப்பட்ட அரிசி ஆகும்.இந்த நுண் ஊட்டச் சத்துக்கள் முதலில் கலவையாக பொடி(பிரிமிக்ஸ்) செய்யப்படும்.பின்னர் மாவாக்கப்பட்ட அரசியோடு குறிப்பிட்ட வீதத்தில் வேதியல் கலவை சேர்க்கப்பட்டு அரசி மணி போல உற்பத்தி செய்யப்படும்(1:100 என்ற வீதத்தில் வேதியல் நுண்ஊட்டக் கலவை அரிசி மாவோடு சேர்க்கப்படுகிறது).வேதியல் கலவையையும் அரிசி மாவையும் இணைத்து உருவாக்கப்பட்ட அரிசியே செறிவூட்டப்பட்ட அரசி ஆகும். உணவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்புகளின்படி,இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 291 மாவட்டங்களை தேர்வு செய்து, சுமார் 9மில்லியன் டன் செறிவூட்டப்பட்ட அரிசியை கடந்த மார்ச் மாதத்திற்குள் வழங்குகிற திட்டம் முடிக்கிவிடப்பட்டது.

தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 5.51 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா’, முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிற வகையில் சுமார் ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கிட  தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது.தற்போது நான் வசிக்கிற மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த அரிசி நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருவதும்,பல்வேறு இயக்கங்களில் எதிர்ப்புகள் காரணமாக தற்காலிகமாக சில இடங்களில் மட்டும் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதும் அறிய முடிகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி அனைவருக்கும் பாதுகாப்பானதா?

கோதுமை,எண்ணெய் வித்துக்கள்,பால் மற்றும் தற்போது அரிசி ஆகிய உணவுப் பொருட்களுக்கு செறியூட்டல் கொள்கையை அரசு வரையறை செய்துள்ளது. நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்துவதே உணவு தானிய  செறிவூட்டல் முறையின் நோக்கம் என இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) கூறுகிறது.

கடந்த 2019-20  ஆண்டில் தேசிய குடும்ப நல அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி சுமார் 57 விழுக்காட்டு பெண்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்களாகவும் ஐந்தில் ஒரு பெண் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக கூறுகிறது.குறிப்பாக வைட்டமின்-A வைட்டமின்-D குறைபாடு அதிம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. இந்த நிலையில்தான் 2024 ஆண்டிற்குள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களிடம் செறிவூட்டப்பட்ட அரசியை பொது விநியோக அமைப்பின் மூலமாக நாடு முழுவதும் விநியோகிக்க வேண்டும் என மோடி அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது.வெளிப்பார்வைக்கு மக்களின் சுகாதார நலனில்  அக்கறை உள்ளது போல இத்திட்டம் தெரிந்தாலும்,அதன் உள்ளர்ந்த கார்ப்பரேட் நலனும் சுகாதரக் கேடும் பூடகமாக மறைக்கப்படுகிறது.

இந்த நுண் ஊட்டச் சத்துக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளாமல் இருப்பதின் குறைபாட்டை வெளிப்படுத்துகிறது.சாமானிய மக்களின் வறுமையான குடும்ப சூழலும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு காய்கறிகளும் பழ வகை உணவுகளும் உட்கொள்ளாமையே காரணம் என்ற உண்மையை அரசு ஒத்துக்கொள்கிறது.அதே வேளையில் செறிவூட்டப்பட்ட  அரிசி வழங்கலையே அதற்கு மாற்றாக முன்வைக்கிறது.

இந்திய மக்களின் இரும்புத்சத்துக் குறைபாடுகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி நல்ல மாற்றாக இருக்குமென்றும்,ரத்தத்தின் ஹீமோக்ளோபின் அளவையும் அனீமிக் குறைபாடுகளையும் சரி செய்யும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் முதனிலை அதிகாரி சிங்கால் தெரிவிக்கிறார்.இந்திய மக்கள் தொகையில் சுமார் 60 விழுக்காட்டு மக்கள் அரிசியை உட்கொள்வதால் அனிமிக் குறைபாடு உடைய சுமார் 35-40 விழுக்காட்டு மக்கள் பயனடைவார்கள் என்கிறார்.

ஆனால் உணவுப் பாதுகாப்பு துறை வல்லுனர்களின் கூற்றோ இதற்கு நேர் மாறாக  உள்ளது.இரும்புச் சத்து ஏற்றப்பட்ட அரிசியானது ,அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்றதல்ல என எச்சரிக்கின்றனர்..குறிப்பாக குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என்கிறார்கள்.

ஒருவர்,செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்வதன் மூலம் உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பின் அளவு  கணிசமாக அதிகரிக்கும்.இது நீரிழிவு நோய்க்கும் உயர் அழுத்தத்திற்கும் இட்டுச் செல்லும் என எச்சரிக்கிறார்கள்.குறிப்பாக பெண் உடலில் அதிகரிக்கிற இந்த அளவுகள் மாதவிடாய் சமயத்தில் இயற்கையாக வெளியேறிவிடும் எனவும் ஆண்களுக்கே இதனால் அதிக பாதிப்பு ஏற்படும் என அபாய மணி அடிக்கிறார்கள்.

இரும்புச் சத்து ஏற்றப்பட்ட அரிசி உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதாக எந்த ஆராய்ச்சி முடிவும் நிரூபணம் செய்யவில்லை.மேலும் பிற இணை நோய்கள் உள்ளவர்கள் இந்த அரிசியை உட்கொள்வதில் பல பிரச்சனைகள் உள்ளன.உதாரணமாக இந்தியாவில் தலசீமியா நோயாளிகள் அதிகம்.ரத்த சோகையின் தீவிரமான பிரச்சினைகளில் ஒன்றான, அரிவாள் உயிரணுச் சோகையால் (Sickle cell anaemia) பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொண்டால்  ஏற்கெனவே உள்ள பாதிப்புகளோடு புதிய பாதிப்புகளும் ஏற்படும்.

இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணைய அதிகாரிகளும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.ஆனால் ‘தலசீமியா நோயாளிகள் மற்றும் , அரிவாள் உயிரணுச் சோகையால் (Sickle cell anaemia) பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அரிசி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்” என்ற எச்சரிக்கை வாசகத்தை அரிசி பாக்கெட்கள் மேல்  ஒட்டிவிடுவோம் என காரணம் கூறுகிறார்கள். பொது விநியோக திட்டத்தில் அரிசி வாங்குகிற பாமர மக்கள், போதிய கல்வியறிவும் விழிப்புணர்வும் இல்லாத நிலையில்,எத்தனை மக்கள் இந்த எச்சரிக்கை வாசகத்தை படித்து அரிசி உட்கொள்வதை தவிர்ப்பார்கள்?

இந்தியாவில் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களை கண்டறிவது, குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்குகிற பிரத்யேக திட்டம் நடைமுறையில் இருக்கும்போது,எதற்காக மக்கள் தொகையில் பாதிபேருக்கு இந்த அரிசியை வழங்க வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.

பொது விநியோகத் திட்டம் மூலம் ஏற்கனவே இந்த அரிசியை பெற்ற மக்கள், அரிசியைக் களையும் போது அரிசி தண்ணீரில் மிதப்பதாகவும், வழக்கமான முறையில் வேகவைக்க முடியவில்லை எனவும்  குற்றம் சாட்டுவது கவனிக்கத்தகது.

 அவசரகதியில் திட்ட அறிவிப்பும் ஐயங்களும்:

இவ்வளவு ஆபத்தும் ஐயங்களும் தீராத வேளையில் அவசரகதியில், உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கட்டாயமாக திணிப்பது என்பது தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானதும் ஜனநாயக விரோதமும் ஆகும்..

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தைப் பொறுத்தவரையில்  மருத்துவ அறிவியல் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.மேலும்  ரத்தசோகை உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுக்கான தீர்வுகளை, செறிவூட்டுப்பட்ட அரிசியால் மட்டுமே தீர்க்க முடியாது என்பதும் தெளிவாகிறது.

அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த திட்டத்தை அவசர அவசரமாக நாடு முழுவதும் மோடி அரசு அமல்படுத்த துடிப்பதற்கு பின்னால் தனியார், பெருநிறுவனங்களின் செல்வாக்கு இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது.குறிப்பாக  செறிவூட்டப்பட்ட அரிசியையும் அதற்குத் தேவையான செயற்கை நுண்ணூட்டச் சத்துகளையும் உற்பத்தி செய்கிற பன்னாட்டு நிறுவனங்கள்,அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து இத்திட்டத்தை அமலாக்குவது அம்பலமாகியுள்ளது.

மோடி அரசின் அறிவிப்பின் பின்னாலான கார்பரேட் வலைப்பின்னல்:மோடி இத்திட்டத்தை அறிவித்த அடுத்த பதினெட்டு மாதங்களில்,ராயல் டி எஸ் எம் நிறுவனமானது 3,600 டன் திறனில் பிரம்மாண்டமான செறிவூட்டப்பட்ட அரிசி ஆலையை ஹைதராபாத்தில் நிறுவுகிறது.தனது உற்பத்தி திறனை அதிகரிக்க,பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனம்,அரிசி ஆலைகள்  மற்றும் அரசு அதிகாரி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் செறிவூட்டபட்ட அரிசியின் சந்தை சுமார் 1,800 கோடி முதல் 35,000 ருபாய் வரை இருக்கும் எனவும் இதில் சுமார் 17 % சந்தையை ராயல் டி எஸ் எம் நிறுவனம் கைப்பற்றிவிட்டதாகவும் உணவுச் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.இதனாலே ராயல் டி எஸ் எம் நிறுவனத்தின் பிராந்திய துணை அதிகரி ரான்சிக்ஸ், மோடியின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து பாராட்டு மழை மொழிகிறார்.இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உணவு உற்பத்தி சந்தையை கைப்பற்றுவதற்கு பல கார்ப்பரேட்கள் போட்டியிடுகின்றன.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும்  அரசியல் தரகர்கள் மூலமாகவும் இந்தியாவின் செறிவூட்டப்பட்ட  அரிசி திட்டத்தை வடிவமைப்பதிலும் சந்தையை கைப்பற்றுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மெக்சிகோ நாட்டில் உணவு உற்பத்தி நிறுவனங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாநாடு ஒன்றை நடத்தின.அந்த மாநாட்டின் மையமானது “செறிவூட்டப்பட்ட அரிசியை உலகச் சந்தையில் வெற்றிகரமாக நிறுவுவதற்கான விழுப்புணர்வு இயக்கத்தை கட்டமைப்பது என்பதாகும்.அந்த மாநாட்டில்  சர்வதேச ஊட்டச்சத்து குழுமம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஜோயல் ஸ்பைசர் இவ்வாறு பேசுகிறார்                 “ செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து நாம் அரசின் கொள்கை வகுப்பாளர்களிடம் விவாதிப்பதில்லை.நமது திட்டத்தில் இது ஒரு குறையாக உள்ளது.ஆகவே அரசின் கொள்கையை தீர்மானிப்பவர்களிடம் நாம் தொடர்ந்து பேச வேண்டும்.செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்தும் அதனது இறுதி கட்ட பயனாளிகள் குறித்தும் நாம் எடுத்துக் கூற வேண்டும்”என்கிறார்.

இந்த மாநாடு நடைபெற்ற அடுத்த ஆண்டில் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையமானது செறிவூட்டப்பட அரிசியின் சந்தை தேவையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கிறது.இது தற்செயலானது அல்ல.நாம் மேற்குறிப்பிட்ட  சர்வதேச ஊட்டச்சத்து குழுமம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு டி எஸ் எம் நிறுவனம் நிதி வழங்குவது குறிப்பிடத்தக்கது.இந்த தொண்டு நிறுவனங்கள் அரசின் கொள்கை உருவாக்கத்தில் ஈடுபடுகிற பொதுத்துறை அதிகாரி மட்டத்தில் பல கட்ட ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. அரசின் கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தி தனக்கான நலனை முன் நிபந்தனையாகக் கொண்டு செறிவூட்டப்பட்ட அரிசிக்கான கொள்கையை வெற்றிகரமாக உருவாக்கிக்கொள்கிறது.

சர்வதேச ஊட்டச்சத்து குழுமம்,சைட் அண்ட் லைப்,பாத்(PATH)கையின்(GAIN) என பல்வறு தொண்டு நிறுவனங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அமைத்த குழுவில் அங்கமாக உள்ளது.இந்த அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நெதர்லாந்தில் டி எஸ் எம் நிறுவனம் நிதி உதவி வழங்கி வருவது தற்செயல் ஆனது அல்ல. கடந்த 2013 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, கையின் உணவு தொண்டு நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்காமல் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.சர்வதேச அளவில் அரசுகளிடம் தரகர் வேலை பார்ப்பதும்,கொள்கைகளில் தலையீடு செய்வதும் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்காக நாட்டின் உணவுக் கொள்கையை உருவாக்குவதை ஏற்க மறுக்கிற  இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையமானது எங்களது புரிதலை ஆழப்படுத்திக் கொள்ளவே தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஆலோசனைகள் பெற்றதாக மழுப்புகிறது.அதேநேரத்தில் 2020-21  ஆம் ஆண்டில் டி எஸ் எம் நிறுவனத்தின் லாபமானது அதற்கு முந்தைய ஆண்டை விட 60.5 விழுக்காடு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மோடி அரசு முழங்குகிற புதிய இந்தியா என்பதற்கான அர்த்தம்,பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்கு 80 கோடி மக்களின் சுகாதார நலனை காவு கொடுப்பதாகும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

என்ற வள்ளுவன் வாக்கு பலிக்கிற நாள் வெகுதொலைவில் இல்லை.

 நன்றி:ஜனசக்தி 

ஆதாரம்:

https://www.hindutamil.in/news/opinion/columns/967677-fortified-rice-4.html

https://theprint.in/india/whats-fortified-rice-why-is-modi-govt-pushing-it-why-some-experts-arent-excited/1111091/

https://www.reporters-collective.in/trc/fortification-part-3

https://www.thehindu.com/news/national/congress-questions-the-modi-government-for-rolling-out-fortified-rice-under-national-food-security-act-despite-caution-by-experts/article66893895.ece