Pages

Thursday 17 April 2014

சூழலியல் சிக்கலும் தொழிலாளர் போராட்டமும்-இல்வா போராட்டத்தை முன்வைத்து




உலகெங்கிலும் இன்று நாம் எதிர்கொள்கிற சூழலியல் சிக்கல்களான காலநிலை மாற்றம்,நீர் மாசு,காற்று மாசு,நிலப்பயன்பாட்டு மாற்றம் போன்றவற்றிக்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்வது முதலாளித்துவத்தின் லாப நோக்கிலான பொருளுற்பத்தி முறையாகும்.இவ்வுற்பத்தி முறையானது புறச்சூழலுக்கு மட்டும் கேடு விளைவிக்கவில்லை. மாறாக உடைமை பறிப்பு,வேலை உத்தரவாதமின்மை,ஊதியம் குறைப்பு,வேலை நேர நீட்டிப்பு போன்றவற்றால்  சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பிலும் அது பெரும் சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது. எங்கெல்சின் சொற்களில் சொல்வதென்றால்”இன்றைய சமூகப் பகைமைகள் அனைத்தின் வித்து (இதில்) அடங்கியிருக்கிறது”. ஆகவே நாம் இச்சிக்கலை சமூகச்சூழலியல் சிக்கலாகத்தான் அணுகவேண்டியுள்ளது. முதலாளித்துவ சமூகத்தின் லாபநோக்க உற்பத்தி முறையானது சூழல் கரிசனத்தையும் சமூக கரிசனத்தையும் மிக வேகமாகப் பின்னுக்குத் தள்ளுகிறது. அதன் கவனம் முழுவதும் உபரி மதிப்பான லாபத்தை நோக்கி குவிந்திருப்பதே இதற்குக் காரணம். மேலும் கடந்த இரு நூற்றாண்டில் (குறிப்பாக கடைசி கால் நூற்றாண்டு)பொருளாதாரத்தின் மீதான தன் ஆளுமையை முதலாளித்துவ சமூகத்திடம் இழந்து நிற்கும் அரசால்,சமூகத்தையும் இயற்கையயும் ஒருங்கே அழித்துக்கொண்டிருக்கும் முதலாளியத்தின் பொருளாதாய உற்பத்தி நிகழ்முறை குறித்த தீர்மானகரமான முடிவுகளை  நிச்சயம் எடுக்கவியலாது என்பது வெள்ளிடைமலை(பொருளாதார வளர்சி எனும் சாயம் பூசும் “மக்கள் நல”ப் பணியோடு அரசின் உள்ளீடு முடிந்துவிடுகிறது).ஒரு பக்கம் சமூகத்தேவையை மிஞ்சிய லாப நோக்கிலான மிகை உற்பத்தி. மறுபக்கம் அப்பொருட்களின் உற்பத்தி நிகழ்முறைக்காக சுரண்டப்பட்ட வளங்களின் இழப்புகள் மற்றும் கழிவுக் குவியல்கள். முன்சொன்னது பொருளாதரத் தேக்கநிலைக்கு இட்டுச்சென்றது என்றால் பின்சொன்னது காலநிலை மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த சிக்கல்கள். ஆனால் இரண்டிற்குமான விளைவு என்னவோ ஒன்றுதான். அது-அழிவு ! சர்வ நாசம் ! மனித இனத்தின் அழிவு மட்டுமல்ல; இப்பூவுலகின் ஒட்டுமொத்த அழிவாகவும் அது இருக்கும்.

தொழிலாளி வர்க்கமும் சூழலியல் சிக்கல்களும்:-

உலக மக்கள் தொகையில் 1 விழுக்காடு அளவாக இருக்கிற முதலாளித்துவ சமூகத்தின் லாப நோக்க உற்பத்தி முறையால் மீதமிருக்கும் 99 விழுக்காட்டு மக்கள் உலகெங்கிலும் பாதிக்கப்படுகின்றனர்.அதாவது விவசாயிகள்,மீனவர்கள்,ஆலைத் தொழிலாளிகள் என உலகெங்கிலும்  உள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வு முதலாளித்துவத்தின்  லாப நோக்க உற்பத்தி முறையால் சிதைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தொழிலாளி வர்க்கமே முதலாளித்துவ சமூகத்தின் அராஜகப்போக்கால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.ஏனெனில் மூலதனத்துடனான நேரடித் தொடர்புகொண்டவர்களாக அவர்கள் உள்ளனர்.முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையானது தொழிலாளியின் உழைப்பைச்சுரண்டி  உபரிமதிப்பின் வாயிலாக மூலதனத்தை குவிக்கிறது.ஊதியம் தரப்படாத இவ்வுபரி மதிப்பு மீண்டும் மீண்டும் உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டு லாபத்தை மேன்மேலும் குவிக்கச்செய்கிறது . பொருளாதாரத் தேக்கநிலையின் போது ஆட்குறைப்பு,ஊதியம் குறைப்பிற்கு ஆளாவதோடு இதரக் காலங்களில் முதலாளித்துவத்தின் மரபான சுரண்டலுக்குப் பலியாகின்றனர். தொழிலாளியோ ஆலைக்குள் தன் சுதாதாரத்தை ஏன் சில சமயம் தன் உயிரையே பனயமாக வைத்து வேலை செய்கிறான்.ஆலைக்கு வெளியேயும் அதன் உற்பத்தி நிகழ்முறையில் வெளியேற்றப்படும் மோசமான கழிவுகளுக்கு மத்தியில் வாழ்கிறான். தங்கள் வயிற்றுப்பாட்டிற்காக தொழிற்சாலைக் கழிவுகளுக்கு மத்தியில் வாழவும் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யவும் பன்னெடும் காலமாக தொழிலாளிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர் அரசின் சட்டங்கள்,விதிமுறைகள் நிர்வாக அறைகளின் கோப்புகளில் நிம்மதியாக உறங்குகையில்,ஆலைக்கு வெளியில் வசிக்கும் தொழிலாளி வேதியல் நச்சு கசிவுகளால் நோயுற்று இறக்கிறான். சுகாதாரக் கேடுகள் திரட்சிபெற்று பலியின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் சூழலில் பெரும்பாலும் அவர்கள் அனைத்து தொழிற்சங்கத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பார்கள். நிறுவனம் சார்ந்த தொழிற்சங்கத்தால் முதலாளிகளின் எதிர் முகாமில் நின்று முழங்க முடியாது. தப்பித்தவறி முழங்கினாலும் சாதிய உணர்வு வர்க்க உணர்வை நசுக்கிவிடுகிறது. சில அரசியல் கட்சிகள் இப்பிரச்சனைகளில் அக்கறை செலுத்தும்பட்சதில் அது அரசியல் லாபத்திற்கான கரிசனமாக மட்டுமே உள்ளது. தமிழகத்தின் வடசென்னை,தூத்துக்குடி,கடலூர்,திருப்பூர்,கல்பாக்கம்,கூடங்குளம் என தமிழகத்தின் தொழிற்துறை நகரங்கள் மற்றும் அணுமின் நிலையப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்,மீனவர்கள் தொழிலாளர்கள் ஆகியோரின் நிலையும் இதுதான். மேலும் அப்பகுதியில் உள்ள இயற்கை வளஞ்செறிந்த சூழல் அமைப்புகளும் இவ்வாலைக் கழிவுகளால் கடுமையாக மாசடைந்து அழிந்துபோகிறது. வடசென்னை எண்ணூர் கழிமுகச் சிதைவு பல தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படுத்தப்படுகிறதென்றால், மன்னார் வளைகுடா தேசிய கடல் வளப் பூங்காவை ஸ்டெர்லைட் என்ற ஒற்றை நிறுவனம் மட்டும் அழிக்கிறது.பல்லுயிரியச் சிதைவோடு அப்பகுதியில் வாழத்தலைப்பட்ட மக்களின் வாழ்வும் சிதைக்கப்படுகிறது. இச்சூழலே உலகெங்கிலும் பரவலாக நிலவுகிறது.இந்நிலையில் சூழல் சிக்கல்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தின் வறுமைச்சூழலுக்கும் மக்கள் தொகைப் பெருக்கத்தை காரணம் காட்டும் சில  சூழல்வாதிகளின்/பொருளாதாரவாதிகளின் கூற்றானது முழுப்பூசணியைச் சோற்றுக்குள் மறைக்கும் கதையை ஒத்திருக்கிறது.நிற்க

தொழிலாளர்களின் புதிய போராட்ட வடிவம்:-

இந்நிலையில்,தங்கள் சுகாதார நலன்களுக்கானப் போராட்டங்களைப் பாதிக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தினரே முன்னெடுத்தாலும் வேலை முக்கியமா? சுகாதாரம் முக்கியமா? எனும் ஒரே வார்த்தையில் முதலாளி வர்க்கத்தினர் தொழிலாளர்களைப் பணிய வைகின்றனர். வேலையில்லாமல் பசியால் சாவதை விட,ஆலைக் கழிவுகளால் ஏற்படும் நோயை எதிர்கொள்வதே மேல் என்ற நிலைக்கு தொழிலாளர்களைத் தள்ளுகின்றனர். தொழில்யுக வரலாறு எங்கிலும்  இந்நிலையே உலகெங்கிலும் நிலவுகிறது. இன்றைய சூழலில் கூட இந்நிலை மாறாமல் அதே கட்டிறுக்குத்துடன் தொடர்வதுதான் வேதனையிலும் வேதனை. இந்நிலையில் கடந்த ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள டரண்டோவில், தொழிலாளிகளுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதரத்திற்கும் பெரும்கேடு விளைவிக்கிற இல்வா தொழிற்சாலையை மூடக்கோரி,  அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதை முதலாளித்துவ மரபின்படி எதிர்கொள்ள ஆலை முதலாளி முடிவுசெய்தார். வழக்கமாக முதலாளித்துவ நலன்களுக்கு முட்டுக்கொடுக்கும் தொழிலாளர் சங்கத்தினரோடு கூட்டுச்சேர்ந்துகொண்டு ஆலையை மூடுவதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கச் செய்கிறார்.கடந்தகால யுக்திகள்  முதலில் வேலை செய்தாலும் சிறிது நாளில் காட்சி மாறுகிறது. முதலாளி வர்க்கத்தின் வழக்கமான சதியை முறியடிக்கும் முயற்சியாக, அந்த ஆலையைச் சேர்ந்த சில தொழிலாளர்களும் பிற தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும் சுற்றுவட்டார மக்களும் இளைஞர்களும் வேலையற்றோரும் ஒரு சிறு குழுவாக இணைந்து வேலையா? சுகாதாரமா? என்ற மிரட்டலை  தைரியமாக மறுத்து மாற்று வருமான உத்திரவாதத்திற்கான கோரிக்கையை முன்வைத்து உறுதியாகப் போராடுகிறார்கள்.அவர்களின் நோக்கம் பல தொழிலார்களின் உயிரைப் பலி வாங்குகிற ஆலையை மூடவேண்டும். அதேசமயம் அத்தொழிற்சாலையில் பணிசெய்யும் தொழிலார்களின் வேலைக்கும் மறு உத்தரவாதம் வழங்கவேண்டும் என்பதாக இருந்தது. இப்போராட்டம் தனித்தன்மையுடையது. முதலாளிவர்க்கத்திற்கு மரண அடி கொடுக்கச்செய்வது. இத்தாலியில் துவங்கிய இப்புதிய போராட்ட வடிவத்தை தமிழகச் சூழலுக்கு அறிமுகம் செய்யும் முயற்சியாகவே http://libcom.org இணையத்தளத்தில் வெளியான “Refuse the false choice “health or jobs”, fight for a guaranteed income! - The example of ILVA in Taranto”

என்ற கட்டுரையின்  தமிழ் மொழிபெயர்ப்பு இங்கு வெளிவருகிறது.
இம்முயற்சிக்கு மற்றுமொரு காரணமும் உள்ளது.அது இத்தாலியின் இல்வா ஆலைக்கும் இந்தியாவின்  ஸ்டெர்லைட் ஆலைக்குமான ஒற்றுமை. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படுத்தப்பட்ட பெரும் சுகாதாரக்கேடு, ஆலை குறித்தான நீதிமன்ற உத்தரவு,அரசின் தலையீடு, ,ஆலை முதலாளியின் பின்புலத்தில் முடுக்கிவிடப்பட்ட ஆலையை மூடுவதற்கு எதிரான போராட்டம்,பின் நீதிமன்றத்தின் பல்டி,அரசின் பல்டி   என இங்கு நாம் பார்த்த அனைத்து விடயங்களும்  இல்வா விடயத்திற்கு மிக அணுக்கமாகத் தெரிகிறது(கட்டுரை முடிவில் வாசகர்களே அதை நன்குணர்வார்கள்). ஐரோப்பிய கண்டமானாலும் ஆசிய கண்டமானாலும் முதலாளித்துவத்தின் லாப நோக்க உற்பத்தி முறையால் நாம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் சூழலியல் சிக்கல்கள் ஒன்றுபோலத்தான் இருக்கிறது.இதை எதிர்க்கும் உழைக்கும் வர்கத்தை ஒடுக்க முற்படும் ஆளும் வர்க்கமும் உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஒரே பாணியைத்தான் கடைபிடிக்கிறது.அதேபோல அவர்களுக்கு எதிரான நமது அறைக்கூவலும்  ஒன்றாகத்தான் உள்ளது. அது:“அனைத்து நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” ("Workers of the world, unite!)                                                                              
                                                                                                                                வேலையா? சுகாதாரமா? என்ற மிரட்டலை நிராகரி.வருமான உத்திரவாதத்திற்காகப் போராடு! 




இல்வா (ILVA) எஃகு ஆலையானது இத்தாலி நாட்டின் மிகப்பெரிய எஃகு ஆலைகளில் ஒன்றாகும். ரிவா (RIVA) குழுமத்திற்குச் சொந்தமான இவ்வாலையானது, இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் டரண்டோ நகரின் மையத்தில் அமைத்துள்ளது. 1961 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வாலையானது, அந்நகருக்கு கடும் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும்  மிக மோசமான ஆலையாகும். 11,500  தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் ஒப்பந்தத்தொழில் மூலம் 9500  தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் இவ்வாலை வேலை வழங்குகிறது. ஆண்டிற்கு இருபது லட்சம் டன் மூலப்பொருளை எட்டு  லட்சம் டன் இரும்பாக மாற்றுவது இத்தொழிற்சாலையின் உற்பத்திப் பணியாகும்.
ஆனாலும் இவ்வாலையானது, “டையாக்சின்” (Dioxine) போன்ற கடும் வேதியல் நச்சுகளைப் பரப்பி சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இவ்வாலையின் உற்பத்தி நிகழ்முறையில் வெளியேற்றப்படும் இவ்வேதியல் நச்சானது, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் தொழிளார்களின் குடும்பங்களுக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பினை அதிகரிக்கச் செய்துள்ளது.இதன்பேரில் இவ்வாலை விவகாரம், டரண்டோ நீதிமன்றத்திற்குச் சென்றது.நீதிமன்றம் அமைத்த உயர்மட்ட விசாரணைக்குழு அளித்த அறிக்கையும் ஆலையால் ஏற்படுத்தப்பட்ட கேடுகளை உறுதி செய்தது. இறுதியில் இல்வா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து, அதன் ஊது உலையை மூடவேண்டும் என 2012 ஜூலை 26 இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்ற பதிமூன்று ஆண்டுகளில் 386க்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாலை  ஏற்படுத்திய சூழல் கேட்டால் புற்றுநோய் பாதிபிற்குள்ளாகிப் பலியானதாக நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது.ஆனாலும் இவ்வாலையால் ஏற்பட்ட உயிரிழப்பும் சூழல் கேடும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை விட மிக அதிகமாக இருந்தது என்பதே உண்மை. இறுதியில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  ஆலை மூடப்பட்டது.
உடனே,நீதிமன்றத்தின் இந்நடவடிக்கைக்கு எதிரான முயற்சிகளில் ஆலை முதலாளி தீவிரம் காட்டத் தொடங்கினார்.அதன் முதல் கட்டமாக இத்தாலி முழுவதும் உள்ள  தனது அனைத்து நிறுவனங்களையும் மூடப்போவதாக அவர் தொழிலார்களை பயமுறுத்தும் நோக்கில் அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதுமட்டுமின்றி, இப்பகுதியின் இதயமாக விளங்கும் இவ்வுருக்காலை மூடப்பட்டால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரின்  வேலையும் பறிபோகும்,ஆகவே ஆலையை மூடுவதற்கு எதிரான போராட்டத்தை உடனடியாகத் தொடங்கவேண்டும் என்று கூறி  தொழிலாளர் சங்கத்தினரையும் இடதுசாரிக் கட்சிகளையும் ஒன்று திரட்டினார்.ஆலையை மூடுவதற்கு எதிரான போரட்டத்தை அவர்களைக்கொண்டே  முன்னெடுக்க வைத்தார். ஐக்கிய முன்னணி, வேலை நிறுத்தத்திற்கும் ஊர்வலத்திற்கும் அழைப்பு விடுத்தது.ஆலை அதிபர்கள் தங்களது அனைத்து நிர்வாக ஊழியர்களையும் போராட்டக் களத்திற்கு அனுப்பினர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை, போராட்டத்தை சிதறாமல் பார்துக்கொள்வதாகும்!. எங்கு பார்த்தாலும் வேலை நிறுத்தமும் ஊர்வலமும் நடந்தன.இவையெல்லாம் முதலாளித்துவத்தைக் காப்பதில் முழுமையான வெற்றி கிட்டியதோ என்று எண்ணுமளவிற்கு இருந்தது! ஆனால் அதன்பின் நடந்ததென்னவோ முற்றிலும் நேர்மாறான கதையாகிப்போனது.
அதாவது,நடந்துகொண்டிருக்கின்ற முதலாளித்துவ ஆதரவுப் போரட்டத்தினை எதிர்க்கும் விதத்திலான போராட்டக்குழுவொன்று புதிதாக  உருவானது. இல்வா எஃகு ஆலையைச் சேர்ந்த சில தொழிலாளர்களும்,வேறு தொழிற்சாலையைச் சேர்ந்த சில தொழிலாளர்களும் அவர்களுக்கு எதிராக முதலில் அணிதிரண்டனர்.அதன் பின் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும்,இளைஞர்களும்,வேலையற்றோரும் இப்புதுப் போராட்டக்குழுவுடன் ஒன்றுசேர்ந்தார்கள். அவர்களுக்குள்ளேயே ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக்கொண்டுத் தங்களைப் பலப்படுத்திக்கொண்டனர். டரண்டோவில் வசிக்கும் தொழிலாளர்கள் - குடும்பத்தினருக்கான செயற்குழு” என்று முதலிலும்,பின்னர் “சுயமாகவும்,சுதந்திரமாவும் சிந்திக்கும் குடும்பத்தினர்- தொழிலாளர்களின் செயற்குழு என்ற பெயரில் களம் இறங்கிப் போராடத் தொடங்கினர்.
“சுகாதாரக்கேட்டை உருவாக்கியது பெரும் குற்றம்;அதற்கான விலையை அரசும் ரிவா குழுமமே வழங்க வேண்டும்” என இப்போரடக்குழு முழங்கியது. இக்கோரிக்கை அடங்கிய துண்டறிக்கைகளை, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவிரிடத்திலும் பரப்பினர்.
அதன் பின், ஆகஸ்டு 2 இல் நடைபெற இருக்கிற வர்த்தக சங்க ஊர்வலத்தில், வேலையா? சுகாதாரமா? இரண்டில் எது வேண்டும் என்கிற முதலாளிகளின் மிரட்டலை எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை உறுதியாக வற்புறுத்த இப்போரட்டக்குழு முடிவு செய்தது.


முன்னதாக அவர்கள் ஒரு மூன்று சக்கர வாகனத்தைத் தேர்வு செய்கின்றனர்.பின்னர் ஒரு சின்னத்தையும் தேர்வு செய்து, அதை அவ்வாகனத்தின் பின்புறத்தில் வைத்தவாறு,திட்டப்படி வர்த்தக சங்க ஊர்வலத்தில் நுழைகிறார்கள். பின் அங்கிருந்த மேடையில் ஏறி தங்களின் கோரிக்கையைத் தெளிவாக விளக்கினர்.
பொதுமக்களின் முன்பாக  அவர்கள்  செய்த இவ்வித முயற்சிகள் பெரிதும் வெற்றி பெற்றது.குறிப்பாக வர்த்தக சங்கத்திடமும் இடது சாரி முகாம்களிடமும் முரண்பட்டு இருந்தவர்கள்,இவர்களுடன் இணையத்தொடங்கினர்.மேலும் தொழிலாளர் சங்கமானது, ‘முதலாளி குவிக்கும் லாபத்தை தக்கவைப்பதில்தான் முனைப்பு காட்டுகிறது; தொழிலாளிகளின் தேவைகளில்/நலன்களில் கரிசனம் கொள்வதில்லை’ என்று அவர்கள் தொழிலாளர் சங்கத்தினைக் காட்டமாக விமர்சித்தனர்.
சூழ்நிலையை சற்றே தணிக்கும் பொருட்டு, ஆகஸ்டு 17 ஆம் தேதி இப்பிரச்சனையில் அரசு தலையிடுகிறது.அதன் முதல்கட்டமாக டரண்டோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பரிசீலித்த அரசு, இறுதியில் முதலாளியின் நலனைக் காக்கும் விதத்திலான நிலைப்பாட்டை எடுக்கிறது.அதாவது தொழிற்சாலையை மூடக்கூடாது என அரசுத்தரப்பு கோரியது! மறுபுறம் இப்பிரச்சனையானது தீவிரமடைந்து நாட்டின் முக்கியத் தலைப்புச் செய்தியாக மாறுவதற்கு முன்பாக சிக்கலை மடைமாற்றம் செய்யும் முயற்சிகளில் ஆலை நிர்வாகம் இறங்கியது. அதாவது ஆலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான சூழல் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 146 மில்லியன் யூரோவை (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 122கோடி ரூபாய்) இல்வா தொழிற்சாலையில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பொன்றை விடுக்கிறார்கள். ஆனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காமலும் சூழலுக்கு அணுக்கமாகவும் இவ்வாலை செயல்படவேண்டுமென்றால்,  இத்தொகையுடன் கூடுதலாக 5  முதல் 8 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும்.மேலும் இதற்கு முந்தைய ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் இவ்வாலையால் ஏற்படுத்தப்பட்ட கேட்டை அரசும்,ஆலை நிர்வாகமும் சிறிதளவு கூட கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான் வேதனை!அதுமட்டுமன்றி டரண்டோ சுற்றுவட்டாரத்தில் இல்வா ஆலையால் மட்டும் சூழல் மாசு ஏற்படுத்தப்படவில்லை.அருகில் உள்ள அர்செனல் மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளிருந்தும் டரண்டோ நகரக்கு நீண்டகாலமாக சூழல் மாசு  ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 
இந்நிலையில் பையோம் (FIOM)என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலோக ஆலைத் தொழிலாளர் சங்கத்தினர் உதிரிகளாக இயங்கும் தீவிர இடதுசாரி குழுக்களை ஒன்றிணைக்கும் வேலையில் இறங்குகின்றனர். ஒரு கட்டத்தில் நாட்டின் மற்ற சங்கத்திடமிருந்து தனியாகப் பிரிந்து வந்த இவர்கள் “வேலையும் சுகாதாரமும்” என்ற தங்கள் கோரிக்கையை வலுவாக முன்னெடுத்தனர்.ஆனாலும்,இல்வா ஆலைக்கு எதிரான தெளிவான கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் இவ்வனைத்துப் போராட்டங்களும் ஆலையை இழுத்து மூடும் கட்டத்திற்கு நகர்த்திச்செல்வதாகத் தெரியவில்லை. இத்தாலியின் ஸ்டாலனிய கோட்டையான ரேகியோ எமிலியா பகுதியைச் சேர்ந்தவரும், உலோக ஆலைத் தொழிலாளர் சங்கத்தின் மேனாள் பொதுச்செயலாளருமான மௌரிசோ லந்தினி இவ்வாறு சொல்கிறார் “எஃகு அனைவருக்கும் சேவை புரிகிறது”!
போராட்டக் குழுவினர் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக சந்தித்து வந்தனர். ஆகஸ்டு 2 தேதியன்றும் ஆகஸ்டு 17 தேதியன்றும் பெரும் பேரணிகளை நடத்த முடிவு செய்து அனைவரையும் அதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றனர்.(இத்தாலியின்) மோன்ட்டி அரசைச் சேர்ந்த முக்கிய மந்திரிகள் இருவர் ஆகஸ்டு 17 ஆம் தேதியன்று டரண்டோ நகருக்கு  வரவிருப்பதால் பேரணிக்கு அரசு உடனடியாக தடை விதித்தது.ஆனாலும் அரசின் தடையை மீறி  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் தொழிலாளர்களும் பேரணியில் பங்கேற்றுப் போராட்டத்திற்கு வலு சேர்த்தனர். இதற்கடுத்து ஆகஸ்டு 31 ஆம் தேதியன்று போரட்டக்குழுவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் ஆலையை மூடக்கோரி தொழிற்சாலை வளாகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் இன்னும் தொடர்கிறது.
போராட்டக் குழுவினரின் ஒரே கோரிக்கை “தொழிற்சாலையை உடனே இழுத்து மூடு.வேலையிழக்கும் தொழிலார்களின் வருமானத்திற்கு மறு உத்திரவாதம் கொடு”

கவனிக்க வேண்டியது என்ன?

இக்கூட்டமைவின் பலம் என்ன? முதலில் முப்பது பேராக எதிர்த்தவர்கள் நாள்பட நாள்பட  200,500,1000,2000 என்று பெருகினார்கள்.தொழிற்சாலைக்கு உள்ளே பணிபரியும் ஆயிரம் தொழிலாளர்கள் இக்கூட்டமைப்பிற்கு தங்கள் ஆதரவைத் தந்தனர்.அது மொத்த தொழிலார்களின் எண்ணிக்கையில் 10 விழுக்காடு  என்றாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் வர்த்தக சங்கம் எடுக்கும் முடிவிற்காகக் காத்திருந்தனர்.
பையோம்(FIOM)  தொழிலாளர்கள் சங்கத்தினர்,இல்வா தொழிற்சாலைக்கு ஆதரவாக எடுத்த முடிவிற்காகவும்,போராட்டக்குழுவின் (“சுயமாகவும்,சுதந்திரமாவும் சிந்திக்கும் குடும்பத்தினர்- தொழிலாளர்களின் செயற்குழு”) கோரிக்கைக்கு ஆதரவு தராத காரணத்திற்காகவும்  CGILஐ கடுமையாகச் சாடியது. இதனால் வர்த்தக சங்கம் இறுதியில் உடைந்தது.
அரசின் ஆதரவு இருப்பதால், தொழிற்சாலையை மூடும் நிலை வராது என்பதில் முதலாளி மிகத்தெளிவாக இருந்தார். மேலும் அரசானது மிக சாமர்த்தியமாக நீதித்துறையின் தீர்ப்பை வேறு வகையில் சுற்றிவிடுவதிலும் விடயத்தை மீண்டும் நீர்த்துப்போகச் செய்வதிலும் கிடப்பில் போடுவதிலும் தீவிரம் காட்டியது. அதே நேரத்தில் முதலில் இல்வா ஆலையை மூட உத்தரவிட்ட நீதிமன்றம் பின்னர் அப்படியே பல்டியடித்து ஆலையை மூடாமல் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்!இந்நிலையில் செயற்குழுவானது தனது பலத்தை மட்டும் நம்பியே களத்தில் உள்ளது. நீதிமன்றங்களின் பேரில்  நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் இவ்விடயத்தின் இறுதியில் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இச்செயற்குழு,பல்வேறு தரப்பினரின் குரலாகவே ஒலித்தது. எஃகு ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களும், பிற தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களும் வேலை இல்லாதோரும்,ஒப்பந்த தொழிலாளர்களும் ஓய்வூதியம் பெறுவோர்களும் இப்போராட்டத்தில் பரவலாகப் பங்கெடுத்தனர்.
நகரின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டும், தொழிலாளிகளின் வருமானத்திற்கு உத்தரவாதம் வழங்கக்கோரியும்,அந்நகரில் வசிக்கும் மக்களும் நடுத்தரக் குடும்பத்தைச்சேர்ந்த தொழிலாளர்களும் இச்செயற்குழுவில்      இணைந்தனர்., வேலையா? சுகாதாரமா? இரண்டில் எது வேண்டும் என்கிற முதலாளிகளின் மிரட்டலை எதிர்த்ததும்,வருமானதிற்கான  மறு உத்திரவாதத்திற்காக உறுதியாக போராடியதுதான் இப்போராட்டத்தின் தனித்தன்மையாகும்.(இதற்கு முன்பாக  நடைபெற்ற போராட்ட முழக்கம்”பசியால் மடிவதை விட புற்றுநோய்க்கு பலியாகலாம்!”).பல வருடங்களாக வேலையா? அல்லது சுகாதாரமா? என மிரட்டியே, தொழிலாளர்களை வளைத்து முதலாளிகள் லாபமடைந்தார்கள். கடந்த நாற்பது  வருடங்களாக தங்கள் சுகாதாரத்திற்கான போராட்டத்தினை தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போதெல்லாம் அவர்கள் இத்தந்திரத்தை பின்பற்றியே வெற்றியடைந்து வந்திருக்கிறார்கள்.
பின்குறிப்பு:இல்வா போராட்டத்தின் தற்போதைய நிலைமை
ஆகஸ்டு 2012 போராட்டத்திற்குப்பின் இல்வா போராட்டச் செயற்குழுவினர்,தொடர்ச்சியாக ஆலையில் உள்ள தொழிலாளர்களுக்கு போராட்டக்குழுவின் நிலைப்பாடு குறித்தும்,அதன் நியாயங்கள் குறித்தும் விளக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.ஆனால் அதில் போதுமான வெற்றி கிட்டவில்லை. ஆலைக்கு வெளியிலும் சிறிய அளவிலான போராட்டங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றனர்.நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் அன்று நிலவிய சூழலே இன்று  வரைத் தொடர்கிறது.
(சென்ற மாத தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்ட இதழில்  வெளிவந்தது)