மேற்குத் தொடர்ச்சி மலையான குடகில் உருவாகிற காவிரி, மைசூர், மாண்டியா, வழியாக தமிழகத்தில் நுழைந்து தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி வழியாக கல்லனைக்கு வந்து சேர்ந்து,கல்லணை அணைக்கட்டில் கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, புது ஆறு என நான்காகப் பிரிந்து, பூம்புகாரில் காவிரியாக கடலில் கலக்கிறது.கல்லணை முதல் புகார் வரையிலும் காவிரிக் கரையோரம் வளைந்து நெளிந்து நீண்டு செல்கிற பூம்புகார் -கல்லணை சாலை சிலப்பதிகார இலக்கியத்தால் புகழ் பெற்றது. காவிரியின் நீர் வளத்தால் செழிப்புற்றுள்ள இப்பாதையில்தான் கோவலனும் கண்ணகியம் பூம்புகாரில் இருந்து மதுரைக்கு நடந்து சென்றதாக சிலம்பு கூறுகிறது. இந்த சாலையின் இரு மருங்கிலும் தென்னை தேக்கு வாழை பயிரடப்பட்டு பார்ப்பதற்கு பச்சைப் போர்வை போர்த்தியதுபோல ரம்மியமாக காட்சியளிக்கும்.
“பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி”
என காவிரிக் கரையின் சோலையிலே மயில்களும்
குயில்களும் ஆடிப்பாட,மகளிர் காவிரியம்மனை வழிபடுவதாக இளங்கோவடிகள் அன்றைய காட்சியை சித்திரம் போல
வார்த்தைகளிலே வரைந்து காட்டுகிறார்.இவ்வாறு சங்க இலக்கியப் பெருமையும் சூழல்
வளமும் மிக்க காவிரி ஆற்றின் கரைகளிலே இன்று காவிரி ஆற்றின் மணலை அள்ளிச் செல்கிற
மணல் லாரிகள் வரிசைக் கட்டிச் செல்கின்றன.கோவலனும் கண்ணகியும் காவிரிக் கரையின் வனப்பை
கண்டு ரசித்துச் சென்ற பூம்புகார் கல்லணை
சாலை இன்று ஆற்று மணல் கொள்ளையால் புழுதி படர்ந்து மயான சாலையாக காட்சியளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தபின் ஆற்று மணல் அள்ளுவதற்கு
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய இடங்களில் மணல் அள்ளுவதற்கான அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கிறது.தமிழகத்தில்
காவிரி தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் 25
இடங்களில் புதிதாக மணல் குவாரிகள் திறக்க தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.அதுவும் கனரக இயந்திரங்களின் துணைக்கொண்டு மணல் அள்ளுவதற்கு
அனுமதித்திருப்பது குவாரி மாபியாக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதில் 11 குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் மட்டுமே வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.திமுக அரசின்
இந்த முடிவுக்கு சூற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக அதிமுக ஆட்சியில் ஆற்று மணலுக்கு மாற்றாக 'எம் சாண்ட்' பயன்படுத்தப்பட்டு வந்தன.தற்போது
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆற்று மணல்
எடுப்பதற்கு அனுமதிப்பது தற்கொலைக்கு சமமான முடிவாகும்.தற்போது தமிழக ஆறுகளில்
சுமார் 7.51 லட்சம் யூனிட் மணல் அள்ள, தனியார் நிறுவனங்களுக்கு கனிமவளத் துறை அனுமதி
வழங்கியுள்ளது.
அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக ஆற்று மணலை
அள்ளுவதற்கு அனுமதி வழங்குவதாக தமிழக அரசு கூறுவது அறிவுக்கு உகந்த நடவடிக்கையாக
இல்லை.புதிய மணல் குவாரி அனுமதியானது நமது ஆற்றின் வள அழிவிற்கும் அளப்பரிய ஊழலுக்குமே வழி செய்கிறது.
கட்டுப்பாடற்ற மணல் கொள்ளையும் ஊழலும்
அதிகரிக்கின்ற நகரமயமாக்கல், உட்கட்டுமான தேவையை
முடிக்கிவருகிறது.இது கட்டுமானத்துறையில் மணல் தேவை அதிகரிப்பிற்கு இட்டுச்
செல்கிறது.காட்டுமானத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்கவும் பற்றாக்குறையை
சமாளிக்கவும் அரசின் வருவாயை பெருக்கவும் ஆற்று மணல் குவாரிகளைத் திறப்பதாக அரசு கூறுகிறது.ஆனால்
நடைமுறையில் அனுமதிக்கிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பல லட்சம் லோடுகள் முறைகேடாக
மணல் அள்ளப்படுவதும் முறைகேடாக வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் சர்வ சாதரணமாக
நடைபெறுகிறது.
தற்போது கல்லணையில் மணல் அள்ளுவதை தடை
செய்யவேண்டும் என்றும்,கல்லணைக்குள் முறைகேடாக நடைபெறுகிற மணல் கடத்தலை தடுக்கவேண்டுமென்றும் மதுரை
உயர் நீதிமன்றக் கிளையில் தஞ்சாவூர் மாவட்டதைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு ஜீவகுமார்
என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல்
செய்திருந்தார்.இவ்வழக்கு விசாரணையின்போது,கல்லணையில் குவாரி ஏதும் அமைக்கப்படவில்லை எனவும்,குடிநீர் குழாய் மட்டுமே பதித்துவருவதாக அரசு தரப்பில் பதில்
தரப்பட்டுள்ளது.அரசின் பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.அரசின் இந்த பதிலில்
எந்தளவிற்கு உண்மையுள்ளது என்பதே அரசுக்கே வெளிச்சம்.இது போன்று ஆற்றுமணல்
கொள்ளை முறைகேடுகளுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்துவருவதை
கவனிக்கையில் மணல் கொள்ளையை அரசே சட்டபூர்வமாக்கிவிட்டபோலத் தோன்றுகிறது.
இந்த முறைகேடுகளுக்கு அதிகாரி வர்க்கம் முதலாக
அரசியல்வாதிகள் வரை உடந்தையாக இருப்பதை யாவரும் அறிவர்.மணல் குவாரி முறைகேட்டில்
ஈடுபடுகிற நபர்களின் சங்கிலித் தொடர்
உறவுகள் பணத்தால் இறுக்கமாக கட்டப்பட்டுள்ளன.பகுதி வி.ஏ.ஓ தொடங்கி தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி, கனிமவளத் துறை தலைமை அதிகாரி வரை அதிகார மட்டத்திலும்
அரசியல் அதிகார மட்டத்திலும் பல
அடுக்குகளில் கமிசன் போகிறது.திடீர் பணக்கார வர்க்கமும்,பணக்கார்கள் பெரும்
பணக்கார்கள் ஆவதும் சாதரணமாக நடக்கிறது.
ஆற்றுப்படுகையில் மூன்றடி ஆழத்துக்கு மட்டுமே மணல்
அல்ல வேண்டும் என அரசு விதிமுறைகள் வகுத்திருந்தாலும்,முப்பது அடி ஆழம் வரை மணல்
எடுப்பது எழுதப்படாத விதிமுறையாக உள்ளது.இந்த முறைகேடுகளுக்கு எதிராக மக்கள்
யாரேனும் குரல் கொடுத்தால்,அவர்களின் குரல்வளையை நெரிப்பதற்கு குவாரி மாபியா
கும்பல் தயங்குவதில்லை.அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில்,கிராம நிர்வாக அதிகாரியாக
பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் அவர்கள் ஆற்று மணல் கொள்ளையை தடுப்பதற்கு
முயற்சித்ததால் கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டது
தமிழகத்தையே உலுக்கியது.இது அண்மைய உதாரணம் மட்டுமே. ஆற்று மணல் மாபியா கும்பல்களின் முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை
அச்சுறுத்தும் நோக்கில் இக்கொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அரசோ
இதை கொள்கை பிரச்சனையாக பார்க்காமல் சட்ட ஒழுங்கு சிக்கலாக மேம்போக்காக அணுகி
நீர்த்துப்போக வைக்கின்றன.
ஆற்று மணல் இயற்கையின் கொடை.அதை மனிதனால் உற்பத்தி
செய்ய முடியாது.ஆற்று நீரை தனது மடியில் பஞ்சு போல தேக்கி வைத்து நிலத்தடி
நீர்மட்டம் குறையவிடாமல் பாதுகாப்பதில் ஆற்று மணலின் பங்கு முதன்மையானது.இந்த
மண்ணைத் தோண்டி அகற்றிவிட்டால் ,நீர் சேமிப்பு அமைப்பே அழிந்துவிடும்.இறுதியில்
ஆறுகளின் மரணத்திற்கு வித்திடும்.விவசாயம் பாழாகும்.சோலைவனம் பாலைவனம்
ஆகும்.குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.பிறகு செயற்கையாக கடல் நீரை குடிநீராக்கும்
திட்டம் தொடங்கப்பட்டு பல லட்சம் கோடி
ரூபாய் மக்கள் வரிப் பணம் விரையம் செய்யப்படும்.
தேவை மாற்று கொள்கை முடிவு
மூச்சுக்கு முன்னூறு முறை திராவிட மாடல் அரசு,சமூக
நீதி அரசு எனக் மேடை தோறும் பேசிவருகிற திமுக கட்சித் தலைவர்கள், சூழலியல் நீதி பற்றியும் தெரிந்து கொள்வது
அவசியம்.சமூக நீதியோடு சூழலியல் நீதியும் இணைந்தால் மட்டுமே நீடித்த வளமிக்க
வாழ்வு சாத்தியமாகும்.இதைக் கருத்தில் கொண்டே வள்ளுவர் ஒரு நாட்டின் அரணாக
போர்படைகளை குறிக்காமல் இயற்கை அரணைக் குறிப்பிடுகிறார்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.’
(குறள் எண் 742)
ஆற்று மணலை கட்டுமானப் பண்டமாக, சரக்காக பார்க்கிற
கண்ணோட்டத்தை முதலில் அரசு கைவிடவேண்டும். கட்டுமானத்திற்கு மணலையோ பிற இயற்கை பொருட்களையோ
பயன்படுத்தாமல் லாரி பேக்கர் போன்ற சூழலியாளர்கள் கூறுகிற முறையிலான கட்டுமானப்
பொருட்களை பயன்படுத்த ஊக்கப்படுத்தவேண்டும்.ஆற்று மணல் என்பது ஆற்றுப்படுகை
அமைப்பின் கண்ணியென பார்க்கவேண்டும்.இந்த மணல் உருவாவதற்கு பல லட்சம் ஆண்டுகள்
ஆகும் என்பதையும் அதை நாம் ஆய்வகங்களில் உருவாக்க முடியாது என்பதையும் அரசு
உணர்ந்துகொள்ள வேண்டும்.ஆற்று மணல் ஒன்றும் அல்ல அல்ல கிடைக்கிற அட்சயப் பாத்திரம்
அல்ல என்பதையும் ஏதோ ஒரு கட்டத்தில் ஆற்று மணல் அளவும் வரம்பிற்குட்பட்டவை என அரசு
விளங்கிக்கொள்ளவேண்டும்.பொருநை ,வைகை என பழங்கால நதிக்கரை நாகரிகத்தை அகழாய்வு
செய்து அருங்காட்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிற முதல்வர்,சமகால நதிக்கரை
நாகரிகத்தை அழிக்காமல் காக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.