Pages

Friday, 1 April 2016

ரோசடோம் எனும் பூதம் –பகுதி -III




(கூடன்குளத்தில் அணுவுலைகளைக் கட்டுகிற ரஷ்ய நிறுவனமான ரோசடோமின்(ROSATOM) சிக்கலான வரலாறு பற்றின விமர்சனம்.கிரீன் பீஸ் அமைப்பின் அறிக்கையை முன்வைத்து)


ரோசடோமின் பாதுகாப்புக் குளறுபடிகள்,தாமதங்கள்,அதிக செலவுகள்.. 

ரோசடோமின் உள்நாட்டு வெளிநாட்டு அணுவுலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாகட்டும் சிறப்புச் சட்ட விலக்குகள் அளிப்பதாகட்டும், ரோசடோமின் செயல்பாடுகளுக்கு  ரஷ்ய அரசு பல தாராள சலுகைகள் வழங்கினாலும், அணுவுலை கட்டுமானப் பணிகளில்  தாமதம்,உபகரணங்களின் பாதுகாப்புத்தன்மை,உபகரணங்களின் தரம்,அதிகரிக்கிற திட்டச்செலவுகள்,நிர்வாகத்தில் புரையோடியுள்ள ஊழல்கள்  என ரோசடோமின் பெரும் குறைகளையும்  செயல்திட்டத்  தோல்விகளையும்  ரஷ்ய அரசால் தீர்க்கவோ காப்பாற்றவோ  இயலவில்லை!

அணுவுலைக் கட்டுமானங்களில்  அதிகம் செலவு பிடிக்கிற VVER தொழில்நுட்பத்தை பரிந்துரைத்து எதிர்கொள்கிற நெருக்கடி நிலைமைகளை  ரோசடோமின் தோல்விகளுக்கு இங்கே உதாரணமாகக் கூறலாம்.தனது வெளிநாட்டு அணுவுலைத் திட்டங்களுக்கு VVER தொழில்நுட்பத்திலான அணுவுலைகளைத்தான் தீவிரமாக பரிந்துரைத்து  ஒப்பந்தங்கள் போடுகிறது ரோசடோம்.இத்தொழில்நுட்பத்தில் கட்டப்படுகிற அணுவுலைகள்  கட்டுமானத்தில் ஏற்படுகிற நடைமுறைப் பிரச்சனைகளை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

அதிகரிக்கின்ற நிதிச் செலவுகள்:

முன்னதாக 2005 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் க்ரீன் பீஸ் அமைப்பின் சிறப்பு வல்லுநர் குழுவானது,VVER  தொழில்நுட்ப்பத்தில் ரஷ்யாவில் கட்டப்பட்ட அணுவுலைகள் குறித்த  சூழல் தாக்க ஆய்வை  மேற்கொண்டது.அக்குழுவானது, புதிதாக கட்டப்பட்ட பல்கோவ் அணுவுலையை முதலில் ஆய்வு செய்தது.ஒப்பீட்டுக்காக VVER  தொழில்நுட்ப்பத்தில் கட்டிமுடித்து செயல்பாட்டிற்கு வந்துள்ள கல்லினன்  அனுவுலையின் அலகு-3 ய் அக்குழு ஆய்வு செய்தது. 

2001 ஆம் ஆண்டில் கல்லினன்  அணுவுலையின் அலகு-3  திட்டம் தொடங்கப்படும் போது 8.2 பில்லியன் ரூபல், திட்டமதிப்பாக சொல்லப்பட்டது.ஆனால் 2005 ஆம் ஆண்டில் இத்திட்டச் செலவு 27.3 பில்லியன் ரூபல் ஆனது.அதாவது துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட மதிப்பைவிட மும்மடங்காக அடுத்த சில ஆண்டுகளிலேயே  உயர்ந்தது. ரோசடோமின்,VVER  தொழில்நுட்ப் அணுவுலைத் திட்டங்களின் விலை ஏற்றக் கதை  கல்லினன் அணுவுலையோடு நிற்கவில்லை.

முன்னதாக லெனின்கிராடு அணுவுலைப் பூங்காவில்(உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுவுலைப் பூங்கா)VVER-1200 தொழில்நுட்பத்திலான இரு அணுவுலை விரிவாக்கத் திட்டப் பணிக்கான உத்தேச திட்ட மதிப்பாக   46.9 பில்லியன் ரூபல்கள் ஆகும் என ரோசடோமிற்கு முந்தைய நிறுவனமொன்று கூறியது.மாறாக இதே ரக தொழில் நுட்பத்திற்கு ரோசடோமே,சுமார் 156 பில்லியன் ஆகும் என்றது.அதாவது மூன்று மடங்கு கூடுதல் விலையை ரோசடோம் கூறியது.VVER-1200 தொழில்நுட்ப ரக அணுவுலை திட்ட தாமதங்களே இவ்விலை ஏற்றத்திற்கு பெரும் காரணமாக உள்ளது.

ரஷ்யாவின் அணுவுலைத் திட்டங்கள் குறிப்பிட்ட இலக்கு காலத்திற்குள்ளாக கட்டி முடிக்க இயலாத பிரச்சனையை  சர்வதேச அணுவுலைக் கழகமே சுட்டிக்காட்டுகிறது.சில மாதகால தாமதங்களாக இவை இல்லாமல் நீண்டகால தாமதங்களே பெரும்பாலும் உள்ளன.உதாரணமாக, லெனின்கிராடு அணுவுலைப் பூங்காவில் கட்டப்பட்டுவருகிற புதிய அணுவுலைகள், 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள்ளாக மின்தொகுப்போடு இணைக்கப்படும்  என 2012 ஆம் ஆண்டின்  இறுதியில்  ரோசடோம் அறிவித்தது.மாறாக தற்போது 2016 ஆம் ஆண்டின் இறுதி வாக்கில்தான் மின்தொகுப்போடு இணைக்க முடியும் எனக்  கூறிவருகிறது.
 
ரஷ்ய அணுவுலைகளின் பாதுகாப்புத் தன்மை:

ரஷ்யா அணுவுலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து பேசும்போது,உலகின் மோசமான அணுவுலை விபத்துகளுக்கு ரோசடோம் ஒரு காரணமாக இருந்ததை நாம் மறக்கவியலாது.1986 ஆம் ஆண்டு செர்னோபில்லில்(தற்போதைய உக்ரேன்) ஏற்பட்ட அணுவுலை விபத்தானது  உலகம் சந்தித்த மிக மோசமான அணுவுலை விபத்தாக இன்றளவிலும் உள்ளது.ஹிரோஷிமா நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டை விட  நூறு மடங்கு சக்தியுள்ள  கதிர்வீச்சுப் பாதிப்பை செர்நோபில் அணுவுலை விபத்து ஏற்படுத்தியது. அணுவுலை உருகி ஊத்தியதாலும்,பெரு வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு பாதிப்பாலும் ஐரோப்பாவின் பல்லாயிரம் கிலோ மீட்டர் நிலப்பரப்பு  அணுக்கழிவு கதிர்வீச்சால் மோசமான பாதிப்பிற்குள்ளானது. 

பெலாரஸ்,ரஷ்யா,உக்ரேன் பகுதிகளில் சுமார் 1,25,000 முதல் 1,50,000 கிலோ மீட்டர் பரப்பளவிளான நிலப்பரப்புகள்,நீர் நிலைகள் மோசமான கதீர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.அப்பகுதியில் வசித்துவந்த சுமார் மூன்றரை லட்ச்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்,தங்கள் வாழ்விடத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.எதிர்காலத்தில்,இப்பகுதியில்,எந்த உணவு உற்பத்தியும்  செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.கதிர்வீச்சால்  பாதிப்படைந்து,நஞ்சாக மாறிய  நிலப்பரப்பானது,பங்களாதேஷ் நாட்டின் நிலப்பரப்பிற்கு  ஈடாகும்.நெதர்லாந்து  நாட்டின் பரப்பளவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு  அதிகமான நிலப்பகுதி, நஞ்சாக மாறின.இன்றோடு,விபத்து நடந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் கத்திர்வீச்சுக்கழிவானது முழுவதுமாக  சிதைவுருவதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.

அதிகம் அறியப்படாத மற்றொரு அணுவுலை விபத்து கடந்த 1957 ஆம் ஆண்டில் தெற்கு உரால்சில் உள்ள அணுக்கழிவு கையாள்கிற வளாகத்தில்  ஏற்பட்டது.அங்குள்ள கதீர்வீச்சுக் கழிவுத் தொட்டி வெடித்ததால் சுமார் 20,000 சதுர கிலோ மீட்டார்  நிலப்பரப்பு கதிர்வீச்சுப் பாதிப்பால் நஞ்சாக மாறியது.சுமார் 10,000 மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இன்றும்கூட அங்கு சில பகுதிகளில் நடமாட தடை உள்ளது.
இவ்வளவு வீரியத்துடனான பெரு விபத்துக்கள் சமீப காலங்களில் நடைபெறவில்லை என்றாலும்,ரோசடோம் கட்டுகிற புதிய அணுவுலைத் திட்டங்களில்,பாதுகாப்பு விஷயத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோசடோமின் ஊழல்:

ஊழலுக்கும்   வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்திற்கும்  ரோசடோம் பெயர்பெற்றவை! ரோசடோமில்,கடந்த 2009-12 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 68 உயர்மட்ட அதிகாரிகளும் 208  நடுத்தர மேலாளர்களும் ஊழல் புகாரில் சிக்கி வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 

சமீபத்தில்,ரோசடோமின் இணை இயக்குனர் எவெநோவ் எஸ்ட்ரதேவ் மீதான ஊழல் குற்றச்சாட்டை பெரும்பாலானோர் அறிவர்.ரோசடோமின்,அணுவுலைப் பாதுகாப்பு பிரிவுக்கு உயர் மட்ட பொறுப்பு வகித்த எவெநோவ் 50 மில்லியன் ரூபல் கையாடல் செய்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரலில்  வேலையை ராஜினாமா செய்த எவெநோவ் அடுத்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டிலியே இவர் பிணையில் வெளிவந்தாலும் வழக்கு இன்னும் நடந்துகொண்டுதான் உள்ளது. 
---- பூதம் இன்னும் வரும்
 

Tuesday, 1 March 2016

பாரீஸ் மாநாடு:பூவுலகிற்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகம்









அண்மையில்,பாரீசில் நடந்த முடிந்த ஐநாவின் காலநிலை மாநாடு குறித்து, வேடிக்கையாக கூறப்பட்ட வாசகம் இது,

“நாங்கள் ஒருபோதும் கடமையுணர்வுடன் செயல்பட மாட்டோம் என்பதைக் கடமையாகக் கொண்டுள்ளோம்;அதேவேலையில் நாங்கள் நல்லவர்களாகவும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டும்,ஒவ்வொராண்டும்,ஏன் காலம் பூராவும் இதேபோலக் கூடிப் பேசுவோம் என  உறுதியளிக்கிறோம்”

மிகப்பெரும் நாடகம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்தியுடன் பாரீசில் ஒன்றுகூடிய கனவான்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் களைந்து சென்றுவிட்டனர்.இப்போதும் போல எப்போதும் பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடுவோம் என தீர்மானம் போடுவதற்குத் தான் எத்தனை விளம்பரம்,எவ்வளவு செலவுகள்!

சரி பாரீசில் நடந்ததுதான் என்ன?இதுதான்-பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டு வீதத்தை தாமாகவே முன்வந்து கட்டுப்படுத்திக்கொள்கிறோம் என்ற அனைத்து நாடுகளின் உறுதிமொழிகளையும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன.
பாரீஸ் மாநாட்டில் எட்டப்பட்ட முடிவு குறித்து பி பி சி வெளியிட்ட செய்தியறிக்கை இது

1.     ”இந்நூற்றாண்டின் இரண்டாம் பாதிக்குள்ளாக(அதாவது 2100),பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் அதை உறிஞ்சிவதற்கு  இடையிலான சமநிலை எட்டப்படும்.

2.     புவியின் சராசரி வெப்பநிலை 2 பாகைக்கு மேல் உயராமல் இருப்பற்கான முயற்சிகள் எடுக்கப்படும்,அதேநேரத்தில் 1.5 பாகைக்குள் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

3.     ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இது குறித்து விவாதிக்கப்படும்.
4.     வளர்ந்த நாடுகள் 2020 ஆம் ஆண்டிற்குள்ளாக  நூறு பில்லியன் டாலர் நிதியை வளரும் நாடுகளுக்கு வழங்கும்,எதிர்காலத்தில் இந்நிதி  அதிகரிக்கப்படலாம்.”

இவ்வுறுதிமொழிகள் உண்மையிலேயே இப்பூவுலகை அழிவிலிருந்து மீட்பதற்கு உதவிடுமா?என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

“2 பாகை” எனும் மந்திர இலக்கு:
2050 ஆம் ஆண்டு முதல் 2100 ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குள்,புவியின் சராசரி வெப்பநிலையை இரண்டு பாகைக்கு மிகாமல் கட்டுக்குள் வைக்கப்படும் என உறுதி கூறப்பட்டுள்ளது.ஒரு பாகைக்கு மேல் அதிகரித்துள்ள தற்போதைய புவியின் சராசரி வெப்பநிலையால்,ஆசியாவில் உள்ள சிறு தீவுகள் மூழ்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பாகைக்குள்ளாக புவியின் வெப்பநிலை கட்டுக்கள் வைக்கப்படும் என்பதே முரணான முடிவாக உள்ளது.இம்முடிவானது மென் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தப் போகிறது.
மேலும் 1.5 பாகைக்குள்ளாக புவியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டுமானால்,2030 ஆண்டிற்குள் உலக நாடுகள் அனைத்தும்,புதை படிம எரிபொருள் எரிப்பை  நிறுத்த வேண்டும்.ஆனால் இது குறித்து எந்த முடிவும் இம்மாநாட்டில் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல பாரீஸ் மாநாட்டில் உறுதியளித்தவாறு உலக நாடுகள் அனைத்தும் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும் கூட,அது 2020 ஆம் ஆண்டில் இருந்துதான் நடைமுறைக்கு வரும்.அதற்குள்ளாக 1.5 பாகை இலக்கு கடந்து விட்டிருக்கும் என்பதே எதார்த்தம்!

பாரீஸ் மாநாட்டில் உறுதியளித்தவாறு அனைத்து நாடுகளும் பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியேற்ற அளவைக் கட்டுப்படுத்தினாலும் கூட,மூன்று விழுக்காடு அளவிற்கு புவியின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதே எதார்த்த உண்மையாக உள்ளது. 


பொய் உறுதிமொழிகள்:

பாரீஸ் மாநாட்டில்,பசுமைக் குடில் வாயுக்களின் வெளியீட்டு வீதத்தை கட்டுப் படுத்திக் கொள்வதாக வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் வெவ்வேறு வகைகளில் உறுமொழிகளை அள்ளித் தெளித்தன.இவை அனைத்துமே பொய்யானவையாகவும்,வெறும் சொல்ஜாலம் நிறைந்த உறுதிமொழியாகவுமே உள்ளன.

இம்மாநாட்டில் சீனா,இந்தியா போன்ற நாடுகள் பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியேற்ற அளவை குறைப்பதாக உறுதியளித்துள்ளது.எவ்வாறென்றால் கரிவாயுவின் செறிவை(Carbon Intensity) உற்பத்தி நிகழ்முறையில் குறைத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளது.இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக் கட்டத்தில் தொழிற்துறை முதலாளிகள்,உற்பத்தியை அதிகரிப்பதற்காக,மூல வளங்களான நிலக்கரி,எண்ணை,வாயுக்களை கச்சிதமாக  கையாள்வதில் தேர்ச்சி உடையவர்களாக  உள்ளனர்.அதன் பொருட்டு சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கின்றனர்.இதை இந்நாடுகள் பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதை குறைக்கிறோம் எனக் கூறுவதுதான் எவ்வளவு பெரிய முரண்!

உற்பத்தி நிகழ்முறையில்,“புதை படிம பயன்பாட்டை”(Fossil Fuels)மூல வளமாக பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்கிறோம் என அறிவித்து  அதற்கு கடப்பாடு உடையவர்களாக இருந்தால் நாம் நிச்சயம் அவ்வுறுதிமொழியை வரவேற்கலாம்.மாறாக இவ்வகையான பகட்டான சொல்லாட்சியின் ஊடாக வெற்று உறுதிமொழி அளித்து மக்களை ஏமாற்றுவதுதான் அபத்தமாக உள்ளது.

சொற் பிரயோகத்தின் ஊடாக இப்பித்தலாட்டங்களை இந்நாடுகள் முன்னேடுகிறது என்றால் வேறு சில நாடுகள் காலத்தை உக்தியாக பயன்படுத்துகிறது.உதரணமாக ரஷ்யா, 2030 ஆம் ஆண்டுகளுக்குள் தனது பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்ற அளவை,1990 ஆம் ஆண்டுகளில் வெளியேற்றிய அளவிற்கு ஈடாக்கப் போவதாக அறிவித்துள்ளது.அதாவது நடப்பளவில் இருந்து 25 விழுக்காடு குறைத்துக்கொண்டு 1990 ஆண்டு கால கட்ட வெளியேற்ற அளவை எட்டவுள்ளதாக உறுதியளித்தது.
ரஷ்யா இன்றுள்ளதைக் காட்டிலும் 1990 ஆண்டுகளில் அதிகளவில் பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றியது(1990 ஆம் ஆண்டுகளுக்கு பின்பே அதன் பொருளாதராம் வீழ்ச்சியடைந்தது).அந்நாட்டின் உறுதிமொழிப்படி பார்த்தால் இன்றுள்ளதை விட 30 விழுக்காடு அளவிற்கு கூடுதலாக  பசுமை குடில் வாயுக்களை வெளியிடும் என்பதே எதார்த்த உண்மையாக உள்ளது.

அமெரிக்கா, 2030 ஆம் ஆண்டுகளுக்குள் தனது பசுமைக் குடில் வாயுக்களின்  வெளியேற்ற அளவை,2005 ஆம் ஆண்டுகளில் வெளியேற்றிய அளவிற்கு ஈடாக்கப் போவதாக அறிவித்துள்ளது.அதாவது நடப்பளவில் இருந்து 26 விழுக்காடு குறைத்துக்கொண்டு 2005 ஆம் ஆண்டு கால கட்ட  வெளியேற்ற அளவை எட்டவுள்ளதாக உறுதியளித்தது.ஆனால் 2014 ஆம் ஆண்டிலேயே அதன் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்ற அளவானது(2005 ஆம் ஆண்டைவிட)14  விழுக்காடிற்கு குறைத்து விட்டது.எனவே அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு வெறும் 9 விழுக்காட்டு அளவை மட்டுமே குறைப்பதாக அமெரிக்கா  உறுதியளித்துள்ளது தெளிவாகிறது.

இவற்றையெல்லாம் கவனத்தில் இறுத்திப் பார்கையில்,இம்மாநாட்டின் முடிவானது
·         சீனா,இந்தியா,ரஷ்யா,கொரியா,துருக்கி,தாய்லாந்து,ஐக்கிய அரபு நாடுகள்,வியட்னாம்,மெக்சிகோ,இந்தோனேசிய போன்ற நாடுகள்  பசுமைக்குடில் வாயுக்களை வழக்கம் போல  தொடர்ந்து வெளியிடுவதற்கும்
·         அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,சப்பான்,கனடா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஆண்டுக்கு  விழுக்காடு அளவிற்கு பசுமைக்குடில் வாயுக்களை கட்டுப்படுத்திக் கொள்வதாகக் கூறிகொண்டு குறைவாக வெளியிடுவதற்குமான அனுமதியையே வழங்கியுள்ளன!

உறுதிமொழியும் நடைமுறையும்:
இதற்கு முன்பாக,பல நாடுகள் குறிப்பாக வளர்ந்த பணக்கார நாடுகள்,காலநிலை மாற்ற மாநாடுகளில் பல உறுதிமொழிகளை அளித்துள்ளன.குறிப்பாக ஜப்பானில்,கியோடோ மாநகரில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் எட்டப்பட்ட முடிவுகள் “கியோட்டோ ஒப்பந்தம்” என்று அழைக்கப்படுகிறது.இம்மாநாட்டில்,உறுதியளித்தவாறு ஒரு பணக்கார நாடு கூட ஒப்பந்தந்தை நடைமுறைப் படுத்தவில்லை.வெற்று உறுதிமொழி ஜாம்பவான்களாக மட்டுமே,இந்நாடுகள் திகழ்ந்துவருவதை காலநிலை மாற்ற மாநாடுகளின் வரலாறே மெய்ப்பிகிறது.

அமெரிக்காவோ,கியோட்டோ ஒப்பந்தத்தை மீறுவதாகட்டும்,கோபன்ஹேகன் மாநாட்டில் பின்னடைவை ஏற்படுதியதாகட்டும்,டர்பன் மாநாட்டில் இலக்குகள் எட்டப்படாமல் இழுத்தடித்ததாகட்டும் அதன் செல்வாக்கின் மூலமாக ஐநாவின் அனைத்து மாநாடுகளையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதற்கும் உறுதிமொழிகளை செயல்படுத்தாமலும் தொடர்வதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளது.

கோபன்ஹேகன் மாநாட்டில் (2020ஆண்டுக்குள்ளாக)நூறு மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா,அதில் 63 பில்லியன் டாலர் வழங்கிவிட்டதாகவும்,பாரீஸ் மாநாட்டில் ஆண்டுக்கு 94 பில்லியன் டாலர் நிதியளிப்பதகாவும் புதிய உறுதிமொழிகளை அளித்துள்ளது!
காலநிலை மாற்றம் பற்றின விழுப்புணர்வை ஏற்படுத்தியல் தந்தை என அழைக்கப்படுபவரும்,நாசாவின் முன்னாள் அறிவியளாலுருமான திரு ஜேம்ஸ் ஹான்சன்,இந்நாடுகளின் உறுதிமொழிகள் குறித்து கீழ்வருமாறு கூறுகிறார். 

“2 பாகை அளவிற்குள்ளாக புவி வெப்பமடைதலை கட்டுக்குள் வைப்பதற்கான இலக்கு எங்களிடம் உள்ளது,அது குறித்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பேசுவோம் என்று கூறுவது முட்டாள்தனமான வாதமாகும்.செயல்பாடுகள் துளியும் இல்லை,ஆனால் வெற்று உறுதிமொழி மட்டும் உள்ளது.புதைபடிம எரிபொருள்கள் மலிவாக கிடைக்கிற வரையில்,இவர்கள் அதை எரித்துக் கொண்டுதான் இருப்பார்கள்,ஒருபோதும் அவர்கள் இதை நிறுத்தப்போவதில்லை”
என்கிறார்

இறுதியாக:

ஐநாவால் முன்னெடுக்கப்படுகிற காலநிலை மாநாடுகள் நமது பூவுலகிற்கும்,மனித குலத்திற்கும் பெரும் துரோகம் இழைத்து வருவதையே கடமையாகக் கொண்டு செயல்பட்டுவருவது வரலாறு மெய்ப்பிக்கிற உண்மையாகும்.பாரீசிலும் இத்திரோகப் படலம் தொடர்ந்துள்ளது.
பாரீஸ் மாநாடு குறித்து தென்னாப்பிரிக்காவின் சிவில் சமூக அமைப்பின் இயக்குனரும் சூழல்வாதியுமான,பாட்ரிக் பாண்ட் இவ்வாறு காட்டமாக எழுதுகிறார்
“பாரீஸ் நகரம் சமீபத்தில் இரு வேறு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொண்டது.ஒன்று வெளிப்படையான தீவிரவாதத் தாக்குதல்.மத அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசமான இத்தீவிரவாத தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரீசில் உயிர் இழந்தனர்.இரண்டாவது மோசாமடைந்து வருகிற காலநிலை மற்றம் குறித்த உலக நாடுகள் பாரீசில் எட்டிய முடிவு.இம்மாநாட்டின் முடிவானது,ஒட்டுமொத்த உலகின்  மீதான தீவிரவாதத் தாக்குதலை மறைமுகமானவகையில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.முதல் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்,ஆனால் மோசமான இராண்டாம் தாக்குதலானது, இப்பூவுலகையே அழித்துவிடக் கூடிய அளவில் கொடுமையானது”
புவி வெப்பமயமாக்கலுக்கு காரணமாக உள்ள மூன்றில் இரண்டு பங்கு  பசுமைக்குடில் வாயுக்களை உலகின் முன்னணி தொண்ணுறு நிறுவனங்களே வெளியிடுகின்றன.புதை படிம எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள்,வேளாண் தொழில் நிறுவனங்கள் பொதுவாக சமூக கரிசனமும் சூழலியல் கரிசனமும் அற்றவை.லாப விதி தவிர ஏனைய விதி ஏதும் அதற்குத் தெரியாது.

உண்மையில் புவிவெப்பமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது நிலவுகிற முதலாளிய அமைப்பிற்கும் அதற்கு ஆதரவான அரசுக்கும்  எதிரான மக்களின் போராட்டமாகத்தான் இருக்கமுடியும்.லாப  நலனுக்கான உற்பத்தியை முடிவிடுக்கிற ஆளும்வர்க்கமும்,அதற்கு பாதையமைத்து  அரசியல் கேடயமாக செயல்படுகிற அரசுமே இப்போரட்டத்தில  பொது எதிரிகள்.
முதலாளியத்தால் ஏற்படுத்தப்படுகிற சூழலியல் அழிவுக்கு எதிரான நமது போராட்டம் என்பது அடிப்படையில் ஓர் வர்க்கப் போராட்டமே.ஆளும்வர்க்கம், அதற்கிசைவான அரசு இயந்திரம் இவற்றுகெதிராக புவிக்கோளத்தை காக்க விளிம்பு நிலை மக்கள் போராடுவதென்பது வர்க்கப் போரட்டத்தோடு இணைந்த போராட்டமாகும்.அவ்வகையில்,சோசலிச உற்பத்தி முறைக்கு பாதையமைத்துத் தருகிற சூழலிய சோசலிசத்தையே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கமுடியும்.

ஆதாரம்: