இயற்கை வரலாறு அதன் தொடர்ச்சியான சமூக வரலாறு இவற்றுக்கிடையிலான
இயைபு/முரண் என்ற எதிர்வே மனித சமூகத்தின் உயிர்ப்பிழைப்பிற்கான சாரமாக
உள்ளது.இயற்கையுடனான மனித சமூகத்தின் இவ்விரு முரண் நிலை உரையாடல் இல்லையேல் மனித
சமூகம் என்று ஒன்று இல்லை.இயற்கைக்கு எதிர் நிலையில் நின்று அதை உணர்வுப்பூர்வமாக
கட்டுப்படுத்தத் தொடங்கி தன் வாழ்வின் முன்நிபந்தனைத் தேவைக்கான கருவிகளைத் திட்டமிட்டு உற்பத்தி செய்யத் தொடங்கியது
இயற்கையுடனான அவனது உரையாடலின் மைய சாரம்.
விலங்கின ராசியிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிற பண்பாக திட்டமிடப்பட்ட
உழைப்பு உள்ளது.அவ்வகையில் இயற்கை அவனுக்கு தாய்.இயற்கையை தன் உணவு உடை உறையுளுக்கு ஏற்ப
மாற்றியமைத்த உழைப்பு அவனின் தந்தை.இயற்கையின் நேரடியான விளைபொருள் என்றளவில்
மனிதன் இயற்கையின் ஓர் அங்கமாக உள்ளான்.தானே இயற்கையாக உள்ளான்.அதே சமயத்தின் சமூக
அரங்கில் தனது உயிர்ப்பிழைப்பிற்கான தேவையை ஒட்டி உழைப்பின் துணைக்கொண்டு இயற்கை
மாற்றியமைக்கிற உற்பத்தியில் ஈடுபடுகிறான்.இதன் வாயிலாக தனது சமூக வரலாற்றை தானே
படைக்கிறான்.இதன் காரணமாக மனிதன் ஓர் சமூக உயிரியாகவும் உள்ளான்.மனிதனுக்கும்
இயற்கைக்குமான உறவு குறித்து பேசும்போது மனிதனை இவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்பது
அவசியமான ஒன்றாகிறது.
அடிப்படைத் தேவையின் பொருட்டு
உழைப்பின் வாயிலாக இயற்கையுடன் உரையாடிவந்த மனித சமூகத்தின் இணை முரண் வரலாறு இன்று இறுதி
கட்டத்தை எட்டிவிட்டது.இன்றைய (21 ஆம் நூற்றாண்டு) வரலாற்றுக் கட்டத்தில் வைத்துப் பேசுகையில் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவானது,உச்சம்
பெற்ற பகை முரண் உறவாக காட்சியளிக்கிறது.
தொழில் யுக எழுச்சி கட்டத்தில் அறிவியல் தொழில்
நுட்பங்கள் அனைத்தும் முழுக்க முதலாளிய சமூகத்தின் கட்டுப்பாட்டில் வந்தபின்
சமூகத்தின் தேவைக்காக அல்லாமல்
லாபத்திற்கான உற்பத்தி முறையாக திசைமாற்றமடைய தொடங்கியதில் இயற்கைக்கும்
மனிதனுக்குமான பொருள் பரிமாற்ற உரையாடலில்/உறவில் தீர்க்க முடியாத பெரும் பிளவு உண்டாகிறது.
உலகின் முதன் முதலாளிய நாடான இங்கிலாந்தில்
தொடங்கி பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அதன் காலனியாதிக்க நாடுகளுக்கும் பரவிய
இம்முரண்பாடு அமெரிக்காவை பற்றிப் படறி பின்பு உலகளாவிய முரண்பாடாக
உருவாகியது.சந்தைக்கான காலனியாதிக்க வேட்கை,சந்தைக்கான அறிவியல் தொழில்மய
ஆய்வுகள்-விரிவாக்கம்,சந்தைக்கான உக்கிரமான போர்கள் என இம்முதலாளிய அரசியல்
பொருளாதார வளர்ச்சி இவ்வுலகின் புற்று நோயாக உருப்பெற்றது.பதியப்பட்ட மனித குல
வரலாற்றில் கடைசி நூறாண்டுகளில் திடப்பட்ட
இந்நோயானது இவ்வுகலகின் அடுத்த ஐம்பதாண்டுகால ஆயுளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பெரும் போர்களால் அகதிகளாக உருமாறும்
அவலநிலை,வேலைவாய்ப்பின்மை,கல்வி சுகாதாரத்தில் சமத்துவமின்மை என சமுதாய அரங்கில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை அது
உருவாக்குகிறது.புவி வெப்பமயமாக்கல்,புதை படிவ பொருள்களின் சமூகத்திற்கும்
இயற்கைக்கும் இடையில் அது பெரும் போரையும் உருவாக்கியுள்ளது.இந்திய ஒன்றியமும்
அதில் ஓர் அங்கமாகவும் உள்ள தமிழகமும் இதற்கு விதி விலக்கல்ல.
கூடங்குளம் அணு உலைத்திட்டம்,தாது மணல்
கொள்ளை,ஆற்று மணல் கொள்ளை,கவுத்தி-வேடியப்பன் மலை அபகரிப்பு,சிறப்புப் பொருளாதார
மண்டலங்களின் சூழலியல் சிக்கல்கள்,காவிரிப்படுகையின் எரிவளித் திட்டம்,
என தமிழக மக்களையும் அதன் இயற்கை வளங்களையும் அழிவுப்
பாணி பொருளாதார வளர்ச்சியானது வேகமாக சூறையாடிவருகிறது.
சர்வதேச,உள்ளூர்
முதலாளித்துவ நலன் சார்பில்,காட்டுமிராண்டித்தனமான வகையில் மேற்கொள்ளப்பட்டுவருகிற
இவ்வழிப் பாணியிலான வளர்ச்சித் திட்டங்களையும் கொள்கைகளையும் நாம்
முற்றாக புறக்கணிக்கிறோம்.ஏனெனில்,நிலவுகிற அரசியல் பொருளாதார கொள்கைகளும் அதன்
செயல்பூர்வமும் சமூகத்தின் ஒரு
பிரிவினருக்கான நலனாக செயல்படுகிறபோது,அது அரசியல் பொருளாதார
அசமத்துவதத்திற்கே இட்டுச்செல்லும் என்பதை அறிவோம்.
No comments:
Post a Comment