கல்பாக்கம்,இந்திராகாந்தி
அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்த 500 மெகா
வாட் உற்பத்தித் திறனுடைய அதிவேக ஈனுலைகளின் கட்டுமானப் பணி கிட்டத்தட்ட முடிந்து
விட்டதாகத் தெரிகிறது.2006 ஆம் ஆண்டில்,இவ்வுலையானது செயல்படத் தொடங்கும் என
அறிவித்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,இந்தாண்டின் இறுதிக்குள்ளாக நிச்சயம்
செயல்பாட்டிற்கு வந்துவிடுமென்று
அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் தற்போது
4120 மெகாவாட் மின்சாரம், அணுசக்தி ஆற்றலின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இது,ஒட்டுமொத்த
மின்சார உற்பத்தியில் மூன்று விழுக்காடாகும்.2052 ஆம் ஆண்டிற்குள்ளாக 2,75,000
மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தி ஆற்றலைக் கொண்டு தயாரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது இந்திய அரசு.அதில் 2,62,500 மெகாவாட் மின்சாரத்தை ஈனுலைகளின்
மூலமாகவே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு
முதலாக உலக நாடுகள் பலவும் ஈனுலைத்
தொழில்நுட்பம் மீது பேரார்வம் காட்டி
வந்தன.இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.ஈனுலை தொழில்நுட்ப ஆய்விற்காக இந்நாடுகள் கோடிக்கணக்கில்
பணத்தை வாரி இறைத்துவருகின்றன.இதில் சுமார் பனிரெண்டு நாடுகள் பரிசோதனை ஈணுலை
நிலையங்களை அமைப்பதில் வெற்றி பெற்றன.பிரான்ஸ் நாடோ,பரிசோதனை கட்டத்தையும் கடந்து,சூப்பர்
பீனிக்ஸ் என்ற ஈனுலையை கட்டி முடித்து வர்த்தக பயன்பாட்டிற்கும்
கொண்டுவந்துவிட்டது.ஆனால் அதிகரிக்கின்ற உற்பத்தி செலவுகள் மற்றும் பாதுகாப்பு
அம்சங்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இனி ஒருபோதும் ஈனுலைகளை கட்டப்போவதில்லை
என அறிவித்துவிட்டது.ஆனால் இந்தியா அணுசக்திக் கழகமோ,ஈனுலைத் திட்டங்களை கைவிடுவதாக
இல்லை.கையிருப்பில் யூரேனியம் எரிபொருள் குறைவாக இருக்கின்ற நிலையில்,இத்தொழில்நுட்பத்திலான
மின்சார உற்பத்தி மட்டுமே இந்தியாவின் மின்சாரத்
தேவைகளை தீர்க்க முடியும் என அது
வாதிடுகிறது.
சரி ஈனுலைகள் என்றால்
என்ன?கூடன்குள அணுவுலைகளுக்கும் கல்பாக்கத்தில் கட்டப்படுகிற அணுவுலைகளுக்குமான வேறுபாடு
என்ன?இந்தியாவின் மூன்று கட்ட அணுவுலைத் திட்டத்தை அறிந்துகொண்டால் மட்டுமே இக்கேள்விகளுக்கான
விடைகளுக்கு நாம் வந்து சேரமுடியும்.
மூன்று கட்ட அணுவுலைத்
திட்டம்:
1950 களில் ஹோமி
பாபாவால் இத்திட்டம் முன்வைக்கப்பட்டது.அணு மின்சாரத் திட்டங்களுக்கு தேவையான
யூரேனியம் எரிபொருளின் இருப்பு இந்தியாவில் குறைவாக உள்ளது.அதாவது ஒட்டுமொத்த
யுரேனிய இருப்பில் இந்தியாவில் 1-2 விழுக்காடு மட்டுமே கையிருப்பாக உள்ளது.கிடைக்கிற
ஓன்றிரண்டு விழுக்காட்டு இயற்கை யுரேனியத் தனிமத்தையும் முழுமையாக அணுமின்சார உற்பத்திக்கான எரிபொருளாகப்
பயன்படுத்த இயலாது.ஏனெனில் கிடைக்கிற இயற்கை யுரேனியத்தில் 0.7 விழுக்காடு யுரேனியம்(U-235)தனிமமாக உள்ளது.இதை மட்டுமே அணுமின்சார உற்பத்திக்கான எரிபொருளாக
பயன்படுத்த இயலும்.மீதமுள்ளவை U-238 ஆக உள்ளது.U-238 ய் எரிபொருளாகப் பயன்படுத்த இயலாது.ஆனால் இதை புளுட்டோனியத்(PU-239)தனிமமாக மாற்றலாம்.கிடைக்கின்ற புளுட்டோனியத்
தனிமத்தொடு தோரியத்தை வினை புரிய வைத்து,தேவையான U-233 உற்பத்தி செய்யலாம். U-233 தனிமத்தை அணுமின்சார உற்பத்திக்கான எரிபொருளாக பயன்படுத்தலாம்.
இதை ஆய்ந்தறிந்து
ஹோமி பாப முன்வைத்த திட்டம்தான் மூன்று கட்ட அணுவுலைத் திட்டம்.அவரது சொற்களில்
சொல்வதென்றால்
“இந்தியாவில் ஐந்து
லட்சம் டன் அளவிலான தோரியம் அகழ்ந்தெடுத்து பயன்படுத்துகிற வகையில்
கிடைக்கிறது.ஆனால் யூரேனியமோ இதில் பத்தில் ஒரு பங்கு கூட கிடைக்கவில்லை.எனவே
இந்தியாவின் நீண்டகால அணுசக்தி திட்ட இலக்கை கவனத்தில் கொண்டு பார்க்கையில் யுரேனியத்தை
விட கிடைக்கிற தோரியத்தை பயன்படுத்தி மின்சாரம்
உற்பத்தி செய்யவேண்டும்.இந்தியாவின் முதல் தலைமுறை அணு உலைகளை இயற்கை யுரேனியத்தை பயன்படுத்தித்
துவங்க வேண்டும்.அதாவது,இந்தியாவின்
நீண்டகால அணுசக்தித் திட்டங்களை துவக்கி வைப்பதற்கு மட்டுமே இயற்கை யுரேனியம் பயன்படும்.இதில் கிடைக்கிற புளூட்டோனியத்
தனிமத்தை இரண்டாம் தலைமுறை அணுவுலைகளுக்கான எரிபொருளான பயன்படுத்தி,தோரியம்
தனிமங்களை U-233 ஆக மாற்ற வேண்டும்.
மூன்றாம் தலைமுறையில்
மேலதிக யுரேனியம் U-233 எரிபொருளை உற்பத்தி செய்து
அதன் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும்”
இத்திட்டத்தை 1954 ஆம்
ஆண்டில் நடைபெற்ற “அமைதிக்கான அணுசக்தி பயன்பாட்டு வளர்ச்சி” என்ற தலைப்பில்,தேச வளர்ச்சி மாநாட்டில் ஹோமி பாபா முன்வைத்தார்.இம்மாநாட்டில் அன்றைய பிரதமர்
நேருவும் கலந்துகொண்டார்.நான்கு ஆண்டுகள் கழித்து இந்தியாவின் மூன்று கட்ட அணுவுலைத்
திட்டத்தை இந்திய அரசு ஏற்றுகொண்டது.
முதற் கட்டம்-மென்நீர்
உலை:
இதன் முதல்
கட்டத்தில் இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும்,மென் நீரை குளிர்வியாக பயன்படுத்தி மின்சாரம்
உற்பத்தி செய்யப்படுகிறது.அதேவேளையில்,எரிபொருளாக பயன்படுத்தப்பட்ட யூரேனியும் தனிமமானது,வினை
நிகழ்முறையின்போது புளூட்டோனியமாக(pu 239) மாற்றப்படுகிறது.
இரண்டாம் கட்டம்-வேக
ஈனுலை:
முதல் கட்டத்தில் கிடைக்கப்பெற்ற
புளூட்டோனிய தனிமத்தை இரண்டாம் கட்டத்தில் எரிபொருளாக மறு
சுழற்சிக்குட்படுத்தப்பட்டு மேலதிக புளூட்டோனியம்
உற்பத்தி செய்யப்படும்.புளூட்டோனியம் பெருக்கப்பட்ட கட்டத்தில்,பாதுகாப்பு போர்வையாக தோரியமும் சேர்க்க,யுரேனியம்-233 வினை பொருளாக
கிடைக்கும்.
மூன்றாம் கட்டம்-தோரியம்
உலை:
இரண்டாம் கட்டத்தில்
கிடைக்கப்பெற்ற யுரேனியம்-233 ய் எரிபொருளாகக் கொண்டும் தோரியத்தை போர்வையாக
கொண்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.இதுதான் மூன்றாம் மற்றும் இறுதிக்
கட்டமாகும்.
இந்த மூன்ற
கட்டத்தையும் சுருக்குமாக சொல்லவேண்டுமென்றால் கிடைக்கின்ற சொற்பமான இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்தி புளூட்டோனியத்தையும் மேலதிக புளூட்டோனியத்தோடு
தோரியத்தை வினை புரியவைத்து,அதில் கிடைக்கின்ற யூரேனியத்தை(233) எரிபொருளை கொண்டு மேலதிக அணுவுலைகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி
செய்வதுதான் மூன்று கட்டத் திட்டத்தின்
நோக்கம்
1965 ஆம் ஆண்டில்
பாபா அணுசக்தி மையம் வேக ஈனுலை ஆய்விற்காக எஸ் ஆர் பரஞ்ச்பி தலைமையில் தனிப்
பிரிவை உருவாக்கியது.முதற்கட்டமாக 10 மெகாவாட் உற்பத்தி திறனுடைய பரிசோதனை ஈனுலை
கட்டுமானப் பணியைத் துவக்கியது.பின்னர் இம்முயற்சி கைவிடப் பட்டதாக தெரிகிறது.அதைத்
தொடர்ந்து 1969 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் அணுசக்தி கழகத்தோடு ஈனுலை ஆய்வின்
பொருட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது.
பின்னர் இந்தியாவில்
இருந்து இளம் அறிவியலாளர்கள்,பொறியாளர்கள் என முப்பது பேர் கொண்ட குழுவொன்று பயிற்சிக்காக
பிரான்சுக்கு அனுப்பப்படுகின்றனர்.பிரான்சில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் 1971 ஆம் ஆண்டில் கல்பாக்கத்தில்”அணுவுலை ஆய்வு மையம்”த்தை நிறுவுகிறார்கள்.இந்தியாவில் முதல் ஈனுலைக்கான
முயற்சி இவ்வாறுதான் தொடங்கப்பட்டது.பின்னர் 1985 ஆம் ஆண்டில் இம்மையம் “இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வேக ஈனுலை பரிசோதனை
அணுவுலை திட்டத்திற்கான(FBTR) அனுமதியை 1971 ஆம் ஆண்டிலேயே
இந்திய அணுசக்தி கழகம் வழங்கியது.1971 ஆம்ஆண்டில் பரிசோதனை அணுவுலை செயல்பாட்டிற்கு
வரும் எனக் கூறப்பட்டது.ஆனால் 1993 ஆம் ஆண்டில்தான் முழு செயல்பாட்டிற்கு வந்தது.
ஈனுலை பரிசோதனை அணுவுலையானது
வெற்றிகரமாக நிருபிக்கப்படுவதற்கு முன்னதாகவே வேக ஈனுலைகளின் வடிவமைப்பில் இந்திய
அணுசக்திக் கழகம் தீவிரம் காட்டி வந்தது.1983 ஆம் ஆண்டில் வேக ஈனுலைகளை வடிமைத்த அணுசக்தித்
துறையானது,திட்டத்தை அனுமதிக்குமாறும் தேவையான நிதியை ஒதிக்கீடு செய்யுமாறும்
மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்தது.1990 ஆம் ஆண்டில் இத்திட்டத்தையும் திட்டக்
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதியளித்தது.அதைத் தொடர்ந்து
அடுத்த பத்தாண்டில்(2000) முதல் வேக ஈனுலை செயல்பாட்டிற்கு வருமென்று
சொல்லப்பட்டது. இதுநாள் வரையில் இந்த உலை செயல்பாட்டிற்கு வரவில்லை.
இதற்கிடையில் 1983
மற்றும் 1985 ஆண்டுகளில் இயற்கை யூரேனியம் மற்றும் மென் நீர் குளுர்வி
வடிவமைப்பில் 220 மெகாவாட் உற்பத்தித் திறனில் இரு அணுமின் நிலையங்கள் (கல்பாக்கம்
அணுமின் நிலையம்)வடிமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.இரண்டாம் கட்ட அணுவுலைகளுக்கான
எரிபொருளை இந்த முதற் கட்ட அணுவுலைகள் வழங்குகிறது.
இரண்டு அணுமின் நிலையங்கள்(எதிர்காலத்தில்
விரிவாக்கம்),இரண்டு வேக ஈனுலைகள்(எதிர்காலத்தில் விரிவாக்கம்) மற்றும்
வரவிருக்கிற மூன்றாம் கட்ட தோரிய அணுவுலை(எதிர்காலத்தில் விரிவாக்கம்) என உலகிலேயே எங்கும் இல்லாத வகையிலான வெவ்வேறு
எரிபொருளில் இயங்கக் கூடிய அணுவுலைப் பூங்காக்கள் கல்பாக்கத்தில் மையமிட்டுள்ளது.
இத்தகைய சூழலில், வேக
ஈனுலை பரிசோதனை அணுவுலைகளில் ஏற்பட்டு வருகிற பாதுகாப்புக்
குளறுபடிகள்,விபத்துக்கள்,வேக ஈனுலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நாம்
அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்வது அவசியமாகிறது.அடுத்தப் பகுதியில் இதை விரிவாகப்
பார்ப்போம்.
தொடரும்
ஆதாரம்:
The
costs of power: plutonium and the economics of India’s
prototype fast breeder reactor- J.Y. Suchitra, M.V. Ramana
India and Fast Breeder Reactors, M.V. Ramana
No comments:
Post a Comment