Pages

Tuesday, 9 April 2013

சூழல் Vsமுதலாளியம்




தினந்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கும்  சூழல் நெருக்கடிக்கு பலதரப்பட்ட தொழிற்சாலைக்கழிவுகள்தான்  மூல காரணம் என்று நாம் மிகத் தெளிவாக அறிந்தும் ஏன் சூழல் மாசடைவதை தடுக்க முடியவில்லை என்ற கேள்வி இயல்பாய் நம்முள் எழுகிறது.நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது,  முதலாளியத்தின் கட்டுப்பாட்டில் முழுவதும்  வந்தபின் ,சமூகத்தின் தேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு அது தன் உற்பத்தி அமைப்பை ஒழுங்கமைப்பதில்லை .மாறாக அது விரைவானஉற்பத்தி மற்றும் அதிகமான லாபம் என்ற மையநீரோட்டத்தில் கீழ் தனது உற்பத்தி முறையை வடிவமைக்கிறது.

மார்க்சின் வார்தைகளில் சொல்வதென்றால்  “மனித தேவைகளோ  ,சமூக நலனோ  முதலாளியத்தை இயக்கும் அச்சாணியல்ல மாறாக மூலதன குவித்தலும் அதிக லாபமுமே முதலாளியத்தை இயக்குகிறது”. இவ்வாறு முதலாளிய உற்பத்தி முறையானது கட்டுப்பாடற்ற தனது  மூலதனச்சுரண்டலாலும்  லாப வெறி உற்பத்தியாலும்  ,அபரிவிதமான கழிவுகளை  கடந்த 150 ஆண்டுகலில்   மிக துரிதமாய் இப்பூவுலகில் திணித்திரிக்கிறது.இதற்கு உவப்பாக சந்தையையும் ,நுகர்வையும் அது தொடர்ச்சியாக கட்டுக்குள்வைத்துக்கொண்டு பூவுலகின் மீதான தனது உறுதியான சங்களிப்பிடியை இறுக்கியிருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணற்ற நச்சு வேதியல் பொருட்களின் கழிவுகள் ,சாயப்பட்டறையில் வெளியேற்றப்படும் கழிவுகள் ,ஆலைக்கழிவுகள் ,ஆகாயத்தில் டன்கணக்கில் வெளிஏற்றப்படும் கார்பன்டை ஆக்சைட் கழிவுகள் என எண்ணற்ற கழிவுகளால் இயற்கை கட்டமைப்பை மூச்சுத்திணறவைக்கும் முதலாளியத்தின் பொருளாதாய உற்பத்தி முறையால்  மீண்டு வரமுடியாத சுற்றுச்சூழல் சிக்களில் சிக்குண்டுள்ளோம். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் தொழிற்சாலைகளிருந்து வளிமண்டலத்தில் இதுவரை  வெளித்தள்ளப்பட்ட  பசுமைக்குடில் வாயுக்களால் வெப்பமயமான இப்புவிக்கோளானது ,பணிமலைகளை  உருக்கி  பசிபிக் கடலில் உள்ள சிறு தீவுகளை மூழ்கடிக்கத்தொடங்கிவிட்டது ,ஆப்ரிக்க நாடுகளில் பாலைத் திணைகள் உருவாகி கடும் வறட்சியை தோற்றுவிக்கிறது.பல்லுயிரியம் பல நாடுகளில் வேகமாக அழிந்து வருகிறது.இவ்வளவு அழிவிற்கும் காரணியான முதலாளியத்தையும் ,முதலாளியத்தின் உற்பத்தி முறைகளையும் , முதாலாளிய வர்கத்திற்கும் அரசுககுமான உறவையும், அதன் மூலதன திரட்டல் மாற்றும் லாப நோக்க திட்டங்களையும் சரியான நோக்கில் புரிந்துகொள்ளாமையும் ,திறனாயத்தவரியதும் அதன் வளர்ச்சிக்கு நம்மையும் சாட்சியாக்கி எதிர்ப்பற்ற செயலபாடுகளை கச்சிதமாக முதலாளியமானது ஒருங்கிணைக்கிறது. 

இதில் முக்கியமாக நாம் அனைவரையும் ஏமாற்றம் தொழிற்சாலை அதிபர்களான  முதாலாளிய வர்கத்திர்க்கும் அரசுககுமான திரைமறைவு (பெரும்பாலும் வெளிப்படையான )உறவைமட்டும் இங்கு சுருக்கமாய் பார்க்கலாம்.

முதாலாளிய வர்க்கம் + அரசு இயந்திரத்திற்கான உறவு 

தற்பொழுது நிலவும் முதாலாளியத்தின் பொருளாதார உற்பத்தி முறைக்கும் நுகர்வுக்குமான உறவு மற்றும் முதலாளியத்திற்கும் அரசு இயந்திரத்திற்கான உறவுகளை பகுப்பாய்வு செய்தோமானால் சமூகத்தின் அடிப்படைதேவையை பூர்த்தி செய்வதையும் தாண்டி முதலாளியம் தனது லாப நோக்கத்திற்காகவும் ,முதலாளியதிற்குள்ள போட்டிகளுக்காகவும் வேளை செய்வதை பார்க்கிறோம்.அதை சமூகத்தில் நியாயப்படுத்தவும் ,தனது சுரண்டலை ஒழுங்கமைப்புடன் மேற்கொள்ளவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்ற மேற்பூச்சி மிக நுணுக்கமாக பூசப்படுகிறது.

முதலாளியமானது தேசிய நாடுகளுக்குள்ளும் உலக நாடுகளுக்குள்ளும் இடைவிடாத பொருளாதார போட்டியை கொண்டு  கட்டமைக்கப்பட்டுள்ளது .இந்த போட்டியானது மேலும் மேலும் மூலதன குவித்தலையும் ,லாபத்தினை பெருக்கவும் முதலாளியத்தை நிர்பந்திக்கிறது. மேலும் ஒவ்வொரு முதலாளிய சமூக அரசுகளும் மக்கள் நலனுக்காக சேவை செய்யவில்லை மாறாக அது முதலாளிய வர்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றவே அக்கறை செலுத்தும் என முதலாளியவர்க்க சார் அரசுகளை  குறித்து மார்க்ஸ் விவரிக்கிறார். அதாவது சுற்றுச்சூழலை கெடுக்க முதலாளியம் விரும்பினால் அரசும் அதைசெய்யும் ,சூழல் சீர்கேட்டினை அது விரும்பவில்லை என்றால் அரசும் அதை விரும்பாது. சுரண்டும் வர்கங்கள் சுரண்டப்படும் வர்கங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான சாதனமாக அரசு உருவாக்கப்பட்டு செயல்படுகிறது என  மார்க்சின் விளக்கத்தோடு அரசு இயந்திரத்தைபற்றி புரிந்துகொள்ளும்வேலையில் நீதிமன்றம் ,போலீஸ் துறை போன்ற பிற அரசுத்துறைகள் ,அரசு இயந்திரத்தின் வேறுபட்ட  வடிவங்களே என இயல்பாக நாம் விளங்கிக்கொள்ளலாம்.

இந்த சார்பை லெனின் இவ்வாறு சுட்டிக்காட்டுவார் ;"நீதி ,மதம் ,அரசியல் ,சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லாடல்களுக்கும் ,பிரகடனங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதொவொரு வர்கத்தின் நலன்கள் ஒளிந்து கொண்டு இருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்போர்களாகவும் இருந்தனர் ,எப்பொதும் இருப்பார்கள்."

எப்படி அரசும் முதலாளியமும் கூட்டாய் தனது லாபநோக்கத்திற்கான அரசியலை முன்னெடுக்கின்றன ,தனது செயலை நியாப்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்கு சிறப்பான புத்திகூர்மை அவசியமில்லை.மாறாக எங்கே பொருளாதார நோக்கத்திற்காக வளர்ச்சி என்ற சொல்லாடல்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறதோ/முன்னிலைப்படுத்தப்படுகிறதோ  அல்லது ,பொருளாதார நோக்குதிசையில் பயணிப்பதற்கு துரிதமாக புறக்காரணிகள் நிராகரிக்கப்படுகிறதோ அங்கே அரசு இயந்திரம் + முதலாளியத்தின் கூட்டுள்ளது என்பதை மிகச்சாதரனமாய் புரிந்துகொள்ளலாம்.

தொழிற்சாலை நிகழ்முறையில் சரக்கின் உற்பத்தியின்போது வெளியேற்றப்படும் கழிவின் அளவை கண்காணிக்கும் பொறுப்புள்ள மாசுக்கட்டுபாட்டு வாரியத்தை இங்கே அரசு இயந்திரத்தின் ஒரு வடிவமெனக்கொள்ளலாம் .கடந்த 10 ஆண்டுகளில் இக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாட்டினை அதாவது தொழிற்சாலைக் கழிவை வெளித்தள்ளும் அங்கிகாரத்தை ரத்துசெய்வது ,கழிவை மேலாண்மை செய்யும் திட்டத்தை அமல்படுத்த வற்புறுத்துவது போன்ற எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதித்து ,கண்காணித்து ,நடவடிக்கை எடுத்திருக்கலாம் .மாறாக நடந்தது  என்ன ?ஒரு செங்கல்லை கூட இவ்வாரியங்கள் புரட்டிப்பொட்டதில்லை.அப்படியென்றால் அனைத்து தொழிற்சாலைகலும் மிக அற்புதமான கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்துகிறது அல்லது கழிவையே மண்ணிலும் ,நீரிலும் ,காற்றிலும் வெளியேற்றவில்லை. அப்படியிருக்க பின் ஏன் சூழல் அழிகிறது ?
சிறு  நிகழ்கால உதாரணமொன்றை எடுத்துகொள்வோம்.எண்ணூர் கழிமுகம்.  வடசென்னை பகுதியில் வங்காளவிரிகுடா கடலில் கலக்கும் இக்கழிமுகத்தின்  சதுப்புநில காடுகளில் அரியவகை ஆமைகள் ,தாவரங்கள் ,மற்றும் மீன்கள் வாழ்கின்றன .தவறு வாழ்ந்து வந்தன..ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.அத்தோடு எண்ணூர்கடற்கறையொட்டிய  75 கி .மி நீளத்தில் எந்தவொரு தாவர ,கடல்வாழ் உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் அற்ற பகுதியாய் மாற்றப்பட்டன.காரணம் தொழிற்சாலை கழிவுகள்.

ண்ணூர்  அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவு ,வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல்  கழிவு ,எண்ணூர் மணலி தொழில் பேட்டையிலிருந்து வெளியேற்றப்படும் திரவ மற்றும் திடக்கழிவு ,ஸ்பிக் ஏனும் வேதியல் தொழிற்சாலை மாதத்திற்கு 1000 டன் அளவிற்கு வெளியேற்றும்  க்லைகொல் எனும் வேதியல் கழிவு,சென்னை பெட்ரோலிய நிறுவனத்தால் வெளியேற்றப்படும் திரவ மற்றும் திடக்கழிவு,மணலி பெட்ரோ  வேதியல்  நிறுவனத்தால் வெளியேற்றப்படும் கழிவு,கோத்தாரி சக்கரை ஆலையால் வெளியேற்றப்படும் கழிவு,சென்னை வேதியல் உர நிறுவணத்தால்  வெளியேற்றப்படும் திரவ மற்றும் திடக்கழிவு என  நூற்றுக்கணக்கான நிறுவனங்களால் வெளியேற்றப்படும் அனைத்து கழிவுகளும் ஓரு பல்லுயிரியம் தலைத்தொங்கியிருந்த கழிமுகத்தில் கலப்பதென்பது எவ்வளவு கேவலமான காட்டுமிராண்டிச்செயல்.அக்கழிமுகத்தில் ,கடற்கரையில் வாழ்ந்த பறைவகள் ,இறால்கள் ,நண்டுகள் ,பல சிற்றுயிர்கள் ,தாவரங்கள் ,மன்வலங்கள் இன்னும் எண்ணிலடங்கா இயற்கை வளங்கள் வளர்ச்சி என்ற பெயரில் காட்டுத்தனமாய் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டது . 


 
இவ்வளவு அழிவுகளை எதிர்கொண்டு மரித்துப்போன இயற்கையை ,பல்லுயிரிகளை காப்பாற்ற முயற்சிக்காத வாரியங்கள்  ,நீதித்துறை போன்ற அரசுத்துறை இயந்திரங்கள்  யார் சார்பாய் இங்கு சமூகத்தை ஆள்கிறார்கள் என்பதை சந்தேகமற்றவகையில்  தெளிவுபடுத்துகிறது.

இதை மேலும் தெளிவுபடுத்தும் விதமாய் கடந்தவாரம் ஸ்டர்லைட்  தொழிற்சாலையின் விஷ வாயு கசிவு விடயத்தில் நமது அரசு நடத்திய நாடகத்தையும் ,நீதித்துறையின் பொருளாதார கண்ணோட்ட முதலாளிய வர்கசார் தீர்பையையும் இங்க பார்க்கலாம் 

தீர்ப்பின் விவரம் :

“இந்தியாவின் தாமிர உற்பத்திக்கு தொடர்சியாக இத்தொழிற்சாலை முக்கிய பங்களிப்பு செய்துவருகிறது .பாதுகாப்பு ,மின்சாரம் ,உட்கட்டமைப்பு மற்றும் கனரகஉதிரி பாக தயாரிப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்கு தாமிரம் தேவைப்படுகிறது .அத்தோடு இத்தொழிற்சாலையில் ஆயரத்திற்கு மேற்பட்ட  நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.இத்தொழிற்சாலையை  சார்ந்து பல்வேறு சிறு மற்றும் குறுந்  தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன .சுங்க வரி ,கலால் வரி ,மதிப்புகூட்டு வரி ,வருமான வரி போன்ற வரிகளால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதிக வருவாயினை இத்தொழிற்சாலை ஈட்டித்தருகிறது.இவற்றோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி துறைமுகத்தின் 10 % சரக்குகளில்  இத்தொழிற்சாலை அங்கம்வகிக்கின்றது.ஆக இதுபோன்ற பொது நலன்களை கருத்தில் கொண்டு இத்தொழிற்சாலைக்கு உதவி செய்ய மறுப்பதை ஏற்க விரும்பவில்லை .1992 முதல் 2012 வரையிலான காலத்தில் இத்தொழிற்சாலையால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை ஈடுகட்டும் பொருட்டு 100 கோடி ரூபாயயை அபராதமாக இத்தொழிற்சாலை கட்டவேண்டும் .கடந்த கால லாபமான 744 கோடியை விட அதிகமாக இந்த ஆண்டு   1043 கோடி லாபம்(40 % அதிகம் )  ஈட்டிய இத்தொழிற்சாலைக்கு  100 கோடிக்கும்  குறைவாக அபராதம் நிர்ணயக்கமுடியாது. இந்த 100 கோடி ருபாய் அபராதத்தினை 3 மாதத்திற்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் செலுத்தவேண்டும் .இந்த 100 கோடி ரூபாயை ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் குறைந்தது 5 வருட காலத்திற்கு  நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு அதன் வட்டியில் வரும் வருவாயாய் கொண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்துடன் கலந்தாலோசித்து தமிழக அரசின் ஒப்புதலோடு சூழல் மறுகட்டமைப்பு பணிக்கு அத்தொகையை பயன்படுத்தவேண்டும்.”

வெறும் பொருளாதார லாப நோக்க கண்ணோட்டத்தில் மட்டுமே இருந்துக்கொண்டு தொழிற்சாலைகளின் உற்பத்திமுறைகளையும் ,அதன் செயல்பாடுகளையும் அது உருக்குலைத்த சூழல் சீர்கேட்டினையும்  அணுகுவது ,சுழல் குறித்தும் ,இயற்கை வளங்களின் வீழ்ச்சியை குறித்தும் அதன் வலைப்பின்னல்களை குறித்த  நீதித்துறையின் அலட்சியத்தினையும்  அடிப்படை அறிவற்றத்தனத்தை காட்டுகிறது.மேலும் அது எப்பொழுதும் சுரண்டும் வர்கங்களுக்கு ஆதரவாக அவர்களின் செயல்பாடுகளை மேலும் ஊக்குவிக்கிறது.
 
நீதிமன்றம் செய்யத்தவறியவை/விரும்பாதவை: 
  • கடந்த காலங்களில் இத்தொழிற்சாலைகளால் சூழலுக்கு ஏற்படுத்தப்பட நெருக்கடிகளை சரியான நோக்கில் அணுகவில்லை.
  • ,சுழல் சீர்கேட்டிற்கு தீர்வாக முதலாளியத்திற்கு விதிக்கப்பட்ட அபாரதத்தொகை  அதன் லாபத்தை ஒப்புநோக்கையில் வெறும் தூசென்று அது உணரவில்லை அல்லது கண்டிக்க விரும்பவில்லை.
  • இதே போன்று தமிழகமெங்கும் சூழல் சீர்கேட்டிற்கு வித்திட்ட தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை அது ஆராய முயற்சிக்கவில்லை.
  • மாசுக்கட்டுப்பாடு வாரியங்களின் வக்கற்ற போக்கை கண்டிக்கவில்லை 
இவை போக எண்ணற்றவை நாம் அடுக்கலாம் .ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பதைப்போல் முதலாளியம் + அரசு இயந்திரம் + அரசு இயந்திரத்தின் பிற வடிவங்களான நீதிமன்றங்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு ,நமது புவியில் கடைசி சொட்டு வளம் உள்ளவரை என்றைக்குமே ஒத்திசைந்து மிக அணுக்கமாக செயல்படும் ,இயற்கையை சுரண்டிச்சுரண்டி லாபம் குவிக்கும் அதை நியாயப்படுத்தும்.இதை கண்டுணர்ந்து ஒருங்கிணைந்த கருத்தமைவை வரைவு செய்து முதலாளியத்திற்கு எதிராக செயல்படமால் போனால் ,அழிவு  தள்ளிப்போகலாம் ஆனால் தவிர்க்கமுடியாது.