Pages

Thursday, 4 July 2013

மனித இனம் இயற்கையை வெற்றிகொள்ள முடியுமா? : பிரட்ரிக் எங்கெல்ஸ்



             இயற்கையை வெல்லும்படியான மனித ஆற்றல் மீது  மார்க்சும் எங்கெல்சும்   அளவுகடந்த  நம்பிக்கைவைத்தனர் ; வளம் குன்றா வளர்ச்சி மற்றும் சூழலியல் குறித்த எந்த ஆர்வமும் அவர்களிடம் இல்லை போன்ற  கற்பிதங்கள்  பொதுவாக நிலவுகிறதுஅவர்களின் எழுத்துக்களை ஆய்வு செய்கையில் இக்கற்பிதங்கள் எல்லாம் தலைகீழாய் குப்புற வீழ்கின்றன.


 “ //இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை.ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது.ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது ,மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுப்பட பலன்களையும் அளிக்கிறது;இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்துவிடுகின்றன//.
 
//மெசபட்டோமியா ,கிரீஸ்,ஆசியா மைனர்,இன்னும் இதர இடங்களிலும் சாகுபடி நிலங்களை பெறுவதற்காக காடுகளை அழித்த மக்கள் காடுகளை அழித்ததுடன் கூடவே நீர்த்தேக்கங்களையும் தண்ணீர் ஒருங்கு சேரும் இடங்களையும் ஒழித்ததனால் அவர்கள்  அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்ற நிலைக்கு அடிகோலியதாகக் கனவும் கூடக்  காணவில்லை.

ஆல்ப்ஸ் மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வடபுறச்சரிவுகளில் அவ்வளவு பரிவுடன் பேணிக் காக்கப்பட்ட பைன் மரக்காடுகளைத் தென்புறச்சரிவுகளில்  பூரணமாக வெட்டி பயன்படுத்தி விட்டபொழுது,அவ்விதம் செய்ததின் மூலம்  அப்பிரதேசத்துப்  பால்பண்ணை தொழிலின் அடி வேர்களையே வெட்டி விட்டதன் சூசகத்தையும் கூடக்  காணவில்லை;அதன் மூலம் வருடத்தின் பெரும் பகுதியில்  மலைசுனைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செய்து விட்டதைப்பற்றியும் மழைக்  காலங்களில் கூடுதலான வெள்ளப்பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்கு வகை செய்யப்பட்டது என்பதை பற்றியுமோ ,அந்த அளவு சூசகம் கூடக் காணவில்லை//.

 //அயல்நாட்டு மக்கள் மீது வெற்றிவாகை சூடியவனை போல ,இயற்கைக்குப் புறத்தே நிற்கும் ஒருவனைப் போல  இயற்கை மீது எவ்விதத்திலும் நாம் ஆளுகை  புரியவில்லை என்பதும் அதற்கு பதிலாக நமது சதை ,ரத்தம் ,மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம் அதன் நடுவில் வாழ்கிறோம் என்பதும் இயற்கையின் நியதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைபிடிப்பதிலும் இதர எல்லாப் பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதும் ஒவ்வொரு படியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது//.

//கியூபாவில் மலைச்சரிவுகளில் இருந்த காடுகளைத் தீயிட்டுக் கொளுத்தி மிகவும் உயர்ந்த லாபகரமான காபிச் செடிகளின் ஒரு தலைமுறைக்குப் போதுமான உரத்தை அந்த சாம்பலிலிருந்து பெற ஸ்பானிய காப்பித்தோட்ட முதலாளிகள் என்ன கவலைப்பட்டார்கள் -வெப்ப பிரதேச கன மழைக்கு பின்னால் பாதுகாப்பற்ற மேல்படிவ மண் முழுவதையும் அடித்துக் கொண்டு போய் பாறைகளை மட்டும் மொட்டையாக விட்டுச்சென்றது என்பதைப்  பற்றித்தான் அவர்கள் என்ன கவலைப்பட்டார்கள்!சமூகத்தைபோலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தைய உற்பத்தி முறை உடனடியான,மிக உருப்படியான விளைவுகளைப் பற்றி மட்டுமே பிரதானமாக அக்கறை கொண்டுள்ளது//

                                ----“மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்”  நூலில்  எங்கெல்ஸ்  


No comments:

Post a Comment